.

.
.

Thursday, December 24, 2020

ஜனரஞ்சக மணம் வீசும் "நாகம்மாளின் மனக்குறிப்புகள்" ~ நூல் விமர்சனம்

பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தையே புத்தகம் என்று நாம் அழைக்கின்றோம் ~ போவீ

இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாசகன் மனதை பதப்படுத்த தமது பண்பட்ட அனுபவங்களையும் கற்பனைகளையும் அழகிய சிறு சிறு கதைகளாய் தொடுத்து மலேசிய மண்ணின் மணம் வீசும் புத்தகம்  ஒன்றை வெளியிட்டுள்ள சகோதரர் மனோகரன் கிருக்ஷ்ண‌ன் @ மனோவியம் மனோ அவர்களுக்கு முதலில் ஒரு பூங்கொத்து பார்சல்...!!

                       

தமது மனோவியம் வலைப்பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில் நமக்கு அறிமுகமான சகோதரர் மனோ முக நூலிலும் நல்ல நண்பர் என்பதைத் தாண்டி சகோதரர் என மதிக்கும் வண்ணம் கண்ணியமாய் நடந்துகொள்ளும் பண்பாளர், சிறந்த மொழிப்பற்றாளர் மற்றும் மனித நேயமிக்கவர். ஊக்கமூட்டுவதிலும், மனம் நிறைந்து பாராட்டுவதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை. சிறந்த விமர்சகராகவே அறிந்திருந்த இவரை இன்று படைப்பாளியாக காண்பது மிகுந்த  மகிழ்ச்சியளிக்கிறது.

இவர் சிந்தையில் மலர்ந்து இன்று நம் கைகளில் தவழும் நாகம்மாளின் மனக்குறிப்புக்களை படித்தேன், ரசித்தேன், இவரின் சமூக சிந்தனைகளை எண்ணி வியந்தேன். அபாரமான வர்ணனைத் திறன் மிளிரும் படைப்புகளை தந்து வாசகனையும் தம் படைப்புடன் பயணிக்கச்செய்யும் ஆற்றலை இவர் கைவரப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். சில காலம் திரும்பிப் பார்க்காமலிருந்த வலைப்பக்கம் விரைந்தேன், நான் வாசித்த இந்நூல் குறித்த என் கருத்துக்களை பகிர்ந்தேன். 

இனி நாம் நாகம்மாளின் மனக்குறிப்புகளை அறிந்துகொள்ள விரைவோம்...

கண்ணை உறுத்தாத செழும் மஞ்சள் நிற அட்டை கொண்ட புத்தகம், அதன் முகப்பு அட்டையில் கம்பீரமான ஆணும் களையான பெண்ணுமாய் இருவர், ஆயிரமாயிரம் அற்புதக் கதைகளை அன்புடன்  சொல்லும் தீவிரம் அப்பெண்ணின் அழகிய கண்களில்...



புத்தகத்தைத் திறந்தால் சகோதரி மங்களகெளரியின் முன்னுரை கடந்து ஆரம்பிக்கின்றன‌‌ 160 பக்கங்களில் 15 சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் நமக்கென ஒரு கருத்தையோ, உணர்வையோ பகிர்கிறது. ஒவ்வொரு வாழ்வும் ஒரு கதையே, அதை கற்பனையும், வர்ணனையும், நிஜமும், சொல்லாட்சியுமென பல்வேறு வண்ணக்கலவைகள் அணிசெய்யும் அழகழகான ஓவியங்களாய் சிறுகதைகள். எளிய‌ தமிழில் தெளிவான நடையில், பிறமொழிக் கலவையின்றி சிறப்பான நூலாய் வெளியீடு கண்டிருக்கின்றது "நாகம்மாளின் மனக்குறிப்புகள்

சில படைப்புகள் தனக்கென எழுதப்படுபவை, தன் மனவோட்டங்கள், உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்துபவை சில படைப்புகளோ பிறர் வாசிக்க, யோசிக்கவென சிரமம் எடுத்துப் படைக்கப்படுபவை, இச்சிறுகதைத் தொகுப்பு இரண்டாம் வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு கதையும் நம் மனதில் அசைபோட்டு தெளிவுற சில விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு கதையும் விரிவான விமர்சனத்திற்கு ஏற்றதே எனினும் தற்சமயம் ஓரிரு கதைகளைப் பற்றி இங்கே விவரிப்போம்...

நாகம்மாளின் மனக்குறிப்புக்கள் ~ நூலின் தலைப்பைச் சுமந்த கதை. கதைசொல்லி தன் அம்மாவையும் அவர்தம் மனக்குறிப்புகளாய் பதித்து வாழும் நினைவுகளையும், அதே நிலையில் கடந்த கால நினைவுகள் சுமந்த தோட்டப்புறத்தையும் நினைவில் இருத்தி கடந்த காலத்தை மீட்டுரு செய்யும் படைப்பு. அம்மாவின் தற்போதைய தளர்ந்த, ஆரோக்கியம் குறைந்த நிலை அதைப்போலவே செழிப்பாய், கலகலப்பாய் இருந்த தோட்டப்புறம் சோபையிழந்து வெறுமை சூழ்ந்த நிலை, இருப்பினும் அம்மாவின் நினைவில் நிற்கும் கடந்த கால நினைவுகள் போலவே, முதிர்ந்த தாயாய் நினைவுகளை மீட்டெடுக்கச்செய்யும் தோட்டப்புறச் சூழல். அம்மாவின் நினைவில் மலரும் குல தெய்வ வழிபாட்டையும் அதன் பூர்வீகத்தையும் அறிகையில் மலரும் முன்பே கருகவைத்து தெய்வமாக்கப்பட்ட பெண்ணுக்கென நம் மனமும் கனத்துப்போகிறது.

"தமிழர்கள் காலாகாலத்தில் கருத்தோடு எதையும் செய்வதில்லை, காலம் கடந்தபின் வருந்தி என்ன பயன் ? உலகை ஆளும் திறன்கொண்டவர்கள் இன்று அடிமை வாழ்வை ஏற்பது எதனால்? உணர்ச்சிகளால் உந்தப்படுவதனால் அறிவின் திறன் மங்கிவிடுகிறது உங்களுக்கு" ~ கடுங்கோன்மேயன்

ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும் சிறுகதையில் காணும் நிதர்சன வரிகள் இவை. தீர்க்கதரிசியான கடுங்கோன்மேயர், பெயரால் மட்டுமன்றி தமது கருத்துக்களாலும் நமது சிந்தையைக் கவர்ந்துவிடுகிறார், எனினும் தமது இனம் தொலைத்த புராதானத்தை மீட்டெடுக்கப் பாடுபடும் அந்தக் கடற்கோன் நமது மனதில் நிலைத்துவிடுகிறார். தத்துவார்த்தமான வார்த்தைகளில் இன்றைய வாழ்வியலை வகைப்படுத்தும் வல்லமை, சிறப்பு    

சில நண்பர்களின் பதிவுகளில் வாசித்ததுண்டு, மலேசிய இலக்கியம் தோட்டப்புற வாழ்வை மட்டுமே பேசும் போரடிக்கும் படைப்புகள் என்று ஆனால் அவை நம் முன்னோர்களின் இரத்தத்தாலும் சதையாலும் உயிரைக்கொடுத்து படைக்கப்பட்ட சோக சாசனங்கள் என்பதை நாம் மறக்கவியலாது. நமது முன்னோர் எப்படி எப்படியெல்லாம் வதைபட்டனர், இயற்கையின் கடுமைகள், கங்காணிகளின் கொடுமைகள், வெள்ளைக்கார துரைகளின் சர்வாதிகார ஆட்சி, ஜப்பானியர்களின் சித்திரவதைகள் என பல்வேறு துயரங்களையும், சித்திரவதைகளையும் எத்தனையெத்தனை வேதனையுடன் எதிர்கொண்டிருப்பார்கள் ? வேர்களான அவர்களின் வரலாற்றை விழுதுகளான நாம் புறக்கணிப்பது முறையாகுமா?  இத்தகைய சிந்தனைகளை நம் மனதில் ஏற்படுத்தும் வண்ணம் வடிக்கப்பட்டிருக்கிறது "நிழல் மரக்கோடுகள்" சிறுகதை.

"எந்த மனைவியும் ஏழை புருக்ஷனையும் தாங்கிக் கொள்வாள். ஆனால், தான் சொன்னதைச் செய்து முடிக்கத் தெரியாதவனை ஓர் ஈயாகவோ எறும்பாகக் கூட மதிப்பதில்லையே" ~ மனைவி காத்திருக்கிறாள். 

விடுமுறைக்காக‌ தாய்வீடு சென்றுவிட்ட மனைவியை அழைத்து வர பொதுப் போக்குவரத்தை நாடும் கணவன், அவர் நோக்கத்தை நிறைவேற விடாது தடுக்கும் இயற்கையின் மழைச்சீற்றம், அதனால் ஏற்படும் தாமதம், முதன் முறையாய் பல வருடங்களுக்குப் பிறகு பொதுப்போக்குவரத்தை நாடிச்செல்வதால் ஏற்படும் தடுமாற்றம் என அந்தக் கண‌வரின் கண்ணோட்டத்தில் மலரும் கதை. அவர் தமது முயற்சியில் வெற்றியடைந்தாரா ? தமது மனைவியின் பாராட்டை பெற்றாரா என்பதுதான் கதையின் உச்சம்.

இக்கதையில் கரிசணம் நிறைந்த அந்தக் கணவர் தமது மனைவியின் ஆசிரியப் பணியின் தற்போதைய பணிச்சுமை சூழ்நிலையை வெளிப்படுத்தும் விதம் நன்று. ஆரம்ப காலங்களில் அரசியலிலும் பொதுப்பணிகளிலும் அதிகம் பங்கெடுத்தவர்கள் ஆசிரியர்கள் என்பது வரலாறு நமக்கு கூறும் உண்மை. அப்படி ஏதும் இப்போது நடந்துவிடக்கூடாது என திட்டமிட்டே ஆசிரியர்கள் மீது பணிச்சுமை திணிக்கப்படுகிறதோ என யோசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது தற்போதைய ஆசிரியர்களின் பணிச்சுமை நிலமை.  

வெளியே ஒரு வானம் ~ இச்சிறுகதை பள்ளி மாணவன் ஒருவனின் உடல் நலனையும் மன நலனையும் முன்னிறுத்திப்பேசுவதோடு, அந்த மாணவனின் பெற்றோர்களின் அனுகுமுறையையும் அலசி ஆராய்கிறது, அம்மாண‌வனின் கணிவான ஆசிரியயையின் கண்ணோட்டத்தில் மலர்ந்து மனம் வீசுகிறது இச்சிறுகதை. கனிவும், கண்டிப்பும் ஒருசேர வாய்த்த இதுபோன்ற ஆசிரியர்களே நமது சமுதாயத்தின் தற்போதைய ‌அவசியத் தேவை.

ஜாதகம் பார்த்து மணமுடிப்பவர்கள் பலரில், பெரும்பான்மையினர் மருத்துவ பரிசோதனை செய்து, ஆரோக்கியப் பொருத்தம் பார்த்து மணமுடிப்பதில்லை. நெருங்கிய உறவில் திருமணம் செய்பவர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியச் சிக்கல்கள் ஏற்படும் என்பது நாமறிந்த உண்மை, ஆனால் இக்கதையில் முற்றிலும் மாறான ஒரு விடயத்தை முன்வைக்கிறார் கதைசொல்லி. கொஞ்சம் வியப்பாகவும் நிறைய அதிர்ச்சியாகவும் இருக்கிறது இந்தத் தகவல்.

இவை தவிர்த்து இன்னும் பல தத்துவங்களும், வாழ்வியலும் பேசும் படைப்புகள்....

வட்டி முதலைகளின் லீலைகள் பேசும் "வட்டிப்பணம்", 

அரசியல் அவலங்களைச் சித்தரிக்கும் "ஒற்றைச் செருப்பாய்", 

இன்றைய இளையோரின் மெத்தனம் பேசும் "அற்றைக்கூலி", 

ச‌கோதரியின் மரணமும் அதனால் மனங்கலங்கி அவர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள பயணப்படும் சகோதரனின் மனப்பதிவாய் "கலைந்து செல்லும் மேகங்கள்" 

பிறரின் நம்பிக்கையை துக்ஷ்பிரயோகம் செய்வோர் மலிந்த சூழலில் எச்சரிக்கை உணர்வை வலியுறுத்தும் "நெருப்புப் பிண்டங்கள்".

மழையும் அது மீட்டெடுக்கும் நினைவுகளுமான "மனக்கதவுகள் நனைகின்றன" சிறுகதை. அதில் மழைக்கால ஆற்று வெள்ளம் பலியெடுத்த த‌ன் நண்பன் காட்டு முனியாண்டி குறித்த‌ கதைசொல்லியின் நினைவுகள். 

அரசாங்க அனுகூலங்களைப் பெற இயலாமல் லஞ்சம் கொடுத்து வாடும் ஒரு பள்ளி வாகனமோட்டியின் சிரமங்களைச் சொல்லும் "பள்ளி வண்டி", 

அர்ப்பணிப்பு குணம் நிறைந்த ஆசிரியை ஒருவர் பெற்றோர்களிடம் படும் பாட்டை விவரிக்கும் "தாயுமானவள்", 

வட்டியில் கிடைக்கும் கமிக்ஷனை எதிர்பார்த்து வட்டி முதலைகளிடம் சிக்கிக் கொள்ளும் சின்னச்சாமியின் கதையான "மானுடம் கடந்த மனிதர்கள்".   

இறுதியாக "சுடுகாட்டுக் காளி" ~ நாலு நம்பர் தேடி ஒடும் மனிதனின் திகிலூட்டும் அனுபவம். வித்தியாசமான முடிவைக் கொண்ட அமானுக்ஷ்ய கதை.    

இப்படியாக "நாகம்மாளின் மனக்குறிப்புகள்" வாசிப்போருக்கு மிகச்சிறந்த பொழுது போக்காகவும், சிந்திக்க விழைபவர்களுக்கு பலவித தகவல்களை உள்ளடக்கிய கருவூலமாகவும் நிச்சயம் திகழ்கிறது. நல்ல ஜனரஞ்சகமான சிறுகதைத் தொகுப்பைத் தந்த கதைசொல்லிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். இவர் மேலும் பல நூல்களைப் படைத்து புகழ்பெற வேண்டும் ~ வாழ்க, வெல்க‌




Friday, January 3, 2020

அந்த அமாவாசை இரவில் - இறுதிப்பாகம்

வேலு நடந்து சென்றுகொண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் அவனறியாமல் இரு உருவங்கள் அவனை கண்கானித்துக்கொண்டிருந்தன. வெளி சாலை விட்டு வெகு தூரம் உள்ளே சென்றுவிட்ட அவனை பின் தொடர்ந்து வந்த அந்த இரு உருவங்களும், திடீரென அவன் மேல் பாய்ந்து ஒரு பெரிய சாக்கு மூட்டையில் அவனைப் புகுத்தி  இறுக்கிக் கட்டி  அவன் தலையில் ஓங்கித் தாக்கி அவனை எங்கோ இழுத்துச் சென்றன. விழுந்த அடியில் பொறி கலங்கிப்போனான் வேலு. விழிப்பிற்கும் மயக்கத்திற்கும் இடைப்பட்ட அந்த நொடியில் தான்  பேராபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவன் மனம் நடுங்கிக் கலங்கியது.

அவனை இழுத்துச் சென்றவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவனைக்கொண்டு வந்து சாக்கு மூட்டையிலிருந்து கீழே போட்டனர். தரையில் மயங்கிச் சரிந்தான் வேலு. அவன் மயக்கத்தில் பாதிதான் உண்மை என்பதை அந்தப் பாதகர்கள் அறிந்திருக்கவில்லை.  சீனமொழியில் சிலர் பேசுவது சன்னமாய் அவன் காதில் விழுந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அன்று அந்தப் பூசையில் அவனைப் பலி கொடுத்து நாலு நம்பர் கேட்கப் போகின்றனர் என்பதை அறிந்து திகைத்தான். பயமும் துயரமும் மனதைக்  கவ்வ ஐந்தடக்கிக் கொண்டு முழுமையாய் மயக்கம் வந்ததைப்போல் நடித்துக்கொண்டு எதிர்ப்பைக் காட்டாமல் சன்னமாய் மூச்சுவிட்டுக்கொண்டு கிடந்தான்.

அவன் உயிரோடிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திகொண்ட அவர்கள் மொத்தம் மூவர். மூவருமே வெளியூர் என்பதை அறிமுகமற்ற அவர்களின் அந்நியமான தோற்றம் காட்டிக்கொடுத்தது.

அங்கே ஒரு பூசைக்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தன. அவற்றில் நடுநாயகமாய் நன்கு சானை பிடிக்கப்பட்டிருந்த பெரிய கத்தி வீற்றிருக்க ஓரடி உயரத்தில் மூன்று சிவப்பு மெழுகுவர்த்திகள் சன்னமான ஒளியைச் சிதறிக்கொண்டிருந்தன. அங்கிருந்து கொஞ்சம் தள்ளி சிறிய கூண்டில் ஒரு சேவல் அடைக்கப்பட்டிருந்தது.

 அடப்பாவிகளா !! சேவலை பலிகொடுத்து நாலு நம்பர் கேட்க வந்தவன்களிடம் வலிய வந்து தலைகொடுத்து நாம் பலியாகப் போகிறோமே என ஆதங்கப்பட்டது வேலுவின் மனது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என அரைக்கண்களாலேயே அனைத்தையும் கவனித்துக்கொண்டு ஒன்றும் முடியாதது போல் கீழே கிடந்தான் வேலு.

அவன் கைகால்கள் கட்டப்பட்டிருக்கவில்லை ஆனால் மூவரில் ஒருவன் கையில் கட்டையுடன் அவன் அருகிலேயே நின்றிருந்தான். தப்பிக்க முயற்சித்து எழுந்தால் மண்டையில்  ஒரே போடு போடுவதாய் ஏற்பாடு.

வேலு ஆவலுடன் பங்கெடுக்க விரும்பிய அந்த பூசை அவனையே பலிகொள்ளும் ஏற்பாட்டுடன் ஆரம்பித்தது. கருமை நிற ஆடை அணிந்திருந்த சீனன் ஒருவன் மருள் வந்து ஆட ஆரம்பிக்க மேலும் இருவரின் கவனமும் அவன்மேல் பதிய...

இதுதானடா சரியான சந்தர்ப்பம் என யாருமறியா வண்ணம் கை நிறைய மண்ணை அள்ளி மிகச்சரியாய் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்திகளின் மேல் வீசினான் வேலு. அங்கிருந்த கொஞ்சம் வெளிச்சமும் அணைந்து கும்மிருட்டு கவ்வியது. அந்தச் சீனன்கள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்து எழுந்து புயல் வேகத்தில் ஓட ஆரம்பித்தான் வேலு. பூசை தடைபட்ட வெறியில் சீனன்கள் குய்யோ முய்யோவென கருவிக்கொண்டு அவனை விரட்ட ஆரம்பிக்க...

எங்கே போகவேண்டும், எப்படிப் போகவேண்டும் எனும் இலக்கின்றி, எங்காவது போவோம், தப்பித்தால் போதுமெனும் வேட்கையுடன் எதிரே குறுக்கிட்ட செடிகொடிகளையும் மரங்களையும் முட்டி மோதி ஆயாசத்துடன் ஓடினான் வேலு.

அப்போதுதான் அவனை நாம் கண்டோம். அவன் வரலாற்றையும் தெரிந்துகொண்டோம். இனி மேலும் என்ன நடந்தது என்பதும் தெரிய வேண்டுமல்லவா ? வாருங்கள் தொடர்வோம்...

ஓடிவந்த வேலுவை நோக்கி வெளிச்சம் வந்ததே. அது வேலுவின் நண்பன் வாசு!! வேலுவை நள்ளிரவில் நடுக்காட்டில் விட்டுச் சென்ற வாசு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடப்போகிறது எனும் பயத்தில் நண்பர்கள் சிலரை திரட்டிக்கொண்டு அவனை தேடி காட்டிற்குள் வந்தான். மிகச்சரியாய் அந்நேரத்தில் வேலு அவர்கள் முன்னே மூர்ச்சையடைய, அவர்கள் அவனைக் காப்பாற்றி மூர்ச்சை தெளிவித்தனர்.

காவல்துறையினர் செய்தியறிந்து அவ்விடம் விரைய, அந்தச் சீனன்கள் மூவரும் போட்டது போட்டபடி அவ்விடம் விட்டு தப்பிவிட்டிருந்தனர்.

இப்பொழுது வேலு செம்பனைத் தோட்ட வேலையை விட்டு விட்டு அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்கிறார். முக்கியமாய் அமாவாசை அன்று மட்டும் பொழுதிலேயே வீடு திரும்பிவிடும் வேலு இருட்டினதுக்கப்புறம் பூட்டின வீட்டைவிட்டு வெளியவே வர்ரதில்லங்க. மிக முக்கியமாய் நாலு நம்பர் பக்கமே தலைவச்சும் படுக்கிறதில்லை. கையில் மிச்சப்படும் பணத்தை முறையாய் செலவு செய்து அதில் மிச்சம் பிடித்து சேமிக்கவும் கற்றுக்கொண்டார்.

மரண பயத்தை பார்த்தவன் மனைவியையும் மாமியாரையும் பார்த்தா பயப்படுவான்? சாராயம் கேட்டு அலும்புபண்ணே கழுத்தைத் திருகி காட்டிலே போட்டிருவேன் என மிரட்டியதில் மாமியார்க்காரி துண்டைக் காணோம் துணியைக்  காணோம் என மகன் வீட்டுக்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஓடிப்போனாள், அதன் பின் அவன் மனைவி பல்லைப் பிடுங்கின பாம்பைப்போல் தத்தளிக்க, சிற்சில சமயங்களில் அவள் சீறல்களையும் ஒரு நாள் ஓங்கிக்கொடுத்த ஓர் அறையில் முடிவுக்கு கொண்டு வர, அவள் அவனுடைய மனங்கோணாத மனைவியாய் மாறிப்போனாள்.

அம்புட்டுதாங்க!! இப்போ வேலு சம்சாரத்தோடும் புள்ள குட்டிங்களோடும் சந்தோக்ஷமா இருக்காருங்க. கதை முடிஞ்சி போச்சி.