.

.
.

Monday, August 3, 2009

ஆத்மா (4)

வணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு மர்மமேடை பதிவுக்குள் பயப்படாமல் கால் பதித்திருக்கும் உங்கள் துணிவையும் தைரியத்தையும் மனதாரப் பாராட்டிக்கொன்டு அன்றைய தொடர்ச்சியான இன்றைய பதிவுக்குள் செல்வோம் வாருங்கள், அத‌ற்கு முன்பதாக...

உலகிலேயே தாங்கள் தான் உயர்ந்தவர்கள்/சிறந்தவர்கள் (உண்மையில் இல்லையென்றாலும்) என மேலை நாட்டினர் இறுமாந்திருந்த காலக்கட்டம், 1893, செப்டம்பர் 11 அன்று, சிக்காகோ சர்வசமய மாநாட்டில "ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிகளே" என உலகையே ஒருசேர அழைத்து இந்து ச‌ம‌ய‌த்தின் அன்பு முக‌த்தை உல‌கிற்கு வெளிச்ச‌மிட்டுக்காட்டியதே ஒரு ஆன்மீக ஞாயிறு, அவரை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு?, மறக்கத்தான் முடியுமா, அந்த ம‌கோன்னத வீர‌த்துற‌வி விவேகாந‌ந்தரை!

சரி, இன்று, இங்கே அவர் சார்பாக ஒருவர்! வல்லவர், 1,2,3,4 என நான்கும் தெரிந்த நல்லவர். ஓலைச்சுவடியின் சொந்தக்காரர் நண்பர் சதீசு அவர்கள் நம்மையும், தமிழ்ப்பூங்காவையும் பெருமைப்படுத்த இங்கே வந்து அமர்ந்திருக்கிறார் பாருங்கள்! அவருக்கு நமது வாழ்த்துக்களும், வரவேற்பும் உரித்தாகுக!
(விவேகாந‌ந்த‌ரையெல்லாம் க‌லாய்க்க‌ முடியாதுப்பா!, அப்புற‌ம் க‌தை கந்த‌ல்தான், அத‌னாலேயே இந்த‌ ந‌ல‌லபிள்ளைப் ப‌திவு!, ச‌ரி வாருங்க‌ள், நாம் நமது மர்மப்பிரதேசத்துக்குள் நுழையலாம்...

***************************************************

தேவாலயத்தை சுற்றும் அன்னை மேரியின் ஆவி !


எகிப்தில் நடைபெற்றுவரும் உண்மைச் சம்பவம்...
கிறீஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தின் மீது இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் பல மணி நேரம் பிரகாசமான வெளிச்சம் தோன்றுகிறது. அந்த பனி போன்ற ஒளிர் வெளிச்சத்தில் ஓர் பெண்மணி தேவாலயத்தை சுற்றி வருவதை பலர் கண்டுள்ளனர். அந்தக் காட்சியை பலர் புகைப்படம் பிடித்துள்ளனர். இந்த அதிசயமான காட்சியை தொலைக் காட்சிகளின் பல அறிவியல் நிகழ்ச்சிகளும் ஒளி பரப்பியுள்ளன. கிறீஸ்தவ மக்கள் இந்தப் பெண்மணியின் உருவத்தை அன்னை மேரியினுடைய தென்றே இன்று வரை நம்பி வருகிறார்கள்.

தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல் முதலாக 1968 ம் ஆண்டுதான் கண்டிருக்கிறார்கள். 1968ம் ஆண்டில் ஒரு நாள் இரண்டு வாகனம் திருத்துபவர்கள் வேலை காரணமாக நள்ளிரவு தாண்டிய பின்னர் வீடு வரும்போது மேற்படி காட்சியைக் கண்டு கூச்சலிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் பொலீசாரை வரவழைத்தனர். அவர்கள் வந்தபோதும் தேவாலயத்தை சுற்றிய உருவமோ மறையவில்லை. ஒளிரும் பெண்மணியோ அந்தத் தேவாலயத்தின் மேற்புறத்தையே தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தது. அருகில் இருக்கும் மின் வெளிச்சத்தால்தான் இது ஏற்படுகிறதென பொலீசார் கூறினார்கள். சகல தெரு விளக்குகளையும் அணைத்துவிட்டு பார்த்தபோதும் அந்த வெளிச்சம் போகவில்லை அது மேலும் பிரகாசமடைந்தது. பொலீசார் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அறிவியல் விளக்கம் !

எப்போழுதும் போலவே...
அறிவியலாளர்கள் இதை முற்றாக நிராகரித்துள்ளனர். இஸ்ரேலியர்கள் 1967ல் எகிப்தை வெற்றி பெற்ற பின்னர்தான் இந்த ஒளி தோன்ற ஆரம்பித்திருகிறது. எனவே இது அவர்களுடைய வேலையாக இருக்கலாம் என்பவரும் உண்டு. உண்மையில் ஏரோது மன்னன் வாழ்ந்த நகர் இதுவல்லவென்று 1400 ம் ஆண்டிலேயே கூறப்பட்டது. ஆனால் இப்படியான காரியங்களால் உலகுக்கு எதுவும் நடந்துவிடப் போவதில்லை. சிறு பிள்ளைகளுக்கான ஓர் அற்புதக் கதை என்றளவிலேயே விஞ்ஞானம் இதை நோக்குகிறது. எனினும் விஞ்ஞான ரீதியாகவும் இது எப்படித் தோன்றுகிறது என்பதை தகுந்த காரணங்களோடு நிறுவ முடியாமலிருப்பதே அதிசயமாகும.

மேலும் த‌கவல்களுக்கு நீங்கள் நாடவேண்டியது...
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23981&mode=threaded&pid=306386

***************************************************

முன்கதை : சிவாவின் ஆவிக்குடிசையில் குடியிருக்கும் சுசி குடும்பத்தினரின் மூத்த பெண்குழந்தை சிவாவின் துராத்மாவால் ஆட்கொள்ளப்பட்டு தனை மறந்த நிலையில் கரைபுரண்டோடும் கால்வாய் நோக்கிச் சென்றுகொன்டிருக்கிறாள், அப்போது...

உள்ளே நீரெடுக்கச் சென்ற‌ சுசி வெளியே வர, சரியாக அந்த நிமிடங்களில் இன்னும் சில அடிகளோடு நீருக்குள் அமிழப்போகும் அபாயத்தில் அந்தக்குழந்தை...

"முருகா, என்று அலரலோடு குழந்தையை தடுக்க வெறித்தனமாக ஓடுகிறார் அந்தப்பாவப்பட்ட பெண்மணி...அந்தக்கணம் தனது மகளைக்காகப்பாற்ற வேண்டும் என்ற ஒன்றை தவிர வேறெதையும் யோசிக்கவில்லை, இரண்டேயெட்டில் குழந்தையை நோக்கி பாய்கிறார்...ஆனால் குழந்தையோ...

சுயநினைவற்ற சூனிய நிலையில்! அவள் ஐம்புலன்ளும், ஆழ்மனமும் தன் வசமிழந்து சிவாவின் பிடிக்குள் சிக்கி நீருக்குள் அவள் கால் படரப்போகும் அந்தக் கடைசி நொடியில், எங்கேயோ மிக மிக தொலைவிலிருந்து சன்னமானதோர் மெல்லிய குரல் தனை அழைப்பதாய்த்தோன்றுகிறது. சிலிர்த்துக் அவள் தன்னிலை உணர்த்துவங்கும் அந்த தருண‌ம்... இடியிறங்கியதைப்போல எதோ ஒரு மிகப்பெரிய வலி அவள் தலையைத் தாக்குகிறது!, நிலை குலைந்து, காலை விட்டு மொத்தமாய் பூமி நழுவி, கால்வாய்க்குள் அவள் புகப்போகும் அந்த அசம்பாவித நொடியில், அனலாய் பாய்ந்து வந்த சுசி எட்டி அவள் தலைமுடியைப்பற்றி தன் வசம் இழுத்து தனக்குள் அடக்கிக்கொள்கிறார்! அவர் ஈரக்கைலியின் சிலுசிலுப்பினூடே முகம் தோய்ந்து மயங்குகிறாள் சுசியின் மூத்தப்பெண் அங்கையற்கன்னி!

