.

.
.

Thursday, August 1, 2013

ஒரு ஜீன்சு உடையும், உடையாத நட்பும்...! - நிறைவு

 பயணம் தொடர்கிறது...

நல்லவேளை அங்கே மலை நெடுக ஓய்வுக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே அமர்ந்து சிறிது ஓய்வெடுத்துக்கொன்டு மலையுச்சியை அடைந்தபோது மணி 3ஐ தொட்டிருந்தது, மலையுச்சி பார்க்க ரம்மியமாக இருந்தது, பச்சைக் கம்பளம் விரித்த மேடுகள். அதில் சகஜமாக உலவித்திரியும் வென்மேகச் சாரல்கள், மிகவும் குளிர்ச்சியான சீதோக்ஷ்ணம்,  பனி மூட்டங்கள் உடல் தழுவி உள்ளம் குளிரச்செய்தன. மலையுச்சியிலிருந்து கீழே பார்த்தால் சின்னச்சின்னச் சதுரங்களாய் பட்டண‌ம் கண்ணுக்கு தென்பட்டது. எல்லோரும் அந்த இயற்கை எழிலை அனுபவித்து மகிழ்ந்தனர். மலையேறிய களைப்போடு பசியும் சேர்ந்து கொன்டது...

உணவுண்ண ஆயத்தமானார்கள்,  அவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி ஆளாளுக்கு உணவு கொன்டு வந்திருந்தனர். குளிர்பாணங்கள், நாசி லெமாக் உணவு, கச்சான், பலகாரங்கள், மிட்டாய்கள் அவற்றோடு ஒரு பெரிய பாத்திரம் நிறைய பொறித்த கோழித்துண்டுகள் ( kfc ) என எக்கச்சக்க உண‌வுகள். பெண்களை "சாப்பாட்டு இராமாயிகள்" என்றால் நமக்கு கோபம் வருகிறது! அனால் அங்கே அந்தக் குட்டிப்பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு குட்டி உணவகத்தையே உருவாக்கி வைத்திருந்தனர். அவரவர் அவர் எடையில் பாதியளவு பையை சுமந்து வந்ததன் காரணம் அப்போதுதான் விளங்கியது...!     

மிகவும் குளிர்ச்சியான இடம், உணவு வெகுவிரைவில் சில்லிட்டுவிடுமல்லவா ? அதனால் அனைவரும் விரைந்து உண்டனர், அவள் வெண்ணெயும், பழக்கூழும்(jam)  கலந்த ரொட்டித்துண்டுகள் கொன்டுவந்திருந்தாள், ஒரு துண்டை உண்டுவிட்டு பார்த்தால் பாத்திரம் காலி, அதன் பின்னர் அடுத்தவர் உணவை தொடக்கூடாது எனும் அம்மாவின் கட்டளை அங்கே காலி!

ஒரே மகிழ்ச்சியாகவும், ஆரவாரமாகவும் இருந்தது, சற்று நேரம் கழித்து மணியைப் பார்த்தால் 5ஐ தாண்டியிருந்தது! இவளுக்கு பதைபதைக்க ஆரம்பித்தது. அனவரும் கீழிறங்கத் தயாராயினர், உணவுண்டதாலும், ஏற்கனவே மலையேறிய களைப்பாலும் யாரும் திரும்பவும் நடக்கத் தயாராயில்லை!

நல்லவேளை அங்கே பயணம் செய்ய ஜீப் வண்டிகள் வசதியும்  ஏற்படுத்த‌ப்பட்டிருந்தது, சிறு சிறு குழுக்களாக பிரிந்து வண்டிகளில் ஏறி கீழே பிரயாணமானார்கள் அவர்கள். 

மலையடிவாரத்தில் அனைவரும் திரும்பவும் ஒன்றுகூடி விடைபெற்றுப்பிரிந்தனர். அவள் அரக்கப் பரக்க வீட்டையடையும் போது மணி 7. தோழியும் உடன் வந்தாள். அவசரத்தில் உடை மாற்ற‌ வேண்டியதும் மறந்து போயிருந்தது, வீட்டு வாசலை அடைந்ததுதான் தாமதம், உள்ளேயிருந்து ஒரு பெண்புலி உறுமத் தொடங்கிய‌து....!!! 

"அப்படியே உன் கூட்டாளி வீட்டுக்கு போயிடு, வீட்டுக்குள்ளே வந்தே, காலை ஒடச்சிப்புடுவேன், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்ர"? ஏசிக்கொன்டே எட்டிப்பார்த்தவர், ஜீன்ஸ் சட்டையில் நின்றிருப்பதைப் பார்த்ததும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது

போலானது! "என்ன சட்டை இது "? என்று ஆரவாரம் செய்ய, அதுவரை அவளோடு அமைதியாக‌ நின்றிருந்த அவள் தோழி , பொறுமையிழந்து, "ஆண்ட்டி பஞ்சாபியெல்லாம் போட்டுட்டு மலையேற‌ முடியாதுன்னு நாந்தான் என் சட்டைய கொடுத்தேன்" என்றாள், அவள் அம்மா ஒன்றும்
பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.

பொழுது இருட்டிக்கொன்டு வந்தது, "நீ வீட்டுக்குப் போ நான் பார்த்துக்கொள்கிறேன்" எனக் கூறினாலும் கேளாது, அவள் வீட்டு வாசலில் அவளோடு கொசுக்கடியில் உடன் நின்றாள் தோழி! அது வரிசை வீடு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்த்தனர். வெட்கமும் வேதனையுமாக இருந்தது! இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் தந்தையும் வந்து விடுவார்! அவருக்கு இந்த நிகழ்வு எதுவும் தெரியாது, விடயம் அறிந்தவுடன் அவர் ஊரே பார்க்க இனாமாக ஒரு உருத்திர தாண்டவம் ஆடுவார், அதை நினைக்க இன்னும் பயமாக இருந்தது அவர்களுக்கு!

நல்லவேளை அவள் அம்மாவின் மனம் சற்று இரங்கியது. அதுமட்டுமல்ல அப்பா வந்துவிட்டால் விடயம் அவருக்கு தெரிந்துவிடும் அம்மாவுக்கும் பாட்டு விழும் அல்லவா?  அதனால் வெளியில் வ‌ந்து "போ உள்ளே, இனிமே இந்தமாறி செஞ்சே" அவர் முடிக்கவில்லை, அவள் முடிவெடுத்துவிட்டாள்....! இனி இப்படி செய்து அவமானப்படக்கூடாது என்று! அதுவரை இருளில், கொசுக்கடியில் அவளோடு உடன் நின்ற அவள் தோழி நிம்மதியோடு
விடைபெற்றுச் சென்றாள், தோழியை அனுப்பி வைத்துவிட்டு அவள் வீட்டுக்குள் ஓடி, குளித்துவிட்டு
அவள் அப்பா வருவதற்குள் விரைவாக போர்வையை போர்த்திகொன்டு படுத்துவிட்டாள் , ஆனால் தூக்கம்தான் வரவேயில்லை, நெடு நேரம் வரை. அம்மாவின் புண்ணியத்தால் அந்த சம்பவம் இன்றுவரை அவள் அப்பாவுக்கு தெரியாது...!

இப்படி அம்மாவின் ஆத்திரத்தால் வாசலில் நின்ற அந்த பாவப்பட்ட ஆத்மா யாராயிருக்கக்கூடுமென்பதை வாசிப்பவர்கள் ஓரள‌வு கணித்திருக்கக்கூடும், அந்த சம்பவத்திலும் இன்றுவரை அவள் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் அன்றுபோலவே இன்றும் பங்கெடுத்துக்கொள்ளும் அவளின் அந்த  அன்புத்தோழியின் பெயர் கோமளா.

அன்று அவள் கொடுத்த அந்த ஜீன்ஸ் இன்றும் துணிஅடுக்கில் அந்த அநுபவத்தை பறைசாற்றிக்கொன்டு பத்திரமாய் இருக்கின்றது மனஅடுக்கில் பசுமையான அவர்கள் நட்பின் நினைவுகளைப்போல...!

இடைநிலைப்பள்ளிப்பள்ளி வாழ்க்கையில் மற‌க்க முடியாத நிகழ்வு இது, தோழிகள் கோமளம், ஜோஸப்பீன், தமிழ்மலர், நிர்மலா, ஏஞ்சலீனா, மஞ்ஜிட் கவுர், சாண்டி, உமா, க்ஷோபா, மஞ்சுளா, சித்ரா, வாணி, முனியம்மா, சுகுனா (பெயர் விடுபட்ட தோழிகள் மன்னிக்க) எல்லோருக்கும் அன்பும் நல்வாழ்த்துகளும்...!      

 

No comments: