2014 புத்தாண்டில் பாலாவின் பரதேசியும் எமது மூதாதையர்களும்...!
நம் நாட்டில் குறிப்பிடத்தக்க அரசியல் அதிர்வுகள் மற்றும் சமூகத்தை திரும்பிப்பார்க்க வைத்த, அரசியல் பேசவைத்த, சிலருக்கு ஏற்றமாகவும், பலருக்கு ஏமாற்றம் நிறைந்த ஆண்டாகவும் மலர்ந்து இன்று விடைபெறும் 2013 க்கு நாமும் இன்று விடை கொடுப்போம்.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டு விடைபெறுவதையொட்டி ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அவ்வாண்டின் சிறந்ததாக அடையாளம் காணப்பட்ட , மக்கள் மனதைக் கவர்ந்த, வசூலை அள்ளிக்குவித்த 10 படங்களை வரிசையிட்டு திரையிடுவது ஆண்டுதோறும் வழக்கமே, இவ்வாண்டும் அவ்விதம் திரையிடப்பட்ட படங்களில் நான்காம் இடத்தை பிடித்து அண்மையில் ஒலியேறியது இயக்குனர் பாலாவின் "பரதேசி" திரைப்படம்.
இயக்குனர் பாலா "நான் கடவுள்" திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றவர்.

இவர் படங்களின் காட்சிகளைபோல, கதாபாத்திரங்கள் போல பாடல்களும் அருமையாகவே அமைந்திருக்கும், உதாரணத்திற்கு இசைஞானி இளையராஜாவின் குரலில்/ இசையில் ஒலித்த உயிரைத்தாலாட்டும் "எங்கே செல்லும் இந்த பாதை" எனும் சேது படப் பாடல். என்றும் மனதைவிட்டு அகலாத மிக மிக அருமையான பாடல். எப்பொழுதும் மனதைக் கவர்ந்த பாடல்களில் முதலிடம் வகிக்கும் பாடல் இது...!
சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) ஆக இறுதியாக தற்சமயம் எட்டிப்பார்த்திருப்பது பரதேசி (2012).
சேது படத்தில் முதலில் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கும் கதாநாயகன் விக்ரம் பின்னர் தலையில் தாக்கப்பட்டு சித்தம் கலங்கி, கருகி, கரைந்து, மொட்டைத்தலையும் சீரழிந்த தோற்றமுமாக காட்சியளிக்கும் போது நம்மையறியாமலேயே நம் கண்களில் துளிர்க்கும் கண்ணீர்..!. "நந்தா" படத்தின் இறுதிக்காட்சியில் தற்போது சிங்கமாய் கர்ஜிக்கும் அன்றைய அமைதி நாயகன் சூர்யா தன்னை புறக்கணித்து ஒதுக்கிய தன் தாய் அவர் கையால் ஊட்டும் விக்ஷம் கலந்த உணவை தெரிந்தே தன் நீலக்கண்கள் விரிய வாங்கி உண்பாரே, அப்போது ஏற்படும் மனவலி..! அது மட்டுமா "நான் கடவுள்" படத்தின் பெயர் திரையிடப்படும் பொழுது காட்டப்படும் காட்சிகளில் ஒரு காட்சி, முடமான ஒரு பிச்சைக்காரப் பெண்மணியை வில்லன் இடுப்பில் எட்டி உதைக்க அவர் சரிந்து விழுவார் பாருங்கள்...!, அந்த கணத்தில் அது சினிமா என்பதையும் மறந்து அந்த வில்லனை எட்டிப்பிடித்து நாலு அறை விட கைகள் பரபரக்கும். தடுக்க முடியவில்லையே எனும் தாக்கம் (இதற்குமேல் இந்தப் படத்தைப் பார்க்க இதயத்தில் வலுவில்லையென எழுந்து ஓடிவந்துவிட்டது கூடுதல் தகவல்..! )
இப்படியான படங்களின் காரணகர்த்தாவான பாலா அண்மையில் தந்த படமே "பரதேசி". இப்படத்தைப்பற்றி நிறைய கூறலாம், ஆனால் அது என்னில் ஏற்படுத்திய வேறு பாதிப்புகளை பதிவு செய்யவே இந்தப் படைப்பு. ஒப்பந்தக்கூலிகளின் அவல வாழ்க்கையையும், அவர்களின் கண்ணீர் காவியங்களையும் பதிவு செய்த இப்படத்தை திரையில் காணும் போது மனக்கண்ணில் தெரிந்தவை யாவும், எமது மூதாதையர், ச்ஞ்சிக்கூலிகளாய் இந்நாட்டிற்கு கொன்டுவரப்பட்ட எமது பாட்டனின் பெற்றோர், அவர்களின் வாரிசுகளாய் இந்நாட்டிற்கு வளமை சேர்க்க இரத்தமும் வியர்வையும் சிந்திய எமது பாட்டன் பாட்டிமார், அவர்களைத்தாண்டி எமது பெற்றோர்களும் ஓரளவிற்கு தோட்ட வாழ்க்கைக்கு தங்கள் பங்கை வித்திட்ட பின்னர் தானே இரப்பர் தோட்டங்களுக்கான வரவேற்பு குறைய கைமாறிய தோட்டங்களில் இருந்து மேம்பாட்டாளர்களால் மனிதாபிமானமின்றி வெளியேற்றப்பட்டனர்.அவர்களே மனத்திரையில் முழுமையாய் இடம்பிடித்துக் கொண்டனர்.
தோட்டங்களை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் அவல வாழ்க்கையை யார் கருத்தில் கொன்டது ? இன்று ஊடகங்களிலும், காட்சிகளிலும் இந்தியரல்லாதோர் பால்மரக்கத்தியைப்பிடித்துக்கொன்டு "போஸ்" கொடுக்கின்றனர், ஏதோ பால்மரத்தையே தாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்பதைப்போல..! நாமும் பார்த்து ரசித்துக்கொன்டுதான் இருக்கிறோம்..! இந்நாட்டின் இரப்பர் சரித்திரத்தின் மூலமும் முடிவும் யாரென்பதை அறிந்து வைத்துக்கொன்டே .. !
அன்று அட்டைக்கு இரத்த தானம் செய்து பல சமயங்களில் பாம்பு, பூரான் மலேரியாக்கொசு என பலவற்றுக்கும் உயிர்த்தியாகம் செய்து மீண்ட இந்த சமுதாயத்தை இன்று மீண்டும் தோட்டப்புரத்திற்கு செல்லலாமே என செல்லமாய் சீண்டும் நமது சமுதாய தலைவர்கள் சொல்வதைக்கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை..! ஒரே தமாக்ஷா இருக்குது போங்க...!
இனிவரும் 2014 எல்லோருக்கும் ஏற்றம் தரும் ஆண்டாய் மலர்ந்திட "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"