.

.
.

Monday, August 17, 2009

ஆத்மா (6)

வணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு இனிய பொழுதிலே இப்பதிவின்வழி உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, (ஏதோ! இந்த மொக்கை பதிவரையும் இவ்வளவு தூரம் மதித்து இங்கே எட்டிப் பார்த்திருக்கீங்களே! நீங்கள்ளாம் ரொம்ம்ம்ப்ப்ப ரொம்ம்ப்ப்ப்ப நல்லவய்ங்கைய்யா ! :)

சரி! இன்றைய நமது மர்ம தேசத்துள் பிரவேசிக்கும் முன்பதாக‌, ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையை ச‌ற்று க‌வ‌னியுங்க‌ள் ந‌ண்ப‌ர்களே! அங்கே அமைதியாக‌ சிரித்த‌ப‌டி காட்சி தரும் புதியவர் ஒருவர் உள்ளது அறியமுடிகிற‌தா? அவரை யாரென்று உங்க‌ளுக்கெல்லாம் தெரியும்தானே! ஆம் அவரேதான்! தமிழ்கூறு பதிவுலகம் நன்கறிந்த பதிவர் கே.பாலமுருகன் அவர்களேதான்! கே.பாலமுருகன் எனும் தனது வலைப்பதிவின்வழி மதிப்பீடுகள்-நவீனத்துவம்-படைப்பிலக்கியம் ஆகியன குறித்த‌ தனது எண்ணங்களை இயல்பான எழுத்து வடிவில் அழகியலோடும், ஆற்றல்மிகு புரிதல்களோடும் சிறப்பாக முன்வைக்கும் சிறந்த பதிவர்! அநங்கம், மலேசிய இலக்கிய சிற்றிதழின் சொந்தக்காரர். நம்மை மதித்து இங்கே வந்து அமர்ந்ததற்கு நமது நண்பருக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் தெரிவித்துக் கொன்டு, நமது மர்மபிரதேசத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்!
##################################

ஒரு சம்பவப் புலனாய்வு
ஆவி உலாவும் அலுவலகம் !

7எங்கள் அலுவலகக் கட்டடம் முன்பு எங்கள் நிறுவன உரிமையாளரின் வீடாக இருந்தபோது தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக ஒரு இளம்பெண்ணின் தற்கொலை.
அருகேயுள்ள வீடொன்றில் இளம் காதல் ஜோடி ஒன்றின் தற்கொலை.
அலுவலகக் கட்டடத்தில் ஏற்கெனவே உலவுவதாக சொல்லப்பட்ட 3 ஆவிகள் பேய்கள் அதில் ஒன்றை பௌத்த மதகுரு ஒருவர் விசேட பூஜை மூலமாக விரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆவிகள் பேய்களைக் கண்டதாகச் சொன்னவர்கள் கண்டநேரம் இரவு 10மணியிலிருந்து அதிகாலை 5மணிக்குள்.
(24மணிநேர ஒலிபரப்பு நிலையமொன்றாலும் இரவு நேரங்களில் மொத்தமாக அலுவலகத்தில் இருப்பவர்களே ஐந்தோ ஆறுபேர் தான்)
நான் அலுவலகம் செல்வது காலை 5.30 மணி அளவில்.
நானும் கண்டால் நல்லா இருக்குமே என்று யோசித்ததுண்டு கண்டாலும் பயப்படமாட்டேன் என்ற உறுதிதான.;
நேற்று முன்தினம் காலை அப்படியொரு வாய்ப்பு!
காலை செய்தியறிக்கையின் பின்னர் எனது கணினியைத் தட்டித் துருவிக் கொண்டிருந்தபோது சிங்கள வானொலி 'சியத' முகாமையாளர் ஜெயநித்தி என்னைக் கூப்பிட்டு ஆண்கள் கழிவறைப் பக்கம் காட்டிய காட்சி!
ஒரேயொரு கணம் திகைத்தாலும் என் கையிலிருந்த செல்பேசி கமெராவினால் உடனே படமெடுத்துவிட்டேன். இந்தப்படத்திலே கண்ணாடிக் கதவின் மேல் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் முன்பிருந்தே ஒட்டப்பட்டுள்ளது.. எனினும் உள்ளே கலங்கலாகத் தெரியும் உருவம் தான் மர்மமாக உள்ளது.
உடனே கழிவறைக் கதவைத் தள்ளித் திறந்த பின் எதுவுமே இல்லை!மேலும் தகவல்களுக்கு இங்கே படித்து பயப்படவும் !

#######################################

முன்க‌தை : சிவாவின் துர்ஆத்மா குடிகொன்டிருந்த அந்த‌க் செம்பனைக்காட்டு குடிசைக்குள் சுசியின் குடும்பம் வாசம் செய்ய துவங்குகிறது, முதல் பலியாக சுசியின் மூத்த மகள் அங்கையற்கன்னி பலிகொள்ளப்படுமுன் சுசி அவளைக் தடுத்துக் காப்பாற்றி விடுகிறார், இனி...

பல காலம் பசியோடும், ரத்த வெறியோடும், உயிர்ப்பலி நாடி நின்ற சிவாவுக்கு சுசியின் மூத்த பெண் அங்கையற்கன்னி இறையாகப்போகும் அந்த அகால தருண‌த்திலிருந்து சுசியால் விரைந்து அவள் காப்பாற்றப்பட, தொடர்ந்த வெறியும், கோபமும் சிவாவின் ஆத்மாவில் அனலாய் எரிய, அவன் கோப ஜூவாலைகள் சுசியை சுட்டுப் பொசுக்க சமயம் நோக்கிக் காத்திருக்கின்றன!

ஆனால் சுசியோ தெய்வ பக்தியை உறுதியாகப் பற்றிக்கொன்டு ஆழ்ந்த தனது இறை நம்பிக்கையோடு அவ்வீட்டில் வலம் வந்ததால் சுசியை சிவாவால் அதிகம் நெருங்கி ஆபத்தை விளைவிக்க முடியவில்லை! இருந்தாலும் சுசி அசந்த சில சமயங்களில் அத‌ற்கான வழிகள் அவனுக்கு வாசல் திறந்து வைக்க தனது ஆத்திரமெல்லாம் ஒன்று திரட்டி அவரை அவ‌ன் பழிவாங்கலானான், அப்ப‌டி வாய்த்த ஒரு நாள்...

அன்று விடிய‌லில் க‌ண்விழித்த‌ சுசி, உடனே ஆற்றங்கரைக்கு விரைகிறார், முதல்நாள் அந்தியிலே மூங்கில் கழிகளில் சிறு வெட்டுக்கிளிகளை தூண்டிலிட்டு ஆற்றங்கரை முகடுகளில் மீன்பிடிக்க ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார், முதல் நாள் ஆறு பெருக்கெடுத்ததில் 3 அயிரையும் 2 விரால்களும் தூண்டில்களில் சிக்கின! இந்த வகை ஆற்றுமீன்க‌‌ள் அந்த‌க் கால‌க்க‌ட்ட‌த்தின் அருமையானதோர் உணவு வகைகளாகும்.

இந்த அயிரை மீன் இருக்கிறதே! அது ஒரு பயங்கரமான பார்ட்டி! வழ வழவென கருப்பாய் மீசை(கொடுக்கு)யெல்லாம் வைத்துக்கொன்டு பார்ப்பதற்கே படு பயங்கரமாய்! ஆனால் அதை நன்கு கழுவி, பதப்படுத்தி சுயமாய் அரைத்த மசாலை சேர்த்து பொன்னிறத்தில் பொரித்தெடுத்தால்... கே.எப்.சி என்னங்க பெரிய பிரமாதம்! எண்ணெய் மினுமினுக்கும் அயிரை மீன் பொரியலின் ருசியே அலாதிதான்! அதிலும் வீட்டுக்கு பக்கத்தில் சுயமாய்த்தானே பாத்திகட்டி பயிரிட்ட மரவள்ளிக்கிழங்குகளும் , குட்டிக் குட்டிக் கத்தரிக‌ளும், விரல் விரலாய் வெண்டைகளும், சேர்த்து சுசி தயாரிக்கும் அந்த அயிரை மீன் குழம்பு வாசம் கமகமக்க ஒட்டு மொத்த ஊரையே அந்த ஒரு பானை குழம்புக்கு எழுதி வைத்து விட‌லாம் போங்கள்! ருசி என்றால் அப்படி ஒரு ருசி ! (உணவு என்றதும் ஓவராய் உளறிட்டோமோ! :-)

சுசி தான் தூண்டிலிட்டுப் பிடித்த மீன்கள் இரண்டை இரும்பு வாளியில் நீவார்த்து வைத்து விட்டு மீதத்தை கழுவி பதப்படுத்தி சமையல் வேலையில் பரபரப்பாகிறார், சோறாக்கி, சுயமாய் மசாலை அரைத்து (அப்போது பாபா'ஸ், அழகப்பா'ஸ் லாம் ஏத‌ப்பா?) எல்லாம் சொந்தக் கைவரிசைதானப்பா! இப்போதுள்ள நவீனயுக மங்கையரை இதுபோல‌ மசாலை எல்லாம் அரைக்கச் சொன்னால், சமையல் அரோகராதான்! எப்பவோ கிரைன்டருக்கு மாறிட்டோம்ல! ! :-)

ஆயிற்று, குழம்பு அடுப்பில் கொதிக்கிறது, சீக்கிரத்தில் வேலை முடிந்து விடும், அப்பாடா என்று இருந்தது சுசிக்கு, கொதித்த குழம்பை இற‌க்கும் முன்பாக ஏதோ ஒரு வேலையாக முன் அறைக்கு வந்தவர், படாரென ஏதோ விழுந்த சத்தம் பெரிதாய் கேட்க, வந்த வேகத்தில் திரும்பி பின்கட்டுக்கு விரைகிறார் அங்கே...அவர் மணக்க மணக்க தயாரித்த மீன் குழம்பு பானையோடு சுவரில் வீசியெறியப்பட்டு தரை முழுக்க குமிழ் குமிழாய் சிதறி அலங்கோலமாய் வழிந்து கொன்டிருக்கிற‌து! அடுப்பு மட்டும் துளியும் அணையாமல் அதே அனலோடு... ! சுசிக்கு நன்கு ஞாபகமிருக்கிறது! அங்கே பூனைகள் வர வாய்ப்பில்லையே! பின்கட்டு வாசல் கதவும் வேலை உறைந்தாலும் முடிந்து சாத்தியது சாத்தியபடியே... பின் எப்படி...? இப்படி... ?


விய‌ப்பில் ஆழ்ந்து, அதிர்ச்சியில் உறைந்தாலும், ச‌ட்டென‌ சுதாரித்துக்கொன்டு பல்லைக்கடித்தவாரே விரைந்து ச‌மைய‌ல‌றையை நீரால் அலம்பி, மீத‌மிருந்த‌ மீன்களை விரைந்து தூய்மை செய்து மீண்டும் ஒருமுறை குழம்பு தயாரிக்கிறார் சுசி!, இம்முறை சமையல் முடிந்ததும், ஒரு பெரிய கரித்துண்டு ஒன்றை எடுத்து அந்தப் பானை மூடியில் வைக்கிறார் ( முற்காலத்தில் கரித்துண்டுகள் உணவுக் கலங்களின் மேல் வைக்கப்பட்டால் அவை தீயசக்திகளை அவ்வுணவை தீண்டாது தடுத்துக் காக்கும் எனும் ஒரு பரவலான நம்பிக்கை வழக்கில் இருந்து வந்துள்ளது ). உண‌வெல்லாம் முடிந்து, குழந்தைக‌ளுக்கு, மாலை உண‌வுக்கு வீடு திரும்பிய‌ கண‌‌வ‌ருக்கு என‌ பரிமாரி மாறி மீண்டும் அவ‌ர் க‌ண‌வ‌ரை வேலைக்கு வ‌ழியனுப்பி, குழந்தைக‌ளை உள் அறையில் தூங்க‌வைத்துவிட்டு, ப‌க‌லில் தூங்காத‌ ப‌ழ‌க்க‌முடைய‌ அவ‌ரும் அசதியில் அய‌ர்ந்து போய் அந்த‌ ச‌மைய‌ல் அறைக்கும், முன் அறைக்குமான‌ ந‌டு வெளியில், ஒரு சன்னல் ஓரத்தில் ஓய்ந்து ப‌டுக்கிறார், விரை‌வில் உற‌க்கம் விழி அணைக்க, அவர் கனவில்...

அவர் படுத்திருந்த சன்னலில் மேலாடையின்றி, ஒரேயொரு அழுக்கு கருநீல காற்சட்டையோடும் கோபமாக அங்கே வந்து நிற்கிறான் சிவா... அவன் கையில் ஒரு நீண்ட கழி, சுசியை வெறித்தனமாக நோக்கியபடி அந்தக் கழியை ஓங்கிச் சுழற்றி சன்னல் வழியே ஒருக்களித்துப் படுத்திருந்த சுசியின் தலையில் பலங்கொன்ட மட்டும் ஓங்கி ப‌டாரென ஒரேஅடி... அய்யோ அம்மா! என‌ அல‌றிய‌ப‌டி த‌லையைக் கையால் பிடித்த‌வாரே அடித்து பிடித்து எழு‍கிறார் சுசி! த‌லை வலியால் விண் விண்ணென்று தெரிக்க, வழியின் உச்சம் கண்களில் கண்ணீராய், எழுந்து சுற்று முற்றும், உள்ளே வெளியே என சகல இடங்களையும் ஆராய்கிறார்! ஆழ்ந்த அமைதி, யாருமே அங்கில்லை! சன்னலுக்கு வேளியே சற்று தூரத்தில் அவர் தலையை பதம் பார்த்ததே அந்தக் கழி மட்டும் கீழே தனியாக‌... ‌அதைக் க‌ண்ணுற்ற‌வாரே, வ‌லிக்கும் த‌ன‌து தலையில் கைவைத்துத் தடவ, முட்டையாய் அவ‌ர் த‌லை அங்கே அடிபட்டு வீங்கியிருந்த‌து...மேலும் பல திகைக்க வைக்கும் டுவிஸ்டுகளோடு விரைவில் எதிர்பாருங்கள்
ஆத்மா (7)

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!!!

tamilvanan said...

//இப்போது தொட்டதுக்கெல்லாம் பட்டனை தட்டி பிந்து கோசுக்களாக‌ மாறிடுச்சுங்களே நம்ம பெண்கள் அப்டின்னெல்லாம் யாரும் புலம்பக்கூடாது மீறிப் புலம்பினா! மாதர் சங்கத்திலே சொல்லி மறியல் பண்ண ஆரம்பிச்சிடுவோம் ஆமாம்!!//

இது உங்கள் சுய வாக்குமூலமோ!

//கரித்துண்டுகள் உணவுக் கலங்களின் மேல் வைக்கப்பட்டால் அவை தீயசக்திகளை அவ்வுணவை தீண்டாது தடுத்துக் காக்கும் //

இருக்கலாம். அக்காலத்தில் தூர பயணம் மேற்கொள்வோர் புலால் உணவுகளை கையெடுப்பு சாப்பாடாக எடுத்து செல்லும் போது சூடான கரித்துண்டுகளை உணவு அடுக்கின் மேல் வைத்துக்கொள்வர். உணவு நேடு நேரம் வரை சூடாக இருக்கும். புலால் உணவுகளில் கிருமி்கள் அண்டும் வாய்ப்பு குறைவு.

பதிவிலே //கே.எப்.சி,அயிரை மீன் பொரியலின்,மீன் குழம்பு வாசம்,சோறாக்கி,முட்டையாய் // இப்படி சாப்பாடு அயிட்டம் அதிகமா இருக்கே பசியிலே எழுதினிங்களா இல்ல புசிச்சிக்கிட்டே எழுதினிங்களா?

பதிவை படிச்சோன பயம் வரல பசிதான் வந்துச்சு....

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை !!!

//நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!!!//

ஏதோ நம்மால முடிஞ்சது! ந‌‌ண்பராய் இருந்துகிட்டு இதைக்கூட செய்யலனா எப்படி சார்

சிவனேசு said...

tamilvanan

வாங்க தல வாங்க !,

வம்பு இழுக்கிறதுக்கினே வண்டி கட்டிட்டு வந்திருகீங்க தானே !
இருந்தாலும் உங்கள் கருத்துக்களில் உண்மை இருப்பதால் ஏற்றுக்கொள்கிறேன் ! ஒன்றைத்தவிர,

என்னை சப்பான் சாடையில குண்டுனு சொன்னீங்களே அதை!(வன்மையாகக் கண்டிக்கிறேன்!)

இதற்காக உங்களை கண்டித்து விரைவிலே ஒரு பதிவு போடப்படும் என்பதையும் கராராக தெரிவித்துக் கொள்கிறேன்!

புனிதா||Punitha said...

ஆவிகள் பற்றி பி.எச்.டி ஏதாவது செய்றீங்களா?

சிவனேசு said...

எப்டி புனிதா இவ்ளோ கரெக்டா !!?, சரி சரி இந்த ரகசியம் நம்மோடயே இருக்கட்டும், வெளியில யாருக்கும் தெரிய வேணாம் சரியா ?