.

.
.

Saturday, March 21, 2015

முல்லை ‍ - பகுதி 2

அது ஓர் அழகான தோட்டம். பார்க்கும் இடமெங்கும் பசுமை கொட்டிக் கிடந்தன. சேறு கலந்து செந்நிறத்தில் நீரோடும் மிகப்பெரிய ஆறும் அங்குண்டு. அதில் நிறைய நீர்வாழ் உயிர்களுமுண்டு...

தோட்டத்தின் வடக்குத் திக்கில் இரு கைகளால் இணைத்து அணைக்க முடியாதபடி பெரிய அரச மரம். அங்கே ஊர்க்காவலுக்கென‌ சிறிய தகரக் கொட்டகையில் இரண்டடி உயரத்தில் சிமென்டு சிலையாக முறுக்கிய மீசையும் முண்டக்கண்களுமாய் ஓங்கிய அரிவாளோடு ஐயன் முனியாண்டி அழகாக, அவருக்குப் பக்கத்திலேயே பரியும் பைரவரும்.

அவர் அத்தோட்ட மக்களின் ஏகோபித்த பக்தியைப் பெற்ற காவல் தெய்வம். குழந்தை வரம் வேண்டி அரச மரம் சுற்ற வரும் பெண்களிலிருந்து, திருமண‌மாக, நோய் குண‌மாக, சத்தியப் பிரமாண‌ம் எடுக்க என, அவர் அத்தோட்டத்தின் பரிபாலன தெய்வமாய் அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.

 ஒற்றையடிப் பாதைகள், ஒற்றுமையான மனிதர்கள்..!

எளிமையும் எழிலும் ஒருங்கே நர்த்தனமிட்டுக் கொன்டிருக்க, அகிலனின் "பால்மரக் காட்டினிலே " வரும் காட்சிகளும் கதாமாந்தர்களும் அங்கே உயிர்பெற்று நடமாடிக்கொண்டிருந்தனர்.

சந்திரா இப்படி கேவலமாக நடத்திய‌ அவள் மாமியார் கண்ணம்மா தனது பால்ய பருவத்தில் அத்தோட்டத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்தவர், அவர் தந்தை வீரய்யா அந்த தோட்டத்தில் கிராணியாக பணியாற்றியவர், முரட்டுத் தோற்றம் கொன்ட நல்ல மனிதர், தன் ஒற்றைப் பெண்ணின் மேல் உயிரையே வைத்திருந்தார்.

வீரய்யா, கண்ணம்மா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வனப்புமிகுந்த மங்கையாக வளர்ந்து வருவதைக் கண்டு மிகவும் பெருமிதம் கொன்டார். அடிக்கடி பட்டிணம் சென்று தன் மகளுக்கென ஆபரணங்கள் வாங்கிவந்து அவளுக்கு அணிவித்து அழகு பார்த்தார். தந்த நிறத்திலான தன் மகளை தங்கத்தால்

இழைத்து அழகு பார்த்தார்.

கண்ணம்மா, தன் பெயருக்கேயுரிய  கண்ணனின் துருதுருப்போடு வளர்ந்தாள். அந்தத் தோட்டத்திலேயே மிகவும் அழகான பெண்ணாக வலம் வந்தாள். எப்போதும் இராஜ குமாரியைப்போல் அவளை தோழிகள் புடை சூழ வலம் வந்தாள். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக அவர்களின் நாட்கள் நகர்ந்தன.  

"வெயிலுக்கு காட்டாம வளர்த்தாகளா ? உன்னை வெள்ளாவியில் வெளுத்து எடுத்தாகளா" என இன்றைய சினிமா திரைக்கவிகள் கேள்வி தொடுப்பதைப் போன்று அன்றே அத்தோட்டத்தின் பல காளையர்களுக்கும் அழகிய கண்ணம்மாவை காண்கையில் கிறுகிறுத்துப் போனது. இந்த அழகான கிளியை எவன் கொத்திக்கினு போகப்போறானோ என மனதுள் பொருமல். கூடவே அவள் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா எனும் ஏக்கமும்.....

அதற்கும் ஒரு நாள் வந்தது கண்ணம்மாவின் வாழ்வில் அடுத்த கட்டமாக...!

No comments: