.

.
.

Tuesday, April 12, 2016

முல்லை 18

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா ?
கேட்கும் பாட்டில் 
ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா ?
நெஞ்சு நனைகின்றதா ?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா ?
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்ப்பேன்
ஓயும் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா....

கவிப்பேரரசு வைரமுத்து


சங்கர் தன் காரை அதிவேகத்தில்  செலுத்திக் கொண்டிருந்தான். தம்மை தாண்டிச் செல்லும் வாகனங்களையும், எதிரே வரும் வாகனங்களையும் சட்டை செய்யாது, தன்னைச் சூழ்ந்த சோகம், கோபம் யாவற்றையும் புறந்தள்ளிவிட்டு விலகி ஓடுவதான‌ பாவனையில் அந்தச் சாலையில் நிலைமறந்து காரை அழுத்தினான். காற்றாய் பறந்தது கார். அவன் கவனம் முழுதும் முல்லையைச் சுற்றியே பற்றிப் படர காரை விட வேகமாய் கடந்த காலம் நாடி விரைந்தது மனது.....

அன்றும் வழக்கம் போல் முல்லை நேரத்தில் வந்துவிட்டாள். நடந்து முடிந்த சம்பவங்கள் தந்த மனக்கசப்பில் அவள் வீட்டிற்கு வந்ததையறிந்தும் அவன் தன் அறையிலேயே புத்தகங்களோடு பழியாய்க் கிடந்தான். அவள் முகத்தைப் பார்க்கவும் வருத்தமாய் இருந்த‌து, தன் செயலால் அவளை அழ வைத்து விட்டோம் எனும் குற்ற உணர்ச்சி மேலோங்கி இருந்த‌து. 

இருந்தாலும் தான் அப்படியென்ன அழுது புலம்பும்படி மிகப்பெரிய தப்பை செய்துவிட்டோம் எனும் ஆண்மைக்கேயுரிய தன்மானமும் கூடவே கோபமும் அவனுள் கிளர்ந்துகொன்டிருந்தது.  தன் கடமைகளை முடித்து புற‌ப்படும் முன் முல்லை அவன் அறை வாசலில் தயங்கியபடியே வந்து நின்றாள்

முல்லை தன் வாசலுக்கு வந்ததை அறிந்த‌தும் படித்துக் கொன்டிருந்த நூலை மேசைமேல் வைத்துவிட்டு, இதயப் படபடப்பை மறைத்துக்கொண்டு அமைதியாய் அவளை ஏறிட்டு நோக்கினான்.  

உள்ள‌த்தில் ஊற்றெடுக்கும் அன்பையும், காதலையும் விவரிக்க வார்த்தைகளின் உதவி தேவையில்லையே. பார்வை ஒன்றே போதுமே. வார்த்தைகளின்றி சோகம் நிறைந்த அவ‌ன் விழிகள் தம்மிடம் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசுவதை உண‌ர்ந்தாள் முல்லை. அந்த‌ விழி வீச்சின் வேகத்தை தாளாமல் தமது பார்வையை தழைத்துக்கொன்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

மாமா, நீங்கள் காவேரியை கல்யாணம் செய்வது நல்லது. அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோக்ஷமாய் குறுக்கிட்டான் சங்கர், "அதைப்பற்றி உனக்கென்ன கவலை" ?  "யாரோ ஒருத்தியைக் நான் கட்டிக்கொள்ள நீ ஏன் என்னை வற்புறுத்தனும்"  ? ஆத்திரத்துடன் வெடித்து சிதறின வார்த்தைகள். 

அமைதி காக்க எவ்வளவோ முயன்றும் தோற்றுப் போனான் சங்கர். அவன் இதயத்தின் வலியும், அவள் புற‌க்கணிப்பின் ஏமாற்றமும் ஒன்றாய் இணைந்து உயிரை அழுத்த, அதன் வேகம் வார்த்தைகளில் சீறிப் பாய்ந்தது.

முல்லை தரையை நோட்டமிட்டவாறு அமைதி காத்தாள், அவளின்  அமைதி சங்கருக்கு இன்னும் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. அவன் நிதானமும் பொறுமையும் சுக்கு நூறாய் நொறுங்கிப் போக ஆத்திரத்தில் அவன் தன்னை மறந்தான். 

"உன் மனசுல நீ என்னதான் நினச்சுட்டிருக்க ? நான் என்ன பொறுக்கியா ? கல்யாணத்துக்கு அலையிற‌னா ? என் குழந்தைகளோடு என் தாய்க்கும் தாயாய் அன்பைக் காட்டும் உன்னை என் வாழ்வோடு இணைத்துக்  கொள்ள எண்ணியது தவறா ? எனக்கு கல்யாணம் வேனும்னா, அதை நீ செய்து வைக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் நீ நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொள், அப்புறம் இந்த பாட்டி வேலையெல்லாம் பார்க்கலாம் ? அனலில் இட்ட கடுகாய் ஆத்திரத்தில் பொறிந்து தள்ளினான் சங்கர்.

இவன் கோபத்தில் தன்னிடம் ஆர்ப்பரிப்பதை முல்லை அமைதியாகவே  கேட்டுக்கொன்டிருந்தாள். அதற்கொரு முக்கியக் காரணம் இருந்தது.  ஆத்திரத்தில் அறிவிழந்து அவனுடன் சண்டையிட்டு பிரிந்தால், பின்னர் திரும்பவும் இந்த வீட்டுக்குள் கால் வைக்க முடியாது. அதன் பின்னர் கண்ணம்மாவையும், குழந்தைகளையும் கவனிக்கும் கடமையையும் அவள் இழக்க நேரிடும், அதில் அவளுக்கு உடன்பாடில்லை.அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாய் நின்றிருந்தாள், ஆனால் உள்ளுக்குள் அவன் ஆத்திரம் கண்டு கவலையுற்றது அவள் மனம். 

தன் மனதிலுள்ளதையெல்லாம் ஆத்திரமாய் கொட்டித் தீர்த்து ஓய்ந்தான் சங்கர். அந்த அறை புயலடித்து ஓய்ந்ததைப்போல் இருந்து . கடுமையைக் குறைத்து மீண்டும் அமைதியான குரலில் கேட்டான் "முல்லை நாம ஏன் கல்யாண‌ம் செஞ்சுக்கக் கூடாது ? என்னை ஏன் வெறுக்கிறாய் ? 

"ஏற்கனவே நான் செய்த பாவத்திற்கே விமோசனமில்லை, இதில திரும்பவும் இன்னொரு பாவம் பண்ணனுமா ? விரக்தியாய் ஒலித்தது அவள் குரல்.

என்னது பாவமா ? நீ என்ன பாவம் பண்ணே ?  சங்கர் குழம்பினான்.

ஆமாம், உங்களுக்கு நான் ரொம்பப் பெரிய பாவம் பண்ணியிருக்கேன், நீங்க மனைவியை இழந்ததற்கும், உங்கள் குழந்தைகள் தாயை இழந்ததற்கும் நான் தான் காரணம், என்னுடைய ஆத்திரம் தான் காரணம். அவள் குரல் உடைந்து அழுதுவிடுவதைப் போலிருந்தது, அவள் கண்களில் தேங்கிய கண்ணீர் அணை உடைத்து சிதறும் நிலையில்...

ச‌ங்கர் தமது கவனத்தை கூர்மையாக்கி அவள் கூறுவதை அவதானிக்கலானான்.

முல்லை கவலை தோய்ந்த குரலில் அந்த கடந்த கால சம்பவத்தின் மறுபக்கத்தை அவனிடம் விவரிக்கத் துவங்கினாள்....

"நீங்க வெளியூர் வேலைக்கு போயிருந்த சமயம், உங்கள் மனைவி சந்திராவுக்கும், அத்தைக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், நான் தலையிட்டேன்".

"நான் மிகவும் மதித்து, நேசிக்கும் அத்தையை, சந்திரா தாக்கியதை நேரில் கண்டதும், என்னால் தாங்க முடியவில்லை, என் கோபம் எல்லை மீறியது".

"சந்திராவை தடுத்து, அவள் கன்னத்தில் அறைந்தேன், நீங்கள் வீடு திரும்பியதும் உங்களிடமும் உண்மையைச் சொல்லி தண்டனை வாங்கித் தருவதாக மிரட்டினேன். .

என் செயலால் சந்திரா உணர்ச்சிவசப்பட்டு பயத்தில் தன்னையே தீவைத்துக் கொளுத்திக்கொன்டு மாய்ந்து போவாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ! 

எல்லாத் தவறுகளும் என் மீதே, நான் செய்த பிழை ஓர் உயிரை பலிவாங்கிவிட்டது. சந்திரா தன் வாழ்வின் கடைசி நொடிகளில் நெருப்பில் துடித்த அந்தக் கொடூரக் காட்சி இன்றுவரை என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அன்று காற்றில் வீசிய‌ அவள் கூந்தலின் கருகிய வாடையும், கரிந்து சிதைந்த அவள் மேனியின் தோற்றமும் இன்றுவரை என் நினைவைவிட்டு அகலவேயில்லை.

"நான் எவ்வளவோ முயற்சித்தும் அவளைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மாய்ந்து போன அவளை நினைத்து நான் வருந்திக் கலங்காத நாளில்லை. அந்த நொடியிலிருந்து இன்றுவரை  குற்ற உணர்வால் என் மனம் என்னைத் தீய்த்துக்கொன்டிருக்கின்றது."  

"நீங்கள் வருந்தி வாடியதும், உங்கள் குழந்தைகள் ஆதரவின்றி நிர்க்கதியானதும் என் ஆத்திரத்தினால்தானே ? உங்களிடமிருந்து உங்கள் மனைவியையும், மூன்று சின்னஞ் சிறிய குழந்தைகளிடமிருந்து அவர்களின் தாயையும் நான் பிரித்துவிட்டேன். உங்கள் இழப்புக்கும் , துயருக்கும் நான்தான் காரணம். என் பாவத்தைப் போக்கிக் கொள்ள‌ நான் எடுத்த முடிவுதான் திருமணம் தவிர்த்து உங்கள் குழந்தைகளை என் குழந்தைகளாய் 
ஒரு குறையுமின்றி வளர்த்துவிட வேண்டும் என்பது....!"

என்னைப் பெண் கேட்டு வந்த என் மாமனிடத்தில் இந்த உண்மையைக் எடுத்துச் சொல்லி என் திருமண‌த்தை நிறுத்தினேன். 

என் தாய் தந்தை தாங்களாகவே இந்த உண்மையையும் என் மனதையும் புரிந்து என் செயலை அனுமதித்தனர்.

இப்பொழுது உங்களை மணந்து கொள்வது சந்திராவைக் கொன்று அவளிடமிருந்து உங்களை அபகரிப்பதைப் போல் என் மனதை வருத்துகிறது, உங்களை மணப்பவள் நிச்சயம் நானாக இருக்க முடியாது, என்னுடைய இறுதிக்காலம் வரை நெருஞ்சி முள்ளாய் எனை வருத்தும் இந்தப் பழியையும் பாவத்தையும் என்னால் சுமக்க முடியாது," முல்லை தன் உள்ளத்தில் அதுவரை ஆழப்பாய்ந்திருந்த அத்தனை வேதனைகளையும் மடை திற‌ந்த வெள்ளமாய்க் கொட்டித்தீர்த்தாள்.

"குழந்தைகளும், கண்ணம்மா அத்தையும்தான் நான் பாவ விமோச‌னம் பெற ஆதாரம் என அவர்களுக்கு பணிசெய்வதை என் கடமையாக எண்ணி வாழ்ந்துகொன்டிருக்கிறேன், இல்லையென்றால் இந்த வேதனை தந்த அழுத்தத்தில் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும், அல்லது என் மனம் தற்கொலையை நாடியிருக்கும். இப்பொழுது நீங்கள் எனக்குப் பிரச்சனை தருகிறீர்கள். இது தொடர்ந்தால் நானும் தீக்கு இரையாவதை நீங்கள் தடுக்க‌ முடியாது". 

அவன் கோபத்தில் கொதித்ததைப்போல் இல்லாமல் அமைதியாகவும், தீர்க்கமாகவும் தனது எண்ணத்தை மிரட்டல் வடிவில் முன் வைத்தாள் முல்லை.

அவள் வாய்மொழியாய் அனைத்தையும் கேட்ட சங்கரிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்ப‌ட்டது.

இந்த விடயம் அவனுக்கு அதிகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை காரணம் உண்மைக‌ள் யாவும் அவன் ஏற்கனவே அறிந்தவைதான். 

ஒரு மழை நாளில் அவன் பெண் மடியில் அமர்ந்துகொன்டு மழலை மொழியில் தன் வீட்டில் நிகழ்ந்த அசம்பாவிததை, தன் தாய் தீக்குளிக்கும் முன் தன் பாட்டியைத் தாக்கியதையும், முல்லையிடம் அடிவாங்கியதையும் விளையாட்டுத் தனமாய் சொல்லிவிட்டிருந்தாள். அதைக் கேட்டு அதிர்ந்த சங்கர் தன் தாயிடத்தில் வற்புறுத்தி விசாரித்து அனைத்து உண்மைகளையும் அறிந்து வைத்திருந்தான். 

சங்கருக்கு எதுவுமே தெரியாது என எண்ணிக்கொண்டு, தனக்குத் தானே குற்ற‌ம் கற்பித்துக் கொள்ளும் முல்லையிடத்தில் தான் என்ன பேசுவது என்பதே தெரியவில்லை சங்கருக்கு.

ஓர் ஆணின் மனதில் ஆசை எழக் காரணமாகி பின்னர் அந்த ஆசை அழிவதற்குக்கும் காரணமாகும் பெண்ணைவிட  பொல்லாத விக்ஷம் வேறெது இருக்க முடியும் உலகில்    ? அப்படிப்பட்ட பெண் இருப்பதைவிட இற‌ப்பதே மேல். வாழ்வே வெறுத்துப்போனது முல்லைக்கு. ஆனால் அவளுக்கென்று சில கடமைகள் இருப்பதை அறிவுறுத்தியது மனது.தன் செயல்பாடுகள் ஒரு நல்லவனின் மனதில் காயம் விளைவித்துவிட்டதே, என எண்ணி வருந்தியது அவள் மனம்.
    
 உண‌ர்ச்சிக்குவியலாய் முல்லை மாறியிருக்கும் இந்தச் சூழ்நிலையில் தான் எதைக் கூறினாலும் எடுபடாது என்பதை உணர்ந்து அமைதியாய் அமர்ந்திருந்தான் சங்கர். விடைபெற்றுச் சென்றாள் முல்லை.

பேரிரைச்சல் கவனத்தைச் ஈர்க்க‌, கடந்த கால நினைவுகளினின்று விடுபட்டு சுயநினைவுக்கு மீண்டவன், தான் செலுத்திக் கொன்டிருக்கும் வாகனம் தன் வழியை விட்டு எதிரே வரும் கனரக வண்டிக்கு மிகமிக அருகாமையில் சென்றுவிட்டதை அறிந்து அதிர்ந்தான். 

வெகுவேகமாய் வண்டியைத் திருப்ப, அவன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அசுரவேகத்தில் அரைவட்டமடித்து சாலை ஓரத்திலிருந்த விளக்குக் கம்பத்தில் பெரும் சத்தத்துடன் மோதிச் சிதைந்தது......

அடுத்த பதிவில் நிறைவை நாடும்....

  
  


    

2 comments:

k.manoharan krishnan said...

அருமை சிவனேசு... கதை சிறப்புற வாழ்த்துகள்

sivanes sivanes said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே, நிச்சயம் முயற்சி செய்கிறேன்.