.

.
.

Wednesday, July 1, 2015

முல்லை 9ம் பாகம்

என்னை விட்டு நான் போனேன் தன்னாலே 
கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே 
பேச வழியே இல்லை மொழியே இல்லை தவியாய் நான் தவித்தேன் 
காதல் கனவில் உன்னை முழுதாய் காண பிறையாய் நான் இளைத்தேன்.....
                                                                                                                                       கபிலன்(கவிஞர்)                                   

சந்திரா ‍பூரண சந்திரனைப்போல் அழகானவள். எழுமிச்சை நிறமும், அளவான உயரமும், அள‌வெடுத்ததைப்போல் அமைந்த ‍அங்கங்களும் அவள் பேரழகி என்பதை சொல்லாமல் சொல்லின‌.

அழகான அவளின் பின்புலன் அத்தனை சிற‌ப்பாக அமைந்திருக்கவில்லை. சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து உற‌வினர் வீட்டில் அண்டியிருந்தாள். அவர்கள் சொந்தமாக உணவுக்கடை நடத்திவந்தனர். அழகான சந்திராவை கல்லாப்பெட்டியில் உட்காரவைத்துவிட்டனர். அவள் அழகு பலரை கவர்ந்ததால் கடையில் கூட்டம் பெருகியது. அவ்விடம் லாரி ஓட்டுனர்கள் நின்று இளைப்பாறிச் செல்லும் இடமும் என்பதால் சங்கரும் அந்த உணவுக்கடைக்கு வாடிக்கையாளனாகிப்போனான்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பலர் அவளிடத்தில் ப‌ல்லிளித்து, ஜொள் வடித்து நிற்கையில். கண்ணியமாகவும் , மரியாதையாகவும் நடந்து கொன்ட சங்கரின் பால் சந்திராவின் கவனம் முழுதும் சென்றது. அவனுடைய லட்சணமான தோற்றமும், அழகிய சிரிப்பும் அவள் ஆசைக்கு மேலும் தூபம் இட்டன. வலிய அவனிடம் பேசி சிநேகம் வளர்த்துகொன்டாள். அழகான பெண் வலிய வந்து பேசினால் எந்த ஆணுக்குத்தான் பிடிக்காது ? அதிலும் சந்தணச்சிற்பம் போன்ற அழகிய பெண் மயில் தன்னிடம் ஆசை வார்த்தைகள் பேசினால் உறுதியான ஆண்  மனதும் சிறிது சலனமடையத்தானே செய்யும். சங்கரும், சந்திராவும் ஆகாய வீதியில் காதல் பறவைகளாய் உலா வரத் துவங்கினர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் காதல் மலர்ந்து வள‌ர்ந்து வந்தது. சந்திராவின் குடும்பத்தினர் சங்கருக்கு அவளை மணமுடிக்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் மகிழ்வுடன் அவனுக்கு அவளை மணமுடிக்க முன்வந்தனர். ஆனால் சங்கரின் நிலைதான் இக்கட்டாகிப்போனது...

கண்ணம்மாவை நினைத்து சங்கர் தயங்கினான். தன் தாய் முல்லையை தனக்கு மணமுடிக்கக் காத்திருக்கிறாள் என்பது அவனுக்கு பரிதவிப்பை ஏற்படுத்தியது. ஆரம்ப முதற்கொன்டே கல்வி, தொழில் என அனைத்திலும் அவள் ஆசையில் மண்ணை வாரிப்போட்டவன் சங்கர், இப்போது தன் திருமணத்திலும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை என்பது அவனுள் மனவருத்ததை விதைத்தது.

தைரியத்தை வரவழைத்துக்கொன்டு, சந்திராவைப் பற்றி கண்ணம்மாவிடம் எடுத்துக் கூறினான். கண்ணம்மா ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டுவாள் , தன்னை திட்டுவாள், முல்லையையே மணமுடிக்க வற்புறுத்துவாள் என எதிர்பார்த்த சங்கருக்கு வியப்பளிக்கும் வகையில் பதிலேதும் கூறாமல் மெளனமாய் அமர்ந்திருந்தாள் கண்ணம்மா. அவர் அடைந்த உச்சக் கட்ட வேதனையில் மனம் மருத்து அவர் பதுமைபோல் காட்சியளித்தார். சம்மதம் என்ற ஒரு வார்த்தை மட்டும் தப்பித்தவறியும் அவர் வாயிலிருந்து உதிரவேயில்லை.

அதன் பின்னர் சங்கர் தன் தாயிடம் சரியாக பேசாமலும், வீட்டில் உண்ணாமலும் வேடிக்கை காட்டத்துவங்கினான். அவனுக்குத் தெரியும், தன் தாய் தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்றும், நிச்சயம் தன் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டுவாள் என்றும். அவன் நினைத்தது நடந்தது. இறுதியில் சந்திராவை மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தாள் கண்ணம்மா. முல்லையை தன் மருமகளாய் அடை முடியவில்லையே எனும் ஏக்கம் அவரை நோயாளியாக்கியது.

சங்கருக்கு தன் தாயின் சம்மதம் கிடைத்ததும், மிக்க மகிழ்வுடன் தடபுடலாக திருமண ஏற்பாடுகள் செய்து, ஒரு நல்ல நாளில் சந்திராவை தன் மனைவியாக்கிக் கொன்டான். அவன் திருமண‌த்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொன்டு செய்தாள் முல்லை. அவளைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது கண்ணம்மாவுக்கு.

திருமணம் முடிந்து, சங்கரும் சந்திராவும் தங்கள் இல்லரத்தை இனிதே துவங்கி மகிழ்வுடன் வாழ்ந்தனர். கால ஓட்டத்தில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிற‌ந்தன.

சந்திரா, இப்பொழுதெல்லாம் ரொம்பவும் மாறிப்போய்விட்டாள். ஆதரவின்றி
உற‌வினர் வீட்டில் அண்டிய சந்திரா அல்ல இவள், நல்ல வசதிபடைத்த சங்கரின் மனைவியல்லவா, அதனால் அவள் மிகவும் தற்பெருமையும், அகங்காரமும் கொன்டு விள‌ங்கினாள். நோய்வாய்ப்பட்டிருந்த தனது மாமியாரை அறவே அவளுக்குப் பிடிக்கவில்லை. கணவன் வீட்டிலிருக்கும் போது நல்லவளாகவும், அவன் வேலைக்குப் போய் விட்ட சமயங்களில் சீரியல்களே கதி எனவும் ஆனாள்....!

(இனி நாம் கடந்தகாலத்திலிருந்து விடைபெற்று நிகழ்காலத்திற்கு வருவோம்)

அப்படியான ஒரு நாளில்தான் சீரியலில் அவள் மூழ்கிக்கிடக்க, கண்ணம்மா பசியால் துடிக்க, அவளை துடைப்பத்தினால் தாக்கி முல்லையிடத்தில் செம்மையாக பூசை வாங்கினாள், ஆத்திரமும் அவமானமும் ஆர்ப்பரிக்க யாரும் செய்யத் துணியாத ஒரு செயலை செய்ய முடிவெடுத்தாள் அபாக்கியவதி சந்திரா......

 

   

No comments: