.

.
.

Sunday, January 22, 2017

இதுவும் கடந்து போகும்...!!அது ஓர் அற்புதமான இயற்கை வள‌ங்கள் சூழ்ந்த அழகிய வனப்பிரதேசம்.
நவநாகரீகம் முழுதாய் முற்றுகையிடாத‌ ஆரம்பகால மலை நாட்டின் ஒரு பகுதி. காணும் இடமெங்கிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ப‌ச்சைப்பசுமைகள். மிக மிகப் பெரிய மரங்கள், அவற்றில் கூடு கட்டி குடியிருக்கும் பல வண்ணப்பறவைகள், நிறைய‌ சிறிய பெரிய சைவ, அசைவ வனவிலங்குகள், புழு பூச்சிகள் என நிரம்பி வழியும் காடு , அது பலவித விநோத சப்தங்கள் சதா தவழ்ந்து வரும் இயற்கையின் மிகப்பெரிய வீடு.

அகன்ற அந்த வனாந்தரத்தின் உட்புரத்தில் நாக‌ரீகத்தின் நிழல் படியாத
ஆதிவாசிகளின் அமைதியான குட்டி குட்டி குடியிருப்புகள். அதில் மக்கள்
வாழ்கிறார்களா இல்லையா என சந்தேகம் எழச்செய்யும் அமானுக்ஷ்ய அமைதி. ஆதிவாசிகள் அங்கே இயற்கையின் குழந்தைகளாய் வாழ்ந்து வரும் சூழல்.

அந்தக் காட்டின் விளிம்பில் அமைந்திருந்தது அந்த‌ அதரப் பழைய  குடிசை.
அது அத்தாப்புக் கூரை வேய்ந்த, கரையான்கள்  செல்லரித்துக் கொண்டிருக்கும் மக்கிய பலகைகளைச் சுவர்களாகக்கொன்டு, சீரற்ற சிமென்டுத் தரையுடன் கூடிய ஏழ்மை நர்த்தனமிடும் எளிய‌ வாழ்விடம். தூரத்திலிருந்து பார்க்கும் போதே அதிலும் மக்கள் வாழ்கிறார்கள் என்ப‌தற்கு அடையாளமாய் வெளியே கொடியில் உலர்த்தப்பட்டிருக்கும் ஒன்றிரண்டு துணிகள் காற்றிலே அசைந்தாடிக்கொண்டிருக்கும்.அங்கே வேடனாக ஜீவ‌னம் நடத்தும் சின்னான்  தனது மனைவி மங்கா மற்றும் அழகான இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அவர்களின் வாழ்வாதாராம் அந்தக் காட்டை நம்பியே  அமைந்திருந்தது.

சின்னான் மின்னும் கரிய நிறத்தில், நல்ல நெடுநெடு உயரம், நடுத்தர
உடல்வாகு என பலசாலியாய் காட்சியளித்தான். அவனுக்கு அந்தக்காட்டின் மூலை முடுக்கெல்லாம் அத்துப்படி, அவன் அந்தக் காட்டில் எழும் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் புரிந்தவன் . அந்தக் காடு, அவனுக்கு தாய்வீடு. அவனுக்கு அங்கே பறக்கும் பறவைகளின் கீச்சுகளுக்கு அர்த்தமும் புரியும், அந்த காட்டில் என்னென்ன எங்கே இருக்கும் எனும் சூட்சுமமும் தெரியும், போதாதற்கு அந்த காட்டில் வாழும் ஆதிவாசிகளுடன் நட்பு வளர்த்து, அவர்களுடன் சைகை மொழி, அவர்கள் பாசையில் ஓரிரு வார்த்தைகள் என பேசவும் தெரியும். அங்கே அச்சமயம் முகாமிட்டிருந்த இராணுவத்தினரையும் ஓரளவு சிநேகம் பிடித்து வைத்திருந்தான். அவர்களுக்கு ஒரு வழிகாட்டிபோல் செயல்பட்டதால் அவர்களுக்கும் அவனைப் பிடித்திருந்தது. இப்படியாக அந்தக் காட்டின் செல்லப் பிள்ளைபோல் உலா வந்து கொண்டிருந்தான் சின்னான். அந்தக் காட்டில் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி என அவன் மனதுள் கர்வம்
துளிர்த்திருந்தது.

அவன் தன் வாழ்வாதாரத்திற்கும், உணவுக்கும் அந்தக் காட்டில் விளையும் காய் கனி கிழங்கு வகைகளையும், பறவைகள், சிறிய மிருகங்கள் என வேட்டையாடுவதை தன் வாழ்வியலின் முக்கிய அத்தியாயமாகக்கொன்டு மனைவி மக்களுக்கு அரை வயிறு, கால் வயிறு நிரப்பி காலம் தள்ளி வந்தான்.

சின்னானின் மனைவி ஸ்ரீமதி மங்கா ரொம்ப நல்ல பெண்மணி, தன் கணவனுக்கு பிடித்த மனையாள், ஒல்லியாய், தங்க நிறத்தில், முழங்கால் வரை கூந்தலுடன், அதை வாகாய் அள்ளி வலது பக்கம் கோடாலி முடிச்சு போட்டு  நெற்றியிலும் கன்னங்களிலும் கற்றையாய் முடிகள் சுருண்டு விளையாட, குங்குமப் பொட்டு வைத்த களையான முகத்தினள். அவள் கைவசம் இருப்பது இர‌ண்டே இரண்டு சீலைகள். தாய் வீட்டு சீதனம் ஒரு சீலை மற்றதோ ஏதோ ஒரு தீபாவளிப் பண்டிகைக்கு சின்னான் ஆசையாய் வாங்கித் தந்தது, இரண்டு சீலைகளும் இப்போது நிறம் மங்கி, சொலிப்பும், வனப்பும் குறைந்து பழசாய்ப்போனாலும் மறந்தும் "சீ" என மருகாது, நாளொரு சீலையைச் சுற்றிக்கொன்டு, குமிழ் போன்ற வாயில் வெற்றிலைக் காவி படிந்து சிவந்திருக்க என்றுமே மாறாத புன்னகையுடன் கணவனையும், குழந்தைகளையுமே உலகமென மனதில் வரித்து, இருப்பதைக் கொன்டு
நிறைவாய் வாழும் மனதினள். எல்லோரிடமும் அன்பும் நட்பும் பாராட்டும்
வெள்ளந்தி, கூடவே கடும் உழைப்பாளி. அவள் வீட்டுப் பக்கத்தில் அவள்
கைவண்ணத்தில் வள‌ர்ந்து மலர்ந்திருக்கும் பூச்செடிகளும், புளிச்சன்,
தபசு, முருங்கை, மரவள்ளிச் செடிகளும் அவள் உழைப்பிற்கு சாட்சி.

மங்கா மனசு பூப்போன்றது, தன் கணவன் மீது எல்லையற்ற அன்பு. தன் கணவனுக்கு ஒன்றென்றால் உயிரையே விட்டுவிடுவாள், அதுவே தான் பெற்ற மக்களுக்கு என்றால் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற அல்லாடுவாள். காட்டுக்கு அப்பால் பக்கத்து தோட்டத்தில் வாழும் தன் பிற‌ந்தகத்தை திருவிழா, தீபாவளி என நல்ல நாள் திருநாளில் கால் நடையாய் குடும்பத்தோடு போய்ப் பார்த்து வருவதோடு சரி, மற்றபடி கணவனே உலகம், தன் இரு பொண்களே தன் கண்கள், தன் குடிசையே தன் அரண்மனை,  கணவன் கொன்டுவரும் காட்டு வளங்களே தன் செல்வம் என நாளும் பொழுதும் தன் கண‌வன் வண‌ங்கும் வீரனையும் , தான் வண‌ங்கும் துர்க்காம்மையையும் வேண்டி தன் வாழ்வின் பாதியை ஓட்டிவிட்டாள்.

தன் பெண்கள் வளர்ந்தபின் ஊர், உறவுகளில் சின்னானைப்போல் நல்ல உழைப்பாளி பையன்களாய்ப் பார்த்து கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் தன் கடமை முடிந்தது. அப்புறமென்ன ? அவளாச்சு அவள் கணவனாச்சு. ஆங், தன் கணவன் அடிக்கடி ஆசையாய் சொல்லும் " நீ கெடைக்க நான் ரொம்ம்ப்ப கொடுத்து வச்சிருக்கனும் புள்ள " எனும் ஆதர்ச பாராட்டை அனுதினமும் கேட்டுக்கொள்ளவேனும். இரவில், நிலவொளியில் தன் காதில் கிசுகிசுக்கும் கணவன் குரலை வாழ்வின் இறுதிவரை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

பின்னர் வாழ்ந்து முடித்த மகிழ்ச்சியில் கிழவியான பின் ஒரு நாள் வாழ்ந்த
வாழ்க்கைக்கு வணக்கம் சொல்லி அவன் மடியிலேயே உயிரை விட்டு இதே இயற்கையோடு காற்றாய் கலந்துவிடவேண்டும். இந்த உலக மகா ஆசைகளை உள்ளத்தில் தேக்கிக்கொன்டு அந்த உருக்குலைந்த வீட்டில் உற்சவ தேவதையாய் உலா வந்து கொண்டிருந்தாள் மங்கா.

மங்கா பெற்றது ரெண்டு புலிக்குட்டிகள். ரெண்டும் பெண்ணாய் போச்சு!
சிங்கக்குட்டி ஒன்னு பிற‌க்கலையே என்ற கவலை சின்னானுக்கும் மங்காவுக்கும்  நெஞ்சுக்குழியில் ஓர் ஓரம் இருந்தாலும் ஒரு நாளும் அதை பெரிசுபடுத்திப் பேசியதில்லை. தங்களின் பொண்பிள்ளைகளைப் பார்த்தே கவலை மறந்தனர். அவர்களின் கணக்கில் ஆணும் பெண்ணும் ஒண்ணுதான். பிற‌ந்த இரண்டுமே இரண்டு கண்கள்தான்னு அந்த அப்பனும் ஆத்தாளும் தங்கள் பிள்ளைகளை சீராட்டி பாராட்டி வளர்த்தனர். பொண்கள் இரண்டுமே கொள்ளை அழகு, ஆத்தாளைப்போல தங்கச்சிலையாட்டமா , அப்பனைப்போலவே தலைகொள்ளாத சுருட்டை முடி தோள்பட்டை வரை புரள, என்றோ வாங்கிக்கொடுத்த பாவாடை சொக்காயை போட்டுக்கொண்டு உடுப்பு கலர்மங்கிப்போனாலும் உடுத்தியவள் தங்க நிற‌த்தில் தன் தாயைப்போலவே களை மங்காமல் காட்சியளிப்பவள்,  பெரியவள் காமாட்சி, அவளைவிட குட்டியாய் உருண்டை முகத்தில் பெரிய உருப்படிகளாய் குண்டு குண்டு கண்களோடு இடுப்பில் மட்டுமே பழைய கால்சட்டை அணிந்து அடித்தாலும் மேல்சட்டை போடாத பிடிவாதக்காரி சின்னவள் மீனாட்சி.

ஆறு வயதும் , நாலு வயதுமாய் அவர்கள் இருவரும் வைத்த பெயர் மறந்து
பெரியவள், சின்னவள் எனும் பெயரிலேயே அந்த வீட்டை மகிழ்ச்சிகரமான
நந்தவனமாய் மாற்றியமைத்து வைத்திருந்தனர். அவ்வப்போது அவர்களுக்குள் நிகழும் சின்னச் சின்ன தகராறுகளுக்கும், குட்டிச் சண்டைகளுக்கும் மங்காதான் நீதிபதி. சின்னவள் பெரும்பாலும் அக்காவின் அருகாமையிலேயே பொழுதைப்போக்குவாள். பெரியவளும் சண்டைபோட்டாலும் ச‌டுதியில் அன்பாய் மாறி அவளுடன் விளையாடுவாள்.

இப்படித்தான் அந்தக் காட்டின் விளிம்பில் இயற்கையின் அரசாட்சியில்
நாளையும் பொழுதையும், நல்லபடி கடத்தி வந்தனர் சின்னான் குடும்பத்தினர்.

ஒரு நாள் பொழுது சாய்ந்த வேளை, வேட்டைக்குப் போன சின்னான் இன்னும் வீடு திரும்பவில்லை, அந்த இலேசான இருள் வேளையில் தன் குடிசையின் முன்புற‌த்தில் கொசு விரட்ட காய்ந்த சருகுகளையும், இலை தழைகளையும் குவித்து நெருப்பு மூட்டி புகை மூட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் மங்கா, நெருப்பு குவிந்து எழுந்து கொழுந்துவிட்டு சாம்பல் நிறப்புகையை கக்கியபடி கனன்று கொண்டிருந்தது. சோதியாய் எழுந்து காற்றின் அசைவுகளுக்கேற்ப நளினமாய் நர்த்தனமிடும் அந்த நெருப்புச் சுவாலைகளின் அழகில் மனதைப் பறிகொடுத்து அதையே மெய்மறந்து  இரசித்துக்கொன்டிருந்தாள் மங்கா. கனன்று எரியும் நெருப்பின் ஆரஞ்சு நிற‌ பிரகாசம் அவள் அழகிய முகத்தில் பிரதிபலித்து அவள் முக அழகை மேலும் பன்மடங்கு அழகாகக்காட்டியது. அச்சமயம் உள்ளேயிருந்து தன்னை அழைத்த‌ பெரியவளின் குரல் மங்காவை சுய நினைவுக்கு மீட்டுவந்தது.

வீட்டின் உள்ளேயிருந்த சின்னவளுக்கு இயற்கை உபாதை, சரியாய்
பேசத்தெரியாதவளின் உடல் மொழியை அறிந்து தாயிடம் முறையிட்டாள் பெரியவள். உடனே தாய்க்காரி "சரிம்மா நீ அவளைக் கூட்டிப்போய் பின்புறம் ஓர் ஓரமா குந்தவை !! தோ அம்மா வந்திர்றேன் என்றவாரே, ஏற்கனவே கைவசமிருந்த தண்ணீரை புழங்கி முடித்துவிட்டதால் ஒரு பழைய வாளியை தூக்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி இருந்த ஆற்றில் நீர் முகந்துவர ஓடினாள்.

பெரியவள் , தன் தங்கையை அழைத்துக் கொன்டு வீட்டின் பின்புறமிருந்த
திறந்தவெளிக் கழிவறைக்கு இழுத்துச் சென்றாள். சிமெண்டுத்தரை முடிந்து
மண்தரை துவங்கும் அந்த இடத்தில் அவளை மங்கலான முன்னிரவின் சன்னமான இருளொளியில் அமரச்செய்துவிட்டு கொஞ்சம் த‌ள்ளி அவளுக்கு எதிரே தான் நின்றுகொண்டாள், சில நொடிகள் கடந்திருந்தன.

அவ்வேளை தன் தங்கைக்குப் பின்னால் சரசரக்கும் சப்தத்துடன் மங்கலாய் ஏதோ ஒன்று நிழலாடுவதைக் கண்டு, கண்களைக் கூர்மையாக்கி உற்று நோக்கினாள் மூத்தவள், மங்கிய இருளில் கரிய நிறத்தில் ஏறக்குறைய தன் உயரத்தில் ஏதோ ஒன்று தன் தங்கையின் பின்னே சில அடிகளில் இருந்து தன் தங்கையை எட்டிப்பிடிக்க எத்தனிப்பதைப்போல் புலப்பட, அதை அதிர்ந்து பார்த்தவளுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, என்னவென்று சொல்லத் தெரியாத ஏதோ ஒன்று, ஆனால் அது நிச்சயம் தீயது என அவள் இள‌மனது உண‌ர்த்த சற்றும் தாமதியாது அதைத்தான் முந்திக்கொண்டு எட்டி தங்கையின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு "அம்மா" வென அலறியபடி வீட்டினுள் ஓடினாள். சின்னவள் பாவம் பாதி முடிந்தும் முடியாமலும் கழிவுகள் கால்வழியே வழிய‌ பெரியவள் போட்ட சத்தத்தில் மிகவும் பயந்துபோய் தன் அக்காள் கையைப்பற்றிக்கொன்டு அவளுடன்
தலைதெரிக்க வீட்டிற்குள் ஓடினாள்.

snakes images Scary ! HD wallpaper and background photos

நீர் எடுத்துவந்த தாயும் என்னவோ ஏதோ எனப் பதறியடித்துக்கொண்டு
ஓடிவந்தவள், பின்புறம் எட்டிப் பார்க்க, அவள் காணவிருந்த அந்த ஒன்று
இருளின் போர்வையில் தன்னை மறைத்துக்கொண்டு விட்டதால் வெறும் இருளின் அடர்த்தியே அவள் கண்களில் தென்பட்டது.

"ஏம்மா சத்தம் போட்டே" என பயந்து நடுங்கிக்கொண்டிருந்த பெரியவளிடம் மெல்ல அவள் முதுகைத் தடவிக் கொடுத்து விசாரித்தாள் மங்கா. அவள் என்னவோ ஏதோவென மங்காவைக் கட்டிக்கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டினாள். எதுவும் புரியாமல் சின்னவள் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள்.

மங்காவிற்கு பெரியவள் கூறியது தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, ஏதோவொன்றைக் கண்டு பயந்திருக்கிறாள் என்பது மட்டும் விளங்கியது. அவளின் பயமும் பதற்றமும் மங்காவிற்கு அடிவயிற்றைப் பிசைந்தது. என்னமோ சரியில்லை, இது சாதாரண விக்ஷ‌யமுல்லை என மூலையில் மின்னலடித்தது. அவள் குழந்தைகள் இலேசில் பயப்படும் ரகமல்ல ! விளையாட்டுத் தனமாய் எதையும் எதிர்கொள்ளும்
சின்னக் குழந்தைகள், அதிலும் பெரியவள், இருளில் கூட பயப்படாமல் நடமாடும் குணம் படைத்தவள், அவள் இப்படி பயந்து அதிர்ந்தது மங்காவிற்கு ஆச்சரியத்தை வரவழைத்தது, பேய், பிசாசா இருக்குமோ?  மனதில் தோன்றியதை மறைத்துக்கொன்டு போலிப் புன்ன‌கையுடன், சரிம்மா! சரிம்மா! அது காட்டுப் பூனையாயிருக்கும் நீ பயப்படாதே என ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினாள். அவளோ மிரள மிரள விழித்தபடி மேலும் மேலும் அழுது கொண்டே இருந்தாள்.

மங்கா பின்வாசல் கதவை இழுத்து மூடி, மண்ணெண்ணெய் விளக்கின் திரியை தூண்டிவிட்டு குழந்தைகள் இருவரையும் சுத்தம் செய்து தூங்கவைத்து தானும் அவர்கள் பக்கத்தில் சுருண்டு படுத்துக்கொண்டாள். கணவன் இன்னும் வீடு திரும்ப‌வில்லை. குழந்தையின் பயமும், அலறலும்  அவளை சஞ்சலமடையச் செய்திருந்தது. என்னவாயிருக்கும் ? நாமே வீட்டின் பின்புறம் போய்ப்பார்ப்போமா? மனசு முரண்டு பிடித்தது.

அவள் வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து வளைய வரும் இடம் அது, அங்கே
அவளுக்கு பயமொன்றும் இல்லை, இருந்தாலும் குழந்தையை இவ்வளவு பயமுறுத்தியது என்னவாய் இருக்கும் ? விடைகாணத் தவித்தது மனசு. பெரியவள் தூக்கத்தில் இருமுறை அலறி எழுந்தாள், அவளை முதுகில் தட்டி மறுபடியும் தூங்க வைத்தாள் மங்கா. இவ்வளவு பயந்திருக்கிறதே குழந்தை ! மங்காவிற்கு பிரமிப்பாய் இருந்தது. எழுந்து போய்ப் பார்ப்போமா? ஆர்வத்தைத் தூண்டியது மனது, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், பிள்ளைகளை விட்டு எங்கும் நகர வேண்டாம் என அடுத்த கணம் அதே மனசு தடுத்த‌து. கணவன் வரட்டும் , பின்னர் பார்க்கலாம் என நினைத்தபடியே படுத்திருந்தவளுக்கு வாசலில் அரவம் கேட்டது, சின்னான்
வீடு திரும்பிவிட்டான்.

குழந்தையின் புலம்பல்களால் ரொம்பவே சோர்ந்து போயிருந்த மங்காவிற்கு போன உயிர் திரும்பி வந்து, இழந்த பலம் மீண்டதைபோலிருந்தது. விருட்டென படுக்கைவிட்டு எழுந்து, அவிழ்ந்து புரண்ட கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு, குவளை ஒன்றில் நீர் எடுத்து வீடு திரும்பிய கணவனை மெல்லிய சிரிப்புடன் வரவேற்று உபசரித்தாள்.

கணவன் வேட்டையாடி கொன்டுவந்தவற்றை பத்திரப்படுத்தி, அவனுக்கு ஆகாரம் இட்டு, அவன் படுக்கையில் ஓய்ந்து சாய்ந்த வேளை அன்று அந்தியில் நடந்ததை அவனிடத்தில் சொன்னாள், சின்னானோ ஓடியாடி வேட்டையாடி வந்த களைப்பில் அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அலுப்பில் குறட்டை விட்டு உறங்க ஆரம்பித்து விட்டான். வேறு வழியின்றி அன்று இரவு முழுதும் கொட்டக் கொட்ட விழித்திருந்து குடும்பத்தை பாதுகாத்தாள் மங்கா. வெளியே இரவு நிசப்தமாய் கரைந்து கொண்டிருந்தது. மங்காவின் மனது மட்டும் ஆர்ப்பரித்து அலைபாய்ந்துகொன்டிருந்த‌து.

மறு நாள் காலையிலேயே கணவன் கண்விழித்தவுடன் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சொல்லிப் புலம்பினாள் மங்கா. முழுக்கதையையும் கேட்ட சின்னான், அதெல்லாம் ஒன்னுமிருக்காது புள்ளே!  இது காட்டுப் பிரதேசம், ஒன்னுரெண்டு மிருகம் ஓடியாறச் செய்யும், அதைப் போய் பேயி, பிசாசுன்னு சொல்லுறியே! என அவளைப் பழித்துச் சிரித்தான்.

சின்னான் சிரித்தவாறே சற்று தூரத்தில் கிள்ளிப் போட்ட தாமரை மொட்டு போல் துவண்டு படுத்திருந்த பெரியவளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவ, காய்ச்சலால் அவள் உடல் அனலாய் தகிப்பதைக்கண்டு திடுக்கிட்டுப் போனான். சிரிப்பும், பழிப்பும் மாறி அவனுள்ளும் சலனம் எழத் துவங்கியது, காத்து கருப்பு எதுனாச்சும் இருக்குமோ ? மனதுள் நினைத்தவன், வார்த்தைகளை கடிவாள‌மிட்டு மறைத்துவிட்டு மங்காவிடம் சரிசரி நான் போய் அங்கே என்னதான் இருக்குனு பார்க்கிறேன் ! எதுவா இருந்தாலும் நாலு வேப்பங்கொத்தைக் கிள்ளிப்போட்டு அப்பன் வீரன் பேரைச்சொன்னா, நிக்காம ஓடிப்போகாதா?

நீ புள்ளயை கவனிச்சுக்க, காய்ச்சலடிக்குது. எதையோ பார்த்து பயந்திருச்சு,
கக்ஷாயம் வச்சுக்குடு, காய்ச்சல்  இற‌ங்காட்டி அப்புறமா ஆராகிட்டே
கொண்டுபோய் மந்திரிக்கலாம் என்றவாறே வீட்டின் ஓரமிருந்த
வேப்பமரத்திலிருந்து சில வேப்பங் கொத்துக்களை ஒடித்துக்கொண்டு
வீட்டின் பின்புற‌ம் நோக்கி நடந்தான்.

ஆரா அந்த காட்டின் வடகோடியில் வாழும் சின்னானின் ஆதிவாசி நண்பன்.
அமானுக்ஷ்யங்களில் ஈடுபாடு கொண்டவன். அந்தக் காட்டில் அவனொரு மந்திரவாதி. சின்னானுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் ஆராவுடனும், அவன் குடும்பத்தினரிடமும் நல்ல பழக்கம் உண்டு.

மங்காவிடம் பேசியபடியே வீட்டின் பின்புற‌ம் சென்று நோட்டமிட்டவாறே
நடந்தவனின் பார்வை சட்டென‌ ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது, அது என்ன? அந்த சிமெண்டுத்தரையின் அடிப்புற‌த்தில் இத்தனைப் பெரிய பொந்து!  இவ்வளவு பெரியதாய் எப்பொழுது உண்டான‌து? அடிக்கடி வீடு தங்காமல் வேட்டையாட காட்டிற்குச் சென்றுவிடுவதால் தன் வீட்டைச் சுற்றியே தான் பார்க்க தனக்கு நேரமில்லாமல் போய்விட்டதே, எனக்குத்தான் வெளிவேலை , இந்த மங்கா ஏன் இதையெல்லாம் கவனிக்கவில்லை, கோபம் கசிய தன் மனதில் எழுந்த கேள்வியுடன் அந்தப் பொந்தை நெருங்கி , உற்று கவனித்தான் ? ஒருவேளை தன் குழந்தை கண்டு பயந்த அந்த ஏதோவொரு ஜந்து இதிலிருந்து வெளிப்பட்டிருக்குமோ ?  வெகு நேரம்
ஆச்சரியத்துடன் அருகில் சென்று பார்த்தவன், தன் வீட்டின் உட்பகுதி நோக்கி இருண்டு நீண்டிருந்த அந்த  பொந்தைக்கண்டு அதிசயித்து பின்வாங்கினான். கையில் கிட்டிய நீண்ட கழி ஒன்றைக்கொண்டு எட்டியமட்டும் உள்ளே துழாவினான். நிச்சயமாய் இது முயல், எலி போன்ற சிறு மிருகங்கள் வாழும் பொந்தாய் தோன்றவில்லை, அப்படியென்றால் ?

சுர்ரென்ற பய உண‌ர்வு உடம்பை உலுக்கி எடுக்க, ஒரு விக்ஷயம் அவனுக்கு
விளங்கியது. சட்டென்று வீட்டிற்குள் ஓடினான். மங்காவிடம் வெளியே சென்று வருவதாய் கூறிவிட்டு காட்டினுள் ஓடி மறைந்தான்.

கொஞ்ச நேரத்தில் தன் ஆதிவாசி நண்பன் ஆரா மற்றும் ஐந்தாறு ஆதிவாசிக‌ளுடன் வீடு திரும்பினான். அனைவரையும் அழைத்துச் சென்று பின்புறத்தில் தன் வீட்டிற்கு அடியில் தான் கண்ட அந்த ஆறுவயதுக் குழந்தை உள்ளே புகக் கூடிய அளவு அகலத்தில் உட்புறம் கொண்ட அந்த பொந்தைக் காண்பித்தான், அதை உற்று நோக்கிய அனைவர் முகத்திலும் கலவரம் தொற்றிக்கொண்டது, அவர்களில் தலைவனைப்போல் இருந்தவன் அருகில் நெருங்கி அந்த வளையின் மண்ணைக் கொஞ்சம் தொட்டு முகர்ந்தான் , பின்னர் அவர்கள் தங்கள் பாக்ஷையில் தங்களுக்குள்ளாக மெதுவாகப் பேசிக்கொண்டு சின்னானிடமும் கை சாடையில் இந்தப் பொந்திற்குள் ஓர் ஆபத்தான விலங்கு புகுந்திருக்கிறது, சின்னான் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது என விள‌க்கினர். தொடர்ந்து ஆதிவாசிகளில் மூத்தவன், நீ குடும்பத்தை கொன்டுபோய் வேறு இடத்தில் விட்டுவா, என ஜாடை காட்டினான்.

சின்னான் இந்தக் காட்டிற்கு புதியவனல்ல, நெடுங்காலமாய் அந்தக் காட்டின்
விளிம்பில் வாழ்ந்து வருபவன். வேட்டைக்காய் ஆபத்துகளை அதிகம் சந்தித்தவன் தான் இருப்பினும், தன் மனைவி மக்களை எந்த ஆபத்திலும் சிக்கவைக்கக்கூடாது என்பதே அவன் விருப்பமும் ஆதலால் உடனே காரியத்தில் இறங்கினான்.

பின்னால் இருக்கும் பொந்தினை பற்றி எடுத்துக்கூறி, மங்காவையும், அவள் தந்த கக்ஷாயத்தில் இலேசாய் காய்சல் தனிந்திருந்த மூத்தக்குழந்தையையும், விளையாடிக்கொண்டிருந்த இளையக் குழந்தையையும் ஆதிவாசி தலைவன் கூறியபடியே தன் நண்பன் ஆராவின் வீட்டில் அவன் மனைவி குழந்தைகளோடு விட்டுவிட்டு வந்தான், மங்காவிடம் சுருக்கமாக நிலமையை விளக்கியபோதே அவள் பதறிப்போனாள். அவளை சமாளித்து விரைவில் வந்து அழைத்துப்போவதாய்க் கூறி விடைபெற்றான் சின்னான். பொங்கிய கண்ணீரை மறைத்துக் கொண்டு புன்னகையுடன் விடைகொடுத்தாள் மங்கா.

அதற்குள் காவிக்கறை படிந்த பற்கள், செம்பட்டை படர்ந்த தலைமயிருடன், சலவை என்பதை மறந்த கைலி சட்டையுடன் புன்ன‌கைத்தவாரே ஆராவின் மனைவி மங்காவுக்கும் அவள் குழந்தைகளுக்கும் காப்பித்தண்ணியும் , மலை வாழைப்பழங்களும் எடுத்து வந்து முற்றத்தில் வைத்து அன்புடன் உபசரித்தாள். மங்கா மனமெல்லாம் வருத்ததில் வலிக்க குழந்தைகளை மடியிலிட்டு தட்டியவாரே சின்னானையும், விட்டுவந்த வீட்டையும் நினைத்து விசனத்தில் ஆழ்ந்தாள்.

சின்னான் வீட்டிலோ மளமளவென வேலைகள் ஆரம்பித்தன. சின்னான் வீட்டுக்கு அடியில் ஏதோ மர்ம மிருகம் குடியிருக்கிற‌து எனும் செய்தி காட்டுத்தீயாய் அந்தக் காட்டை ஆக்ரமித்து மேலும் ஆதிவாசிகள் அங்கே திரள, அதற்குள் செய்தியறிந்து அங்கே முகாமிட்டிருந்த இராணுவ வீரர்களும் அந்த மர்ம விலங்கை வேட்டையாட களத்தில் இற‌ங்கினர்.

அவர்களின் இராணுவத் தலைவன் சின்னானுக்கு நல்ல பழக்கம் என்பதால் செய்தி அறிந்து அவனும் ஒரு வண்டி நிறைய வெடிமருந்து துப்பாக்கிகளுடன் வந்து இறங்கினான். சின்னானுக்கு உதவுவதாய் கூறி தன் வீரர்களை ஏவினான்.

அந்த இராணுவ வீரர்களில் நான்கு துப்பாக்கி ஏந்தியவ‌ர்கள் குறிப்பிட்ட
அந்த பொந்து ஆரம்பிக்கும் தரைக்கு அடியிலிருந்த பொந்திற்கு மேலே
துப்பாக்கியால் சுட்டு அந்த சிமென்டை உடைக்க ஆரம்பித்தனர், சிமென்டுக்கு அடியில் துளைபோல் பொந்து நீண்டிருக்க, இராணுவத்தலைவனின் ஆணைப்படி தரையைச்சுட்டு பொந்து செல்லும் வழி நோக்கி துப்பாக்கிச் சூடு தொடர, வீட்டின் உட்புறத் தரைச் சிமெண்டில் கோடாய் உடைத்துத் தாண்டி மீண்டும் மண‌ல் தரை என ஏற‌க்குறைய 60 அடிகள் சுட்ட பின்னர், அந்தப் பள்ளத்தின் உள்ளே இராட்சத குழாய் வடிவில் கருப்பாய் ஒரு பெரிய உருவம் நீண்டிருப்பதைக்கண்டு கொஞ்சமும் தாமதியாது அதை நோக்கி நான்கு வீரர்களின் துப்பாக்கிகளும் குண்டு மழையைக் கக்கின‌. அந்தக் கருத்த உருவத்தின் அசைவுகள் துடிதுடித்து அடங்கியதும் மேலும் அந்தப் பள்ளத்தின் மேலே மேலே துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்ந்தது அந்தப் பொந்தின் முடிவு நோக்கிய துப்பாக்கி வீரர்களின் துப்பாக்கிச் சூடுகள்.

எல்லாம் முடிந்து இறுதியில் வெளியே இழுத்து எடுத்து தரைமேல் வைக்கப்பட்ட அந்த நீண்ட பொந்தின் முடிவில் பதுங்கியிருந்த ராட்சத விலங்கினைக் கண்டு அனைவருக்கும் சர்வ நாடியும் அடங்கிப்போனது, சின்னானுக்கோ மூச்சே ஒரு கணம் நின்று போனதைப் போலிருந்தது. அது ஒரு மிகப்பெரிய  இராட்சத பாம்பு!!

நாற்பது அடி நீள‌த்தில் ஆறு வயதுக்குழந்தையின் உடல் பருமனுடன் ,பசுவின் தலையை ஒத்த பெரிய தலையுடன், கன்னங் கரேலென்ற உடலில் , துப்பாக்கிச் சூடுகளின் தாண்டவத்தில் சிதறிப் பிய்ந்து தொங்கிய சதைகளும் வழியும் கருஞ்சிவப்பு குருதி வெள்ளத்திலும்  நனைந்திருந்தது பத்துப் பண்ணிரண்டு இராணுவ வீரர்கள் ஒன்றாய் சேர்ந்து பொந்திலிருந்து மேலே இழுத்துப் போட்ட அந்த இராட்சத பாம்பு !!


உலகம் ஓர் ஆடுகளம் என்பது உண்மைதான். இங்கே உயிர்கள் அனைத்திலும் போட்டிகள் உண்டு, சரியான சமயத்தில் சரியான முடிவை எடுத்து, அதை விரைவாய் செயல்படுத்துபவருக்கே இங்கே வெற்றி. சமய சந்தர்ப்பம் நோக்கி காத்திருந்து தாமதித்தால் வெற்றி எதிராளிக்கே. அந்த இராட்சத பாம்பு தன்னையும் தன் குடும்பத்தினரையும் இரையாக்கிக் கொள்ளும் முன்,  சின்னான் தன்னைச் சேர்ந்தவர்களுடன் தான் முந்திக்கொன்டு அந்த இராட்சத பாம்பை வீழ்த்தி அதற்கு மரணத்தை பரிசளித்துவிட்டான். ஒரு பெரிய ஜீவப் போராட்டத்தில் அவன் ஜெயித்து அந்த விலங்கை வீழ்த்திவிட்டான்.

சின்னான் தன்னுள் ஒரு கணம் உறைந்து போனான், இயற்கையின் பேராற்றலை உணர்ந்து அவன் உள்ளமும் உடலும் கூனிக்குறுகிப்போனது. அந்தக் காட்டில் தான் அறியாதது எதுவுமே இல்லை என இதுவரை இறுமாந்திருந்தவனின் கர்வத்தில் விழுந்த சம்மட்டி அடியாய் அவன் குடிசைக்கு அடியில் அங்கேயுள்ள அனைத்தையும் அறிந்தவன் என இறுமாந்திருந்த அவன் இத்தனை நாள் அறியாமலேயே குடித்தன‌ம் செய்து வந்து இன்று அவன் கண்ணெதிரேயே இற‌ந்து கிடந்தது அந்த இராட்சத பாம்பு !!
இயற்கையின் எத்தனை விநோதமான படைப்பு   !!

எத்தனைக் காலம் இந்த பூமிக்கடியில் எத்தனை எத்தனை நிலவறைப் பாதைகள் வைத்து ஆங்காங்கு பொந்துகளாய் வாசல் வைத்து இன்னும் இதன் இரகசியப் பாதைகள் இந்தக் காட்டில் எங்கெங்கே அமைந்திருக்கும் ? தானாறியாமலேயெ தன் படுக்கைக்கு கீழே எத்தனை நாள் இது ஊர்ந்து சென்றிருக்கும் ? ஏன் இத்தனை நாள் ந‌ம்மை விட்டு வைத்தது ? தன் மகளை கபளீகரம் செய்ய வந்து இத்தனை பேர் கையால் இன்று மாண்டு போனது. அவனுள் எழுந்த ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு பதிலின்றி மெளனத்தையே பரிசளித்து அமைதியாய் செத்துக் கிடந்தது அந்த விலங்கு.  இயற்கை மனிதனுக்கு உண‌ர்த்துவது பனிப்பாறையில் மேலே தெரியும் சிறு குன்றுகள் போன்ற‌ கொஞ்சமான காட்சியே, அதன் எஞ்சிய அதிசயங்கள், அமானுக்ஷ்யங்கள், மர்மங்கள்  சின்னான் சந்தித்ததுபோன்ற பிரம்மாண்டம் யாவும் கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் பனிமலைப்பாறைகளைப்போல் கணக்கிலடங்காதவை. இயற்கையை முழுதாய் உணர்ந்து அதை ஆட்சிசெய்யும் தெளியும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. இயற்கையை  மனிதன் என்றுமே வெல்ல முடியாது என்ற உண்மையை அவன் மனது உண‌ர்ந்து சிலிர்த்தது.

எல்லோரும் அந்த இராட்சத பாம்பைச் சற்று தூரத்தில் நின்றே எட்டி எட்டி
பார்த்துக்கொன்டிருந்தனர். இற‌ந்த பின்னும் அவர்களை பயமுறுத்திய‌ அந்த
மிகப்பெரிய பாம்பின் இறந்த உடல் இறுதியில் ஓர் இராணுவ வண்டியில் ஏற்றி கொசுவத்திச் சுருள் போல் சுருட்டி வைக்கப்பட்டது. அதன் எடை அந்த வண்டியின் பின்புறம் முழுமையையும் ஆக்ரமித்துக்கொண்டது. அந்த வண்டியில் டிரைவரைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லாமல் போனது. அதுவும் ஒருவகையில் அவர்களுக்கு நல்லதாகவே பட்டது. இற‌ந்துவிட்டாலும் அது கொடிய பாம்பல்லவா ?

அந்தப் பாம்புடன் பயணிக்க யாருக்கும் விருப்பமில்லை, ஆனால் அந்த
வண்டியின் டிரைவருக்கோ வேறு வழியில்லை ! பயத்துடன் தொடர்ந்தது பாம்புடனான அவரது பயணம்.

ஒரு வழியாக சின்னான் வீட்டுக்கு அடியில் பாதை வைத்து நடமாடிய அந்த
இராட்சத மலைப்பாம்பின் இறுதி ஊர்வலம் ஆரம்பித்த‌து, அங்கே கூடிய
கூட்டமும் தங்களுக்குள்ளாகவே அதைப்பற்றி மேலும் மேலும் வியந்து
பேசிக்கொன்டு களைய ஆரம்பித்தது.

இதன்பின் அந்தப் பாம்பின் கதி என்னவாகும் ? பாடம் செய்யப்பட்டு
காட்சிப்பொருளாகுமோ ? அல்லது புதைத்தோ, எரித்தோ அதன் உடல்
அழிக்கப்பட்டுவிடுமோ ? சின்னானின் மனதில் எழுந்த கேள்விகளுக்கு
யாரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை.

ஆதிவாசிகளுக்கும், இராணுவ வீரர்களுக்கும் நன்றி கூறினான் சின்னான்.
சிதைந்து போய்விட்ட தன் குடிசையை சில நாட்களில் சீர்படுத்தினான், அவனை அந்த இடத்தை விட்டுவிட்டு வேறிடம் தேடி வாழ்விடம் அமைக்குமாறு அவன் நண்பர்கள் அறிவுறுத்தினர். ஆனால் சின்னான் அதை ஏற்கவில்லை, காட்டிலிருந்து பிரிந்து வாழ சின்னானால் முடியாது, அப்படி ஒரு நிலை வந்தால் நீரிலிருந்து எடுத்து தரையில் வீசப்பட்ட மீனின் நிலையை ஒத்த‌தாய் அவன் வாழ்வு அமைந்துவிடும் என்பதால் அங்கேயே தன் வீட்டை புனரமைப்பு செய்து வாழும் தன் நோக்கத்தை செயல்படுத்தத் தொடங்கினான்.

சின்னானின் மனவோட்டத்தை தெள்ளத் தெளிவாய் உண‌ர்ந்திருந்த‌தால் தன்
கணவனின் ஆசைக்கு மறுப்பேதும் கூற‌வில்லை மங்கா. அவனது வீடு ஓரளவிற்கு சீரமைக்கப்பட்டது. எல்லாம் முடிந்தபின் ஆராவின் குடும்பத்தினருக்கு நன்றி கூறி கையில் கிடைத்த காட்டுப்பழங்களை மூட்டைகட்டி பரிசாய் கொடுத்துவிட்டு தன் மனைவி மக்களை வீட்டிற்கு அழைத்துவந்தான் சின்னான்.

அந்த இரவு குழந்தைகள் உண்டு உற‌ங்கிய பின்னர், மனைவி கொடுத்த தாம்பூலத்தை தரித்துக்கொண்டு அவளுடன் பேசி மகிழ்ந்து கொண்டிருந்த சின்னான் வீட்டின் பின்புறம் ஏதோ விசித்திர அரவம் கேட்க என்னவென்று பார்க்க எழுந்து சென்றான், மங்காவின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது....!

ஆக்கம் : சிவ.ஈஸ்வரி, பினாங்கு
வல்லினம் சிறுகதைப்போட்டி 2016 ‍ (ஆறுதல் பரிசு)

பி.கு : வல்லினம் சிறுகதைப்போட்டி 2016 ஏற்பாட்டுக்குழுவினருக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும்... :)                

No comments: