தீபாவளி வாசல் வரை வந்துவிட்டது, எங்கெங்கு காணினும் மகிழ்ச்சியும், உற்சாகமும் பிரவகிக்க புத்தாடைகள், அணிகலன்கள் தொடங்கி வீட்டு அலங்காரம் என களைகட்டும் காட்சிகள் முக்கியமாய் பலகாரங்கள் !! அறுசுவை ஆகாரங்களுடன் அருமையான பலகாரங்களுடன் நமது இல்லங்களில் தொடங்கிவிட்டதே !! உன்னைக் கண்டு நானாட, அதைக் கண்டு நீ ஓட என இனிக்கும் இந்த தீபாவளிக்கு இணைய நண்பர்களுக்கெனவே பிரத்தியேக மாய் ஓர் இனிய பதிவு , தீபாவளிக்கு செய்யப்படும் பாரம்பரிய பலகாரங்கள் குறித்து.
சிறு பிராயத்தில் வீட்டில் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகையின் நினைவுகளின் தொகுப்பு இந்த பதிவு, வாசிக்கும் நண்பர்களின் இளம் பிராயத்து தீபாவளி (முக்கியமாய் பலகாரங்கள் திருடி பூசை வாங்கியது போன்ற விலைமதிப்பற்ற சம்பவங்களை மீட்டிப் பார்க்கும் ஓர் அரிய பதிவைத்தான் இப்பொழுது நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள் என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பதிவை வாசிக்கும் நண்பர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லவும் , பதிவை ஆகா ஓகோவென புகழவும் நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும் , அய்யே என்னாம்மா இது மொக்க பதிவு என வரும் கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்படும் எனதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டு பதிவைத் தொடர்வோம் வாருங்கள் :))
தீபாவளி வந்துவிட்டால் போதும், நம்ம வீட்டில் அம்மா பலகாரம் செய்ய ஆயத்தமாகிவிடுவார். முருக்கு, அச்சு முறுக்கு என ஆரம்பித்து கல் உருண்டை, நெய் உருண்டை, லட்டு, அதிரசம் என பாரம்பரிய பலகாரங்கள் அம்மாவின் கைவண்ணத்தில் வீட்டில் அணிவகுக்க ஆரம்பிக்கும்.
கடையில் விற்கும் உடனடி ( ரெடிமேட்) பலகார மாவுகளை வீட்டில் உபயோகிப்பதில்லை. அரிசி, பச்சைப்பயிறு, கடலை ஆகியவற்றை வாங்கி பதப்படுத்தியே பலகாரம் செய்வார்.
முதல் வேலையாக அந்த தானியங்களை சுத்தம் செய்து அரைப்பதற்கு ஏற்பாடு செய்வார்.
அம்மா கொடுத்தனுப்பும் தானியங்களை அப்பா பதுவிசாக மில்லில் அரைத்துக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
அப்புறமென்ன ? வீட்டில் பலகார யுத்தம் ஆரம்பமாகிவிடும்.
முறுக்கு, அச்சு முருக்கு, கல் உருண்டை ( பொரி விளங்காய் உருண்டையின் செல்லப் பெயர் ;) நெய்யுருண்டை, சிட்டுருண்டை ( முந்திரிக் கொத்து), லட்டு, அதிரசம் என பாரம்பரிய பலகாரங்களை சுவைபட தயாரிப்பதில் அம்மா கைதேர்ந்த நிபுணர்.கால ஓட்டத்தில் நாகரிக சமையல்களான அனிச்சல் ( கேக்) , பிஸ்கட் வகைகளும் கற்றுக்கொண்டு அதையும் எங்களுக்கு செய்து தருவார் இருப்பினும் பாரம்பரிய பலகாரங்களுக்கே வீட்டில் என்றும் முன்னுரிமை.
அவர் சமையலில் சுவை, மணம் இவற்றோடு பிள்ளைகளுக்கு என பிரத்தியேகமான அவரின் பாசமும் பொங்கிப் பிரவகிக்கும், ஆனால் தீபாவளிக்கு முன் எடுத்துச் சாப்பிட மட்டும் அனுமதி என்ன தகிடுதத்தம் பண்ணாலும் கிடைக்கவே கிடைக்காது. சாமி கண்ணைக்குத்தும், கையைக் கடிக்கும் என பயமுறுத்தல்கள் வேறு !!
தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கையில் வீட்டில் பலகார வேலைகள் ஆரம்பிக்கும். பெரிய வாணலியில் நிறைய எண்ணெய் ஊற்றி, எழுமிச்சை அளவு புளியை அதில் இட்டு ( அப்போத்தான் எண்ணெய் சட்டுனு முடியாதாம் :)).
முருக்கு , அச்சு முருக்கு சுடும் வேலை ஆரம்பிக்கும்.அடுப்புக்கு பக்கத்தில் நாங்கள் போனாலே துரத்தி அடித்துவிடுவார் அம்மா, எங்களில் அவராகவே தேர்ந்தெடுக்கும் உதவியாளரை தவிர்த்து வேறு யாருக்கும் அங்கே இடமில்லை. அடுப்பிலிருக்கும் எண்ணெய் சட்டிக்கு பக்கத்தில் யாராவது பேசினால் எண்ணெய் குறைந்து போகுமாம் !!? ( எப்படியிருக்குது கதை ? )
முதலில் சுட்ட பலகாரம் சாமி மேடைக்குச் செல்லும். அப்புறம் தீபாவளி வரும் வரை இருக்கும் இடம் தெரியாமல் ஒளித்து வைக்கப்படும். தீபாவளி அன்றுதான் பலகாரங்களுக்கு திறப்பு விழா நடைபெறும்.
தீபாவளி பலகாரங்களை எச்சில் படுத்தவே கூடாது என்பது அம்மாவின் கண்டிப்பான கட்டளை, மீறினால், பூசை விழுவது நிச்சயம்.
என்னதான் அம்மா கண்டித்தாலும் அவர் பிள்ளைகள் நாங்கள் என்ன லேசுபட்டவர்களா ? வாய்ப்புக்கிடைத்தால் அவ்ளோதான், அம்மாவின் கட்டளையை காற்றில் பறக்கவிட்டு கிடைத்ததை கபளீகரம் செய்து விடுவதுதான் வாடிக்கை, இதில் வேடிக்கை என்னவென்றால் ரொம்பவும் கண்டிப்பு பேர்வழியான அப்பாவுக்கும் இதில் கூட்டுப் பங்கு உண்டு என்பதுதான். அம்மா எங்கு ஒளித்தாலும் அப்பாவிடம் தப்பாது பலகாரங்கள். சாமி கதை சொல்லி எங்களை மிரட்டும் கதையெல்லாம் அப்பாவிடம் செல்லாது. ஆசாமி நாத்திகவாதி !!
வீட்டில் பெரும்பாலும் பெரிய ரொட்டி டின்களில் 2 டின் முருக்கு, 2 டின் அச்சு முருக்கு தயாரிப்பது வழக்கம்.
பாரம்பரிய பலகாரங்களில் சிகரம் வைத்தாற்போல் அமைவது கல் உருண்டையும் அதிரசமும்தான் !! பலகாரங்களிலேயே இவை மிகவும் சுவையானதும் செய்வதற்கு மிகவும் சிரமமானதுமாகும்.
கல் உருண்டை செய்வது மிகவும் கடினம். புளுங்கல் அரிசியை ஊறவைத்து நீரை வடிகட்டி , வறுத்து மில்லில் கொடுத்து நைசாக அரைத்துவைத்துக்கொள்வார். பச்சைப் பயிரை வறுத்து பொடித்து வைத்துக்கொள்வார், வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை , வறுத்த பொட்டுக்கடலை, சிறு துண்டுகளாய் நறுக்கி வறுத்த தேங்காய் பத்தைகள் யாவும் சேர்த்து புளுங்கல் அரிசி மாவிலிட்டு, கறுப்புச் சீனி பாகு எடுத்து சுடச் சுட உருண்டை பிடித்து வைப்பார். கொஞ்சம் ஏமார்ந்தால் பாகு கையை கொப்பளிக்க வைத்துவிடும். இப்படி சிரமப்பட்டு அம்மா செய்யும் கல் உருண்டைக்கு சுற்றுப்புறத்தில் நிறைய வரவேற்பு, அம்மாவின் மலாய் சீன தோழிகளுக்கும் பிடிக்கும்.அந்த பொரி விளங்காய் உருண்டை.'குவே பாத்து மானா ? என கேட்டு வாங்கி சுவைத்து மகிழ்வார்கள் ஆனால் வீட்டிலோ முதலில் யாரும் தொடவே மாட்டார்கள், முதலில் லட்டு, அதிரசம், நெய்யுருண்டை ஆகியவற்றை காலியாக்கிவிட்டு அப்புறம் முருக்கு, அச்சு முருக்கு, சிற்றுண்டை என கொரித்துவிட்டு கடைசியாக எல்லாப் பலகாரங்களும் தீர்ந்த பின்னர்தான் கல் உருண்டை பக்கத்தில் கவனம் போகும், அதற்கு ஏறக்குறை தீபாவளி முடிந்து இரண்டு மாதமாகிவிடும் :)
