.

.
.

Thursday, August 9, 2012

அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை‍ ஒரு கண்ணோட்டம்
வணக்கம், எல்லோரும் நலம் வாழ இறையருள் சித்திக்கட்டும் இன்றைய பதிவில் இணைவோம் வாருங்கள்...


“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.


இன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் ப‌ல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொன்டு வருகின்றனர்) !!?


பண்டைய நாளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது மூதாதையர்கள் கேள்விப்பட்டும் இருந்திரா எண்ண‌ற்ற பல நோய்களுக்கு இன்று நாம் பதில் சொல்லிக் கொன்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பால் மணம் மாறா சிசுவிலிருந்து, பலகாலம் வாழ்ந்து விட்ட முதியோரும், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வயது வரம்பின்றி நோயால் பீடிக்கப்படுவது இக்காலத்தில் சர்வ சகஜமாகிவிட்டது.


நோய் என்றால் சாதாரண சளி, காய்ச்சல் முதற்கொன்டு உயிரைக் கொல்லும் இதயநோய், உடல் உறுப்புக்களை இழக்கச்செய்யும் சர்க்கரை நோய் (பெயர் என்னவோ கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏற்படுத்தும் தீய விளைவுகள்!!!!), உடலை வலுவிழக்கச் செய்யும் ஆட்கொள்ளி நோயான எயிட்ஸ், உடலுக்கு உள்ளே ஊனை உருக்கும் புற்று நோய் என, இன்றைய காலத்து மாந்தர்களுக்கு சொந்தக்காரர்களாகி விட்டன எண்ணற்ற பல நோய்கள் :(


இன்றைய நாளில் மருத்துவம் மட்டுமென்ன சாதாரணமா ? அவர்கள் சிகிச்சையளிப்பதில் மட்டுமல்ல, தனியார் மயமென்ற பெயரில் மக்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச பணத்தையும் வசூல் செய்துவிடுவதிலும் மகா கில்லாடிகள் ! :( இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் இவர்களது சிகிச்சை பலனளிக்காது நோயாளி மரித்துப் போனாலும் இவர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை, ஒரு சல்லிக்காசும் குறையாது வசூல் செய்து விடுவார்கள், என்னே ஒரு மனசாட்சி...! கேட்டால் இந்தச் செலவு, அந்தச் செலவு, என அவர்கள் காட்டும் பில்லில் தாதியர் கூடுதல் நேரம் வேலை செய்தனர் என்பதற்கும் வரவு வைக்கப்பட்டிருக்கும் ! சரி சரி போகட்டும், வியாபாரமாகிப்போன உலகில் இதுவெல்லாம் சகஜமப்பா என நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான், வேறு வழி ????


வசதி படைத்தவர்கள் நோய் பீடித்தால் மேற்குறிப்பிட்ட "அருமையான" வசதி படைத்த மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெறுகின்றனர் (முற்றிலும் குணமடைவதும், அடையாததும் வேறு விசயம் ) வசதி குறைந்த மக்கள் ?
அவர்களை நோய் தாக்காமல் விட்டு விடுவதில்லையே ! அரசாங்க மருத்துவமனைகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிறைந்திருப்பவர்கள் இவர்களே. ஏறக்குறைய இருந்தாலும் தற்காலிக நிவாரணிகள் இவை.

எனினும் இவற்றுக்கெல்லாம் நிரந்தர‌ நிவாரணி ஒன்று உண்டு, அதுவே இன்று நமது தலைப்பில் காணும் "அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை "!!!!
இந்தச் சிகிச்சை வழி கத்தியின்றி இரத்தமின்றி, மருந்து மாத்திரைகளின்றி, மருத்துவ சிகிச்சைகளின்றி, உண‌வுக்க‌ட்டுப்பாடுக‌ள் ஏதுமின்றி நமக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை நாமே முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும், நோயின் பிடியிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும், நமது இரத்தத்தினை நாமே சுத்திகரித்துக்கொள்ள முடியும். நம்மை ஆரோக்கியமாகவும், இளமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள இயலும். இதற்கு அதிகமான செலவுகளோ, சிரமங்களோ கிடையாது. தேவையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் சில வழிமுறைகள் பின்பற்ற வேண்டியதேயாகும்.

இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மிக ஆச்சரியமாகவே இருந்தது, ஆனால் அண்மையில் ச‌கோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் இங்கே மேற்கொன்ட ஒரு சொற்பொழிவில் இவையனைத்தும் சாத்தியமான உண்மைகள் என்பது, தெளிவாக விளங்கியது. " நிறைகுடம் தளும்பாது" என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள். பகட்டு, படாடோபம் ஏதுமின்றி மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் இவர், "நான் உங்கள் சகோதரன்" எனும் முகவரியோடு தனது சொற்பொழிவைத் துவங்கி, இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் ஆரோக்கியக் கேடுகளுக்கான தீர்வை தெளிவுற விளக்குகிறார். இந்த சிகிச்சை குறித்த மேலும் பல தகவல்களை யாவரும் அறியும் பொருட்டு, இணையத்திலும் பதிவு செய்துள்ளார்.
இந்த சிகிச்சையில் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் பேசுவதை முழுமையாக செவிமடுத்து, அவர் குறிப்பிடும் சில எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஒருமுறை மேற்கொன்ட சிகிச்சை வாழ் நாள் முழுக்க நலமளிக்க வல்லதாகும். .


சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் உடல் நலம், நோய்கள் மீதான விழிப்புணர்வின் அவசியம், நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகள் என பல விச‌யங்களை எளிமையான முறையில் சிறப்பாக தெளிவுபடுத்தினார், அவையனைத்தையும் இங்கே பதிவிடல் சற்றே சிரமமாகையால், முக்கியமான சில குறிப்புகள் மட்டும் இங்கே பதிவிடப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு இங்கே...!

அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை - இயற்கையுடன் இணைந்த வாழ்வு

உணவு (மண்)
*பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்
*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.
*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்கவிடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.
*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொன்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும்.

காற்று (வாயு)
*கொசுவர்த்தி கட்டாயம் உபயோகிக்கக்கூடாது. கொசு வலை பயன்படுத்திக் கொள்ளலாம்
*எந்நேரமும் நல்ல காற்று உள்ளே வருவதற்கும், அசுத்தக்காற்று வெளியேறுவதற்கும் ஏற்புடைய வச‌தியான காற்றோற்றம் நமது வாழ்விடத்தில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

ஓய்வு/தூக்கம் (ஆகாயம்)
*வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது.
*டீ, காபி குடிக்கக்கூடாது.
*தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
*இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
*தலையில் உச்சிக்கும், சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக உறக்கம் வரும்.

உழைப்பு ( நெருப்பு )
*A/C (குளிர்சாதன வசதி) பயன்படுத்துதல் கூடாது.
*தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் பயிற்சி
அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிண நீர் ஓட்டம் நன்றாக இருக்கும்.
*இரத்த ஓட்டத்திற்கு இருதயம் உதவும், ஆனால் நிண நீர் ஓட்டத்திற்கு உடல் உழைப்பு ஒன்றே உதவிடும்.

"சுவ‌ர் இருந்தால்தானே சித்திர‌ம் வ‌ரைய‌ முடியும்" ? நாம் ஆரோக்கிய‌த்துட‌ன் இருந்தால்தானே வாழ்வை மகிழ்வுடன் வரவேற்க முடியும் ?
என‌வே தெய்வங்களே...! மேற்குறிப்பிட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளை த‌ங்க‌ள் வாழ்வில் ப‌ய‌ன்ப‌டுத்தி ப‌ல‌ன‌டையுமாறு விண்ண‌ப்பித்து விடைபெறுவோம், மீண்டும் அடுத்த‌ செய்தியுட‌ன் விரைவில் க‌ள‌ம் காணுவோம், அதுவ‌ரை என்றும் ந‌ட்புட‌ன்.....

மு.கு : வருடங்கள் சில கடந்து மீண்டிருக்கிறோம். இன்றும் நம்முடன் உடன்வரும் அன்புள்ளங்களே, உங்கள் நம்பிக்கைக்கு நன்றி, இன்றுபோல் என்றும் கம்பெனிக்கு உங்கள் ஆதரவு தொடரவேண்டுமாய் அன்புட‌ன் கேட்டுக் கொள்கிறோம்... :))


பி.கு : ஏற்க‌ன‌வே சில பகுதிகள் பதிவேற்றப்பட்டு, நண்பர்களின் (ஏ)கோபித்த ஆதரவை பெற்ற!!!? :( ஆத்மா இறுதிபாகம் விரைவில்.... எதிர்பாருங்கள்...!!!
(நண்பர்களின் நிம்மதியைக் கெடுக்க ஏதோ நம்மால முடிஞ்சது...! :)))