.

.
.

Tuesday, July 28, 2015

Mullai (11)தோன்றிற் புகழோடு தோன்றுக  
அக்திலார் தோன்றலில் தோன்றாமை நன்று


எனும் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுப்படி வாழ்ந்து, ஆற்றல்மிகு விஞ்ஞானியாகவும், அறிவார்ந்த மெய்ஞ்ஞானியாகவும் உலகப் பேரேட்டில் தடம் பதித்தவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், உலகத் தமிழர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவருமாகிய பெருமைமிகு டாக்டர்.அப்துல்கலாம் அவர்கள் மறைவுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இயற்கையன்னையை பிரார்த்திக்கிறோம்.
.................................................................................................................................................

உன்னோடு நான் வாழும் ஒவ்வொரு மணித்துளியும்
மரண‌த்திலும் எனக்கு மறக்காது என்(இன்)னுயிரே  (இருவர் திரைவசனம்)


உயிரினங்களில் உயர்ந்த இனமாக ஆறாம் அறிவெனும் பகுத்தறிவுடன் பிற‌ந்தவன் மனிதன். நல்லது, கெட்டது, வேண்டியது, வேண்டாத‌து என பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ள‌வும், விலக்கிக்கொள்ள‌வும் உதவும் அறிவாற்றல் அவனுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ளது, எனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பரிதாபத்திற்குறிய சில மனித‌உயிர்கள் தன்னை மற‌ந்து ஆசை, கோபம் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடுகின்றன . பாவங்கள் புரிந்து, தவறுகள் இழைத்து, தன்னையே அழித்துக்கொன்டு மரண‌த்தை வரவழைத்துக்கொள்ளும் அவல நிலைக்கும் ஆளாகி விடுகின்ற‌ன‌ சந்திராவைப்போல....

மருத்துவமனையில் சந்திரா உயிருக்குப் போராடிக்கொன்டிருந்தாள். மருத்துவர்கள் அவள் வாழ்நாட்களுக்கு கெடு வைத்து விட்டனர். அவள் அழகிய வதனம் கருகித்தீய்ந்து கர்ண கடூர‌மாகிப்போயிருந்தது. உடல் வெந்து ஆங்காங்கே தோல் வெடித்து புண்களாகி அதில் நீர் வடிந்து, பேச இயலாமல், உண்ண வழியில்லாமல் மருத்துவ சாதனங்களின் துணையுடன் படுக்கையில் அவள் முடங்கிக்கிடந்தாள். அவள் உள்ளுறுப்புக்களும் வெடித்து, பாதிப்படைந்து விட்ட‌தாக மருத்துவ அறிக்கைகள் அறிவித்தன. அவளின் மிகவும் கடினமான கடைசி நொடிகள் காற்றில் கரைந்து கொன்டிருந்தன...

அவள் அருகில் அமர்ந்து, அவளையே உற்று நோக்கிக்கொன்டிருந்தான் அவள் கணவன் சங்கர். சொல்ல முடியாத வேதனை சுரந்து கொன்டிருந்தது அவன் மனதில், தன்னில் பாதியாக, தனது வாழ்க்கைத்துணையாக தான் மிகவும் விரும்பி மண‌ந்துகொன்டவள் இன்று தன் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக இற‌ந்து கொன்டிருக்கும் கொடுமையை அவன் இதயம் வெடிக்க கவனித்துக்கொன்டிருந்தான். மனம் முழுக்க அவள்பால் விளைந்த அன்போடும், கனிவோடும் கூடவே மெலிதாய் பூத்த‌ ஒரு கோபத்தோடும்...! என்ன ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டாள் ? தன்னை விட்டுப்பிரிய இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்துவிட்டாளே...?

சங்கர், சந்திராவுடனான தன் கடந்தகால மண‌வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை மனதுள் புரட்டிக்கொன்டிருந்தான். முதன் முதலாய் அவளைச்சந்தித்தது, பின்னர் ஓயாமல் அவளையே சிந்தித்தது, ஒரு போராட்டத்திற்குப் பின் நடந்த அவர்களின் திருமணம், தேனிலவு, முதல் குழந்தையின் பிற‌ப்பு....இன்னும் என்னென்னெவோ ஞாபகங்கள், அவன் இதயம் நூறு, ஆயிரம், கோடி என பல துகள்களாய் வெடித்துச் சிதறி ஒவ்வொன்றும் ஒரு காட்சியை தன்னில் ஏந்தி அவன் மனக்கண்ணில் வலம் வந்து கொன்டிருந்தன‌..., இரண்டு நாட்களாய், தூக்கம் மறந்து, துக்கம் சுமந்து சிவந்த இரு நீரணைகளாய் அவன் கண்கள். தலைகலைந்து, உண‌வும் ஒய்வும் மற‌ந்து, இப்போதுவிட்டால் இனி எப்போதும் இவள் உடனிருக்க முடியாதே எனும் ஏக்கத்தோடு அவள் பக்கத்திலேயே பழியாய்க்கிடந்தான் சங்கர்.

அவனுடைய தாயும், குழந்தைகளும் முல்லையின் பாதுகாப்பில், யாரும் சங்கரிடம் எதைப்பற்றியும் பேசவில்லை. நல்லாதானே இருந்தா ? இவளுக்கு ஏன் புத்தி இப்படிப் போச்சி ? பச்சைப்புள்ளைகளை பரிதவிக்கவிட்டு பாவி இப்படி செஞ்சிட்டாளே ? ஊர்தான் அவளை அவலாய் மென்றது. சில உற‌வுகளும் நட்புகளும் மருத்துவமனை வரை வந்து எட்டிப்பார்த்து நகர்ந்தன‌.

நினைக்க நினைக்க ஆறவில்லை சங்கருக்கு. குழந்தைகள் பிறந்து குடும்பம் செழிக்க, வேலைக்கெனவே அதிக நேரம் ஒதுக்கி, சந்திராவின் பொறுப்பிலேயே நோயுற்ற‌ தாயையும், குழந்தைகளையும் விட்டு விட்டு வார‌த்தில் பல நாட்கள் வெளியூர்களில் பணிக்காக செலவிட்டது தவறோ என்று தோன்றியது இப்போது,  தன்னுடனான அவளின் வாழ்நாள் இத்தனை குறுகியது என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் அவளுக்கென கூடுதல் நேரங்களை அர்ப்பணித்திருக்களாமே ? மனம்தான் அலைமோதியது, வேறென்ன செய்ய முடியும் பரிதவிக்கும் அந்த பாவப்பட்ட மனதால்.. ?

ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து, மேலும் நல்ல வசதியான நிலைக்குத் தன்னைத் தயார் ப‌ண்ணிக்கொள்ளவேணும், பிள்ளைகளை நல்லபடி ஆளாக்கிவிட்டு, மனைவியின் கையை பற்றிக்கொன்டு உலகமெல்லாம் சுற்றிப்பார்க்க வேணும், அழகான உலக அற்புதங்களை, ஆன்மீகம் செழித்த புண்ணிய பூமிகளை கைகோர்த்து இவளுடன் இரசிக்கவேணும், என் கடைசிக்கால‌ம் இவள் மடியிலேயே முடிய வேண்டும். இவளுடன், இவளுடன் மட்டுமே என தான் மனதில் தீட்டிவைத்த ஓவியங்கள் அத்தனையும் உயிர்பெறாமலேயே, தான் மட்டும் தனியாக இறுதி யாத்திரைக்கு புற‌ப்பட்டுவிட்டாளே ? எத்தனை சுயநலம் இவளுக்கு ? ஊருக்கும் உலகுக்கும் தெரியாமல் ஓல‌மிட்டு அழுதது சங்கரின் ஆழ்மனது..

மூன்று நாட்கள் கடந்த பின்னர்  சோகம் சூழ்ந்த ஒரு சிவந்த மாலைப் பொழுதில், சங்கரிடம் சோர்ந்த கண்களால் விடைபெற்று மீளாத பயண‌த்திற்கு முதல் அடி எடுத்து வைத்தாள் சந்திரா. மருத்துவமனை என்பதையும் மறந்து சந்திராவின் பெயர் சொல்லி கதறினான் சங்கர். மருத்துவர் வந்தார், பரிசோதித்தார். இற‌ப்பை உறுதி செய்தார், போய்விட்டார். பிணைக்கப்பட்டிருந்த மருத்துவ சாதனங்களிலிருந்து விடுதலைபெற்றது சந்திராவின் உயிரற்ற உடல்.

ஒரு காதல், ஒரு கனவு, ஒரு குடும்பம், ஒரு கவிதை என  ஒட்டுமொத்தமாய் சிதைந்து போன ஓர் உயிரின் சோகக்கதையை சொல்லாமல் சொல்லி அழுதன‌ அன்றைய பொழுதின் இரவும் நிலவும்......

   

     
        

No comments: