.

.
.

Tuesday, December 31, 2013

 இருள் சிநேகிதி ‍- இரண்டாம் பாகம்

 

 

 சரசுவின் திருமணம் இனிதே நடைபெற்றது. அவளை தனது குடும்பத்தினர்க்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த ராஜன் அவளுக்கென அந்த ஊரிலேயே ஒரு அழகான பங்களா வீட்டை விலைக்குவாங்கி அதில் அவளை குடிவைத்தான்.

சரசுவை ராஜன் தன் கண்ணின் கருமணியைப்போல் போற்றிப் பாதுகாத்தான். வைரத்தை தங்கத்தில் இழைத்ததைப்போல் பொன்னாபரணங்களாலும், விலையுயர்ந்த ஆடைகளாலும் இயற்கையிலேயே அழகான சரசு மேலும் பன்மடங்கு அழகு சுடர்விட அழகுதேவதையாய் பிரகாசித்தாள்.  அழகான கொலு பொம்மைபோல் சரசு அந்த பங்களாவில் வீற்றிருக்க வீட்டு வேலைகள் யாவையும் வேலையாட்கள் செய்தனர்.

இத்தனையும் செய்த ராஜன் சரசுவை அவனின் பொக்கிக்ஷமாக பாதுகாத்தாலும் அவளை தனது உடமையாகத்தான் கருதினானேயொழிய அவளும் தன்னைப்போல் உயிரும் உணர்வும் கொன்ட சக ஜீவன் என்பதை கருத்தில்கொள்ளவில்லை. தங்கக்கூண்டில் அடைபட்ட கிளிபோல் சரசுவின் சுதந்திரம் தடைபட்டு விட்டது. ராஜன் மிகவும் சந்தேகப்பிராணியாகவும் இருந்தான். எந்த ஆணும் சரசுவை உற்று நோக்கினால் கூட‌  அவனால் சகித்துக்கொள்ள முடியாது சினத்தில் பொங்கி எழுவான், அதற்குக் காரணமானவன் அவன் கையில் சிக்கி  சின்னாபின்னமாவான். இதை உணர்ந்த ஊர் மக்கள் அவனிடத்தில் மிகவும் எச்சரிக்கையாகவே நடந்து கொன்டனர்.

பழையதை மறக்காத சரசு தனது மாமன் குடும்பத்தினர்க்கு நிறைய பொருளுதவிகள் செய்துவந்தாள். மாமன் மறுத்தாலும் தானே வலிய அவர் பிள்ளைகளின் கல்வி, திருமணம் என அவர்களின் தேவைகளுக்கு ஏகபோகமாக செலவு செய்து தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்தாள். அவளுக்கு மகிழ்ச்சி என்பதால் ராஜனும் இந்த விடயத்தில் மட்டும் எந்தத் தடையும் சொல்லவில்லை. மாமனின் பெண்க‌ள் யாவரும் ஒருவர்பின் ஒருவராக மண‌முடித்து அண்டை ஊர்களில் அவரவர் வாழ்வை ஆரம்பித்தனர். நாதன் ஒருவனைத்தவிர, அவன் தானாக  வளர்த்துக்கொன்ட தனது ஒருதலைக் காதலை மனதில் கொன்டு திருமணமே வேண்டாமென தனிமையில் வாழ்ந்து வந்தான். சிறிது காலத்தில் மாமன் வேலய்யனும் அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் மறைவை எய்தினர். நாதன் தனித்து வாழ்ந்து வந்தான் .

அமைதியான நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததைப்போல், நிம்மதியும் வளமும் நிறைந்திருந்த சரசுவின் வாழ்வில் பேரிடி வீழ்ந்த‌து. பக்கத்து ஊருக்கு ஏதோ காரியமாக சென்ற ராஜன் அங்கே நிகழ்ந்த கைகலப்பில் ஒருவரை வெட்டிக்கொன்று விட்டு காவல்துறையினரிடம் சிக்கினான். அவன் கொன்றதோ அந்த ஊரில் பிரபலமான ஒரு பணக்காரனின் பையன்.
பழிவாங்கும் வெறியில் தனது பணபலத்தின் துணையுடன் ராஜன் சிறையிலிருந்து மீளவே முடியாது பார்த்துக்கொன்டார் கொலையுண்ட வாலிபனின் தந்தை.ராஜனும் பணக்காரனே, இருந்தும் அவன் விதி அவனுக்கு பாதகமாய் வேலைசெய்ய அவனுக்கு மரணதண்டனை ஊர்ஜிதமானது.

சரசு பரிதவித்துப்போனாள். ராஜனின் நிலையறிந்து கொந்தளித்த அவன் குடும்பம் அவனைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது, இருப்பினும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடியவே, அவர்களின் கோபம் அப்பாவியான சரசுவின் பக்கம் திரும்பியது.

ராஜனின் தாயாருக்கு ஏற்கனவே சரசு எட்டிக்காயாய் கசந்தவள். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததும், அதற்குக் காரணம் சரசுதான் என அப்பாவியான அவள்மேல் வீண்பழி சுமத்தி தகாத வார்த்தைகளல் அவளை வறுத்தெடுத்தார். தன் அவனுக்கென மனதில் வரித்திருந்த தனது சகோதரன் மகளை மணமுடிக்காது, இவளை மணம்புரிந்து குடும்பத்தைப்பிரிந்து தனிக்குடித்தனம் சென்றானே தன்மகன் எனும் வன்மம் விக்ஷமாய் தலைக்கேற சரசுவைத் தலைமுடியைப் பற்றி இழுத்து வீட்டை விட்டு துரத்தி அடித்தார் ராஜனின் தாயார்.
மாமன் வீட்டில் வேலைக்காரியாய் வாழ்வைத்துவங்கிய சரசு சிலகாலம் மகாராணியைப்போல் சகல சம்பத்தோடும் திருமதி ராஜனாய் வாழ்ந்துவிட்டு திடீரென ஒரு நாள் யாவும் களைந்த கனவைப்போல், யாவற்றையும் இழந்து மீண்டும் அபலை சரசுவாய் வீதியில் நின்றாள்.  அப்போது......!.

தொடரும்....