அதிரசமும் அப்படியே, ஏதோ அதிசய சமையல் போல் அத்தனை சிரத்தையுடன் செய்வார். ஊறவைத்து அரைத்த மாவில், மிகவும் கவனமாக பக்குவத்துடன் செய்த பாகை இட்டு வைத்தவுடன், அதில் கலந்திருக்கும் ஏலக்காய், சுக்கின் நறுமணம் வீட்டில் வீசும் பாருங்கள், அப்படியே நாவில் எச்சில் ஊறும், உடனடியாக அந்தப் பாகு மாவு காணாமல் போய் ( அந்தப் பாகை அப்படியே அள்ளி சாப்பிடலாம் அம்புட்டு ருசியாய் இருக்கும், எல்லாம் அம்மா கண்ணில் விரலை விட்டு ஆட்டி ஏமாற்றி விட்டுத் திருடித் தின்ற அனுபவந்தேன் !! :))) தீபாவளிக்கு முதல் நாள் வெளியில் வரும், அதை லாவகமாய் சுட்டு சாமி மேடையில் படைத்துவிடுவார். மேலே சாக்லேட் நிற ஏடு போர்த்தி வாயிலிட்டால் உதிர்ந்து கரையும் அந்த அதிரசத்தின் சுவை அப்பப்பா ! அத்தனை அருமை.
நெய்யுருண்டையும் அப்படியே, பச்சைப்பயிரு மாவில் திராட்சை, முந்திரி, சர்க்கரை சேர்த்து QBB நெய்யை கொதிக்க வைத்து ஊற்றி சுடச்சுட உருண்டைப் பிடித்து வைப்பார். நெய்யின் மணம் வீட்டைத் தாண்டி வெளியில் வரை வீசும் :) வீட்டில் முதலில் முடிந்து போகும் பலகாரம் இது. அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது.
இப்படியே எல்லாப் பலகாரங்களுக்கும் வகுப்பெடுக்க ஆசைதான் !! ஆனால் வாசகர்கள் பாவமில்லையா ? எனவே இந்தப் பதிவில் இவை போதும் என பெருந்தன்மையுடன் விட்டுவிட்டு, அனைவருக்கும் அன்பையும், நட்பையும், நல்வாழ்த்துக்களையும் சமர்ப்பித்து, தப்பித்துக்கொள்வோம், ஏதோ நமக்கு கிட்டிய தமிழில் எட்டிய நினைவுகளை இங்கே சமர்ப்பித்தோம். இதை வைத்து நாம் பெரிய சமையல் மேதை எனவெல்லாம் தப்புக்கணக்குப் போடவேண்டாம் என விண்ணப்பித்துக்கொண்டு விடை பெறும் நேரத்திற்கு வந்துவிடுவோம்
இதுபோன்றே பலருக்கும் தீபாவளி சமயத்தில் வீட்டில் அம்மா, பாட்டி என பெரியவர்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய பலகாரம் தொட்ட நினைவுகள் நிறைந்திருக்கக்கூடும். அதை மீட்டிப்பார்க்க இந்தப் படைப்பு ஒரு பாலமாகட்டும். நினைவில் நிறுத்துவதோடு நாமும் அவற்றை செயலிலும் தொடர்தல் மேலும் சிறப்பு.
நமது பாரம்பரிய பலகாரங்கள் மிகுந்த சுவையும், சத்துக்களும் நிறைந்தவை, ரசாயன நிறங்கள், சுவை கூட்டுப் பொருட்கள் இன்றி தயாரிக்கப்படுபவை. அதன் அருமை பிற இனங்களுக்குத் தெரிந்திருக்கிறது, முறுக்கு, அதிரசம் போன்றவற்றை தயாரித்து சந்தைப்படுத்தவும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் , அதற்கு உரிமம் எடுத்து வைத்துக் கொள்ளவும் அவர்களுக்குத் தெரிகிறது. குறைந்த பட்சம் நாம் நமது பாரம்பரிய பலகாரங்களை செய்து சாப்பிடவும், இளைய தலைமுறைக்கு அவற்றின் செய்முறைகளையும் பழகி வைத்தலும் மிக்க நலம்.
அனைவருக்கும் மங்களம் பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நமது பாரம்பரிய பலகாரங்களுடன் தீபாவளியை இனிதே கொண்டாடி மகிழ்க _/\_
ஆக்கம்
சிவ.ஈஸ்வரி @ சிவனேஸ் சிவானந்தம்
பினாங்கு.
No comments:
Post a Comment