.

.
.

Monday, November 18, 2013


ஒரு முற்றுப்புள்ளியைத் தேடும் காற்புள்ளி...!

 

காலம் முற்றுப்புள்ளி வைத்து உறவுகளை பிரித்தாலும் அன்பு நினைவெனும் காற்புள்ளிகளால் மனதில் அவற்றை வாழ்வித்துக்கொன்டுதான் இருக்கின்றது என்றும்.....!


சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியொன்று கூடு பிரித்து தனது மெல்லிய‌ இறக்கைகள் மீட்டியபடி, இவ்வுலகின் அற்புதங்களை, பரவிக் கிடக்கும் எழில் நர்த்தனங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து பிரமித்து, படித்துக்கொள்ள, மனதில் படம் பிடித்துக் கொள்ள விழையும் பருவம் ! குழந்தைப்பருவம் களைந்து சிறுமியாக பரிமாண‌ம் கண்டுகொண்டிருந்த சமயம்.

அப்படியானதொரு தருணத்தில் என் கையை தன் கைக்குள் சேமித்துக்கொன்டு அந்த மண‌ல் மேட்டு ஒற்றையடிப் பாதையில் அவர் நடந்து கொண்டிருந்தார், அவரின் பருத்த 70 வயது வயோதிக உருவம் இப்படியும் அப்படியுமாக என்னுடன் அசைந்தாடி நடக்க‌, அருகில் இருக்கும் அங்காடி வீதி  நோக்கி நகர்கிறது எங்கள் பயண‌ம். ஒருநாள் இருநாள் அல்ல ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பிடித்த தின்பண்டங்கள் வாங்கவே இந்த நடைப்பயணம். என் அருமைப் பாட்டியார்,  எப்பொழுதும் காலையில் நடைப்பயண‌ம் செல்கையில் இதற்காக‌ என்னையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். தன்னிடமிருந்து நான் பிரியாதிருக்க பிரியத்துடன் என்னை மெல்ல அணைத்தபடி நடப்பது அவர் ப‌ழக்கம்.


என்னை மெல்லத் தொட்டுப் பற்றியிருக்கும் அவர் கையின் இளஞ்சூட்டைப் போலவே மெல்லிய கதகதப்பைப் பரப்பியபடி கிழக்கு வானில் பொற்கதிர்கள் ஒளி வீச எழுந்து வந்து எங்களோடு நடப்பான் இள‌ஞ்சூரியன்.

அவருடன் எனக்குடனான உற‌வு ஒரு பத்து வருடம் நீடித்திருக்குமா என்பதும் சரியாகத் தெரியவில்லை ! ஆனால் என் இளம் பிராயத்தின் மொத்தத்தையும் அவரே குத்தகை எடுத்துக்கொன்டது போல் ஒரு பிரமை,  நினைவை விட்டு நீங்காது இன்றும் மனதுள் நிழலாடும் அவர் நினைவுகள்...! அன்பால் நெஞ்சம் நிறைத்த‌ உறவுகள் எத்தனை தூரத்தில் இருந்தாலும், மறைந்தாலும் மனதிற்கு அருகாமையிலேயே இருப்பதான பாவனை.  இதுதானோ வாழ்க்கை !!!

அவ்வப்போது அம்மாவைச் சீண்டிப் பார்ப்பதுண்டு, ஏம்மா ! பாட்டிதானே(அப்பத்தா) என்னை சின்ன பிள்ளையில் வளர்த்தாங்க ? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் முகம் சிவந்து, அம்மாவின் கோபம் எல்லை மீறும், யாரிடமும் தன் தாய்மை தோற்றுவிடக்கூடாது எனும் துடிப்பு,  யார் சொன்னது ? அப்போ நான் எங்கே போயிட்டேனாம் ? அதெல்லாம் கிடையாது ! உன்னை நான்தான் வள‌ர்த்தேன் என்பார் ! பின்னர் மெதுவாக, ஏதோ ஒரு சில மாதங்கள் அவர் உன்னை தன்னுடன் வைத்து வளர்த்தார், என்பார் பட்டும் படாமல். ஆகா !  உண்மை வெளிவருகிறது....! 

பாட்டியை அதிகம் பிடிக்கும் !, அதிகம் என்றால், இரு கைகள் பிரித்து "இவ்ளோ பெரிச்சா" என கண்கள் மலர ஒரு சிறுமி பிரமிப்பதைப்போல, அதையும் விட மண்ணைத்தாண்டி, விண்ணைத்தாண்டி, இந்தப் பிரபஞ்சம் அளவு அவர் மீது கொட்டிக் கிடக்கும் அன்பு, பாட்டிக்கும்தான் என்மீது ! அந்த அன்பை பகிர்ந்து அளவளாவ, இன்று அவர் அருகில் இல்லை, நினைவுகள் மட்டும் நெஞ்சை நிறைக்க, அவர் உடலை தீ தின்று  வருடங்கள் பல கடந்து விட்டன..! ஒரு நவம்பர் மாதத்து மழை நாளில் அவர் இந்த மண் விட்டு மறைந்தார். மனதைவிட்டு மட்டும் இன்றும் மறையவே இல்லை !

அவரை எண்ணி பிரமிப்பதற்கு பல காரணங்கள் உண்டு..! முக்கியமாக இயற்கையை வணங்கும் அவரின் உயர்ந்த குணம், இயற்கையென்றால் இறையென்பதை உண‌ர்த்தியதில் பெரும் பங்கு அவருடையது...!

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வெளியே கிழக்கு நோக்கி நின்று தனது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி உதித்துவரும் கதிரவனை அவர் வ‌ணங்கி வரவேற்பார், "எல்லோரையும் நல்லா வச்சிருப்பா" என சூரிய பகவானை அவர் சத்தமாக வண‌ங்குவது பார்க்கவும் கேட்கவும் அத்தனை அழகாக இருக்கும். "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" எனும் ஒற்றைவரிப் பிரார்த்தனையைத்தான் அவர் அத்தனை நேரம் சூரியனைப் பார்த்து தனது பாணியில் சொல்லிக்கொண்டிருப்பார்.

ஏன் பாட்டி வெளியே கும்பிடுறீங்க ? என்றால் இதுதான் சூரியபகவான், நமது கடவுள்! சோறு தருது ! உயிர் தருது ! இதக் கும்பிடனும்மா ! என தனது கண்கள் சிரிக்க புன்முறுவலுடன் பதில் அளிப்பார்..! அவர்போல் ஆச்சாரம் இல்லை இருப்பினும் அவரின் வழித்தோன்ற‌ல் அல்லவா ? என்றும் இயற்கையை மனதால் வணங்கிப் பிரார்த்திப்பது உண்டு, ப‌ல பொற்றருணங்களில் அதன் ஆற்றலை உண‌ர்ந்து அதிசயித்ததும் உண்டு, சூரியபகவான், ஆகாசவாணி, பூமாதேவி, வாயுபகவான், வருணபகவான், அக்கினி பகவான் என இந்து மதம் இயற்கையை இறைப்பெயர் சூட்டி போற்றுகிற‌து ! இயற்கையுடன் இசைந்து வாழும் மனித வாழ்க்கை மகத்தானது என சாஸ்திரங்களும் போதிப்பதை, அன்று பாட்டி போதித்து மனதில் பதித்தார் ...!

பாட்டியின் தோற்றம் கம்பீரமானது, உயரமானவர், இரட்டை நாடி சரீரம்,  முழங்காலைத் தொடும் நீளமான கூந்தல், கஞ்சித்தண்ணீர், சீயக்காய் வில்லைகள் சேர்த்து சொந்தமாய் சாம்பு தயாரித்து உபயோகிப்பார், சோப்பெல்லாம் அவருக்கு ரொம்ப தூர‌ம்,  உண்பதற்கு மிகவும் சுவையான "வோக்ஷேல்" சாக்லெட்டின் நிறம் அவருடையது, அதிகம் கருப்போ, வெளுப்போ இல்லாமல், பாலும், கொக்கோவும் சம அளவு கலந்ததைப்போல் ஒரு நிறம் . அவரின் முகத்தோற்றம் அப்பாவை ஒத்திருக்கும், அப்பாவுக்கு பெண்வேடமிட்டால், அதுதான் பாட்டி ! , இருவருக்கும் அப்படி ஒரு முகஒற்றுமை  ..!     
  
பாட்டியின் ஆளுமை மிகவும் ஆழமானது, குடும்பத்தினர் அனைவரையும்
தனது அன்பெனும் பிடியில் அடக்கி வைத்திருந்தார். தனது அந்திமக் காலத்தில் உடல் தளர்ந்து, நினைவு தப்புவதற்கு முன்புவரை அவர்தான் குடும்பத்தின் மகாராணி! அவர் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது ! குடும்பத்தின் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் அனைத்தும் அவரை மையப்படுத்தியே நிகழும். அவர் முடிவுகளே குடும்பத்தை ஆளும்.

எல்லாவற்றையும் விட என்னை பிரமிக்கச் செய்தது எல்லோரையும் ஓட ஓட விரட்டும் அப்பா, அவருக்கு மட்டுமே பணிவது. அதைப்பார்க்க மிகவும் ஆனந்தமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். சிவாந‌ந்தம் ! சிவாந‌ந்தம் ! என அவர் கூப்பிட்ட குரலுக்கு பணிவோடு அவர் முன் நிற்கும் அப்பா, அவரிடம் தாழ்ந்த குரலில் அமைதியாக பேசுவதையும், அவர் கூறுவதை தலையாட்டி ஏற்றுக்கொள்வதையும் பார்க்க வேடிக்கையாகவும், அதிசயமாகவும் இருக்கும். வேறு யார் முன்னும் அப்பா இப்படி இறங்கிப் பேசிப் பார்த்ததேயில்லை..! எப்போதும் தடாலடிதான். வீட்டிலுள்லோர் அனைவரும் பயப்படும் அப்பாவையே அடக்கும் பாட்டி என் கண்களுக்கு "சூப்பர் ஊமன்" ஆகவே தெரிந்தார்.

பாட்டி மக்களைப் பெற்ற மாதரசி..! பதினாறு குழந்தைகள் அவருக்கு..!!! அவர் வாழும் காலத்திலேயே வறுமையிலும், நோயிலும் 10 மக்களை பறிகொடுத்தவர். இறுதியாக அவரின் எழுபதாம் வயதில் அவரின் 50 வயது தலைமகளை(மூத்த பெண்) புற்றுநோய் பலிகொள்ள ரொம்பவே வாடி ஒடிந்து போனவர். இன்று அவர் குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் அப்பா அவரின் எட்டாவது குழந்தை..!  

பாட்டியுடன் கழிந்த பொழுதுகள் சுகமானவை, சுவாரசியமானவையும் கூட...! அடியும் நுனியும் கிள்ளி வெற்றிலைபோடக்கொடுப்பார். அவரைப்போல் வாய் சிவக்காது ஆனால் உறைப்போடு வாய் மட்டும் எரிச்சலாய் இருக்கும். அவர் இரவு நேரங்களில் ஒற்றை பிள்ளை சாப்(முத்திரை) சுருட்டை புகைப்பது வழக்கம்.  அப்பா அறியாமல் அதையும் வாங்கிப் புகையை இழுத்ததுண்டு..!(ரகசியம்!) கசப்பான புகை, நெடிய நாற்றத்தோடு...! மூக்கிலிருந்து தொண்டை, நாக்கெல்லாம் கசப்பு, எரிச்சல் என என்னென்னவோ செய்யும்..! ஆனால் அந்த சுருட்டின் புகையும், தீ கங்கும் பார்க்க பார்க்க அழகாகவே தோன்றும்

சிரித்துக்கொன்டே பாடுவதும் கதைகள் பேசுவதும் அவர் சிறப்பு.
நாடோடிப் பாடல்களை பாட்டி நன்றாகப் பாடுவார். தாலாட்டுப் பாடல்களிலும் , ஒப்பாரிப் பாடல்களிலும் மகா கெட்டி...! கைகளை மடக்கிக் கக்கத்தில் இடுக்கி பறவை சிறகடிப்பதைப்போல கைகளை அடித்துக்கொன்டு

"ஓ ரப்பர் பாலே,
நாஞ் சொல்லுவதேக் கேளு..!
குப்புறப் படுத்துக்காதே ரப்பரு பாலே,
நாங் கப்ப ஏறி வந்துட்டேன் ஏங் கெப்புரு நாலே "

என பாடிச் சிரிப்பார்..! எப்போதாவ‌து அப்பா கண்ணில் பட்டுவிட்டால், இதயெல்லாம் பிள்ளைக்கு கத்துக்கொடுக்காதம்மா என்பார், ஆனால் அவர் எங்களைக் கடந்து சென்ற பின் "ச‌ர்தான் போ" என அலட்சியம் காட்டி மீண்டும் தொடர்வார் பாட்டி.

நாட்டு வைத்தியத்திலும் பாட்டி கைதேர்ந்தவர். சுளுக்கெடுப்பதிலும், பிரசவம் பார்ப்பதிலும் கெட்டிக்காரர். அவர் வைத்தியத்தில் பலனடந்தவர்கள் விருந்தாகவும், துணிமணிகளாகவும் அவருக்கு பரிசளிப்பது வழக்கம். அவருக்கு மருளும் வரும். வீரன் சாமி வந்தது என்று ஆணுடை தரித்து, இடையில் வேட்டி சுற்றி சுருட்டை புகைத்தவாரே ஆணின் கரகரப்பான குரலில் அருள்வாக்கு சொல்வார்! திருநீறு இடுவார், பரிகாரங்களும் சொல்வார்.

இப்படியாக வாழ்ந்தவர், காலவோட்டத்தில் தோட்டம் விட்டு, மக்களோடு பட்டிண‌ம் வந்தார், மேலும் வயது முதிர, ஒருநாள் குளியலறையில் கால் தடுக்கி வீழ்ந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். ஏற‌க்குறைய 3 வாரங்கள் சுய நினைவின்றி படுத்த படுக்கை, வெறும் பால் மட்டுமே உண‌வு.

நான் ஆரம்பப்பள்ளியில் பயின்று கொன்டிருந்த சமயம் அது, எதுவும் புரியவில்லை! பாட்டி போகப் போகிறார் என எல்லோரும் பேசியது மிக மிக பயமாகவும், வருத்தமாகவும் இருந்தது, ஓடிச் சென்று ஒரு ஒற்றை வரி நோட்டை எடுத்து "ஸ்ரீ ராமஜெயம்" எழுத ஆரம்பித்தேன்.பாட்டியை இறைவன் காப்பாற்றித் தருவார் எனும் நம்பிக்கையோடு.  விடயம் அறிந்தவுடன் பாட்டியின் மகள்களுள் ஒருவர். என்னை அழைத்து கடுமையாக திட்டினார்..! அவர் அம்மா பிழைத்துவிடக்கூடாதாம்! துன்பமின்றி தன் தாய் (பாட்டி) போய் சேர வேண்டும் எனும் காரூண்யம் அவர் செய்கையில் தெரியவில்லை, நமக்கேன் வீண் சிரமம் எனும் விட்டேர்த்தியான போக்குதான் புலப்பட்டது. நான் ஸ்ரீராமஜெயம் எழுதி அவர் தாய் பிழைத்துவிடுவாரோ எனப்பயந்த அவரின் செய்கை அன்று ஆத்திரத்தை வரவழைத்தாலும் இன்று நினைக்கையில் வருத்தம் தோய்ந்த சிரிப்புத்தான் வருகிறது. நல்ல பிள்ளை ! இவரைப் பெற்று வள‌ர்த்ததற்கு ப‌தில் பாட்டி நாலு மாடுகளை வாங்கி வள‌ர்த்திருக்கலாம். இறுதி நாளில் ஊற்ற பாலாவது கிடைத்திருக்கும்..!

என்னென்னவோ செய்தனர், பூஜை பரிகாரம் என்று, எல்லாம் வரவேற்க அல்ல! வழியனுப்ப மட்டும்தான். பாட்டியும் எவ்வளவுதான் பொறுப்பார். ஒரு மழை நாள் மாலையில் அவர் மண் விட்டு மறைந்தார்.

பாட்டியைப் பிரிந்த வேதனையில் அழுதழுது காய்ச்சல் வந்துவிட்டது,  அதிகம் அன்பாய் பேசாத அப்பா அப்போது ஆறுதலாய் ஒன்று சொன்னார்  "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தே" என்று. அப்பா உண்மைதான் சொன்னார்,  மனம்தான் ஏற்க மறுக்கிறது..!

இன்றும் காத்திருக்கிறேன், மீண்டும் பாட்டியின் கைபற்றிக் கொன்டு 5 வயது சிறுமியாய் அங்காடி வீதி நோக்கி நடக்க‌..! என்றாவது வருவார், ஆம் நிச்சயம் வருவார், என் கையை த‌ன் கைக்குள் சேமித்துக்கொண்டு நடக்க....!       


  

Wednesday, November 13, 2013

கண்ண‌ன் வருகின்ற நேரம்...!கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்.....!

பாதை பார்த்து தன் வயோதிகக் கண்களில் நீர் துளிர்க்கக் காத்திருந்தாள் பாஞ்சாலை, ஒரு வாரமாக இதே நினைவோடும் எதிர்பார்ப்போடும் அடிக்கொருதரம் வாசல் பார்ப்பதும், வருவோர் போவோரை பார்த்து ஏங்குவதுமாக கழிந்தன‌ அவள் பொழுதுகள்..., இன்றோ நேற்றோ உண்டான ஏக்கமல்ல,  பல‌ வருடங்களாக உள்ளத்தில் அணைகட்டி வைத்திருந்த அவள் அன்பின் வெளிப்பாடுகள் அவை..!

அவள் உயிராய் நேசித்த அவளின் உயிரின் வருகைக்காக உயிரைக் கையில் பிடித்துக்கொன்டு ஊன், உறக்கமின்றி உவகையுடன் காத்திருந்தாள் பாஞ்சாலை..!

யாருக்காக இத்தனை ஏக்கம் ? காலம் பின்னோக்கிச் சுழல்கிறது, அது பாஞ்சாலையின் வாழ்க்கை சுய‌சரிதத்தை கண்ணீருடன் பகிர்கிறது...!

1950களில், அந்நாளைய மலேயாவின் வடக்கு மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய தோட்டம் , நம் இனிய தமிழ்ம‌க்கள்,  இராமர், முனியாண்டி கோயில்களோடு, அப்பாங் மளிகைக் கடை, அதிலேயே சாராயக்கடை, பக்கத்தில் கள்ளுக்கடை, மாதம் ஒரு தியேட்டர் படம் என வாழ்ந்த காலக்கட்டம்...!

மாரியாயி, சந்திரன் தம்பதிகளின் மூன்று பெண்களில் மூன்றாவதாய் பிறந்தாள் நம் கதாநாயகி பாஞ்சாலை, அவள் பிறந்த வேளை, அவள் தந்தை ஒரு விபத்தில் சிக்கி காலமானார். பிறந்தவுடனே அப்பாவை முழுங்கிட்ட தரித்திரம் என கெட்டபெயர் அவளுக்கு... .!?  பாஞ்சாலை, கொழு கொழுவென பருமனாகவும், அகன்ற முகம் சின்னச் சின்ன கண்கள், மூக்கு என எளிமையாக அமைந்திருந்தாள், அவ்வளவு அழகென்று சொல்லமுடியாது, ரொம்பவும் வெகுளி, திற‌மையாய்  பேசவும் அறியாதவள், ஆனால் அவள் அக்காமார் இருவரும் தங்கச் சிலைபோல தகதகவென ந‌ல்ல நிற‌த்துடனும் கொடிபோல் ஒல்லியாகவும், உயரமாகவும் சிற‌ப்பான தோற்றப்பொழிவோடு, மூக்கும் முழியுமாக கண்கவர் அழகிகளாக வளர்ந்திருந்தனர். தோட்டத்து இளங்காளைகளின் ஒட்டுமொத்த கண்களும் அவர்கள் மேலே மொய்த்துக்கிடந்தன‌. பள்ளிக்குப் போகாத பாஞ்சாலை வளர்ந்தபின் தன் தாய்க்கு உதவியாக பால் மரம் சீவினாள்.

பாஞ்சாலைக்கு பக்கத்து தோட்டத்தில் ஓர் அத்தை வாய்த்திருந்தாள்,  பாஞ்சாலையின் தந்தையின் ஒரே சகோதரி, பெயர் தங்க‌ம்மா, கணவனை இழந்த அவளுக்கு பெண்ணும், ஆணுமாய் இரு பிள்ளைகள், தன் வசிப்பிடத்தின் அருகாமையிலேயே தன் மகளை ஒரு நல்ல வாலிபனுக்கு மண‌முடித்து, அவள் மகிழ்வோடு வாழ்வதை உறுதி செய்து கொண்ட தங்கம்மா, அடுத்து தன் மகனுக்கு மணமுடிக்க ஆசைப்பட்டார்.

தங்கம்மாளின் மகன் சோமுவோ சரியான போக்கிரி, குடி, புகைப்பழக்கத்தோடு, போதைப் பழக்கத்திற்கும் அவன் அடிமையாகியிருந்தான். ஓர் இடத்திலும் நிரந்தரமாய் வேலை செய்யமாட்டான். வெளியிடத்தில் இவன் இலட்சணத்திற்கு எவரும் பெண் கொடுக்க மாட்டார் என்பதைப் புரிந்து கொன்ட தங்கம்மா, தன் கவனத்தை தன் அண்னன் மகள்களின் மேல் திருப்பினாள், அதிலும் துடுக்குத்தனமும், நல்ல அழகும் கொன்ட தன் இரண்டாவது மருமகள் மேல் தன் மகன் பைத்திய‌மாய் இருப்பதை அறிந்ததும், வெகு சாலக்காரியான தங்கம்மா த‌ன் அண்ணன் மகளை தன் மகனுக்கு எப்படியேனும் மணமுடித்துவைக்க உறுதி பூண்டாள்.

