.

.
.

Thursday, March 26, 2015

முல்லை 3

மண்ணில் இட்ட விதையானது முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, கிளைவிட்டு நாளடைவில் மரமாகி மலர் சொரிந்து, காயும் கனியுமென கண்ணைக் கவர்வதை இயற்கையின் இனிய கவிதையாகக் காண்கிறது உலகம்.

அதைப்போலவே சிறு குழந்தையாய் தன் கைகளில் தவழ்ந்த தன் மகள் தன்னில் முக்கால் உயரத்துடன், அழகிய பெண்ணாய் பார்ப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வளர்ந்திருந்தது வீரய்யா கங்காணிக்கு ஒருபக்கம் பெருமிதம் தந்தாலும், மறுபுறம் இவளுக்கு பொருத்தமான‌ மணவாளனை தேர்வு செய்து மணமுடிக்க வேண்டும் எனும் கவலை அவர் உள்ளத்தை வாட்டிக்கொன்டிருந்தது.

அவர் கவலையை புரிந்து கொன்டு கண்ணம்மாவுக்கெனவே சிருக்ஷ்டித்து அனுப்பட்டவனைப்போல் ஒரு இளங்காலை வேலையில் அவ்வூரில் தஞ்சமடைந்தான் அந்த இளம் காளை..! சாரங்கன் என்பது அவன் பெயர். மாநிறம், அளவான உயரம், ஓர வகிடெடுத்து வாரிய சுருள் கேசம். களையான முகத்தில் எப்பொழுதும் நிரந்தரமாய் ஒரு புன்னகை,
எதைப்பற்றியும் கவலைப்படாத ஆராயும் விழிகளுடன், வெள்ளை உடையும், கைப்பெட்டியுமாய் அவ்வூருக்குள் நுழைந்தான் சாரங்கன். அத்தோட்டப் பள்ளிக்கு ஆசிரியராக...!

முதல் சந்திப்பிலேயே வீரய்யா கங்காணிக்கு சாரங்கனை மிகவும் பிடித்துப் போனது..! உவகையுடன் வரவேற்று, சொந்த உற‌வினன்போல் மனதால் பாவித்து உள்ளன்புடன் உதவிகள் செய்தார். அவர் அடிமனம் பல மனக்கணக்குகள் போட்டது.

நாளடைவில் நெருங்கிப் பழகி சாரங்கனைப்பற்றிய தகவல்களை விசாரித்தார். தாய் தந்தையை இளவயதிலேயே இழந்து தமக்கையின் ஆதரவில் வளர்ந்து, படித்து ஆசிரியரான கதையைக் கேட்டுத் தெரிந்து கொன்டார்.

காலம் கனிந்தது. சாரங்கன் மிகவும் நல்ல வாலிபன், எந்த தீயப்பழக்கங்களும் இல்லாத குண‌சாலி என்பதை நன்கு உறுதிபடுத்திக்கொன்ட வீரய்யா சாரங்கனின் சம்மதம் பெற்று தனக்கு வேண்டியவர்களுடன் சாரங்கன் வீட்டாரிடம் சம்பந்தம் பேசி, சாரங்கனை தமது மருமகனாக்க ஆவன செய்தார்.

அதற்கும் இடைப்பட்ட காலத்தில், தோட்டத்தில் சாரங்கனுக்கும் கண்ணம்மாவுக்கும் இடையில் சில சந்திப்புகள் நிகழ்ந்தன. முதல் சந்திப்பிலேயே அவர்களின் பார்வைகள் ஒருவரை ஒருவர் அளவெடுக்க. உள்ளத்துள் ஒருவரை மற்றவர் வியந்து ரசிக்க, அவர்களின் மனமது ஒன்றிணைந்துகொள்ள‌ , தோற்றங்கள் மட்டும் மெள‌னமாய் விடைபெற்றுப்பிரிந்தன.

அவர்கள் இருவருக்குமே மனதுக்குள் ஒருவருக்கு மற்றவரை மிகவும் பிடித்திருக்க, பெரியோர்களால் அவர்களின் திருமண பந்தம் நிச்சயிக்கப்பட, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததைப்போல் அவர்களின் மனமெல்லாம் இனித்தது.

ஒரு நல்ல நாளில் அத்தோட்டமே வியக்க, பிரமாண்ட பந்தலிட்டு, பாராட்டும் படியாய் விருந்து வைத்து வெகு விமரிசையாய் சாரங்கன், கண்ணம்மாவின் திருமண வைபவத்தை நிகழ்த்தி நெகிழ்ந்தார் வீரய்யா கங்காணி.

வீரய்யா கங்காணியின் மகளாய் மலர்ந்த கண்ணம்மா, சாரங்கனின் மனதிற்கினிய மனைவியாய், அத்தோட்டத்தின் "வாத்தியார் வூட்டம்மா"வாகிப்போனாள்.        

அவர்களின் வாழ்க்கையில் பொங்கிப் பெருகியது மகிழ்ச்சி வெள்ளம், நாட்கள் நகர்ந்து, மாதங்கள், வருடங்கள் என உருண்டோடின,  அழகிய ஆண்மகனுக்கு தாயானாள் கண்ணம்மா, அப்போதுதான் யாருமே எதிர்பாராது......!


தொடரும்......!

No comments: