.

.
.

Thursday, February 22, 2018

அந்த அமாவாசை இரவில்...!! - பாகம் 2பாவம் வேலு !! புகைப்பழக்கம், மது, மாது, சூதாட்டம் என எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தவன், தன் மனைவியின் கொடுமையாலும் அதற்குக் காரணமான தன் ஏழ்மை நிலையையும் நொந்து தன் புண்பட்ட நெஞ்சை புகையைவிட்டு ஆற்றவும், நொந்துபோன மனதை மதுவை அருந்தி தேற்றவும் பழகிக்கொண்டான், சுசிலா தந்த மனக்காயங்களுக்கு மது அவனுக்கு சிறந்த நிவாரணியானது, மாமியாருக்கு வாங்கிவரும் மதுவை தானும் சுவைக்கக் கற்றுக்கொண்டு, அந்த போதையில் தன்னிலை மறந்து வாழ ஆரம்பித்தான்.

என்னதான் தற்காலிகமாய்  குடி கவலை மறக்கச்செய்வதாய் தோன்றினாலும், குடியில்லாத நிதானப் பொழுதுகளில் அவன் மனக்கவலை பன்மடங்காய் பல்கிப்பெருகி  அவன் மனதை அரித்து வதைசெய்தது. குடியில்லாத வேதனை சுமந்த அவன் தனிமைப்பொழுதுகளில் தன் வாழ்வின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன என அவன் அலசி ஆராய்ந்ததில் மனித சாதியின் துயரம் யாவுமே "பணத்தினால்"வந்த நோயடா எனும் அரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தான். அப்படியென்றால் மேலும் மேலும் பணம் சேர்க்க சுலபமான வழி ஏதும் இருக்கின்றதா என ஆராய ஆரம்பித்ததில் "நாலு நம்பர்" வழி அவன் கண்களுக்கு ஜெகஜ்ஜோதியாய் ஜொலிக்கத் துவங்கியது.

அப்புறமென்ன நம்ம நல்ல புள்ள வேலு "நாலு நம்பர் வேலு"வாய் புதிய பரிமாணம் எடுத்துவிட்டான்.

நம்பர் எடுக்க ஆரம்பித்தவுடன் அதில் அதிகம் பரிச்சயமுள்ள நண்பர்கள் சிலரை உடன் சேர்த்துக்கொண்டான். மனதில் தோன்றும், கண்ணில் படும் எண்களையெல்லாம் நம்பர் சீட்டாய் வாங்கினான். ஏமாற்றமளிக்கும் விதத்தில் பலமுறை அவனுக்கு பெப்பே காட்டிய நம்பர் கடைசியில் அதிசயமாய் ஒருமுறை ஆயிரம் வெள்ளி அடித்து அவனை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.

மனைவிக்கு கை நிறைய பணமும், பிள்ளைகளுக்கு வித விதமான நொறுக்குத் தீனிகளும், மாமியாருக்கு பெரிய சாராயப் புட்டியும் கை மாறியதில் திடீரென அனைவரும் அவனை 100 நாள் வெற்றி படக் கதாநாயகனைப்போல் போற்றிப் புகழ்ந்து கொண்டாட ஆரம்பித்தனர். இது போதாதா நம்ம கதாநாயகனுக்கு ? அதே அனுபவம் நாடி மேலும் மேலும் நம்பர் கடைகளில் காசைக் கரியாக்கினான். பலன் தான் கிட்டவில்லை.

எப்படி நம்பர் அடித்து காசை சம்பாதிப்பது என்று அலைபாய்ந்த அந்த சமயத்தில்தான் ஒருமுறை வேலு தனது நண்பர்கள் சிலருடன் சீனன் கோப்பிக் கடையில் அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது அவன் ஆப்த நண்பன் வாசு சொன்ன தகவல் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் குடியிருப்புக்கு அப்பால் செம்பனைத் தோட்டத்தையொட்டிய பெரிய காடு ஒன்று இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அங்கே குறைவு. அங்கே அமாவாசைக் காலங்களில் நடுநிசியில் பலிபூசை நடக்கிறதாம். எங்கோ வெளியூரிலிருந்து சில சீனர்கள் அந்த வேலையைச் செய்கின்றனராம்.

அந்தப் பூசையில் இறந்து போன ஆத்மாவை வரவழைத்து அதற்கு இரத்தப் பலியிட , அந்த ஆத்மா கண்ணெதிரிலேயே பிரசன்னமாகி பூசை செய்யும் பூசாரியின் உடலில் புகுந்து, பூசாரி மூலம் அந்தப் பலியை ஏற்று பலியிடப்பட்ட உயிரினத்தின் இரத்தத்தை உறிஞ்சிவிட்டு, அந்த இரத்தத்தை தோய்த்து தரையில் நாலு நம்பர் எழுதி வைக்குமாம். அந்த நம்பரை எடுத்து வந்து எழுதினால் மறுநாள் கண்டிப்பாய் முதல் இடத்தில் நம்பர் அடித்து எழுதியவர் கோடிஸ்வரராகிவிடலாமாம். நிகழ்ந்ததை நேரில் கண்டதைப்போல் மேசையிலடித்துச் சத்தியம் செய்து சொன்னான் நண்பன், வேலுவும் இன்னும் பிற நண்பர்களும் கதையைக் கேட்டு உள்ளூர ஆடிப்போனாலும் வெளியில் தைரியமாய் காட்டிக்கொண்டனர், மானப் பிரச்சனையல்லவா ?

என்னதான் பயமாய் இருந்தாலும், ஆசை யாரை விட்டது? வேலுவுக்கு இதையும் முயற்சித்துப் பார்க்கலாமோ எனும் நப்பாசையும் பிறந்தது.

எத்தனை நாளைக்குத்தான் செம்பனைத் தோட்டத்தில் வாயில்
நுரை தள்ள குலை வெட்டிச் சாவது? போதாதற்கு பாம்பு, தேள், பூரான், பூச்சிகள், கொசு சித்திரவதைகள் வேறு !

நிறைய பணம் கிடைத்தால் நாமே கூட ஒரு ஏக்கரோ, ரெண்டு ஏக்கரோ செம்பனைத் தோட்டம் வாங்கி ஒரு முதலாளியாய் மாறி நாலுபேருக்கு வேலை தந்து காலாட்டிச் சாப்பிடலாமே ? ஆசை அவனை அலைக்கழித்தது, அங்கலாய்ப்பு அவனை ஆக்ரமித்தது.

இன்னும் நாலே நாளில் அமாவாசை வரப்போகிறது. நண்பர்கள் யாவரும் அந்த செம்பனைக் காட்டுக்கு போய், விவரம் சொன்ன நண்பன் மூலம் அந்தப் பூசையில் கலந்துகொள்வதாய் ஏற்பாடு.

நண்பர்களில் இருவருக்கு அந்தத் திட்டம் அறவே பிடிக்கவில்லை. அவர்கள் அப்பொழுதே அதிலிருந்து விலகிக்கொண்டனர். எஞ்சியவர்கள் மூவர் மட்டும் பூசைக்குப் போவதாய் ஏற்பாடு. அவர்களில் ஒருவன் திருமணமாகாதவன், வீட்டில் விடவில்லை என காரணம் சொல்லி கழன்றுகொண்டான். மிஞ்சியது வேலுவும் அவனுக்கு அந்தக் கதையைச் சொன்ன அவன் ஆப்த நண்பன் வாசுவும்தான். அவன் வேலுவின் பால்ய நண்பன். வேலுவிடம் அவனுக்கு நட்பும் ஒட்டுதலும் அதிகம்.

கதையைச் தெரிந்துகொண்டு வந்து தெரிவித்தாலும் அவனுக்கும் அந்தப் பூசையில் கலந்துகொள்வதில் அவ்வளவாய் விருப்பமில்லை, பயத்தில் அடிவயிறு கலங்கி பாத்ரூம் போகவேண்டும் போல் இருந்தது, ஆனால் வேலுவோ விடாப்பிடியாய் பூசையில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என பிடிவாதம் காட்டினான். அரைகுறை மனதுடன் அவனுடன் வருவதாய் வாக்குக் கொடுத்தான் வாசு.குறிப்பிட்ட அமாவாசை தினமும் வந்தது.....!!தொடரும்...

பி.கு : அடுத்த பகுதியில் படைப்பு நிறைவுபெற்றுவிடும் தெய்வங்களே :))No comments: