.

.
.

Tuesday, October 27, 2015

முல்லை (15)
ஆச்சிக்கு அஞ்சலிசிறந்த நகைச்சுவை நடிப்பாலும், குண‌ச்சித்திர கதாபாத்திரங்களாலும்,  இனிய குரலில் பாடிய பாடல்களாலும் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஆச்சி மனோரமா அவர்கள்.  "கொஞ்சும் குமரி"யில் கதாநாயகியாக நடித்து, தமது திறன்மிகுந்த நடிப்பால் 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை" புரிந்த ஆச்சியின் மறைவு மிகவும் மன‌வேதனையளிக்கின்றது. அன்னாருக்கு நமது கண்ணீர் அஞ்சலி சமர்ப்பணம். 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

நதியாக நீயும் இருந்தாலே நானும்

நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறு நாள் பார்க்கையிலே வனமாய் மாறி விட்டாய்
நாடித்துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

(கவிஞர் பா.விஜய்)


முல்லை வீட்டில் விக்ஷேசம். முல்லையை பெண்பார்க்க வரப்போகிறார்கள். அப்படியே நிச்சயதார்த்தமும் நடப்பதாக முடிவாகியது. அதற்கு முதல் நாளிலிருந்தே முல்லையின் தாய் அஞ்சலையை பதற்றம் பற்றிக்கொண்டது. கருக்கலிலேயே கண‌வரை எழுப்பி மார்க்கெட்டுக்கு வேண்டியதை வாங்கிவர அனுப்பினார்.

குறிப்பிட்ட நாள‌ன்று வாசல் தெளித்து, வண்ணக்கலவைகளால் அழகானதொரு ரங்கோலி கோலத்தை வாசலில் வரைந்தார். வீட்டிற்கே புதுக்கலை பிறந்ததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் மன நிறைவோடு வீட்டினுள் சென்றார். முல்லை இன்னும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு உற‌ங்கிக்கொண்டிருந்தாள், இன்று அவளுக்கு விடுப்பு. அவளை எழுப்பி பிரச்சனை வள‌ர்க்காமல் சமையலறைக்குச் சென்று அன்றைய சமையல் வேலைகளை ஆரம்பித்தார் அவள் அம்மா.

சுத்தமான பசு நெய்யில் பொறிந்த முந்திரி, திராட்சைகளோடு மண‌க்க மண‌க்க கேசரி தயார் செய்து வைத்தார். அதன் பின்னர் வடை, பாயாசத்துடன் சமையல் வேலை ஆரம்பமானது. சமையல் மணம் வீடெங்கும் வலம் வர ஆரம்பித்தது. அஞ்சலை அயராது மும்முரமாய் வேலை செய்தார், அவருக்கு அப்போதிருந்த மகிழ்ச்சியில் 20 வயது குறைந்துவிட்டது போல் உணர்ந்தார்.

சமையலறை அமர்க்களப்பட்டதைப்போலவே வாசலில் ஆறுமுகம் மேற்பார்வையில் கூடாரம் அமைத்து, மேசை, நாற்காலிகள் அடுக்கி தேவை நடக்கும் வீடு என ஊருக்கு உண‌ர்த்தும் வண்ணம் செயல்கள் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தன.

ஒருவர் பின் ஒருவராக, உற‌வுகளும், நட்புகளும் வீட்டை நிறைக்க ஆரம்பித்தனர். முல்லை இந்த ஆரவாரம் எதிலும் அதிகம் அக்கரை காட்டாமல் அமைதியாய் இருந்தாள். அவள் தோழியரில் சிலர் அவளைப் பிடித்து வைத்து கைகளிலும், கால்களிலும் அழகழகாய் மருதாணிக் கோலங்கள் வரைய ஆரம்பித்தனர். முல்லையின் கைககளிலும், கால்களிலும் ஆண்பிள்ளைபோல் சற்றே அடர்ந்திருந்த உரோமங்களைக் காட்டி அவள் தோழியர் அவளை பகடி செய்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். முல்லைக்கு கோபம் பீரிட, அவர்களை உறுத்துப்பார்க்க அதையும் சிரிப்பாக்கி ஆரவாரமாக்கினர் அந்தப் பெண்கள்.

பெண் அலங்காரம் துவங்கியது, சம்கிகள் நிறைந்த பள‌பளப்பான‌ ஊதா நிற சேலை, சிவப்புக் கரையுடன், அதற்கேற்ற சிவப்பு நிற இரவிக்கை அணிவித்து, தலையலங்காரம், முகத்துக்கு முகப்பூச்சு, கண் மை, உதட்டுச் சாயம், நெற்றியில் திலகமிட்டு, நிறைய ஆபரண‌ங்கள் அணிவித்து மணப்பெண் போலவே முல்லையை அலங்கரித்து மகிழ்ந்தனர் அவள் தோழியர். பார்வைக்கு மிகவும் அழகாக காட்சியளித்தாள் முல்லை.

எப்பொழுதும் அமைதி நிறைந்த அந்த வீடு அன்று சிரிப்பொலிகளும், பேச்சுக்குரல்களும் நிறைந்து கலகலப்பாய் காட்சியளித்தது.

பெண்கள் பல வண்ண சேலை, பாவாடை தாவணி அணிந்து வலம் வர  அழகிய வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த நந்தவனம்போல் ஒளியும், ஒலியும் கலந்து உற‌வாட‌  மகிழ்ச்சியில் நிறைந்து மிளிர்ந்தது வீடு.

அன்று பொழுதோடு மழையும் பொழிய ஆரம்பித்தது. சொல்லி வைத்த‌து போல் மாப்பிள்ளை வீட்டார் வந்து இற‌ங்கினர். மாப்பிள்ளையை அனைத்துக் கண்களும் ஆவலோடு தேட ஆரம்பித்தன. செல்வச் செழிப்பு நிறைந்த மாப்பிள்ளை அழகாகவே கட்சியளித்தான். சராசரிக்கும் சற்று உயரமாய், சந்தண நிற‌த்தோடு, நிறைந்த கேசமும், சிரித்த முகமுமாய். அவன் நிறத்திற்கு எடுப்பான கருஞ்சிவப்பு சட்டையும், வெளீர் பாண்ட்டுமாய். கழுத்தில் மெல்லிய செயின், ஒவ்வொரு கையிலும் ஒரு மோதிரம், கண்களை மறைத்த குளிர்ச்சிக்கண்ணாடி சகிதமாய் சூப்பர் எனச் சொல்லத்தக்கவிதத்தில் அனைவர் கவனத்தையும் கவர்ந்தான் மாப்பிள்ளை.

அங்கே கூடியிருந்த பல பெண்களுக்கும்,  மாப்பிள்ளையைக் கண்டவுடன் முல்லையின் மேல் பொறாமையே ஏற்பட்டுவிட்டது. ஆண்பிள்ளைபோல் திரிபவள், அழகாய் உடுத்திக்கொள்ளக்கூட மாட்டாள். ஒப்பனையும் செய்யாதவள், இவளுக்கு வந்த வாழ்க்கையைப் பார் என உள்ளுக்குள் பொருமினர். அது பலரின் கண்களில் ஸ்பக்ஷ்டமாகத் தெரிய ஆரம்பித்து. பொய்யாகவா பாடின‌ர்  "உள்ளத்தின் கதவுகள் கண்களடா "என்று, வார்த்தைகள் உதிர்க்க மறுக்கும் அல்லது மறைக்கும் அன்பு, காதல் போன்ற உண‌ர்வுகளோடு பல சமயங்களில் வெளியே தெரியக் கூடாது என்று மனம் நினைக்கும் கோபம், துவேக்ஷம், பொறாமை போன்ற உண‌ர்வுகளும் கண்வழியே பிறர் கவனத்திற்கு எட்டிவிடுகிறது.

மாப்பிள்ளையின் தந்தையும் முல்லையின் தாய்மாமனுமாகிய வேலு அவளின் தாயை ஒத்த சாயலில் அவரைப்போலவே அமைதியாகக் காட்சியளித்தார். மாப்பிள்ளையின் தாய் மாதவி பணக்காரி என்பதை அடையாளம் காட்டும் விதமாய் எடுப்பாய் சேலையணிந்து, நடமாடும் நகைக்கடைபோல் காட்சியளித்தாள். சீர்வரிசைகள் அணிவகுத்து வந்து நடுக்கூடத்தை நிறைத்தன‌.

பெண்பார்க்கும் படலம் இனிதாய் நிறைவேறியது, தொடர்ந்த விருந்திற்கு நடுவே பெண்ணும், மாப்பிள்ளையும் தனியாய் பேசுவதற்கு நேரமும், இடமும் ஒதுக்கப்பட்டது.

தனிமையில் சந்தித்த முல்லையிடம், கனிவாக பேசினான் மாப்பிள்ளை. அவனுக்கு ஆம், இல்லை என சுருகமான பதில்களை தந்துகொன்டிருந்தாள் முல்லை. பேச்சின் நடுவே சிரிப்பு மாறாமல் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு மடித்த கடிதத்தை வெளியே எடுத்து வைத்தான். பார் முல்லை, உன்னைப் பற்றி எனக்கு அவதூறு கடிதம் வந்திருக்கு, என அதை நம்பாதவனாய் விளையாட்டாய் கூறினாலும், அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான்.

"அதை நான்தான் அனுப்பினேன்" அமைதியாய் முல்லை கூற அதிர்ச்சியுடன் ஆயிரமாயிரம் கேள்விக்கணைகளை கண்களில் தேக்கியவாறு அவளை ஏறிட்டான் அந்த அழகான மாப்பிள்ளை.....!


 
 


2 comments:

Nagendra Bharathi said...

கடித சேதி என்ன

சிவனேசு said...

எதிர்வரும் ப‌திவில் இதற்கான பதிலை இணைத்துள்ளேன், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே... :)