தாய்ப்ப‌றவையாய் த‌ன் அணைப்புக்குள் தன் மகளை வசப்படுத்திக்கொன்டு தலை நிமிர்ந்து பார்க்கிறார் எதிரே சிவா, காற்றாக அவன் உருவம் அவன் நின்றிருந்த அந்த‌ ப‌ருத்த‌ செம்ப‌னையின் த‌டித்த‌ பாக‌த்தில் ம‌றைவ‌தைக்க‌ண்டு திகைக்கிறாள், ந‌ல்ல‌ வேளை அவ‌ரும் ம‌ய‌ங்கி விழ‌வில்லை, ம‌னதில் ஒரு அசா‌த்திய‌ துணிவு கிளர்ந்தெழ வாய் திறந்து உரக்க ஏசுகிறார், அந்த வார்த்தைகளை நான் இங்கே பதிவிட இயாலாமைக்கு வருந்துகிறேன்! தோட்டத்தில் வாழ்ந்த அந்தப் பெண்மணியின் வசைபாடல்களை யார் கேட்டிருந்தாலும் பீதியில் உறைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள், இப்படியாக சிவாவின் ஆவியினை கண்டுவிட்ட அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாது, துணிவாக தன் குழந்தையை அள்ளிக்கொன்டு வீட்டிற்குள் வந்து, ஓரத்தில் கிடந்த துடைப்பத்தினை எடுத்து, வாசல் குறுக்கே, வழிமறித்து வைத்துவிட்டு, படாரென அந்தக் குடிசை வீட்டுக்கதவை அறைந்து சாத்தினார் சுசி, அந்தக் கடும் குளிர் காலத்திலும் வியர்வையால் முழுதாய் நனைந்து, அவரது இதயம் அதீதமாய் துடித்து படீரென வெடித்து விழப்போவதாய் அதிர்ந்தது!

முன்வாசல் ஜன்னல் ஓரத்தில் தன் திற‌மையெல்லாம் ஒன்று திரட்டி தான் அமைத்திருந்த அந்த ஆளுயர சுவாமி மேடையினடியில் குழந்தையை கிடத்தினார், அங்கிருந்த அந்தக் கையகள காமாட்சி விளக்கை முருகா, முருகாவென தனது இக்ஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்த வண்ணம் தீபமேற்றி கையெடுத்து வணங்கினார், ஏதேதோ மனதில் தோன்றிய பிரார்த்தனைகளை உதடு முனுமுனுத்து , நிவேதன நீரில் ஒரு வில்லை சூடமேற்றி அது சுற்றிச்சுழன்று அணைந்தபின் அந்த நீரை தன் குழந்தையின் முகத்தில் தெளித்து, வலிய அவள் சிறிய வாய் திற‌ந்து கொஞ்சம் அருந்தச்செய்கிறார், அவர் புகட்டிய நீரில் பெரும்பகுதி வாய்வழி சிதறி தரை நனைக்க, சுசியின் வேதனை விழிநீராய் அதில் கலந்துகொள்கிறது. அப்போதே ‌அந்தக் குழந்தையின் உடலில் காய்ச்சலுக்கான் அடையாளங்கள் ஆரம்பமாகின்றன‌. தான் சிறுவயது முதற்கொன்டு வணங்கிவரும் அந்த குன்றின் மேல் அமர்ந்த குகனை மனதார வேண்டிக்கொன்டார், இறைவனின் கருணை தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கிறது என அவராகவே மனதிற்குள் தீவிரமாக நம்பிக்கொன்டார்.அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை!

இந்த நிகழ்வுக்குப்பின் தொடர்ந்து சில காலம் சுசியின் மூத்தப் பெண் நோயிலாழ்ந்து சிரமப்படலானாள், பேயாவது, பூதமாவது சுத்தப்பேத்தல் என வீர வசனம் பேசினார் சுசியின் கணவர் பாலு (பின்னாட்களில் இவருக்கும் சிவாவின் பல திகைப்பூட்டும் காட்சிகளும், தீவிளையாடல்களும் கண்முன்னே கிடைக்கப்பெற தனது வீராவேச பேச்சை அவர் கொஞ்சம் மாற்றியமைத்துக்கொன்டார்)

சுசியைப் பொருத்தவரை இது நாள்வரை அவர் மனதில் முள்ளாய் நெருடிக்கொன்டிருந்த அந்த இனங்காணா மருட்சியின் ஆணிவேரை இப்போது தெள்ளத்தெளிவாக அவர் கண்டுகொன்டார். பொருள் படைத்த மனிதர்கள் விருப்பம் வண்ணம் இடம் மாறலாம், வீடு மாறலாம், ஆனால் ஏழ்மை மட்டுமே உடமையாகக் கொன்டவர்கள் என்ன செய்ய முடியும்! அவர்களுக்கு அந்த வீடு வாய்த்ததே பெரிய விச‌யம்! அதைவிட்டு போய்விடு என்றால் எங்கே போவது? பச்சைகுழந்தைகளை வைத்துக்கொன்டு வீதியிலா நிற்பது? வேறு வழியில்லை, ஒரு நல்ல வழி பிறக்கும் வரை அந்த வீட்டை விட்டு அவர்கள் அசையப்போவதில்லை. சிவாவை அவர் நேருக்கு நேர் எதிகொள்ளத் தயாரானார்...

இதுவரை : நண்பர்களே சுசி ஒரு மாறுபட்ட கேரக்டர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா? சிவாவின் ஆன்மாவை நேருக்கு நேர் க‌ண்ணுற்ற பின்னரும், அவனின் வெறிச்சோடிய பார்வையும், இரத்தக் கறை படிந்த சிரிப்பையும் நேரில் கண்ட பின்னரும் அவனை எதிர்கொள்ள அவருக்கு எங்கிருந்து வந்தது அந்த அசாத்திய துணிவு? சுசியின் கடந்த காலத்தையும், நிகழகாலத்தில் அவர் சந்தித்த பல போராட்டங்களையும் இனிவரும் பதிவுகளில் நாம் சந்திப்போம்...

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

உங்களுக்கு ஒரு பட்டம்.. லேடி பி.டி. சாமி...

tamilvanan said...

//அந்த வார்த்தைகளை நான் இங்கே பதிவிட இயாலாமைக்கு வருந்துகிறேன்! தோட்டத்தில் வாழ்ந்த அந்தப் பெண்மணியின் வசைபாடல்களை யார் கேட்டிருந்தாலும் பீதியில் உறைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள்//

அந்த வார்த்தைகளை நீங்களே சென்சார் செய்ததை நினைத்து நான் ரொம்ப வருந்துகிறேன். அது என்னது தோட்டத்தில் வாழ்ந்த அந்தப் பெண்மணியின் வசைபாடல்? அப்படின்னா பட்டிணத்தில் வாழும் பெண்மணியின் வசைபாடல் வேறு மாதிரி இருக்குமோ?

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை !!!

நன்றி நண்பரே! பி.டி சாமிக்கு இதில் ஆட்சேபனை ஏதுமில்லையே ? :)

சிவனேசு said...

tamilvanan

//அப்படின்னா பட்டிணத்தில் வாழும் பெண்மணியின் வசைபாடல் வேறு மாதிரி இருக்குமோ?//

வாங்க தல! வரும்போதே வம்பா ?
பட்டண‌த்து வாசிகளின் வசைபாடல்களில் தமிழோடு ஆங்கிலமும் தலை விரித்து ஆடும் என்பது உங்களுக்கும் தெரியும் தானே!

புனிதா||Punitha said...

சுவாரசியமான பதிவு...அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் :-)

சிவனேசு said...

புனிதா||Punitha

ஹாய் புனிதா! உங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி! நிச்சயம் முயற்சி செய்கிறேன்,