.

.
.

Friday, July 31, 2009

ஆத்மா

நண்பர்களே, நான் ஏற்கன‌வே ஒரு பயங்கர பேய்க்கதை சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா!!? ஆத்மா! ஆம் அதே கதைதான்! இன்று அந்தக் கதையின் தொடர்ச்சி,(எப்போது கதை முடியும் என்றெல்லாம் உடனே கேட்கக்கூடாது அது அடியேனின் கற்பனை வளத்தைப் பொறுத்து சில மாதங்களோ சில வருடங்களோ என ஆகக்கூடும்!)

எப்படியிருந்தாலும் பல வருடங்கள் இந்தக் கதையை இழுத்தடிக்க வேண்டும் என்பதே நம் அவா! ஆனால் பாருங்கள் அவ்வப்போது "கருத்து வரட்சி" ஏற்பட்டு "எழுத்துப் புரட்சியைத்" தடை செய்து விடுகிறது! சீக்கிரத்தில் கதையை முடித்து விடும்படி பல மிரட்டல்கள் தொடர்ந்த‌போதும்! அதற்கெல்லாம் மனங் கலங்காது! துணிவு ஒன்றே துணையாக! அரசி,கோலங்கள் என சூப்பர் மெகா தொடர்கள் ‌அனைத்தையும் தாண்டி பல வருடங்கள் பதிவிடப்படப்போகும் ஒரு மெகா பேய்க்கதைத் தொடர் இதோ உங்களுக்கே உங்களுக்காக...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


மறைமலையடிகள்

மனிதர்கள் எல்லோரும் இந்தப் பிற‌ப்பையே பெரிதாக எண்ணி, இனி வரும் பிறப்புக்களையும், இறந்த பிறகு ஆத்மா அடையும் நிலைமையினையும் சிறிதாவது விசாரியாமல் காலங்கழிப்பது மிகவும் பொல்லாதது. இன்றைக்கு உயிரோடு இருப்பவன் ஒருவன் நேற்று நான் உயிரோடு இருந்ததில்லை என்றாவது, நாளைக்கு நான் உயிரோடிருக்க மாட்டேன், எல்லாம் இன்றோடு முடிந்து போயிற்று என்றாவது சொன்னால் அவனை மற்றவர்கள் எல்லோரும் பித்தம் பிடித்தவன் என்று சொல்வார்களன்றோ?

நேற்றிருந்தவன் இன்றைக்கும், இன்றிருக்கிறவன் நாளைக்கும் உயிர் வாழ்தலை நாம் பிரத்தியட்சமாய் அறிந்து கொளவதுபோல, முற்பிறப்பிலிருந்தவன் இப்பிறப்பிலும், இப்பிறப்பிலிருப்பவன் இனி வரும் பிறப்பிலும் இருப்பான் என்பது திண்ணம்.

ஆத்மாவானது என்றும் அழிவில்லாத பொருள்; அது மேலே போர்த்துக் கொன்டு வரும் இந்த உடம்புக்குத்தான் அழிவேயல்லாமல் அறிவு ரூபமாயிருக்கும் அந்த உயிருக்கு அழிவேயில்லை.

இந்த நில உலகமும், இதில் உலாவி வரும் உடம்பும் மாத்திரமே மெய்ப்பொருள்கள் என்று எண்ணுதல் கூடாது. அப்படி எண்ணுவதினால் மனிதர் பல வகையிலே பிழையான காரியங்களைச் செய்து இப்பிற‌வியில் துன்பமடைவத‌ல்லாமலும், இனி வரும் பிற‌விகளிலும் துன்பம் அடைகிறார்கள்.

ஆகையால், இந்நிலவுலகத்தினுள் சிறந்த வேறு உலகங்கள் உள்ளன என்றும், அவ்வுலகங்களில் சஞ்சரிப்பதற்கு இந்த உடம்பைக் காட்டிலும் இன்னும் வேறு உடம்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டுவது ஒவ்வொருவர்க்கும் முதன்மையான கடமையாகும். இந்த உடம்பு அழிந்து போனால் எல்லாம் அழிந்து போகும் என்று எண்ணுவதும், சொல்வதும் பெரும் பிழையாகும்...
மேலும் தகவல்களுக்கு
மறைமலையடிகளின் "மரணத்தின் பின் மனிதர் நிலை"

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முன்கதை : பஞ்சம் பிழைக்க வந்த ஒரு ஏழைக்குடும்பம் ஏற்கனவே அகால மரண‌மடைந்த‌ சிவாவின் ஆத்மா அலைபாய்ந்து கொன்டிருந்த அந்த ஆற்றோர செம்பனைக் காட்டு குடிசைக்குள் உண்மையறியாமல் தஞ்சமடைகின்றது. சிவாவின் ஆத்மா சூன்யமாய் அவர்களை சுற்றி சுழன்று கொன்டிருப்பதை இயற்‌கையைத் தவிர வேறு யாரும் அறியவில்லை அப்போது! இனி...

நாளும் கிழமைகளும் அந்தக் குடிசை வீட்டில் வெறுமையாய்க் கழிந்து கொன்டிருந்தன, குடும்பத்தலைவர் தோட்டத்துக்கு வெளியே அமைந்திருந்த ஒரு நெல் ஆலையில் பணிபுரியலானார். சொற்ப சம்பளத்தில் காலை தொடங்கி இரவு வரை வேலை. வீட்டில்...

குடும்பத்தலைவி சுசி(இவர் இக்கதையின் முக்கியப்புள்ளி, இவரைப் பற்றி சுவாரஸ்யமான விக்ஷயங்கள் மேலும் பல அறியக்கிடக்கின்றன, அவற்றை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்), குழந்தைகளோடு, ஆற்று நீரை இரைத்து, நெல் ஆலையிலிருந்து கண‌வன் குறைந்த விலையில் பெற்று வரும் அரிசியை உண‌வாக்கி, ஆற்றிலே தூண்டிலிட்டு, அதில் சிக்கிய அயிரையும், விராலும் குழம்பாக்கி குடும்பத்தை நகர்த்தி வந்தார் அவர்!அவர்களுக்கும் மறைந்த சிவாவின் ஆத்மாவுக்கும் முதன் முதலாய் சந்திப்பு நிகழ்ந்த அந்த சபிக்கப்பட்ட நாளன்று...முதல் நாளிலிருந்து நின்றும், நிற்காமலும் விட்டு விட்டுத் தொடர்ந்து அழுதுகொன்டிருக்கும் மழை...வானம் இருண்டு, மேகங்கள் திரண்டு, சூரியன் மறைந்து மாலை ஐந்து மணியே இரவு மணி எட்டாய் இருண்டிருந்தது, வானம் கிழிந்து கொட்டிய அருவியாய் நீரோட்டம் பூமி நனைத்து சேற்றோடு குழைந்து ! அருவருப்பான அழுக்கு நிறத்தில் வீட்டைச்சுற்றி ஓடிக்கொன்டிருந்தது மழை நீர், அதிலே சமயங்களில் தவளைகளும், செம்பனைக்காட்டு ஓலைபாம்புகளும் நீச்சலடித்துச் சென்று கொன்டிருந்தன.

மழையின் கோரம் அவர்கள் வீட்டு முன் வாசலையும் சேறடித்து அகோரமாக்கியிருந்தது... வெளியே கால் வைக்க முடியா வண்ணம் சேறும் சகதியும், செம்பனை எச்சங்களுமாக வெளிவாசல் படு கண்ராவியாக...,
சிறிது கால இடவெளியில் மழை சற்று ஓய்வதாய்த் தோன்ற சுசி கைலியை அள்ளி இடையில் சொருகிக்கொன்டு வெளி வாசலைத் தீய்மை செய்யும் பொருட்டு துடைப்பம், வாளி நீர் சகிதமாக வாசல் வந்தார்,

அப்போது அவரின் மூத்த மகளும் ஓடி வந்து அம்மா நான் கழுவுகிறேன் கொடுங்கள் எனக் கெஞ்சுகிறாள், சுசி கரிசனத்தோடு "அதெல்லாம் வேணாம் நீ வேணும்னா இங்கேயே அம்மா கழுவுவதைப் பார்' வாச்லில் அவளை இருத்திவிட்டு துப்புறவு பணியில் மூழ்கினார், முக்கால் வாசி தூய்மை செய்து விட்டு மேலும் நீரெடுத்து வர பின்கட்டிற்குள் அவர் நுழைய‌, அங்கே...


பெரியவள் வாசல் தாண்டி வெளியே வந்து தாயாய் பாவனை செய்து கொன்டு துடைப்பத்தை எடுத்து வாசலில் கூட்டுகிறாள், சிலீரென்று காற்று முதுகுத்தண்டை அறைய சற்றே தூரத்தில் யாரோ அழைப்பதாய் ஓர் உண‌ர்வு, தலை நிமிர்ந்து நோக்குகிறாள். வீட்டிற்குப் பக்கவாட்டில் சற்றுத்தள்ளி ஆற்றுநீர் பொங்கிப் பெருகி ஓடிக்கொன்டிருந்த அந்த கால்வாய்க்கு மறு புற‌த்தில், பருத்த பெரும் செம்பனை மரத்தின் ஓரத்தில், ஒரு அழகான சிறுவன், ஒல்லியாய், மாநிறமாய், வாய் திற‌ந்து பல் வரிசை தெரிய அவளைப் பார்த்து சிரித்துக்கொன்டு நிற்கிறான், ஒரு அழுக்கடைந்த கருநீல கால்சட்டை மட்டுமே அணிந்து, அந்த மழைத்தூரலிலும் மேல் சட்டையின்றி ஒரு கையை செம்பனை மரத்தில் ஊன்றியபடியும் மறுகையில் அவனைவிட நீளமான ஒரு கம்பையும் பற்றிக்கொன்டு அவன் அவளையே சிரித்து நோக்கியபடி நின்றுகொன்டிருக்கிறான்! அவளுக்கு பக்கத்து தோட்டத்தில் தான் பார்த்த ஒரு உற‌வுக்காரப்பையனாக அவன் தோன்றவே அவளும் சிரித்தபடியே அவனை நோக்கி சில அடிகள் வைக்கிறாள், இப்போது அவன் சிரிப்பு பண்மடங்கா‌க, செம்பனையைப் பற்றிக் கொன்டிருந்த அவன் கை அவளை நோக்கி வேகமாக அசைந்து அழைக்கிறது... குறுக்கே ஆறு ஓடிக்கொன்டிருக்க‌, தனை மற‌ந்து அவள் அவனை நோக்கி அடி வைத்துக்கொன்டிருக்கிறாள்...

8 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா சுவாரஸ்மா எழுதறீங்க.. உங்க எழுத்து நடை, வர்ணணை எல்லாம் அருமை...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

வாழ்த்துகள். அருமையான படைப்பு. தொடர்ந்து எழுதுங்கள்.

tamilvanan said...

//சீக்கிரத்தில் கதையை முடித்து விடும்படி பல மிரட்டல்கள் தொடர்ந்த‌போதும்! அதற்கெல்லாம் மனங் கலங்காது! துணிவு ஒன்றே துணையாக! அரசி,கோலங்கள் என சூப்பர் மெகா தொடர்கள் ‌அனைத்தையும் தாண்டி பல வருடங்கள் பதிவிடப்படப்போகும் ஒரு மெகா பேய்க்கதைத் தொடர் இதோ உங்களுக்கே உங்களுக்காக...//

உங்க கதைய விட உங்கள் அறிவிப்பு அதிகமாகவே பயமுறுத்துகிறது.

உங்க மெகா தொடருக்கு நான் தான் வரவேற்பு பாடல் கொடுப்பேன். ( அரசி,கோலங்கள் வர்ற entry songs மாதிரி). விரைவில்.இலவசம் தான் அட்வான்ஸ்லாம் வேணாம். அதான் திரும்ப திரும்ப சொல்றன் இல்ல அட்வான்ஸ் வேணாம்னு.கேட்க மாட்டிய ரொம்ப பிடிவாதம் சிவனேசு உனக்கு. ( எங்களுக்கெள்ளாம் போட்டும் வாங்கத் தெரியும் கேட்டும் வாங்க தெரியும்ல)

சதீசு குமார் said...

பயந்தே போயிட்டேன் போங்க... :))

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை !!!

'குறை ஒன்றும் இல்லை' ன்னு சொல்லலாமா நண்பரே?

சிவனேசு said...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

முயற்சி செய்கிறேன் அய்யா.

சிவனேசு said...

tamilvanan

//உங்க மெகா தொடருக்கு நான் தான் வரவேற்பு பாடல் கொடுப்பேன்//

சிவனேசு : அப்டிப்போடுங்க அரிவாள! உங்கள விட்ட வேற யாரால அப்டில்லாம் அற்புதம் செய்ய முடியும் சொல்லுங்க? மீசிக்க ஹாலிவூட் லெவல்ல அசத்திடுங்க சரியா?

மனசாட்சி : இவர் பின்னூட்டத்திலேயே மண்டை காய்ஞ்சி போவுது இதுல என்றி சாங்கு வேறயா? அலாட்டாயிக்க சிவனேசு அலாட்டாயிக்க! இதுல ஏதோ உள்நாட்டு சதி இருக்கு! :(

சிவனேசு said...

சதீசு குமார்

//பயந்தே போயிட்டேன் போங்க... :))//

இது உண்மைதானே? என்னை வைச்சு காமிடி கீமிடி பண்ணலியே?