.

.
.

Tuesday, July 14, 2015

முல்லை (10)

தளிர்க்கொடியாய் நடையிழந்து தவித்தது ஒன்று..
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று..
இதற்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது ?
பழி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது ? 
                                                                                                      உடுமலை நாராயணகவி

சந்திரா, ஆத்திரமும், அவமானமும் சூழ வீட்டிற்குள் ஓடினாள் ! முல்லை அவளுக்குக் கொடுத்த அடிகளைவிட, சங்கரிடம் தன்னைப்பற்றி புகார் கூற‌ப்போகிறேன் என மிரட்டல் வேறு விடுத்திருக்கிறாளே ? அது அவளுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. கண‌ நேரத்தில் தான் உண‌ர்ச்சிவசப்பட்டு தன் மாமியாரைத் தாக்கியது எத்தனை பாதகமான பின்விளைவுகளைக் கொன்டுவந்துவிட்டது ?

சங்கருக்குத் தன் தாயிடம் பிரேமை அதிகம் என்பது அவள் அறிந்ததே, அது இப்போது நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்தியது. இல்லையென்றால் கண‌வனை கைக்குள் போட்டுக்கொன்டு   அவள் ஆரம்பத்திலேயே கண்ணம்மாவை அந்தக் குடும்பத்திலிருது  அப்புறப்படுத்தியிருப்பாள்.

சந்திராவின் மனது அலைபாய்ந்தது. நடந்த‌தை நினைத்துப் பயனில்லை, இனி நடப்பதை மட்டுமே நினைக்க வேண்டும், ஏதாவதொரு பூதாகர‌மான பிரச்சனையை கிள‌ப்பிவிட்டு சங்கரின் அன்பையும் அநுதாபத்தையும் தன் பக்கம் இழுக்க வேண்டும். அதுவே சரி, அதற்கு இப்பொழுது என்ன செய்யலாம் ? திடீரென்று சிந்தையில் பளிச்சிட்ட அந்தக் கொடூர எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கப் பரபரத்தன கைகள்.

வேகமாய் பின்கட்டுக்கு ஓடிச்சென்ற‌வள், அங்கிருந்த மண்ணென்ணெய் டின்னை கையில் எடுத்துக்கொன்டாள். குழந்தைகள் வீட்டிற்குள் இருக்க அதில் இளைய குழந்தை தூளியில் படுத்திருக்க எதையுமே கவனத்தில் கொள்ளாமல் திடுதிடுவென வீட்டிற்கு வெளியே ஓடினாள்.

அங்கே நடுவீதியில் நினறு, கன நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணையை பாய்ச்சிக்கொன்டு தீயும் வைத்துக்கொன்டுவிட்டாள். அவளின் நோக்கம் வீதியிலுள்ளவர்களால் காப்பாற்றப்படவேண்டும் என்பது.
ஆனால் துரதிர்க்ஷ்டவசமாய் யாரும் அச்சமயம் அங்கிருக்கவில்லை, நெருப்போ நொடியில் அவளைப்பற்றிப் படர்ந்து அசுர வேகத்துடன் அவள் தேகத்தை பதம்பார்க்க ஆரம்பித்தது. வீசிய அந்திக்காற்றில் சுழலும் பெரு நெருப்பாய் மாறி விரைவில் அவள் உடல் பற்றி முழுதுமாய் எரித்தெடுத்தது, அவள் தேகம் தீய்ந்து, தலைமுடி கருகிய வாடை காற்றில் கலந்து வீசியது.

அச்சமயம் பார்த்து அனைவரும் வீட்டிற்குள் இருந்ததால் யாரும் அவளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை, அவளின் கோர அலரல் சத்தம் கேட்ட பின்னரே முல்லை உட்பட அனைவரும் ஓடிவந்து பார்க்கும் போது முக்கால்வாசி வெந்துபோய்தீக்காயங்களால் பாள‌ம் பாள‌மாய் வெடித்த தேகத்தோடும் , தீய்ந்த முகத்தோடும்  நெருப்பின் உக்கிரத்துக்குப் மேலும் ஈடுகொடுக்க வலுவின்றி கரிக்கட்டையாய் பூமியில் சரிந்தாள் சந்திரா !

அய்யோ ! என அலறிக்கொன்டு அவள் அருகில் முதலில் வந்தவள் முல்லைதான். அவளுடன் அண்டை அயலாரும் சேர்ந்து வாழையிலை

களால் அவளைப்போர்த்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரா தீய்ந்து வீழ்ந்த இடம் போர்தீர்ந்த களம்போல் நெருப்பின் எச்சங்களைத் தாங்கி மெளனம் காத்தது.

சந்திரா தீயவள் என்பதில்லை, அவள் நல்ல பெண்மணியே, இளவயதில் பெற்றோரை இழந்தவளாயினும் தன்னை வள‌ர்த்து ஆதரித்தவர்களுக்கு மரியாதையாய் நடந்து தமது உண்மையான உழைப்பையும் தந்து அவர்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவி அவர்களின் அபிமானத்தைப் பெற்றவள். அழ‌கும், இள‌மையுமாய் ஒளிர்ந்த பருவத்தில்  மனதிற்கு உகந்தவனை மானசீகமாய் விரும்பி கரம்பிடித்தவள். அவனுடன் அன்பான வாழ்க்கையில் அழகான மூன்று மக்களை ஈன்று வளர்த்தவள். இத்தனை சிறப்புகளும் வாய்த்தவள் தன் கணவனுக்கு முல்லையை மண‌க்க முடிவெடுத்து தன்னை ஆரம்பத்தில் மறுதலித்தார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக கண்ண‌ம்மாவை விக்ஷம்போல வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தாள். பாராமுகம் காட்டி உதாசீனப்படுத்தவும் தலைப்பட்டாள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நோயால் முடங்கிவிட்ட அவரிடத்தில் வன்மம் காட்டினாள். தன் வினை தன்னைச் சுடுமல்லவா ? ஒருநாள் அது அவளையே அவள் எண்ண‌த்தின் வழியிலேயே சுட்டுப்பொசுக்கியது....! மரணம் கட்டிலுக்குப் பக்கத்தில் நின்று அவள் காலமுடிவை கண‌க்கிடத்துவங்கியது, உடலாலும், மனதாலும் அள‌விடமுடியாத ஆழ்ந்த  வேதனை தோய்ந்த இறுதிப்பயண‌த்திறுகு தயாராகிக்கொன்டிருந்தாள் சந்திரா...! :(