.

.
.

Wednesday, March 18, 2015

முல்லை

தொலைக்காட்சியில் அந்த பிரபல நடிகையின் சுவாரசியமான சின்னத்திரைத்தொடர் அரங்கேறிக்கொன்டிருந்தது. சந்திரா அதில் மெய்மறந்து தன்னைத் தொலைத்திருந்தாள்.

வீட்டிற்கு வெளியில் அவளுடைய ஐந்து வய்து பையனும், 3 வயது பெண்ணும் மண்ணில் விளையாடிக்கொன்டிருந்தனர், வீட்டினுள் தொட்டிலில் 8 மாத இளைய மகன் தூங்கிக்கொன்டிருந்தான்.

வெளியே திண்ணையில் அவளின் மாமியார் கண்ணம்மா, 80 வயது மூதாட்டி, காய்ந்த கம்பளிப்பூச்சியாய், சுருங்கிய தேகத்துடன் கண்பார்வை குறைந்து ஓர் ஓரத்தில் சுருண்டிருந்தார். சொந்தமாக இயங்க முடியாதபடி தள்ளாமை அவரை ஆட்கொன்டிருந்தது, எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை நாடியிருந்தார். அப்பொழுது மதியம் 2.00 மணிக்கு மேல், இன்னமும் அவர் மதிய உணவை உண்ணவில்லை, பசி வயிற்றைக்கிள்ளியது.

சின்னத்திரைத் தொடர் முடிந்த பின்னர் தான் அவர் மருமகள் சந்திரா எழுந்து வந்து உணவுத்தட்டில் கொஞ்சம் சாப்பாட்டை வைத்து அவரிடத்தில வீசுவாள், அதுவரை வெளியிலேயே சுருண்டு படுத்திருந்தார், நேரம் ஆக ஆக பசி தாங்க முடியவில்லை, கண்களை செருகிக் கொன்டு மயக்கமாக வந்தது, தாள‌ முடியாத கண்ணம்மா வாய்விட்டு அலறத் தொடங்கினார்.

தொலைக்காட்சி தொடருடன் ஒன்றிப்போயிருந்த சந்திராவுக்கு அடக்க முடியாத முடியாத எரிச்சல் பொங்கி வந்தது, "இந்தக் கிழவிக்கு எவ்ளோ கொழுப்பு? பட்டினி போட்டு சாவடிக்கிறேன்னு ஊரக் கூட்டி ஒப்பாரி வைக்குதே! எனக் கருவியவாறு அவரைக் கொல்லும்  கோபத்துடன் வெளியில் வந்தவள் கண்ணில் ஓர் ஓரமாகக் கிடந்த துடைப்பம் தென்பட்டது. அது தன்னை அழிக்க வந்த சாத்தானின் மறு உருவம் என்பதை உண‌ராது ஆத்திரம் கண்ணை மறைக்க அதைக் கையிலெடுத்தவள்   வயதானவள், தன் மாமியார் எனவும் பாராது, அந்தத் துடைப்பத்தால்  க‌ண்மண் தெரியாது கண்ணம்மாவை சாத்தத் துவங்கினாள்! ஆத்திரத்தில் அறிவிழந்தவளுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை! பசி மயக்கத்தோடு அடியும் விழ, துடைப்பத்தின் குச்சிகள் கண்ணம்மாவின் காய்ந்த தோலைக் கிழித்துச் சொருகிக் கொன்டு இரத்தம் கசிய, பெருங்குரலெடுத்து ஓலமிடத் தொடங்கினார் கண்ணம்மா.

அதே நேரத்தில் அவ்வீட்டிற்கு அருகாமையில் நடந்து சென்று கொன்டிருந்த   முல்லை சத்தம் கேட்டு அவ்வீட்டை நோக்கி ஓடினாள், அங்கே அவள் கண்ட காட்சி அவளின் இரத்தத்தை கொதிக்கச் செய்தது, அவள் கண்ணம்மாவுக்கு உறவுக்காரியும் கூட! கண்ணம்மா முல்லைக்கு அத்தை முறை. சந்திரா அவள் மாமியாரை துடைப்பத்தால் அடிப்பதைப் பார்த்து வெகுண்டு போனாள்! கண்ணம்மாவிற்கு ஏற்கனவே பசி மயக்கம், இதில் மூர்க்கமான அடிகள் வேறு, , அவர் கேசம் களைந்து, உடையும் நெகிழ கண்ணீர் வழிய தரையில் துவண்டு சரிந்து கிடந்தார். 

முல்லை சினங்கொண்ட சிம்மத்தைப்போல கர்ஜித்துக்கொன்டு சந்த்ராவை நெருங்கினாள் . நாலெட்டில் அருகில் நெருங்கி சந்திராவின் கையில் பிய்ந்து தொங்கிக் கொன்டிருந்த துடைப்பத்தை பிடுங்கி தூர வீசினாள், சந்திராவின் தலைமுடியைக் கொத்தாக கையில் பற்றிக்கொன்டு, இப்படியும் அப்படியுமாக பளார் பளாரென அவள் கன்னத்தில் நாலு அறைவிட்டாள்!

எதிர்பாராத அத்தாக்குதலில் திக்குமுக்காடிப் போனாள் சந்த்ரா! "ஏண்டி நாயே, அநாதையா கிடந்த உனக்கு வாழ்வு கொடுத்து இந்த வீட்டுக்கு மகாராணியா ஆக்கின மாமியாருக்கு இது தான் நீ குடுக்கிர மரியாதையா ? "இருடி! வெளியூர் போயிருக்கிற என் மாமன் வரட்டும், உன்னைய‌ வெளக்க மாத்தால அடிச்சு, வேற‌ பேரு வக்கச் சொல்றேன்" என ஆத்திரத்துடன் கத்தியவள், கீழே சுருண்டு கிடந்த கண்ணம்மாவை  தூக்கித் தோளில் சாய்த்துக்கொன்டு, "உனக்கு இதெல்லாம் தேவையா? என கண்கள் கசிய புலம்பிக்கொன்டே அருகிலிருந்த தன் வீட்டிற்கு கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.

கண்ணம்மாவை சுத்தப்படுத்தி, அவரது காயங்களுக்கு ம‌ருந்திட்டு, உணவளித்துப் படுக்கச் செய்தாள். பக்கத்தில் அமர்ந்து கண்ணம்மாவையே பார்த்துக் கொன்டிருந்தவள் கண்கள் குளமாக நினைவுகள் பின்னோக்க அந்நாளில் தான் கண்ட கண்ணம்மாவின் கம்பீர உருவம் நிழலாடியது.....!


அதேவேளை தன் வீட்டிற்கு வெளியே ஓங்கிப் புறப்பட்ட சந்திராவின் மரண ஓலம் அந்த வீதியையே கதிகலங்கச் செய்தது....!!!!

தொடரும்....

No comments: