.

.
.

Friday, November 2, 2018

பாரம்பரிய பலகாரங்களுடன் இனிக்கும் தீபாவளி

தீபாவளி வாசல் வரை வந்துவிட்டது, எங்கெங்கு காணினும் மகிழ்ச்சியும், உற்சாகமும் பிரவகிக்க புத்தாடைகள், அணிகலன்கள் தொடங்கி வீட்டு அலங்காரம் என களைகட்டும் காட்சிகள் முக்கியமாய் பலகாரங்கள் !! அறுசுவை ஆகாரங்களுடன் அருமையான பலகாரங்களுடன் நமது இல்லங்களில் தொடங்கிவிட்டதே !! உன்னைக் கண்டு நானாட, அதைக் கண்டு நீ ஓட என இனிக்கும் இந்த தீபாவளிக்கு இணைய நண்பர்களுக்கெனவே பிரத்தியேக மாய் ஓர் இனிய பதிவு , தீபாவளிக்கு செய்யப்படும் பாரம்பரிய பலகாரங்கள் குறித்து. 



சிறு பிராயத்தில் வீட்டில் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகையின் நினைவுகளின் தொகுப்பு இந்த பதிவு, வாசிக்கும் நண்பர்களின் இளம் பிராயத்து தீபாவளி (முக்கியமாய் பலகாரங்கள் திருடி பூசை வாங்கியது போன்ற விலைமதிப்பற்ற சம்பவங்களை மீட்டிப் பார்க்கும் ஓர் அரிய பதிவைத்தான் இப்பொழுது நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள் என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பதிவை வாசிக்கும் நண்பர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லவும் , பதிவை ஆகா ஓகோவென புகழவும் நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும் , அய்யே என்னாம்மா இது மொக்க பதிவு என வரும் கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்படும் எனதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டு பதிவைத் தொடர்வோம் வாருங்கள் :)) 

தீபாவளி வந்துவிட்டால் போதும்,  நம்ம வீட்டில் அம்மா பலகாரம் செய்ய    ஆயத்தமாகிவிடுவார். முருக்கு, அச்சு முறுக்கு என ஆரம்பித்து கல் உருண்டை, நெய் உருண்டை, லட்டு, அதிரசம் என பாரம்பரிய பலகாரங்கள் அம்மாவின் கைவண்ணத்தில் வீட்டில் அணிவகுக்க ஆரம்பிக்கும்.

கடையில் விற்கும் உடனடி ( ரெடிமேட்) பலகார மாவுகளை வீட்டில் உபயோகிப்பதில்லை. அரிசி, பச்சைப்பயிறு, கடலை ஆகியவற்றை வாங்கி பதப்படுத்தியே பலகாரம் செய்வார்.

முதல் வேலையாக அந்த தானியங்களை சுத்தம் செய்து அரைப்பதற்கு ஏற்பாடு செய்வார்.
அம்மா கொடுத்தனுப்பும் தானியங்களை அப்பா பதுவிசாக மில்லில் அரைத்துக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.

அப்புறமென்ன ? வீட்டில்  பலகார யுத்தம் ஆரம்பமாகிவிடும்.

முறுக்கு, அச்சு முருக்கு,  கல் உருண்டை ( பொரி விளங்காய் உருண்டையின் செல்லப் பெயர் ;) நெய்யுருண்டை, சிட்டுருண்டை ( முந்திரிக் கொத்து), லட்டு, அதிரசம் என பாரம்பரிய பலகாரங்களை சுவைபட தயாரிப்பதில் அம்மா கைதேர்ந்த நிபுணர்.கால ஓட்டத்தில் நாகரிக சமையல்களான அனிச்சல் ( கேக்) , பிஸ்கட் வகைகளும் கற்றுக்கொண்டு அதையும் எங்களுக்கு செய்து தருவார் இருப்பினும் பாரம்பரிய பலகாரங்களுக்கே வீட்டில் என்றும் முன்னுரிமை.



அவர் சமையலில் சுவை, மணம் இவற்றோடு பிள்ளைகளுக்கு என பிரத்தியேகமான அவரின் பாசமும் பொங்கிப் பிரவகிக்கும், ஆனால் தீபாவளிக்கு முன் எடுத்துச் சாப்பிட மட்டும் அனுமதி என்ன தகிடுதத்தம் பண்ணாலும் கிடைக்கவே கிடைக்காது. சாமி கண்ணைக்குத்தும், கையைக் கடிக்கும் என பயமுறுத்தல்கள் வேறு !!

தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கையில் வீட்டில் பலகார வேலைகள் ஆரம்பிக்கும். பெரிய வாணலியில் நிறைய எண்ணெய் ஊற்றி, எழுமிச்சை அளவு புளியை அதில் இட்டு ( அப்போத்தான் எண்ணெய் சட்டுனு முடியாதாம் :)). 

முருக்கு , அச்சு முருக்கு சுடும் வேலை ஆரம்பிக்கும்.அடுப்புக்கு பக்கத்தில் நாங்கள் போனாலே துரத்தி அடித்துவிடுவார் அம்மா,  எங்களில் அவராகவே தேர்ந்தெடுக்கும் உதவியாளரை தவிர்த்து வேறு யாருக்கும் அங்கே இடமில்லை. அடுப்பிலிருக்கும் எண்ணெய் சட்டிக்கு பக்கத்தில் யாராவது பேசினால் எண்ணெய் குறைந்து போகுமாம் !!? ( எப்படியிருக்குது கதை ? )



முதலில் சுட்ட பலகாரம் சாமி மேடைக்குச் செல்லும். அப்புறம் தீபாவளி வரும் வரை இருக்கும் இடம் தெரியாமல் ஒளித்து வைக்கப்படும். தீபாவளி அன்றுதான் பலகாரங்களுக்கு  திறப்பு விழா நடைபெறும்.

தீபாவளி பலகாரங்களை எச்சில் படுத்தவே கூடாது என்பது அம்மாவின் கண்டிப்பான கட்டளை, மீறினால், பூசை விழுவது நிச்சயம்.

என்னதான் அம்மா கண்டித்தாலும் அவர் பிள்ளைகள் நாங்கள் என்ன லேசுபட்டவர்களா ? வாய்ப்புக்கிடைத்தால் அவ்ளோதான், அம்மாவின் கட்டளையை காற்றில் பறக்கவிட்டு கிடைத்ததை கபளீகரம் செய்து விடுவதுதான் வாடிக்கை, இதில் வேடிக்கை என்னவென்றால் ரொம்பவும் கண்டிப்பு பேர்வழியான அப்பாவுக்கும் இதில் கூட்டுப் பங்கு உண்டு என்பதுதான். அம்மா எங்கு ஒளித்தாலும் அப்பாவிடம் தப்பாது பலகாரங்கள். சாமி கதை சொல்லி எங்களை மிரட்டும் கதையெல்லாம் அப்பாவிடம் செல்லாது. ஆசாமி நாத்திகவாதி !!

வீட்டில் பெரும்பாலும் பெரிய ரொட்டி டின்களில் 2 டின் முருக்கு, 2 டின் அச்சு முருக்கு தயாரிப்பது வழக்கம்.

பாரம்பரிய பலகாரங்களில் சிகரம் வைத்தாற்போல் அமைவது கல் உருண்டையும் அதிரசமும்தான் !! பலகாரங்களிலேயே இவை மிகவும் சுவையானதும் செய்வதற்கு மிகவும் சிரமமானதுமாகும்.

கல் உருண்டை செய்வது மிகவும் கடினம். புளுங்கல் அரிசியை ஊறவைத்து  நீரை வடிகட்டி , வறுத்து மில்லில் கொடுத்து நைசாக அரைத்துவைத்துக்கொள்வார். பச்சைப் பயிரை வறுத்து பொடித்து வைத்துக்கொள்வார், வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை , வறுத்த பொட்டுக்கடலை, சிறு துண்டுகளாய் நறுக்கி வறுத்த தேங்காய் பத்தைகள் யாவும் சேர்த்து புளுங்கல் அரிசி மாவிலிட்டு, கறுப்புச் சீனி பாகு எடுத்து சுடச் சுட உருண்டை பிடித்து வைப்பார். கொஞ்சம் ஏமார்ந்தால் பாகு கையை கொப்பளிக்க வைத்துவிடும். இப்படி சிரமப்பட்டு அம்மா செய்யும் கல் உருண்டைக்கு சுற்றுப்புறத்தில் நிறைய வரவேற்பு, அம்மாவின் மலாய் சீன தோழிகளுக்கும் பிடிக்கும்.அந்த பொரி விளங்காய் உருண்டை.'குவே பாத்து  மானா ? என கேட்டு வாங்கி  சுவைத்து மகிழ்வார்கள் ஆனால் வீட்டிலோ முதலில் யாரும் தொடவே மாட்டார்கள், முதலில் லட்டு, அதிரசம், நெய்யுருண்டை ஆகியவற்றை காலியாக்கிவிட்டு அப்புறம் முருக்கு, அச்சு முருக்கு, சிற்றுண்டை என கொரித்துவிட்டு கடைசியாக எல்லாப் பலகாரங்களும் தீர்ந்த பின்னர்தான் கல் உருண்டை  பக்கத்தில் கவனம் போகும், அதற்கு ஏறக்குறை தீபாவளி முடிந்து இரண்டு மாதமாகிவிடும் :)


அதிரசமும் அப்படியே, ஏதோ அதிசய சமையல் போல் அத்தனை சிரத்தையுடன் செய்வார்.  ஊறவைத்து அரைத்த மாவில், மிகவும் கவனமாக பக்குவத்துடன் செய்த பாகை இட்டு வைத்தவுடன், அதில் கலந்திருக்கும் ஏலக்காய், சுக்கின் நறுமணம் வீட்டில் வீசும் பாருங்கள், அப்படியே நாவில் எச்சில் ஊறும், உடனடியாக அந்தப் பாகு மாவு காணாமல் போய் ( அந்தப் பாகை அப்படியே அள்ளி சாப்பிடலாம் அம்புட்டு ருசியாய் இருக்கும், எல்லாம் அம்மா கண்ணில் விரலை விட்டு ஆட்டி ஏமாற்றி விட்டுத் திருடித் தின்ற அனுபவந்தேன் !! :))) தீபாவளிக்கு முதல் நாள் வெளியில் வரும், அதை லாவகமாய் சுட்டு சாமி மேடையில் படைத்துவிடுவார். மேலே சாக்லேட் நிற ஏடு போர்த்தி வாயிலிட்டால் உதிர்ந்து கரையும் அந்த அதிரசத்தின் சுவை அப்பப்பா ! அத்தனை அருமை.


நெய்யுருண்டையும் அப்படியே, பச்சைப்பயிரு மாவில் திராட்சை, முந்திரி, சர்க்கரை சேர்த்து QBB நெய்யை கொதிக்க வைத்து ஊற்றி சுடச்சுட உருண்டைப் பிடித்து வைப்பார். நெய்யின் மணம் வீட்டைத் தாண்டி வெளியில் வரை வீசும் :)   வீட்டில் முதலில் முடிந்து போகும் பலகாரம் இது. அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது.

இப்படியே எல்லாப் பலகாரங்களுக்கும் வகுப்பெடுக்க ஆசைதான் !! ஆனால் வாசகர்கள் பாவமில்லையா ? எனவே இந்தப் பதிவில் இவை போதும் என பெருந்தன்மையுடன் விட்டுவிட்டு, அனைவருக்கும் அன்பையும், நட்பையும், நல்வாழ்த்துக்களையும் சமர்ப்பித்து, தப்பித்துக்கொள்வோம், ஏதோ நமக்கு கிட்டிய தமிழில் எட்டிய நினைவுகளை இங்கே சமர்ப்பித்தோம். இதை வைத்து நாம் பெரிய சமையல் மேதை எனவெல்லாம் தப்புக்கணக்குப் போடவேண்டாம் என விண்ணப்பித்துக்கொண்டு விடை பெறும் நேரத்திற்கு வந்துவிடுவோம்

இதுபோன்றே பலருக்கும் தீபாவளி சமயத்தில் வீட்டில் அம்மா, பாட்டி என பெரியவர்களால் தயாரிக்கப்படும்  பாரம்பரிய பலகாரம் தொட்ட நினைவுகள் நிறைந்திருக்கக்கூடும். அதை மீட்டிப்பார்க்க இந்தப் படைப்பு ஒரு பாலமாகட்டும். நினைவில் நிறுத்துவதோடு  நாமும் அவற்றை செயலிலும் தொடர்தல்  மேலும்  சிறப்பு.

நமது பாரம்பரிய பலகாரங்கள் மிகுந்த  சுவையும், சத்துக்களும் நிறைந்தவை, ரசாயன நிறங்கள், சுவை கூட்டுப் பொருட்கள் இன்றி தயாரிக்கப்படுபவை. அதன் அருமை பிற இனங்களுக்குத் தெரிந்திருக்கிறது, முறுக்கு, அதிரசம் போன்றவற்றை தயாரித்து சந்தைப்படுத்தவும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் , அதற்கு உரிமம் எடுத்து வைத்துக் கொள்ளவும் அவர்களுக்குத் தெரிகிறது. குறைந்த பட்சம் நாம் நமது பாரம்பரிய பலகாரங்களை செய்து சாப்பிடவும், இளைய தலைமுறைக்கு  அவற்றின் செய்முறைகளையும் பழகி வைத்தலும் மிக்க நலம்.

அனைவருக்கும் மங்களம் பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நமது பாரம்பரிய பலகாரங்களுடன் தீபாவளியை இனிதே கொண்டாடி மகிழ்க _/\_





ஆக்கம்
சிவ.ஈஸ்வரி @ சிவனேஸ் சிவானந்தம்
பினாங்கு.

Thursday, February 22, 2018

அந்த அமாவாசை இரவில்...!! - பாகம் 2



பாவம் வேலு !! புகைப்பழக்கம், மது, மாது, சூதாட்டம் என எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தவன், தன் மனைவியின் கொடுமையாலும் அதற்குக் காரணமான தன் ஏழ்மை நிலையையும் நொந்து தன் புண்பட்ட நெஞ்சை புகையைவிட்டு ஆற்றவும், நொந்துபோன மனதை மதுவை அருந்தி தேற்றவும் பழகிக்கொண்டான், சுசிலா தந்த மனக்காயங்களுக்கு மது அவனுக்கு சிறந்த நிவாரணியானது, மாமியாருக்கு வாங்கிவரும் மதுவை தானும் சுவைக்கக் கற்றுக்கொண்டு, அந்த போதையில் தன்னிலை மறந்து வாழ ஆரம்பித்தான்.

என்னதான் தற்காலிகமாய்  குடி கவலை மறக்கச்செய்வதாய் தோன்றினாலும், குடியில்லாத நிதானப் பொழுதுகளில் அவன் மனக்கவலை பன்மடங்காய் பல்கிப்பெருகி  அவன் மனதை அரித்து வதைசெய்தது. குடியில்லாத வேதனை சுமந்த அவன் தனிமைப்பொழுதுகளில் தன் வாழ்வின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன என அவன் அலசி ஆராய்ந்ததில் மனித சாதியின் துயரம் யாவுமே "பணத்தினால்"வந்த நோயடா எனும் அரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தான். அப்படியென்றால் மேலும் மேலும் பணம் சேர்க்க சுலபமான வழி ஏதும் இருக்கின்றதா என ஆராய ஆரம்பித்ததில் "நாலு நம்பர்" வழி அவன் கண்களுக்கு ஜெகஜ்ஜோதியாய் ஜொலிக்கத் துவங்கியது.

அப்புறமென்ன நம்ம நல்ல புள்ள வேலு "நாலு நம்பர் வேலு"வாய் புதிய பரிமாணம் எடுத்துவிட்டான்.

நம்பர் எடுக்க ஆரம்பித்தவுடன் அதில் அதிகம் பரிச்சயமுள்ள நண்பர்கள் சிலரை உடன் சேர்த்துக்கொண்டான். மனதில் தோன்றும், கண்ணில் படும் எண்களையெல்லாம் நம்பர் சீட்டாய் வாங்கினான். ஏமாற்றமளிக்கும் விதத்தில் பலமுறை அவனுக்கு பெப்பே காட்டிய நம்பர் கடைசியில் அதிசயமாய் ஒருமுறை ஆயிரம் வெள்ளி அடித்து அவனை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.

மனைவிக்கு கை நிறைய பணமும், பிள்ளைகளுக்கு வித விதமான நொறுக்குத் தீனிகளும், மாமியாருக்கு பெரிய சாராயப் புட்டியும் கை மாறியதில் திடீரென அனைவரும் அவனை 100 நாள் வெற்றி படக் கதாநாயகனைப்போல் போற்றிப் புகழ்ந்து கொண்டாட ஆரம்பித்தனர். இது போதாதா நம்ம கதாநாயகனுக்கு ? அதே அனுபவம் நாடி மேலும் மேலும் நம்பர் கடைகளில் காசைக் கரியாக்கினான். பலன் தான் கிட்டவில்லை.

எப்படி நம்பர் அடித்து காசை சம்பாதிப்பது என்று அலைபாய்ந்த அந்த சமயத்தில்தான் ஒருமுறை வேலு தனது நண்பர்கள் சிலருடன் சீனன் கோப்பிக் கடையில் அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது அவன் ஆப்த நண்பன் வாசு சொன்ன தகவல் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் குடியிருப்புக்கு அப்பால் செம்பனைத் தோட்டத்தையொட்டிய பெரிய காடு ஒன்று இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அங்கே குறைவு. அங்கே அமாவாசைக் காலங்களில் நடுநிசியில் பலிபூசை நடக்கிறதாம். எங்கோ வெளியூரிலிருந்து சில சீனர்கள் அந்த வேலையைச் செய்கின்றனராம்.

அந்தப் பூசையில் இறந்து போன ஆத்மாவை வரவழைத்து அதற்கு இரத்தப் பலியிட , அந்த ஆத்மா கண்ணெதிரிலேயே பிரசன்னமாகி பூசை செய்யும் பூசாரியின் உடலில் புகுந்து, பூசாரி மூலம் அந்தப் பலியை ஏற்று பலியிடப்பட்ட உயிரினத்தின் இரத்தத்தை உறிஞ்சிவிட்டு, அந்த இரத்தத்தை தோய்த்து தரையில் நாலு நம்பர் எழுதி வைக்குமாம். அந்த நம்பரை எடுத்து வந்து எழுதினால் மறுநாள் கண்டிப்பாய் முதல் இடத்தில் நம்பர் அடித்து எழுதியவர் கோடிஸ்வரராகிவிடலாமாம். நிகழ்ந்ததை நேரில் கண்டதைப்போல் மேசையிலடித்துச் சத்தியம் செய்து சொன்னான் நண்பன், வேலுவும் இன்னும் பிற நண்பர்களும் கதையைக் கேட்டு உள்ளூர ஆடிப்போனாலும் வெளியில் தைரியமாய் காட்டிக்கொண்டனர், மானப் பிரச்சனையல்லவா ?

என்னதான் பயமாய் இருந்தாலும், ஆசை யாரை விட்டது? வேலுவுக்கு இதையும் முயற்சித்துப் பார்க்கலாமோ எனும் நப்பாசையும் பிறந்தது.

எத்தனை நாளைக்குத்தான் செம்பனைத் தோட்டத்தில் வாயில்
நுரை தள்ள குலை வெட்டிச் சாவது? போதாதற்கு பாம்பு, தேள், பூரான், பூச்சிகள், கொசு சித்திரவதைகள் வேறு !

நிறைய பணம் கிடைத்தால் நாமே கூட ஒரு ஏக்கரோ, ரெண்டு ஏக்கரோ செம்பனைத் தோட்டம் வாங்கி ஒரு முதலாளியாய் மாறி நாலுபேருக்கு வேலை தந்து காலாட்டிச் சாப்பிடலாமே ? ஆசை அவனை அலைக்கழித்தது, அங்கலாய்ப்பு அவனை ஆக்ரமித்தது.

இன்னும் நாலே நாளில் அமாவாசை வரப்போகிறது. நண்பர்கள் யாவரும் அந்த செம்பனைக் காட்டுக்கு போய், விவரம் சொன்ன நண்பன் மூலம் அந்தப் பூசையில் கலந்துகொள்வதாய் ஏற்பாடு.

நண்பர்களில் இருவருக்கு அந்தத் திட்டம் அறவே பிடிக்கவில்லை. அவர்கள் அப்பொழுதே அதிலிருந்து விலகிக்கொண்டனர். எஞ்சியவர்கள் மூவர் மட்டும் பூசைக்குப் போவதாய் ஏற்பாடு. அவர்களில் ஒருவன் திருமணமாகாதவன், வீட்டில் விடவில்லை என காரணம் சொல்லி கழன்றுகொண்டான். மிஞ்சியது வேலுவும் அவனுக்கு அந்தக் கதையைச் சொன்ன அவன் ஆப்த நண்பன் வாசுவும்தான். அவன் வேலுவின் பால்ய நண்பன். வேலுவிடம் அவனுக்கு நட்பும் ஒட்டுதலும் அதிகம்.

கதையைச் தெரிந்துகொண்டு வந்து தெரிவித்தாலும் அவனுக்கும் அந்தப் பூசையில் கலந்துகொள்வதில் அவ்வளவாய் விருப்பமில்லை, பயத்தில் அடிவயிறு கலங்கி பாத்ரூம் போகவேண்டும் போல் இருந்தது, ஆனால் வேலுவோ விடாப்பிடியாய் பூசையில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என பிடிவாதம் காட்டினான். அரைகுறை மனதுடன் அவனுடன் வருவதாய் வாக்குக் கொடுத்தான் வாசு.



குறிப்பிட்ட அமாவாசை தினமும் வந்தது.....!!



தொடரும்...

பி.கு : அடுத்த பகுதியில் படைப்பு நிறைவுபெற்றுவிடும் தெய்வங்களே :))







Sunday, January 7, 2018

அந்த அமாவாசை இரவில்...!! (100 கதைகளில் ஒரு கதை :)

சமூகத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் !! _/\_ (அழுத்திச் சொல்வதில் அலாதி ஆனந்தம் , உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் தோரனை :) , இவ்வருடம் 2018, அனைவருக்கும் ஆனந்தம் நிறைந்து சுகமும் செளபாக்கியமும் சித்திக்க வேண்டும்.

புத்தாண்டுக்கு எல்லோருக்கும் ஒரு நற்செய்தி, அதாவது இப்படியே வாரம் ஒரு பதிவெழுதி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திட வேண்டும் என்பதுதான் :(

நல்லது , கீழ்க்கண்ட சிறுகதை நிறைய உண்மையும் கொஞ்சூண்டு கற்பனையும் கொண்ட ஒரு பதிவு, இதற்கு பரிசும் அங்கீகாரமும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் பல, பதிவுக்குள் செல்வோம்...

அந்த இருள் சூழ்ந்த காட்டில் வியர்க்க விருவிருக்க ஓடிக்கொண்டிருந்தான் வேலு. அவன் அணிந்திருந்த ஜப்பான் சிலிப்பரில் ஒன்று எங்கோ விழுந்து தொலைந்திருக்க, அதைக் கண்டுபிடிக்கும் அவகாசமும் இன்றி சோர்ந்துபோய்விட்ட உடலின் எஞ்சிய பலம் அனைத்தும் திரட்டி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கண்மண் தெரியாமல் அந்தக்காட்டின் நடுவிலிருந்து அதன் விளிம்பு நோக்கி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான். இது அவனுக்கு வாழ்வா சாவா போராட்டம் !! அவன் ஓட்டம் தொடர்கிறது.

ஆங்காங்கே கூரிய கற்களும் முட்களும் அவன் பாதங்களை தைத்து சதைக்குள் புதைந்து வதைப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் அந்தக் காட்டின் விளிம்பை நாடி ஓடிக்கொண்டேயிருந்தான்.


அதோ எட்டிய தூரத்தில் அவன் கண்களுக்கு மங்கலாய் ஏதோ ஒளிபோல் தெரிகிறதே...!! அந்த ஒளி அவனை நோக்கி வருவதைப்போல் தோன்றுகிறதே, அவனை நெருங்குகிறதே..!! ஐயோ இது அவனை மீட்க வரும் ஒளியா அல்லது செத்துப் பிழைத்தவனை மீண்டும் ஆபத்திலாழ்த்த வரும் ஒளியா ?

கால்கள் தளர்ந்து, உடல் வியர்வையில் நனைந்திருக்க அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க வலுவின்றி தன் சுயம் தொலைத்து பொத்தென்று கீழே வீழ்ந்தான் வேலு !! மங்கிய ஒளியில் இரண்டு ஆடவர்கள் அவனருகில் வந்து சேர்ந்தனர்...

வேலுவுக்கு என்ன நடந்தது ? அப்படித் தலைதெறிக்க ஓட வேண்டிய அவசியமென்ன ? ஏன் ? எதற்கு ? எதனால் ? என்ன நடந்தது ? அறிந்துகொள்ள ஆர்வம் என்னைப்போலவே தங்களுக்கும் பிறக்கிறதல்லவா ? வாருங்கள் கொசுவத்திச் சுருள் உத்தியை உபயோகித்து இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்த அவனுடைய நேற்றைய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்....

வேலுவின் தந்தை கன்னியப்பனுக்கு 13 பிள்ளைகள், 7 பொண்களும் 6 ஆண்களும், அதில் வேலு கடைசிப் பையன். அவன் கட்டையாய் கரிய நிறத்தில், கழுத்தின்றி தலையும் உடலும் ஒட்டிப் பிறந்த பிறவிபோல் பெருத்த உருவத்துடன் கருப்பாய் பயங்கரமாய் வளர்ந்திருந்தான். பெயருக்குக் கொஞ்சம் படிப்பு வாசனையும் அவனுக்கு இருந்தது. கேள்வி ஞானம் அதிகம். சீன நண்பர்கள் வழி ஹொக்கியன் மொழி புரிந்துகொள்ளவும் பேசவும் தெரியும்.

அவனது உடன்பிறப்புகள் யாவரும் திருமணம் முடித்து அக்கம் பக்கத்தில் குடிபெயர்ந்தனர்.

வேலு முதிர்ந்த தாய் தந்தையை தன் குடியிருப்புக்கு அருகாமையிலிருந்த சீனரின் செம்பனைத் தோட்டத்தில் குலை வெட்டும் தொழில் செய்து காப்பாற்றினான். அவனுக்கு கடும் உழைப்பாளி எனும் நல்ல பெயர்.

வேலு ஆளுதான் அம்சமாய் இல்லையே தவிர அவன் மனமும் குணமும் பத்தரை மாற்றுத் தங்கம். இல்லை என்று சொல்லாத ஈகை குணம். யாரேனும் பசியென்று வந்துவிட்டால் தனக்கில்லையென்றாலும் பரவாயில்லை என்று வாரிக் கொடுத்துவிடும் வள்ளல் ரகம்.

குணசாலியான வேலுவுக்கு அண்டை அயலாரில் பலரும் பெண் கொடுக்க முன்வந்தாலும் . அவன் தன் மாமன்மகள் சுசிலாவை மணக்க முடிவு செய்தான். அங்கே ஆரம்பித்தது அவனின் கக்ஷ்டகாலம்....!!


சுசிலா தாமரைப் பூவுக்கு பொட்டு வைத்தாற்போல் பார்க்க கும்மென்று சிவப்பாய் கண்களுக்கு இலட்சணமாய் களையான முகத்தோடு இருந்தாலும் தந்தையில்லாத அந்தப் பெண் சின்ன வயசிலேயே "போலியோ" காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு கால் சூம்பிப்போனவள். காலை தாங்கித் தாங்கித்தான் நடப்பாள். அவளுக்கு வாய் சரியில்லை , சரியான வம்புக்காரி என வேலு  குடும்பம் அவளை பெண்ணெடுக்கத் தயங்கியது. வேலுவோ மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவியென விடாப்பிடியாய் சுசிலாவையே மணந்துகொண்டான். அது அவன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என அவன் நொந்துகொள்ளும் வண்ணம் நடந்துகொண்டாள் சுசிலா. வேலுவை கொஞ்சமும் மரியாதை இன்றி எடுத்தெறிந்து பேசினாள். 

வேலுவின் உறவினர்கள் அவன் வீட்டிற்கு வரவே தயங்கினர். சுசிலா அண்ணன் வீட்டில் அண்ணியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த தன் தாயை அழைத்து வந்து தன்னோடு வைத்துக்கொண்டாள். வேலுவின் பாடு மேலும் திண்டாட்டமாகியது. அத்தைகாரியும் லேசுபட்டவளில்லை !! 

அனுதினமும் அவளுக்கு பட்டைசாராயம் வேண்டும், வேலு வாங்கிவந்து தரவேண்டும். வாங்கிக்கொடுக்காவிட்டால் " கட்டையிலே போக எனத் துவங்கி 
வாய் கூசும் வார்த்தைகளால் அவனை வறுத்தெடுத்தாள். சாபங்களை வஞ்சனையின்றி வாரி இறைத்தாள். பாவம் அஜானுபாகுவான வேலு அமைதியாய் அனைத்தையும் பொறுத்துக்கொண்டான். அவன் சுபாவம் அப்படி ! 



வறுமையும் குடும்பப்பூசல்களும் சூழ்ந்த நிலையிலும் அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.  அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு பணம் பிரதானமாய் அமைந்தது.

வேலு கொண்டுவரும் சொற்ப வருமானம்,வீட்டில் உள்ள அனைவருக்கும் வடித்துக்கொட்ட சுசிலாவுக்குப் போதவில்லை. பணம் பணம் என அவனை பிடுங்கியெடுத்தாள். பகுதி நேர வேலைக்கு விரட்டினாள். அவனிடத்தில் அன்பாய் பேசவோ பழகவோ விருப்பமில்லாதவள் போல் நடந்துகொண்டாள். அழகிய அவள் முகத்தில் நாகத்தின் நாக்கினைப் படைத்துவிட்டான் போலும் பிரம்மன். தினமும் வார்த்தைகளால் அவன் இதயத்தில் நஞ்சைப் பாய்ச்சினாள் அந்த மகராசி.

அந்த சூழலில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....




தொடரும்...