தன் மகனின் திருமண‌ விக்ஷயத்தில் தங்கம்மா ஓர் அடி  எடுப்பதற்கு முன்பே விதி இரண்டு அடி எடுத்து வைத்தது, பாஞ்சாலையின் அக்காமார் இருவரையும் தோட்டத்திலேயே அவர்கள் மனங்கவர்ந்த வாலிபர்களுக்கு மண‌முடித்து வைக்க முடிவாகிப்போனது. விக்ஷயம் அறிந்து துடியாய் துடித்தான் சோமு. தங்கம்மாவுக்கும் வருத்தம்தான், ஆனால் என்ன செய்வது ? வேறு வழியில்லாமல் அப்பெண்களை வாழ்த்தி மகிழ்வதுபோல் பாசாங்கு செய்தாள்.

எஞ்சியிருப்பது பாஞ்சாலை ஒருத்தி மட்டுமே, எனவே  பாஞ்சாலையைத் தன் மகனுக்கு மண‌முடிக்க எண்ணம் கொன்டாள் தங்கம்மா. சோமுவுக்கோ பாஞ்சாலையை அறவே பிடிக்கவில்லை. ஆனால் அவன் தாய் அவனை விடாது வற்புறுத்தி பாஞ்சாலையை மணமுடிக்கச் சம்மதிக்க வைத்தாள்.

பாஞ்சாலையின் தாயிடம், என் அண்ண‌ன் வீட்டுச் சொந்தம் விட்டுப்போகக்கூடாது, இரண்டு பெண்களை அயலாருக்கு கொடுத்தாய், இந்தப் பெண்ணை எனக்குக் கொடு ! என மல்லுக்கு நின்றாள் தங்கம்மா, செய்வதறியாது திகைத்தாள் மாரியாயி, குடிகாரனுக்கு எப்படித் தன் பெண்ணை கொடுப்பது என தடுமாறினாள். நிலைமையை சரிவர புரிந்துகொள்ளாத பாஞ்சாலையோ தன் அத்தைக்காரியின் வாய்சாலத்தில் மயங்கிப்போய் தன் மாமனையே மண‌முடிக்க ஒற்றைக்காலில் நின்றாள், அவள் குடும்பத்தினர் அரைமனதோடு அவளை மண‌முடித்து, இதோ அதோ என இடிந்துவிழும் நிலையிலிருந்த அவன் குடிசைக்கு வருத்தத்துடன் வழியனுப்பி வைத்தனர்.      

சோமுவோடு வாழ ஆரம்பித்த பின்னர்தான், தான் செய்த மிகப்பெரிய தவறு புலப்பட ஆரம்பித்தது பாஞ்சாலைக்கு, சோமுவுக்கு பாஞ்சாலையை கண்டாலே பிடிக்கவில்லை, கை நழுவிப்போன பாஞ்சாலையின் அக்காளையே நினைத்து மனதுள் மருகிக்கொன்டிருந்தான். வேறு வழியில்லாமல் தனது தாயின் முன் மட்டும் நல்லவன் போலும் மனைவியிடம் அன்பு கொன்டவன் போலும் நடித்து வந்தான், அவன் தந்திரமனைத்தும் அறிந்தவள்தான் தங்கம்மா, ஆனால் அப்பாவி பாஞ்சாலையோ சூதுவாது அறியா அப்பாவிப் பெண். அவளைத் தன் விருப்பத்திற்கு ஆட்டிப் படைத்தான் வக்கிர குண‌ம் படைத்த சோமு.

தான் விரும்பிய பெண் தனக்குக் கிடைக்காத சோகம், வெறுப்பாகவும், விரக்தியாகவும் சோமுவின் மனம் முழுதும் விரவிக் கிடந்தது. அதை வெளியிடத் தக்க இடமாக வந்து சேர்ந்தாள் பாஞ்சாலை. கொடூர குண‌ம் படைத்த சோமு, இங்கே அங்கே கிடைக்கும் கூலி வேலைகளை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் மூச்சு முட்டக் குடிப்பான், அந்த போதை மாறாத ம‌யக்கத்தோடு வீடு திரும்பி பாஞ்சாலையைத் தேடுவான், அவளைப் பிடித்து தன் வெறி தீருமட்டும் அடித்து நொறுக்குவான். அவள் மேனியில் இரத்தம் காணாமல் அவன் அடிப்பதை நிறுத்தவேமாட்டான், கத்திக் கதறிக்கொன்டு வீட்டைச் சுற்றி சுற்றி பரிதாபமாக ஓடுவாள் பாஞ்சாலை...! தங்கம்மாள் குறுக்கே புகுந்து தடுப்பாள். ஆனால் பல சமயங்களில் நிலைமை கைமீறிப்போய்விட அவளும் திகைத்து வாய்மூடிப்போவாள். சோமுவின் கொடூர‌ குணத்தால் ப‌ற்களனைத்தும் உடைந்து, உடல் முழுதும் தழும்புகளோடு, ஓடாய் தேய்ந்து உருக்குலைந்து போனாள் பாஞ்சாலை.

இத்தனையும் செய்யும் நயவஞ்சகன் சோமு, எல்லாம் முடிந்து போதை தெளிந்தபின் எங்கே தான் மாட்டிக்கொள்வோமோ எனும் பயத்தில் அப்பாவியைப்போல் நடிப்பான். பாஞ்சாலையைக் கட்டிக்கொன்டு "யாரோ வைத்த சூனியத்தால் தான் இவ்வாறு நடப்பதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிப்பான். இவன் தந்திரத்தை அப்படியே நம்பி விடுவாள் பாஞ்சாலை.

சோமுவோடு வாழ்ந்த அந்த அவல வாழ்க்கையில் ஏழுமுறை கர்ப்பமுற்றாள் பாஞ்சாலை, ஆனால் அவையனைத்தும் சோமுவின் வன்முறைத் தாக்குதல்களில் சின்னாபின்னமாகி குறைப் பிரசவங்களாகிப்போயின..!

எட்டாவது முறை கர்ப்பம் தரித்தாள் பாஞ்சாலை, இம்முறை அவளுக்கு துணையாய் வந்தாள் அதுவரை அமைதி காத்த சோமுவின் சகோதரி அமுதா..! இவ்வளவு நாள் யாவற்றையும் கண்டும் காணாமல் இருந்தவள் இறுதியில் தன் மாமன் மகளுக்கு தன் உதவி தேவை என்பதை புரிந்து கொன்டு உதவிக்கரம் நீட்டினாள், அடிக்கடி அவளை வந்து கண்டு சென்றாள், அவளை சோமு அடித்தால் தயவு தாட்சன்யமின்றி அவனைத் தானே காவல்துறையில் பிடித்துக் கொடுக்கப்போவதாக மிரட்டினாள்.சொன்னதைச் செய்யும் குணம் படைத்த தன் ச‌கோதரியிடம்  நடுந‌டுங்கிப்போனான் சோமு. முடிந்த அள‌வு கையை அடக்கிக்கொன்டான்.

பாஞ்சாலைக்கு அழகான ஆண் குழந்தை பிற‌ந்தது. சோமு கொஞ்சம் மகிழ்ந்ததைப்போல் காட்டிக்கொன்டான். கண்ணன் எனப் பெயரிட்டு அன்போடு வள‌ர்த்தாள் பாஞ்சாலை. அவள் நாத்தி அமுதா குழந்தை வளர்ப்பில் அவளுக்குப் பெரிதும் உதவினாள்.

காலம் கடந்து கொன்டிருந்தது, சோமுவின் குடிப்பழக்கமும், போதைப்பழ‌க்கமும் ஏற்றம் கண்டுகொன்டு வந்தன. அவை பாஞ்சாலையின் மேனியில் பல வடுக்களாக அடிக்கடி பரிணாமம் கண்டன‌. குழந்தை கண்ணன் தன் தாயிடமும் அவ்வப்போது த‌ன் அத்தையிடமும்  அன்பாக வளர்ந்து வந்தான்.

முதுமையின் பிடியில் வாடிய‌ தங்கம்மா  சில வருடங்களில் உயிர் நீத்தாள். அவள் சில வீடுகளில் வேலை செய்து வந்த சொற்ப வருமானத்தில் காலம் ஓடிக்கொன்டிருந்தது, அந்த வருமானமும் நின்றுபோனதால், பாஞ்சாலை அருகாமையிலிருந்த தொழிற்சாலை ஒன்றில் காலை, மாலை, இரவு என மூன்று கால (க்ஷிப்டு) வேலையை ஏற்றுக்கொன்டாள், குழந்தையை அருகாமையிலிருந்த சோமுவின் சகோதரியிடம் விட்டு வளர்த்தாள்.

ஒரு நாள் மாலை வேலை முடிந்து இரவு பன்னிரண்டு மணியளவில் வீடு திரும்பினாள் பாஞ்சாலை, வீட்டில் திகிலூட்டும் ஒரு நிகழ்வு  அவளுக்காக‌க் காத்திருந்த‌து. வீடு திறந்து கிடக்க‌, விளக்குகள் ஏற்ற‌ப்படாமல் இருந்தன.      

மனம் துனுக்குற்ற பாஞ்சாலை விளக்கை ஏற்றி எப்போதும் போதையில் அயர்ந்து கிடக்கும் தன் கணவன் சோமுவைத் தேடினாள், அவனோ, தன்  வீட்டு உத்தரத்தில் தூக்கு மாட்டித் தொங்கிக் கொன்டிருந்தான். உயிர் பிரிந்து நெடு நேரமாகி அவன் உடல் சில்லிட்டுப் போயிருந்தது.

பாஞ்சாலையின் கூச்சலில்  ஊரே அங்கே திரண்டது, காவல்துறை வந்தது, சோமுவின் பிரேத‌த்தை அவசர ஊர்தி(ஆம்புலன்சு) அள்ளிக்கொன்டு போனது. அவன் தானே மனப்பிறழ்வுக்கு ஆளாகி  தற்கொலை செய்து கொன்டதாக பிரேதப் பரிசோதனை முடிவு வந்த‌து. ஊரும் உற‌வுகளும் ஓடோடி வந்தன‌, அவள் நிலை கண்டு வருந்தி கண்ணீர் விட்டன‌. இறுதியில் சடங்கு, சம்பிரதாயம் எனும் பெயரில் அவளிடம் எஞ்சியிருந்த பொட்டையும், பூவையும் பறித்து அவளை அமங்கலியாக்கி மூலையில் ஒதுக்கிவிட்டு மெளனமாக கலைந்து போயின‌.         

பாஞ்சாலை தனிமரமானாள், எஞ்சியது ஒரே ஒரு மகன் மட்டுமே, அவன் தனது நாத்தியின் கண்காணிப்பில் நல்லபடி வளர்ந்த‌து அவளுக்கு ஓரளவு நிம்மதியளித்தது.

அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை, அவள் நாத்தி அமுதாவும் நெஞ்சுவலியால் தாக்கப்பட்டு திடீரென‌ ஒரு நாள் உயிர் நீத்தாள். அப்பொழுது தமிழ்ப்பள்ளிப் படிப்பை  முடித்துவிட்டு இடைநிலைப்பள்ளியில் காலெடுத்து வைத்திருந்தான் அவள் மகன்.

பாஞ்சாலை பாடு திண்டாட்டமானது, அவளால் தன் மகனைச் சரிவரக் கண்காணிக்க இயலாமல் போனது, வேலை இல்லாவிட்டால் சோறு கிடைக்காதே ? அதிலும் தன் ஆசை மகன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் குணம் படைத்த அவளுக்கு பண‌மில்லா விட்டால் அதுவெல்லாம் ஆகிற காரியமா ? மகனுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டு வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அன்பாய் கூறிவிட்டு வேலைக்குச் செல்வாள் பாஞ்சாலை.

ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்த கண்ணன் சில காலம் கழித்துத் தன் நட்பை தவறாகப் பயன்படுத்திக்கொன்டு தன் வீட்டீல் வந்து சேர்ந்த தீய‌நண்பர்களின் மாயவலையில் விழுந்தான். புகைப்பது, மது அருந்துவது, போதைப்பொருள் உட்கொள்வது தொடங்கி போதைப்பொருளை விநியோகம் செய்யும் தூரத்திற்கு அது அவனை இட்டுச் சென்றிருந்தது.  

நிலைமை முற்றிப்போய் ஒரு நாள் காவல்துறை அதிகாரிகள் அவள் வீட்டை முற்றுகையிட்டுப் பரிசோதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அரண்டு போனாள் பாஞ்சாலை, அவளின் கண்மூடித்தனமான அன்பும், வெகுளித்தனமும் அவள் மகன் தகாத வழியில் இத்தனை நாள் சென்று கொன்டிருந்ததை  அவள் உணராமல் செய்திருந்தன‌.அவனைப்பற்றி யாரும் புகார் கூறினாலும் நம்பாதவள் அவள் !

தேம்பித் தேம்பி அழுதாள் பாஞ்சாலை ! மகனை நினைத்து அவள் கட்டி வைத்திருந்த மனக்கோட்டைகள் யாவும் சடுதியில் சரிந்து அவள் கண் முன்னே மண‌ல் மேடானதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடியாய்த் துடித்தாள்...!

காவல்துறை அதிகாரிகளால் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருளால் கண்ணன் குற்றவாளி என்பது நிரூபண‌மானது..! அவன் கைது செய்யப்பட்டான். சட்டம் அவன் பதின்ம வ‌யதைக் கருத்தில் கொன்டு குறைந்தபட்ச சிறைதண்டனையோடு, அவனை போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திற்கும் சிபாரிசு செய்தது. தீர்ப்பைக் கேட்டு தலை குனிந்து கண்ணீர் வடித்தாள் பாஞ்சாலை! அண்டை அயலாரும், உற்றமும் சுற்ற‌மும் அவளை பிள்ளையை ஒழுங்காய் வளர்க்கத் தெரியாதவள் என புறம் பேசி வேதனையில் அவளை வேகவைத்தன.

 பாஞ்சாலை அவனை சிறையிலோ, புன‌ர்வாழ்வு மையத்திலோ சென்று காண‌வேயில்லை ! என்று அவன் திருந்தி நல்லபடி வாழ்கிறானோ அன்று தான் அவனைக் காண்பேன், அதற்குள் அவனாக என்னைத்தேடி வந்தால் என் மரணமே அவனை வரவேற்கும் எனச் சூளுரைத்தாள். அதுவரை அவளுக்குப் பேசக்கூடத் தெரியாதோ எனுமளவிற்கு அப்பாவியாய் வாழ்ந்த‌ பாஞ்சாலையின் இந்த ஆவேசம் கண்ணனை அதிர்ச்சியடையச் செய்தது.(அதிர்ச்சி வைத்தியங்களே பல சமயங்களில் கைமேல் பலன் தருகின்றன‌ )

நாட்கள் நகர்ந்தன, சிறைத்தண்டனை முடிந்து, புணர்வாழ்வு மையத்தில் சேர்ந்த கண்ணன் நல்ல முறையில் திருந்தினான். தன் கடந்த கால‌ வாழ்வை எண்ணி நானினான். குறுக்கு வழிகள் வாழ்க்கை ஏற்ற‌த்திற்கு உதவாது என்பதை அநுபவப்பூர்வமாக உண‌ர்ந்து கொண்ட கண்ணன் திருந்தி வாழும் வழி நாடினான்.

புணர்வாழ்வு மையத்திலிருந்து வெளிவந்த‌ கண்ணன் அங்கிருந்த  சமுதாயப்பற்று கொன்ட  அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதலால் ஒரு கார் பட்டறையில் தங்கி வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றான். நன்கு உழைத்தான், தொழிலைக் கற்றான், எல்லோரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்றான், தன் தாய்க்கும் பண‌ம் அனுப்பினான்.  அறிந்தவர்கள் வாயிலாக தான் திருந்தி விட்டதை தன் தாயிடம் தெரிவிக்கச் செய்தான், இருப்பினும் பாஞ்சாலை யார் கூறுவதையும் ஏற்காது பாறையாய் மனம் இறுகிப்போயிருந்தாள். அவன் அனுப்பிய பண‌த்தை அவன் பெயரிலேயே சேமித்து விட்டு தன் உழைப்பில் நாட்களை நகர்த்திக்கொன்டிருந்தாள்...!

பலமுறை தொலைபேசி வாயிலாக தன் தாயிடம் பேச முயற்சித்தும் அவள் பேச மறுத்துவிட்டாள்.  பாஞ்சாலையின் இந்த  நடவடிக்கை அடுத்தவர்களுக்கு அவள் கண்ணனை தண்டிப்பதாய் தோன்றினாலும். உண்மையில் அது தனக்கான தண்டனை என்பதை அவள் மனம் மட்டுமே உணர்ந்து ம‌ருகிக்கொன்டிருந்தது !

இதோ அதோ என அவன் தாயைப் பிரிந்து வருடங்கள் சில‌ கடந்துவிட்ட நிலையில், தான் நல்ல நிலைமைக்கு வந்து விட்ட‌தாகவும் தன் தாயைக் காண ஏங்குவதாகவும் உருக்கமான ஒரு கடிததை தன் தாய்க்கு அனுப்பி அவளை சந்திக்க அனுமதி வேண்டினான் கண்ணன். அதைத்தானே அத்தனை நாளும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பாஞ்சாலை, தன் மகன் திருந்தி, நல்ல‌ நிலைக்கு மீண்டு தன்னிடம் மீண்டும் வரவேண்டும்  என்று..!, மகிழ்ச்சியில் மடை திறந்த வெள்ளமானாள் பாஞ்சாலை, தெரிந்தவர்கள் மூலமாக கண்ணனை தீபாவளிக்கு வீட்டிற்கு வரும்படி கடிதமனுப்பினாள்.

கண்ணனை  வரவேற்க ஆயத்தங்கள் பல செய்தாள் பாஞ்சாலை, அவனுக்குப் பிடித்த பலகாரங்கள் தயாரித்தாள் , அவனுக்கென அழகான நீல நிற‌த்தில்  சட்டையும், காற்சட்டையும் வாங்கி வைத்தாள். வீட்டைத் தூய்மை செய்தாள், தன் சக்திக்கேற்ப அலங்காரங்களும், தோரண‌ங்களும், கோலமும் இட்டு வீட்டை ஒளிமயமாக்கினாள்...!

பொழுது புலர்ந்தால் தீபாவளி...! இன்னும் காணலையே என் கண்ணனை..! பொறுமையிழந்து அலைமோதினாள் பாஞ்சாலை, இருட்டப் போகிறதே...! இன்னும் காண‌லையே என் கண்ணனை ஆர்ப்பரித்தது அவள் உள்ளம்.

அவ்வேளை...!

சிவப்பும் மஞ்சளுமாய் ஒரு வாடகைக் கார் அவள் வீட்டு வாசலில் சிறிது நேரம் நின்றுவிட்டு செல்ல, கண்ணனே வந்தான் என தனது மூப்பையும் பொருட்படுத்தாது வாசலுக்கு விரைந்தோடினாள் பாஞ்சாலை. வீதிவரை எட்டிப்பார்த்தும் கண்ண‌னோ அவள் கண்களுக்குத் தென்படவேயில்லை..! கண்ணன் இப்படி என்னை ஏமாற்றுகின்றானே என அழுகையும் ஆத்திரமும் பிறக்க, துளிர்த்த கண்ணீரை துடைத்தவாரே வீட்டுக்குள் திரும்பினாள் பாஞ்சாலை வீட்டுக்குள் அவள் எதிரே...!

நெடுநெடுவென உயரமாய், கையில் பெரிய கைப்பையோடு, கன்னத்தில் குழிவிழ அவளைப்பார்த்து தலைசாய்த்து மகிழ்ச்சியோடு சிரித்துக் கொன்டு நின்றிருந்தான் அவள் அன்பு மகன் கண்ணன். அவளது கோபம், வீராப்பு யாவுமே சூரியனைக் கண்ட பனியாய் நொடியிலே விலகி கரைந்தோட‌,  அன்பு வெள்ளமாய் பெருகி அவள் கண்கள் அருவிகளாக‌ கண்ணா..!  என வாஞ்சையோடு கதறியவாரே ஓடிச்சென்று தன் கைகளில் அவனை அள்ளிக்கொன்டாள் பாஞ்சாலை. என்றுமில்லா உவகையில் அந்தத் துவாரைகையின் கண்ணனையே கண்டுவிட்ட மகிழ்ச்சி பொங்கியது அந்தத் தாயுள்ளத்தில்..!


வான்வெளியிலும், குடியிருப்பு வீதிகளிலும் பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் ஒலியும் ஒளியும் பொங்க தீபாவளி வந்துவிட்டதை அறிவிக்க ஆரம்பித்தன, பாஞ்சாலை பல வருடங்கள் காணாத இன்பத் தீபாவளியை மகனோடு கொன்டாட ஆரம்பித்தாள், இளமை முதல் இன்பம் காணாது வாழ்ந்த பாஞ்சாலை இனி தன் ஆசை மகனின் அரவணைப்பில்  அன்பும் மகிழ்வும் பொங்க வாழப்போகும் இனிய செய்தியை எல்லோருக்கும் தெரிவித்துக் கொன்டு  விடைபெறுவோம். அடுத்த ப‌திவில் மீண்டும் சந்திப்போம் 

தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை துய‌ர‌ம் தெரிவ‌தில்லை
தாயின் வ‌டிவில் தெய்வத்தைக் க‌ண்டால்
வேறொரு தெய்வ‌மில்லை வேறொரு தெய்வ‌மில்லை


பொங்கும் மங்களம் தங்குக உள்ளமெல்லாம், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

ஆக்கம் 

சிவ.ஈஸ்வரி

பினாங்கு