.

.
.

Thursday, April 16, 2015

முல்லை - 6

கண்ணம்மாவின் முடிவு பைத்தியக்காரத்தனமானது என அவளை அறிந்த‌ அனைவரும் திட்டினர்,  சாரங்கன் வருத்தத்துடன் அவள் முடிவை ஏற்று பார்வதிக்கு வாழ்வளித்தான். கண்ணம்மா மீண்டும் தன்னை நாடி வருவாள் என நம்பிக்கையை மனதுள் விதைத்துக் காத்திருந்தான்.

சாரங்கனைப் பிரிந்த கண்ணம்மா வெகு தூரத்தில் இருந்த தனது உறவினர் ஒருவர் வீட்டில் அடைக்கலமானார். சொற்ப காலத்தில் தன்னை  நிலைப்படுத்திக்கொன்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள ஆயத்தமானார்.

தான் வாழவும் தனது மகனை வளர்த்தெடுக்கவும் அவருக்கு தொழில் அவசியம் ஏற்பட்டது, தோட்டத்தில் வேலைக்கு இணந்தால், வருமானம் போதாது என நினைத்தார், மகனை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கனும், கோட்டு சூட்டெல்லாம் போட்டு அழகு பார்க்கனும், அதுக்கு இந்த வருமானம் பத்தாதே என மருகினார், பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராய் தனக்கு ஆதரவளித்த  தன் உறவினர் ஆறுமுகத்தின் உதவியை நாடினார்.

ஆறுமுகம் நல்ல மனிதர், பக்கத்து பட்டிணத்தில் லாரி ஓட்டும் வேலை செய்து வந்தார். தான் திட்டமிட்டபடி கண்ணம்மா தனது ச‌கோதரர் ஆறுமுகத்துடன் பட்டணத்திற்கு புறப்பட்டுச்சென்றார், அவர் தந்தை அவருக்கு ஆசை ஆசையாய் திருமண‌த்திற்கு செய்து போட்ட நகைகளை நல்ல விலைக்கு விற்றார், கிடைத்த பணத்தை வாங்கி தனது சீட்டித்துணியில் ( அந்நாளைய திருமணமான மாதர்கள், கைலித்துணி அணிந்து, மேலே இரவிக்கை தரித்து இடையில் தாவணிப்போல் சுற்றிக் கட்டிக்கொள்ளும் மேலாடை) முடிந்து வைத்துக்கொன்டார்.

அதன் பின்னர் அந்த பட்டணத்திலுள்ள துணிக்கடைகளுக்கு   அண்ண‌னும் தங்கையும் புறப்பட்டுச் சென்றனர், ஆறுமுகத்திற்கு பரிச்சயமான ஒரு துணிக்கடையில் மொத்தமாக துணிமணிகள் விலைக்கு எடுத்து தோட்டம் தோட்டமாக சென்று விற்று வருவது என கண்ணம்மா முடிவு செய்திருப்பது பற்றி கடைக்காரரிடம் தெரிவித்தனர்.

ஆச்சரியப்பட்டாலும், ஆதரவு கூறி அவர் கொன்டுவந்திருந்த பணத்திற்கு நல்ல விலையில் நிறைய துணிமணிகளை கொடுத்து ஆசி கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தார் அந்த கடைக்காரர்.

அதன் பின்னர் கண்ணம்மா தனது வேலையைத் துவங்கினார், ஆறுமுகத்தின் மனைவியிடம் மகன் சங்கரை பாதுகாப்பாக விட்டுவிட்டு, இரு பெரிய பைகளில் துணிமணிகளை அழகாக அடுக்கி வைத்துக்கொன்டார். தோட்டம் தோட்டமாக சம்பள காலங்களிலும், திருவிழா நேரங்களிலும் விற்பனைக்குச் சென்றார்.


பேரங்காடிகளும் வீட்டுக்கு ஒரு வாகனமும் இல்லாத காலம் அது ! குடும்பதோடு "க்ஷாப்பிங்" செல்வதெல்லாம் அக்காலத்தில் கிடையாது, எனவே கண்ணம்மாவின் வியாபாரம் நன்கு சூடு பிடித்தது. கண்ணம்மா விற்பனையில் கைதேர்ந்தவராக விள‌ங்கினார்,  துணிமணிகள் வாங்குபவர்கள் வீட்டிலுள்ள பெண்குழந்தைகளுக்கு அழகான ரிப்பன்கள், வறுமையானவர்களுக்கு அவர்களுக்கேற்ற விலையில் துணிமணிகள் எனத் திறமையாக வியாபாரம் செய்து கூடிய விரைவிலேயே சுற்று வட்டார தோட்டங்களில் பிரபலமாகிப்போனார்!

Ralf Heynen painting  : Women  mother and baby தன் முடிவால் குடும்ப வாழ்விலிருந்து விலகி தனிமரமாகிப்போனார் கண்ணம்மா! ஆனால் தன்னம்பிக்கை இழக்கவில்லை, தனது வாழ்வில் மறுமணம் என்ற‌ பேச்சுக்கே இடமின்றி நெருப்பாக வாழ ஆரம்பித்தார், தவறான எண்ணத்துடன் தன்னை அணுகியவர்களை நெருப்பென சுட்டெரிக்கும் பார்வையாலும், நறுக்குத் தெறிக்கும் பேச்சாலும் தலைதெரிக்க ஓட வைத்தார். தன் ஒரே மகன் சங்கரை உயிருக்கு உயிராய் போற்றிப் பாதுகாத்து வளர்த்தார்.

நல்ல செம்மஞ்சள் நிற‌த்தில் அழகாக தோற்றமளிக்கும் கண்ணம்மா வெயிலில் அலைந்து திரிந்து கருத்து காய்ந்து கருவாடாகிப் போனார். அவர் கைகளும் கால்களும் காப்புக்காய்த்து சுருங்கிப்போயின. ஆனால் பட்ட துன்பத்துக்கெல்லாம் ஈடாக வியாபாரத்தில் அவருக்கு நல்ல இலாபம் கிடைத்தது. கிடைத்த இலாபத்தை முறையாக சேமித்து வைத்தார். வியாபாரத்தை தொடர்ந்து செய்து வந்தார்.

ஓர் ஆண்மகனால் (கண்ணம்மாவின் தந்தை வீரய்யா கங்காணி) வளர்க்கப்பட்ட கண்ணம்மா ஒர் ஆணின் மனத்தின்மையோடு வாழ்வை எதிர்கொள்ள ஆரம்பித்தார், அடுத்த இடி அவர் தலையில் வந்து இறங்கும்வரை....  !

1 comment:

சி.ப.ரஞ்சிதமலர் said...

nalla kathai , mullai 7 kukage katirukiren