.

.
.

Monday, April 6, 2015

முல்லை - 5

சாரங்கனின் வருகை கண்ணம்மாவிற்கு எல்லையில்லா மகிழ்ச்சியளித்தது, எனினும் அவன் உடன் கொன்டுவந்திருந்த அவன் ச‌சோதரியின் மரண‌ச் செய்தி அவள் மகிழ்ச்சியை நிலைக்கவிடவில்லை. தன் ச‌கோதரியைக் காண‌த் தனியாகச் சென்றிருந்த சாரங்கன் ஒரு துணையுடன் வீடு திரும்பியிருந்தான்.

துணையாக வந்திருந்த அவள் மழையில் நனைந்த மைனாவைப்போல் பரந்த சாரங்கனின் உருவத்திற்குப் பின் அடங்கி ஒடுங்கி நின்றிருந்தாள் அவள்தான் பார்வதி. 20 வயதிற்கு மேற்பட்டவள் என்றால் யாரும் நம்பமுடியாத சிறு பெண்ணைப்போன்று ஒடிசலாய் காட்சியளித்தாள். அவள் அப்படியொன்றும் அழகல்ல, அவளின் சிறிய முகத்தில் அவள் அணிந்திருந்த அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி ஒன்றுதான் அவளை சற்று பெரிய பெண் என பார்ப்பவரை நம்பவைத்தது.

பார்வதி, சாரங்கனின் ச‌கோதரி கமலாவின் மகள், பிறக்கும் பொழுதே வாய்பேச இயலாத குறையுடன் பிற‌ந்தவள். சாரங்கனுக்கு என கமலாவினால்  நிச்சயிக்கப்பட்டிருந்தவள். ஆனால் விதியின் விளையாட்டு வேறு வித‌மாய் அமைந்திருக்க‌. சாரங்கனுக்கு கண்ணம்மாவுடன் திருமண பந்தம் அமைந்தது.சாரங்கன் தனக்கென சுயமாக வாழ்வு தேடிக்கொண்டதை அறிந்த‌தும், கமலா தன் வேதனையை வெளிக்காட்டாது அவன் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைத்தாள் .

த‌ங்கள் வாழ்வை தாங்கள் கவனித்துக்கொள்வோம் கவலையின்றி போய் கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்து என சாரங்கனை மனம் நிறைய ஆசிர்வதித்து வழியனுப்பினாள்.

ஊனமான மகளுடன் தனிமரமாய் நின்ற கமலா, வேதனையில் துவண்டு போனாள், தங்களின் நிலையை மறந்துவிட்ட சாரங்கனிடம் மல்லுகட்ட அவள் மனம் இடம் தரவில்லை. தன் மகளின் வாழ்வை எண்ணி தான் சீவும் பால்மரங்களிலிருந்து வழியும் திராவகம்போல் கண்ணீர் திரண்டு வழிந்தது அவள் கண்களில். காப்பாற்றுவான், கரைசேர்ப்பான் என நம்பிய‌ தம்பி கைவிட்ட ரணம் அவள் இதயத்தில் நிரந்தரமானது.  விதியின் கையில் தங்களின் வாழ்வை ஒப்படைத்து தன் மகளுக்கு வேறு இடங்களில் மாப்பிள்ளை தேட முயன்று தோற்றாள்.

நாளாக நாளாக பார்வதியைப் பற்றிய கவலை அதிகரித்து, கமலா நோயில் விழுந்தாள். மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்தாள். மகளை தன்னந்தனியாய் விட்டு விட்டு செல்லப்போகிறோம் என்பது அவளுக்கு சொல்லமுடியாத துயரத்தை தந்தது. உண்மையில் காலம் அவளுக்கு புகட்டிய கசப்பான அனுபவங்கள் வாழ்வை வெறுத்து மரணத்தை வரவேற்கும் மனோ நிலையையே அவளுள் வளர்த்திருந்தது. ஆனால் தன் ஒரே மகள், அதுவும் வாய் பேச இயலாதவள் இம்மண்ணில் தனக்குப் பின் தன்னந்தனியாய் எப்படி வாழ்வாள் , எனும் கவலை அவளை அரித்தெடுத்தது

இறுதியாய் சாரங்கனை வரவழைத்தாள்,. பார்வதியை அவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு கனத்த இதயத்துடன் மரணத்தை தழுவிக் கொன்டாள் கமலா.

தன் ச‌கோதரியின் மரண‌ம் தந்த வலியுடன், அவளின் மகளை அழைத்துக்கொன்டு வீடுவந்து சேர்ந்தான் சாரங்கன். தன் ச‌கோதரி மரணத்திற்கு தான் முக்கியக் காரணம் என்பதை அவன் மனம் அறியாமலில்லை. இள‌மையிலேயே தன்னந்தனியனாகிப்போனவனை வருத்தத்தின் சுவடே அணுகாது தன்னை வருத்திக்கொன்டு வாழவைத்தவள் அவன் சகோதரி. அப்படிப்பட்டவளுக்கு மரணத்தை மட்டுமே பரிசளிக்க நேர்ந்த தன் விதியை நொந்துகொன்டான் சாரங்கன்.

நடந்த சம்பவங்களை சாரங்கன் வாயிலாக அறிந்து கொன்ட கண்ணம்மா அதிர்ந்து போனாள். பார்வதியை சாரங்கன் மணந்திருந்தால் அவர்கள் வாழ்வு செழித்திருக்குமே, சாரங்கன் சகோதரி பிழைத்திருப்பாளே என கண்ணம்மா மனதுள் மருகினாள். தன்னால் நேர்ந்துவிட்ட பிழையல்லவா இது, போயும் போயும் ஒர் ஊமைப்பெண்ணின் வாழ்வை பறித்துவிட்டோமே என அவள் மனம் இடித்துரைத்தது.

சில நாட்கள் கடந்த‌பின் ஒரு நாள் பார்வதியை  அழைத்து கோயிலுக்கு சென்று வருகிறேன். எனக்கூறிவிட்டு மகனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொன்டு புறப்பட்டாள் கண்ணம்மா.

பார்வதி வாசலில் நின்று ஓவியம் ஒன்று உயிர்பெற்று நடப்பதைப்போல் கண்ணம்மா நடந்து செல்வதை கண்கொட்டாது கவனித்துக் கொன்டிருந்தாள். அவளுக்குத்தெரியாது கண்ணம்மா இனி வீடு திரும்பமாட்டாள் என்பது....! No comments: