.

.
.

Wednesday, July 31, 2013

ஒரு ஜீன்சு உடையும் உடையாத நட்பும்...!

சில காலங்களுக்கு முன்...!

கட்டுப்பாடுகள் நிறைந்த கட்டுப்பெட்டி குடும்பம். அந்த வீட்டு பெண்பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் பெற்றோரால் விதிக்கப்பட்டிருந்தன. இருந்தும் அவை யாவும் அந்தப் பெண்பிள்ளைகளின் நன்மைக்கே என்பதை அந்தக் குழந்தைகள் உணர்ந்திருந்ததால் பெரிதாய் ஏதும் பிரச்சனைகள் எழவில்லை அந்த குடும்பத்தில்!

அவள் அந்த வீட்டுப் பெண், அப்போது தான் எஸ்.பி.எம் பரீட்சை முடிந்திருந்தாள். அவளுக்கு ஓர் உயிர்த்தோழி, இருவரும் ஆரம்பப்பள்ளியிலிருந்து உடன் படித்தவர்கள், எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்பவ‌ர்கள், இதிலே தோழி ஓரளவு சுத்ந்திரமான குடும்பத்திலிருந்து வந்தவள், அப்பா தமிழ்ப்பள்ளி ஆசிரியர், வீட்டில் கடைக்குட்டி பெண் வேறு, சந்தர்ப்ப‌ம் கிடைக்கும்போதெல்லாம் அரட்டை அடிக்க தோழி அவள் விட்டுக்கு வந்து விடுவாள்.  அவர்களில் ஒருத்திக்கு ஒரு பிரச்சனை என்றால் இன்னொருத்தி அழையாமலே அவளுக்குத் துணையாக‌ அங்கே ஆஜராகிவிடுவாள்...! தீபாவளியென்றால் இவள் அவளுக்கும், அவள் இவளுக்கும் உடை வாங்கி பரிசளித்துக்கொள்வார்கள், இப்படியாக வெள்ளிவிழா கொன்டாடி இன்றும் தொடரும் நட்பு அவர்களுடையது, அவர்கள் வாழ்விலே ஒரு நாள்...

அவர்கள் பள்ளியின் இந்திய மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி அந்த ஊரிலிருக்கும் மலைப்பாங்கான பகுதி ஒன்றிற்கு மலையேறுதல் (hiking) செல்ல முடிவு செய்தனர், பரீட்சை முடிந்தது, இனி இடைநிலைப்பள்ளி வாழ்க்கையும் ஒரு நிறைவை நாடிவிடும், அதைக்கொன்டாட வேண்டுமல்லவா ? ஒருவகையில் இது ஒரு பிரியாவிடை கொன்டாட்டமும் கூட, 10,12 இந்திய மாண‌விகள் ஒன்றுகூடி கலந்து பேசி பிரயாணத்தையும் அவரவர் பொறுப்புகளையும்  திட்டமிட்டனர்.

அவளை உடன் வருமாறு அவள் தோழி வற்புறுத்தினாள், அவள் தாயோ "என்னது மலையேறுவதா ? முடியாது ! " என  மறுத்துவிட்டார், அவளுக்கு கவலையாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது ? தான் வர முடியாது என்பதை தோழியிடம் தெரிவித்தாள், தோழி  விடாப்பிடியாக அவள் வந்தே ஆகவேன்டும் என வற்புறுத்தி, அவள் தாயிடம் தானே வந்து பேசி சம்மதம் வாங்குவதாக வாக்களித்து அவள் வீட்டிற்கு வந்தாள், அவளுக்காக அவள் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி கோரினாள், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா ?

இறுதியில் அவள் அம்மா அனுமதி தந்தார் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு... மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடவேண்டும், வேறு எங்கும் செல்லக்கூடாது, அந்நியர் யாரிடமும் பேசக்கூடாது, அவர்களிருவரின்  உண‌வைத் தவிர அடுத்தவர் உணவை உண்ண‌க்கூடாது, கவுச்சி(மாமிச) உணவை அங்கே சாப்பிடக்கூடாது என பல கட்டுப்பாடுகள், அவள் தாய் அவர்களிடத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்காத ஒரு குறைதான்...!

கொஞ்சூண்டு அழகான தனது மகளுக்காக நிறையவே பாதுகாப்பு வளையங்கள் வரைந்தார் அவள் தாய்...!(எல்லா அன்பான தாய்க்கும் அவர் பெண் பொக்கிக்ஷ‌ம் தானே?) அனுமதி கிடைத்ததே பெரிய விடயம், எனவே எல்லாவற்றிற்கும் இருவரும் தலையாட்டி மகிழ்வோடு சம்மதம் தெரிவித்தனர். "நாளை காலை வருகிறேன், தயாராய் இரு" என அவளிடத்தில் கூறிவிட்டு, பேச்சு வார்த்தை வெற்றிகரமாய் முடிந்த திருப்தியில் வீட்டிற்கு புறப்பட்டாள் தோழி.

இவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை, அதற்குமுன் இப்படி மலையேறும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததில்லை, மறு நாளை எதிர்பார்த்து மகிழ்வோடு
உற‌ங்கினாள், காலையில் கருக்கலிலேயே எழுந்து கடமைகள் முடித்து, தனக்குப்பிடித்த இள‌ஞ்சிவப்பு சுடிதாரில் தோழிக்காக காத்திருந்தாள்.

தோழியும் வந்தாள், இருவரும் புற‌ப்பட்டனர். புற‌ப்படும் முன் தோழி முதலில் இவளை அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள், தன்னுடைய கருநீல நிற‌ ஜீன்ஸ் காற்சட்டையும், கத்தரிப்பூ நிறத்தில் மேல்சட்டை ஒன்றையும் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னாள், "அய்யோ வேண்டாம் அம்மாவிற்கு தெரிந்தால், கதை கந்தல்தான்" அவள் தடுத்தாள், தோழியோ "அடக்கடவுளே, பஞ்சாபி சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு மலையேற‌முடியாது, பாதி வழியில் சட்டை கிழிஞ்சி போகும், உன்னைப்பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள், நீ இப்போ இதை போடு, அப்புறமா வீட்டிற்கு வந்து மாற்றிக்கலாம்!" என்று வற்புறுத்தினாள், "என்னே ஒரு வில்லத்தனம்" மனம் குமைந்துகொன்டே அவள் உடை மாற்றிக்கொண்டாள், இருவரும் புறப்பட்டனர்.

அனைத்து தோழிகளும் மலையடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அதன்படி அனைவரும் வந்து காத்திருந்தனர், அதிசயமாக அவளை ஜீன்ஸ் உடையில் கண்டதும் கண்கள் அகல அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துச் சிரித்தனர், அவளை பகடி செய்து ரசித்தனர். அதில் ஒரு சில தேவதைகள் அவள் கையை பற்றிக்கொன்டு 'இந்த உடுப்பு உனக்கு நல்லாயிருக்கு ' என பாராட்டுப்பத்திரம் வாசித்தனர்.அவளுக்கு மகிழ்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது, சட்டையை இழுத்து விட்டுக்கொன்டாள்.

நடைப்பயணம் தொடங்கியது, மலையேறுதல் ஆனந்தமாய் ஆரம்பமானது, மேலேறும் செங்குத்தான செம்மண் பாதை, அதன் இருமருங்கிலும் மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்தன, கையகல மஞ்சள் நிறப்பூக்கள் வரவேற்றுச் சிரித்தன. கொத்துக் கொத்தாய் சிவப்பு மலர்கள் மரக்கிளைகளில் அங்கும் இங்குமாய் கண்சிமிட்டின, மரத்தண்டுகளில் வெள்ளை நிற வாச‌மிகுந்த பூக்கள் (pokok langsuir ) நிறைந்திருந்தன‌! அபார வாசம் கொன்ட மலர்கள் அவை, மேலும் பல வடிவங்களில், பல நிற‌ங்களில்  இலைகளும், கொடிகளும், மரங்களும், வித்தியாசமான சப்தங்களும், மண்ணின் வாசனை கிள‌ப்பும் ஈரக்காற்றோடு, கோடு கிழித்ததைப்போல் ஒரு சிறு நீர்வீழ்ச்சியுமாய் இயற்கை வெகு எழிலாய் அங்கே நர்த்தன‌மிட்டுக்கொண்டிருந்தது, அவர்களின் பயண‌ம் நல்லபடியாய் தொடர்ந்து கொன்டிருந்தது.

சில மணித்துளிகளும், சில மைல்களும் கடந்த பின்னர் களைப்பு ஏற்பட ஆரம்பித்தது, கால் முட்டிகள் கதகளி ஆடத்துவங்கின, வியர்வை மேனியை நனைக்கத்தொடங்கியது, மூச்சு வாங்கியது....!

தொடரும்...!   

No comments: