.

.
.

Thursday, December 24, 2020

ஜனரஞ்சக மணம் வீசும் "நாகம்மாளின் மனக்குறிப்புகள்" ~ நூல் விமர்சனம்

பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தையே புத்தகம் என்று நாம் அழைக்கின்றோம் ~ போவீ

இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாசகன் மனதை பதப்படுத்த தமது பண்பட்ட அனுபவங்களையும் கற்பனைகளையும் அழகிய சிறு சிறு கதைகளாய் தொடுத்து மலேசிய மண்ணின் மணம் வீசும் புத்தகம்  ஒன்றை வெளியிட்டுள்ள சகோதரர் மனோகரன் கிருக்ஷ்ண‌ன் @ மனோவியம் மனோ அவர்களுக்கு முதலில் ஒரு பூங்கொத்து பார்சல்...!!

                       

தமது மனோவியம் வலைப்பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில் நமக்கு அறிமுகமான சகோதரர் மனோ முக நூலிலும் நல்ல நண்பர் என்பதைத் தாண்டி சகோதரர் என மதிக்கும் வண்ணம் கண்ணியமாய் நடந்துகொள்ளும் பண்பாளர், சிறந்த மொழிப்பற்றாளர் மற்றும் மனித நேயமிக்கவர். ஊக்கமூட்டுவதிலும், மனம் நிறைந்து பாராட்டுவதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை. சிறந்த விமர்சகராகவே அறிந்திருந்த இவரை இன்று படைப்பாளியாக காண்பது மிகுந்த  மகிழ்ச்சியளிக்கிறது.

இவர் சிந்தையில் மலர்ந்து இன்று நம் கைகளில் தவழும் நாகம்மாளின் மனக்குறிப்புக்களை படித்தேன், ரசித்தேன், இவரின் சமூக சிந்தனைகளை எண்ணி வியந்தேன். அபாரமான வர்ணனைத் திறன் மிளிரும் படைப்புகளை தந்து வாசகனையும் தம் படைப்புடன் பயணிக்கச்செய்யும் ஆற்றலை இவர் கைவரப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். சில காலம் திரும்பிப் பார்க்காமலிருந்த வலைப்பக்கம் விரைந்தேன், நான் வாசித்த இந்நூல் குறித்த என் கருத்துக்களை பகிர்ந்தேன். 

இனி நாம் நாகம்மாளின் மனக்குறிப்புகளை அறிந்துகொள்ள விரைவோம்...

கண்ணை உறுத்தாத செழும் மஞ்சள் நிற அட்டை கொண்ட புத்தகம், அதன் முகப்பு அட்டையில் கம்பீரமான ஆணும் களையான பெண்ணுமாய் இருவர், ஆயிரமாயிரம் அற்புதக் கதைகளை அன்புடன்  சொல்லும் தீவிரம் அப்பெண்ணின் அழகிய கண்களில்...



புத்தகத்தைத் திறந்தால் சகோதரி மங்களகெளரியின் முன்னுரை கடந்து ஆரம்பிக்கின்றன‌‌ 160 பக்கங்களில் 15 சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் நமக்கென ஒரு கருத்தையோ, உணர்வையோ பகிர்கிறது. ஒவ்வொரு வாழ்வும் ஒரு கதையே, அதை கற்பனையும், வர்ணனையும், நிஜமும், சொல்லாட்சியுமென பல்வேறு வண்ணக்கலவைகள் அணிசெய்யும் அழகழகான ஓவியங்களாய் சிறுகதைகள். எளிய‌ தமிழில் தெளிவான நடையில், பிறமொழிக் கலவையின்றி சிறப்பான நூலாய் வெளியீடு கண்டிருக்கின்றது "நாகம்மாளின் மனக்குறிப்புகள்

சில படைப்புகள் தனக்கென எழுதப்படுபவை, தன் மனவோட்டங்கள், உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்துபவை சில படைப்புகளோ பிறர் வாசிக்க, யோசிக்கவென சிரமம் எடுத்துப் படைக்கப்படுபவை, இச்சிறுகதைத் தொகுப்பு இரண்டாம் வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு கதையும் நம் மனதில் அசைபோட்டு தெளிவுற சில விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு கதையும் விரிவான விமர்சனத்திற்கு ஏற்றதே எனினும் தற்சமயம் ஓரிரு கதைகளைப் பற்றி இங்கே விவரிப்போம்...

நாகம்மாளின் மனக்குறிப்புக்கள் ~ நூலின் தலைப்பைச் சுமந்த கதை. கதைசொல்லி தன் அம்மாவையும் அவர்தம் மனக்குறிப்புகளாய் பதித்து வாழும் நினைவுகளையும், அதே நிலையில் கடந்த கால நினைவுகள் சுமந்த தோட்டப்புறத்தையும் நினைவில் இருத்தி கடந்த காலத்தை மீட்டுரு செய்யும் படைப்பு. அம்மாவின் தற்போதைய தளர்ந்த, ஆரோக்கியம் குறைந்த நிலை அதைப்போலவே செழிப்பாய், கலகலப்பாய் இருந்த தோட்டப்புறம் சோபையிழந்து வெறுமை சூழ்ந்த நிலை, இருப்பினும் அம்மாவின் நினைவில் நிற்கும் கடந்த கால நினைவுகள் போலவே, முதிர்ந்த தாயாய் நினைவுகளை மீட்டெடுக்கச்செய்யும் தோட்டப்புறச் சூழல். அம்மாவின் நினைவில் மலரும் குல தெய்வ வழிபாட்டையும் அதன் பூர்வீகத்தையும் அறிகையில் மலரும் முன்பே கருகவைத்து தெய்வமாக்கப்பட்ட பெண்ணுக்கென நம் மனமும் கனத்துப்போகிறது.

"தமிழர்கள் காலாகாலத்தில் கருத்தோடு எதையும் செய்வதில்லை, காலம் கடந்தபின் வருந்தி என்ன பயன் ? உலகை ஆளும் திறன்கொண்டவர்கள் இன்று அடிமை வாழ்வை ஏற்பது எதனால்? உணர்ச்சிகளால் உந்தப்படுவதனால் அறிவின் திறன் மங்கிவிடுகிறது உங்களுக்கு" ~ கடுங்கோன்மேயன்

ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும் சிறுகதையில் காணும் நிதர்சன வரிகள் இவை. தீர்க்கதரிசியான கடுங்கோன்மேயர், பெயரால் மட்டுமன்றி தமது கருத்துக்களாலும் நமது சிந்தையைக் கவர்ந்துவிடுகிறார், எனினும் தமது இனம் தொலைத்த புராதானத்தை மீட்டெடுக்கப் பாடுபடும் அந்தக் கடற்கோன் நமது மனதில் நிலைத்துவிடுகிறார். தத்துவார்த்தமான வார்த்தைகளில் இன்றைய வாழ்வியலை வகைப்படுத்தும் வல்லமை, சிறப்பு    

சில நண்பர்களின் பதிவுகளில் வாசித்ததுண்டு, மலேசிய இலக்கியம் தோட்டப்புற வாழ்வை மட்டுமே பேசும் போரடிக்கும் படைப்புகள் என்று ஆனால் அவை நம் முன்னோர்களின் இரத்தத்தாலும் சதையாலும் உயிரைக்கொடுத்து படைக்கப்பட்ட சோக சாசனங்கள் என்பதை நாம் மறக்கவியலாது. நமது முன்னோர் எப்படி எப்படியெல்லாம் வதைபட்டனர், இயற்கையின் கடுமைகள், கங்காணிகளின் கொடுமைகள், வெள்ளைக்கார துரைகளின் சர்வாதிகார ஆட்சி, ஜப்பானியர்களின் சித்திரவதைகள் என பல்வேறு துயரங்களையும், சித்திரவதைகளையும் எத்தனையெத்தனை வேதனையுடன் எதிர்கொண்டிருப்பார்கள் ? வேர்களான அவர்களின் வரலாற்றை விழுதுகளான நாம் புறக்கணிப்பது முறையாகுமா?  இத்தகைய சிந்தனைகளை நம் மனதில் ஏற்படுத்தும் வண்ணம் வடிக்கப்பட்டிருக்கிறது "நிழல் மரக்கோடுகள்" சிறுகதை.

"எந்த மனைவியும் ஏழை புருக்ஷனையும் தாங்கிக் கொள்வாள். ஆனால், தான் சொன்னதைச் செய்து முடிக்கத் தெரியாதவனை ஓர் ஈயாகவோ எறும்பாகக் கூட மதிப்பதில்லையே" ~ மனைவி காத்திருக்கிறாள். 

விடுமுறைக்காக‌ தாய்வீடு சென்றுவிட்ட மனைவியை அழைத்து வர பொதுப் போக்குவரத்தை நாடும் கணவன், அவர் நோக்கத்தை நிறைவேற விடாது தடுக்கும் இயற்கையின் மழைச்சீற்றம், அதனால் ஏற்படும் தாமதம், முதன் முறையாய் பல வருடங்களுக்குப் பிறகு பொதுப்போக்குவரத்தை நாடிச்செல்வதால் ஏற்படும் தடுமாற்றம் என அந்தக் கண‌வரின் கண்ணோட்டத்தில் மலரும் கதை. அவர் தமது முயற்சியில் வெற்றியடைந்தாரா ? தமது மனைவியின் பாராட்டை பெற்றாரா என்பதுதான் கதையின் உச்சம்.

இக்கதையில் கரிசணம் நிறைந்த அந்தக் கணவர் தமது மனைவியின் ஆசிரியப் பணியின் தற்போதைய பணிச்சுமை சூழ்நிலையை வெளிப்படுத்தும் விதம் நன்று. ஆரம்ப காலங்களில் அரசியலிலும் பொதுப்பணிகளிலும் அதிகம் பங்கெடுத்தவர்கள் ஆசிரியர்கள் என்பது வரலாறு நமக்கு கூறும் உண்மை. அப்படி ஏதும் இப்போது நடந்துவிடக்கூடாது என திட்டமிட்டே ஆசிரியர்கள் மீது பணிச்சுமை திணிக்கப்படுகிறதோ என யோசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது தற்போதைய ஆசிரியர்களின் பணிச்சுமை நிலமை.  

வெளியே ஒரு வானம் ~ இச்சிறுகதை பள்ளி மாணவன் ஒருவனின் உடல் நலனையும் மன நலனையும் முன்னிறுத்திப்பேசுவதோடு, அந்த மாணவனின் பெற்றோர்களின் அனுகுமுறையையும் அலசி ஆராய்கிறது, அம்மாண‌வனின் கணிவான ஆசிரியயையின் கண்ணோட்டத்தில் மலர்ந்து மனம் வீசுகிறது இச்சிறுகதை. கனிவும், கண்டிப்பும் ஒருசேர வாய்த்த இதுபோன்ற ஆசிரியர்களே நமது சமுதாயத்தின் தற்போதைய ‌அவசியத் தேவை.

ஜாதகம் பார்த்து மணமுடிப்பவர்கள் பலரில், பெரும்பான்மையினர் மருத்துவ பரிசோதனை செய்து, ஆரோக்கியப் பொருத்தம் பார்த்து மணமுடிப்பதில்லை. நெருங்கிய உறவில் திருமணம் செய்பவர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியச் சிக்கல்கள் ஏற்படும் என்பது நாமறிந்த உண்மை, ஆனால் இக்கதையில் முற்றிலும் மாறான ஒரு விடயத்தை முன்வைக்கிறார் கதைசொல்லி. கொஞ்சம் வியப்பாகவும் நிறைய அதிர்ச்சியாகவும் இருக்கிறது இந்தத் தகவல்.

இவை தவிர்த்து இன்னும் பல தத்துவங்களும், வாழ்வியலும் பேசும் படைப்புகள்....

வட்டி முதலைகளின் லீலைகள் பேசும் "வட்டிப்பணம்", 

அரசியல் அவலங்களைச் சித்தரிக்கும் "ஒற்றைச் செருப்பாய்", 

இன்றைய இளையோரின் மெத்தனம் பேசும் "அற்றைக்கூலி", 

ச‌கோதரியின் மரணமும் அதனால் மனங்கலங்கி அவர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள பயணப்படும் சகோதரனின் மனப்பதிவாய் "கலைந்து செல்லும் மேகங்கள்" 

பிறரின் நம்பிக்கையை துக்ஷ்பிரயோகம் செய்வோர் மலிந்த சூழலில் எச்சரிக்கை உணர்வை வலியுறுத்தும் "நெருப்புப் பிண்டங்கள்".

மழையும் அது மீட்டெடுக்கும் நினைவுகளுமான "மனக்கதவுகள் நனைகின்றன" சிறுகதை. அதில் மழைக்கால ஆற்று வெள்ளம் பலியெடுத்த த‌ன் நண்பன் காட்டு முனியாண்டி குறித்த‌ கதைசொல்லியின் நினைவுகள். 

அரசாங்க அனுகூலங்களைப் பெற இயலாமல் லஞ்சம் கொடுத்து வாடும் ஒரு பள்ளி வாகனமோட்டியின் சிரமங்களைச் சொல்லும் "பள்ளி வண்டி", 

அர்ப்பணிப்பு குணம் நிறைந்த ஆசிரியை ஒருவர் பெற்றோர்களிடம் படும் பாட்டை விவரிக்கும் "தாயுமானவள்", 

வட்டியில் கிடைக்கும் கமிக்ஷனை எதிர்பார்த்து வட்டி முதலைகளிடம் சிக்கிக் கொள்ளும் சின்னச்சாமியின் கதையான "மானுடம் கடந்த மனிதர்கள்".   

இறுதியாக "சுடுகாட்டுக் காளி" ~ நாலு நம்பர் தேடி ஒடும் மனிதனின் திகிலூட்டும் அனுபவம். வித்தியாசமான முடிவைக் கொண்ட அமானுக்ஷ்ய கதை.    

இப்படியாக "நாகம்மாளின் மனக்குறிப்புகள்" வாசிப்போருக்கு மிகச்சிறந்த பொழுது போக்காகவும், சிந்திக்க விழைபவர்களுக்கு பலவித தகவல்களை உள்ளடக்கிய கருவூலமாகவும் நிச்சயம் திகழ்கிறது. நல்ல ஜனரஞ்சகமான சிறுகதைத் தொகுப்பைத் தந்த கதைசொல்லிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். இவர் மேலும் பல நூல்களைப் படைத்து புகழ்பெற வேண்டும் ~ வாழ்க, வெல்க‌