
இயற்கைப் பேரெழிலின் உறைவிடமாகத் திகழ்வது பச்சைப்பசேலெனும் பச்சைக் கம்பளம் விரித்த பூமி. அந்த பசுமைக்கு வித்தாவது, செடி, கொடி மரங்கள் ஆகியன. மரங்களடர்ந்த காடுகள் கண்ணுக்கு அழகையும், புவிக்கு செழுமையும், ஊர்வன முதல் பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றுக்கு உறைவிடமாகவும் திகழ்கிறது.
நாகரீக மோகத்தால் மனிதன் கட்டிடங்கள் எழுப்புவதற்காகவும்,
தனது சுய தேவைகளுக்காகவும் மரங்களை
வெட்டி, காடுகளை அழித்து பூமியை
சிதைத்தான், புவியின் சீதோஸ்னத்திற்கு ஊறு விளைவித்தான். விளைவு, பூமியின் தட்ப வெட்ப நிலை மாறியது, வெப்பமயமானது, நீர்வளங்கள் குறையவும், மழை இன்றி போகவும், விவசாயங்கள் குன்றுவது, பசி பஞ்சங்கள் ஏற்படுவது, போதாதற்கு சூரியக் கதிர்களின் நேரடித்தாக்குதலில்
இருந்து உலகைப் பாதுகாக்கும் ஓசோன் எனும் காற்று மண்டலத்திலும்
ஓட்டை விழுந்து, மனிதர்களுக்கு
தோல் புற்றுநோய் என பல்வேறு பிரச்சனைகளையும் மனிதன் எதிர்கொள்ளலானான்.
இதற்கு தீர்வுதான் என்ன ? பூமி மறுபடியும் செழிக்க, சீதோஸ்ணம் சீரடைய தேவை பூமிக்கு பசுமை...!, நிறைய மரங்களும் செடி கொடிகளும் பூமியை பசுமையாக மாற்றி மனித வாழ்வின் ஆரோக்கியத்திற்கும், ஆனந்த வாழ்விற்கும் உறைவிடமாகும். அவ்வகையில், பூமியை நேசித்து, புவி மாந்தர்களை காத்திட ஒரு பெண்மணி மாபெரும் பசுமை புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். உலகம் செழித்திட தன் வாழ்வை அர்ப்பணித்த அந்த அற்புதப் பெண்மணி வாங்கரி மாத்தாய். மனித சேவையே மகேசன் சேவை என்பதற்கொப்ப சமூக சேவைக்கு முக்கியம் தந்து வாழ்ந்தவர்.

வாங்கரி மாத்தாய் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கிக்கூயு எனும் இனத்தில் கென்யாவின் தேட்டு(Tetu) எனும் ஊரில் பிறந்தவராவார். இவரின் இயற்பெயர் வாங்கரி முத்தா என்பதாகும். பின்னாளில் இவர் தனது கணவரின் பெயர் மாத்தாய்(வாங்கி மாத்தாய்) இணைக்கப்பட்டு வாங்கரி மாத்தாய் என அழைக்கப்பட்டார். இவர் உயிரியல் துறையிலும் கால் நடை உடற்கூறு துறையிலும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் நைரோபி பல்கழைக்கழகம் ஆகியவற்றில் தமது பட்டப்படிப்பை முடித்தவராவார். ஏப்ரல் 1966 ல் இவர் தனது வாழ்க்கைத்துணைவர் வாங்கி மாத்தாய் என்பவரை சந்தித்து 1969 மே மாதத்தில் மணமுடித்துக் கொன்டார். இந்த இணையருக்கு மூன்று வாரிசுகள் பிறந்தனர்.
மிகச்சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், அரசியல்வாதியுமான இவர் 2004ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றார். தமது பசுமைப்பட்டை இயக்கத்தின் மூலம் தாம் வாழ்ந்த மண்ணிற்கு மகத்தான சேவையாற்றியவர் வாங்கரி மாத்தாய்.
இவர் கற்ற உயர்கல்வியின் மூலம் இவர் நைரோபி பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பல அரசு சாரா பொது இயக்கங்களில் அங்கத்தினராகவும் சேவையாற்றியுள்ளார் . விளிம்பு நிலை மனிதர்களை சந்திப்பதும், அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து களைவது ஆகிய சேவைகளில் தம்மை ஐக்கியப்படுத்திக்கொன்டார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளைக்களைய, மண்ணையும் மனித வாழ்வையும் ஒருங்கிணைத்த முயற்சியாக மரம் நடுவதன் மூலம் மண்ணின் வரட்சியையும், மனிதரின் வாழ்க்கை வரட்சியையும் ஒருங்கே களையக்கூடிய ஒரு உன்னத வழியைக் கண்டுபிடித்து அதை செயல்படுத்த துவங்கினார் மாத்தாய்..

வெளிச்சம் தரும் விளக்கின் அடியிலும் இருளுண்டு, அதுபோலவே, மண்ணும் மனிதரும் செழிக்க பாடுபட்ட இவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் அத்தனை இனிமையானதாக அமைந்துவிடவில்லை, மணமுறிவு, வழக்கு விசாரணை, நஸ்ட ஈடு என பல துயரங்கள் இவர் வாழ்விலும் அரங்கேறியுள்ளன. எனினும் அதிலெல்லாம் சோர்ந்து பின்வாங்கிவிடாமல், அரசியல், சமுகசேவை என அயராது பாடுபட்டார் மாத்தாய். உலகம் இவரை உற்று நோக்க ஆரம்பித்தது, அவர் குரலுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தது. அவரது சேவைகள் அங்கீகரிக்கப்பட்டன. அனு உலைகள் வைத்து பூமித்தாயின் அங்கங்களை சிதைக்கும் மாந்தர்கள் மத்தியில் மரம் வளர்த்து அவள் மனங்குளிர செய்தவரை பல நாடுகள் பாராட்ட ஆரம்பித்தன. பல அங்கீகாரங்கள் பரிசுகள், விருதுகள் என மாத்தாய் பாராட்டப்பட்டார்.
இவரின் இணையற்ற புவிசேவையைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு "இந்திரா காந்தி" விருது அளித்து கெளரவித்தது. சிறந்த நடிப்பை வழங்கி மக்களுக்கு மகிழ்வூட்டிய நடிகர் சாருக்கானுக்கு "டத்தோ" விருது வழங்கி சிறப்பித்த நம் நாட்டிற்கு ஏனோ உலகமே செழிக்க பா டுபட்ட இவர் சேவைகள் கவனத்திற்கு எட்டாமலேயே போய்விட்டது போலிருக்கிறது..! வேதனைக்குரிய விடயம்தான் ...!
இவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த மக்களின் விழிப்புணர்வு, நேர்மையான அரசியலின் அவசியம் ஆகிய இரு விடயங்களை ஆயுதமாகக் கையிலேந்தி அற்புதமான மாற்றங்களை தமது வாழ்நாளில் ஏற்படுத்தியவராவார். இன்றுடன் அவர் மறைந்து ஓராண்டு பூர்த்தியான நிலையில் அவரின் சேவைகளை நினைவு கூர்வது இயற்கைக்கு காட்டும் ஒரு சிறிய நன்றிக்கடனாக அமையக் கூடும் என்பதாலேயே இந்தப் பதிவு.
யார் எங்கு வேண்டுமானாலும்
பிறந்திருக்கலாம், அறிவாளியாய்,
பணக்காரராய், அழகானவராய் வாழ்ந்து மறைந்திருக்கலாம், ஆனால் எப்பொழுது அவர் தான், தனக்கு எனும் சுயநலமின்றி பிற உயிர்கள்
நலமடையவும், புவி செழிக்கவும்
பாடுபடுகின்றாரோ அத்தகைய மனிதர் என்றென்றும் மனுக்குலத்தின் மரியாதைக்கு
உரியவராவார். உலக மக்களின் போற்றுதலும் அவருக்கு என்றென்றும் உண்டு என்பது
நிச்சயம்.
அவ்வகையில் வாங்கரி மாத்தாய் தான் வாழும் காலத்தில் ஏற்படுத்திய திட்டங்களையும், அதனால் விளைந்த பசுமைப் புரட்சிகளும் பின்வருமாறு...
அவ்வகையில் வாங்கரி மாத்தாய் தான் வாழும் காலத்தில் ஏற்படுத்திய திட்டங்களையும், அதனால் விளைந்த பசுமைப் புரட்சிகளும் பின்வருமாறு...
மாத்தாயின் பசுமைப் புரட்சிகளின் ஆரம்பம் 1973ஆம் ஆண்டுக்கும் 1976ஆம் ஆண்டுக்கும்
மத்தியில் அவர் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக அங்கம் வகித்திருந்த
காலக்கட்டத்திலிருந்து துவங்குகிறது. தமது நாட்டுப்பெண்கள்(கென்யா) தேவைகள் குறித்த விசாரிப்பில் அவர்களுக்கு தூய்மையான
குடிநீர், சமையலுக்கான விறகுகள்,
அவர்கள் உண்பதற்குத் தேவையான உணவு,
மற்றும் அவர்களின் வசிப்பிடங்களுக்குத்
தேவையான கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான
பொருட்களின் தேவை மற்றும் அவர்களின் மண்ணைப் பாதுகாக்க வேண்டும்
என்பதான கோரிக்கைகளை அவர் அடிக்கடி எதிர்கொள்ள ஆரம்பித்தார்.
இதற்கான தீர்வாக எது அமையக்கூடும் எனும் அவரது தேடலுக்கு விடையாகக் கிடைத்தது "பசுமைப்பட்டை" எனும் பசுமைப்புரட்சி இயக்கம். அதாவது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக தங்களது வாழ்வை தாங்கள் வாழும் பூமியுடன் இணைத்து வழிதேடலானார் முடிவில் மரங்களை நடுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஒரு விடிவாகவும் அமையக்கூடும் எனும் உண்மையைக் கண்டறிந்தார்.

பெண்ணுரிமைக்காக பாடுபட்ட இவர் அரசியலில் ஈடுபட முயற்சித்தார், எனினும் அன்றைய அரசாங்கம் இவரை விரோதியாக பாவித்து பல்முனைத்தாக்குதல்கள் நடத்தி பழிவாங்கியது, நீதிகோரி நீதிமன்றம் நாடியவருக்கு பாதகமான தீர்ப்பை வழங்கி நீதித்துறையும் வஞ்சித்தது, நைரோபி பல்கலைக்கழகமும் அரசியில் ஈடுபட பணியியிலிருந்து விலகிய இவருக்கு மறுபடியும் பணிபுரியும் வாய்ப்பைத் தரமறுத்தது, அவருக்கு அளிக்கப்படிருந்த பலகலைக்கழக பணியாளர்களுக்கான வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்...!
வாழ்விழந்து, வேலையிழந்து, வீடும் இழந்து வீதியில் ஒரு பெண்...! அந்நிலையிலும் மனம் தளரவில்லை மாத்தாய். தொடர்ந்து போராடினார், தோல்விகள் அவரைக்கண்டு தோற்று ஓடின...!
"ஆங்கிலத்தில் புகழ்பெற்ற பழமொழி ஒன்று “Though Time never last, Though people do” சிரமமான காலங்கள் நிலைத்து நிற்பதில்லை, உறுதியான உள்ளங்கள் யாவற்றையும் எதிர்கொள்ளும் என்று அதற்கொப்ப தன் மீது எறியப்பட்ட கற்களைக் கொன்டே தனக்கான கோட்டையைக் கட்டியவர் மாத்தாய் என்றால் அது மிகையில்லை...!
நார்வே காட்டிலாக்கா சங்கத்திலிருந்து அவருக்கு நட்பும் நல்ல சேதியும் விரைந்து வந்தது. அவரது "பசுமைப்பட்டை" இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு தங்களையும் அதில் இணைத்துக் கொள்ள விழைந்தது. ஐநா சபை இவர் இயக்கத்திற்கு பண உதவி செய்தது. அதைக்கொன்டு அரசாங்கத்தின் குறுக்கீடுகளை எதிர்கொன்டு சமாளித்து, பசுமைப்பட்டை இயக்கத்தை விரிவு படுத்தினார். ஆப்பிரிக்க நாட்டின் பிற மாநிலங்களுக்கும் "பசுமைப்பட்டை" இயக்கம் விரிவடையத் துவங்கியது.
மக்களாட்சிக்கும், சுற்றுச் சூழலுக்கும், அமைதிக்கும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்து அந்த ஒற்றுமைக்கு வித்தான வழிமுறைகளைக்கையாண்டு வெற்றி கண்டவர் மாத்தாய், அரசியலிலும் மக்களாட்சி ஆதரவு இயக்கம் வழியாக தமது பங்கை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் இவர்.
இத்தனை பெருமைகளுக்கும் உரிய இந்த வீரப் பெண்மணி கர்பப்பை புற்றுநோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு 2011, 25 செப்டம்பர் நைரோபி மருத்துவமனையில் மீழாத் துயிலில் ஆழ்ந்தார். மண்ணின் வரட்சி அகல பாடுபட்டவரை மண்மாதா தனக்குள் மகளாக மீட்டுக்கொன்டாள் கல்லறைக்குள்...!
இன்று இவர் பெயரால் வனத்துறை சாதனையாளர்களுக்கு "வாங்கரி மாத்தாய் விருது" வழங்கி கெளரவிக்கப்படுகிறது.


பி.கு : அண்மையில் ஜோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில் "ஐம்பெரும் புலவர்கள் இலக்கிய விழா 2012" மிக விமரிசையாக நடந்தேறியது. அந்த நிகழ்வில் ஐம்பெரும் புலவர்களின் வலைப்பூ வடிவமைக்கும் போட்டியில் பங்கெடுத்து, சிறந்த வலைப்பூவிற்கான தேர்வு பெற்று, பரிசும் பாராட்டும் பெற்ற "ரஞ்சீதாஸ் கோர்னர்" ரஞ்சீதாவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். முயற்சி தொடரட்டும், அன்பும் நல்வாழ்த்துக்களும். ஒரு பெண்ணின் பெருமையை இன்னொரு பெண்ணே கூறும் அவரின் ஒளவையார் வலைப்பூ இதோ நண்பர்களின் பார்வைக்காக இங்கே...!