.

.
.

Friday, August 30, 2013


யதார்த்தவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும்...!(நிறைவுப்பகுதி)


சாந்தியை எப்படியேனும் சிறையிலிருந்து காப்பாற்றியாக வேண்டும்  எனும் தீவிர உந்துதலில் சாந்தியின் தந்தையும், சந்திரனும் கையிலும், சேமிப்பிலும் இருந்த பணம் யாவற்றையும் திரட்டி அந்நாட்டின் மிகச்சிறந்த வழக்கறிஞர்கள் என அறியப்பட்டவர்களை நாடி தங்கள் வழக்கை முன்வைத்தனர், ஆனால் வழக்கின் சாராம்சம் அறிந்தவுடன் பலரும் இந்த வழக்கு வெல்லாது என வெளிப்படையாகவே கூறிவிட்டனர். ஒரு பஞ்சாபி வழக்கறிஞர் மட்டும் முயற்சி செய்வோம் எனக் கூறி வழக்காடச் சம்மதித்தார்.

விசாரணை சாந்திக்கு சாதகமாக அமையவில்லை, அவளிடம் பையைக் கொடுத்த மூதாட்டியும் இறுதிவரை அகப்படவேயில்லை என்பதோடு, சுங்கச்சாவடி காமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளும் அவள் உதவிதான் செய்தாள் என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியாக அமையவில்லை, ஏதோ ஏற்கனவே அறிமுகமான இருவர் அளவளாவி ஒருவர் பையை மற்றவர் பெற்றுச் செல்வதை போலிருந்தன அதில் பதிவாகியிருந்த காட்சிகள்.
 
எனவே விசாரணையில் சாந்தி குற்றவாளி என்றே தீர்ப்பளிக்கப்பட்டு, அவளுக்கு உச்சபட்ச தண்டனையாக‌ மரணதண்டனை விதிக்கப்பட்டது !.

சாந்தியின் தந்தையும் சந்திரனும் தீர்ப்பைக் கேட்டு பெரிதும் வருந்திக் கலங்கினர், சாந்தி கண்களில் நீர்வழிய‌  தீர்ப்பை செவிமடுத்துக் கொண்டிருந்தாள்...! வேறென்ன செய்ய முடியும் அவளால் ? விதி என்று சொல்வார்களே, அது இதுதானோ ? அவள் மனம் நொந்து வேதனையில் வாடிக்கொன்டிருந்தது.

சாந்தியின் குடும்பத்தினர், தங்களின் முயற்சியை கைவிடவில்லை, விடாமுயற்சியுடன் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு  கொன்டு சென்றனர். மிகவும் பிரயத்தனத்துடன்  மேலும் பணத்தைத் திரட்டி வேறொரு வக்கிலை வைத்து வழக்காட முனைந்தனர்.


father-daughter1சாந்தியின் தந்தை மிகவும் வேதனையுடன் அந்த வழக்கறிஞரின் கைகளைப் பற்றிக்கொன்டு தன் மகளை, அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரணதண்டனையிலிருந்து மீட்டுத் தரும்படி கண்ணீர் விட்டு மன்றாடினார். குறைந்த பட்சம் அவள் மரண தண்டனையிலிருந்து மீண்டு ஆயுள் தண்டனைக்கு மாற்றப்பட்டாலும், தன் மகள் சிறையிலேனும் உயிர் வாழ்கிறாளே எனும் சிறு மகிழ்ச்சியாவது மனதில் தங்குமே என அந்தத் தந்தை மனம் எதிர்பார்த்து ஏங்கியது.


அவள் தாயோ மணக்கோலத்தில் தான் கண்டு மகிழக் காத்திருந்த மகள் வாழ்வையே இழந்து விட்டாளே எனும் சோகத்தில் நிரந்தர நோயாளியாகி படுக்கையே கதி என்றாகிப் போனார். சாந்தியை இழந்துவிட்டால் அவர் உயிர் நிலைப்பதும் அரிதுதான் என்பதை அந்தக் குடும்பமே உண‌ர்ந்து இரட்டை சோகத்தில் மருகிக் கொண்டிருந்தது.

வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தது, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திருப்புமுனையான தீர்ப்பு அமையும், குறைந்த பட்சம்  சாந்தியின் உயிராவது மிஞ்சும் என எதிர்பார்த்துக் காத்திருந்த சாந்தி, சந்திரன், சாந்தியின் ஒட்டுமொத்தக் குடும்பம், குணசாலியான அவள் மீது அன்பு கொண்ட உற்றார், சுற்றம், நட்புகள் என வேண்டியவர்கள் அனைவருக்கும் பேரிடியாக அமைந்தது தீர்ப்பு...! அதில் அவள் குற்றம் மறு உறுதி செய்யப்பட்டு, அவள் மரண‌தண்டனை ஏற்கனவே குறிப்பிட்டபடி நிறைவேற்றப்படவேண்டும் என மறுதீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம்,

கைப்பற்றப்பட்ட கொடிய போதைப்பொருளின் அளவு, அதன் மூலம் விளையக் கூடிய பேரிழப்புகள், பாதிப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது, அவள் தான் நம்பி உதவி செய்தவரால் நம்பிக்கை மோசடிக்கு ஆளாகியிருக்கிறாள் எனும் கூற்று அங்கே வெற்றி பெறவில்லை.    

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சாந்தியைக் காப்பாற்ற‌ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதால்  அவளின் மரண தண்டனை உறுதியாகிப்போனது, அவளைக் காப்பாற்றும் முயற்சியில் சாந்தியின் தந்தைக்கும், சந்திரனுக்கும் மிஞ்சியதெல்லாம் அலைச்சலும், மன உலைச்சலும் மட்டுமே...!

சாந்தி தப்பிக்க வழியின்றி மரணத்தை எதிர்கொள்ளத் தயாரானாள், தந்தையிடம் தான் அன்புகொண்ட, தன் மீது அன்பு பூண்ட அனைவருக்கும் தன் அன்பைத் தெரிவித்து தான் விடைபெறுவதை அறிவிக்கச் சொன்னாள்...!

அந்தச் சம்பவம் தந்த அதிர்வில் 20 வயதுப் பெண்ணான சாந்தி 50 வயது பெண்மணியைப்போல் தோற்றத்தில் தளர்ந்து 80 வயது மூதாட்டியைப்போல் வாழ்க்கை முடிந்துவிட்ட முதிர்ச்சியோடு பேசுவதைக் கேட்க அவள் தந்தையின் மனம் அனலில் இட்ட புழுவாய் துடித்தது ..! 

மறைந்த தன் தாயே மறுபடியும் மகளாய் தன் மடியில் தவழ்கிறாள் என  அன்போடு அள்ளி அணைத்து, உச்சி முகர்ந்து, பாராட்டி சீராட்டி, படிக்க வைத்து, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, மணமுடித்துத் தரப்போகும் தருணத்தில் காலனுக்கு தன் மகளை வாரிக் கொடுக்க எந்தத் தந்தைக்குத்தான் மனம் வரும் ? சிறையில் சிக்கிக்கொன்ட தன் செல்லக்கிளியின் நிலையை நினைத்து, வாய்விட்டு அழுதார் சாந்தியின் தந்தை, விதியின் சதியை நொந்து...!  

அவள் மனங்கவர்ந்த சந்திரன் வேறு யாரையேனும் திருமண‌ம் புரிந்து கொள்ள வேண்டும் என சாந்தி அவனிடம் விண்ணப்பித்தாள். சந்திரனுக்கோ சாந்திக்கு மரண தண்டனை எனும் தீர்ப்பைக்கேட்ட மறுநொடியே தன் உயிரின் பாதி தன்னிலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டதைப்போலிருந்தது. பெயருக்கு வாழ்வதாக பெயர்பண்ணிக்கொன்டு நடைப்பிணமாக நடமாடிக்கொன்டிருந்தான். தன்னை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி சாந்தியே கூறுவதைக்கேட்டு அவனால் கலங்கி நிற்க‌ மட்டுமே முடிந்தது, காலம் அலங்கோலமாக்கிச் சென்ற தங்களின் அன்பு வாழ்க்கையை எண்ணி...!

அவளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது...!

சாந்தியைப் போன்ற யதார்த்தவாதிகளின் வாழ்க்கை அவளை ஏமாற்றிய மூதாட்டியைப் போன்ற சந்தர்ப்பவாதிகளால் சூரையாடப்படுவது, உலகில் ஒன்றும் புதிதல்லவே...!

நம்பிக்கையுடன் அவள் செய்த சிறு உதவி, இடம், பொருள், ஏவல் மறந்து அவள் செயல்பட்ட ஒரே ஒரு காரணத்தினால் அவள் வாழ்வையே பறித்துசென்றது.

உதவி செய்வது தவறல்ல! ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒருவழியில் பிறர் உதவியை நாடுவதும், பிற‌ர்க்கு உதவி செய்ய நேருவதும் வாழ்வில் தவிர்க்க முடியாதவை..! ஆனால் பல சமயங்களில் நம்பிக்கையுடன் செய்த உதவிகளே நம்பிக்கை மோசடிகளாய் மாறி, தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதைப்போல, உதவியவரையே பதம் பார்த்து விடுவதால்தானோ என்னவோ இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்கும் உதவ முன்வருவதில்லை, அதன் பாதிப்பும் யாருக்கும் தெரிவதில்லை, தான் பிறர் உதவியை நாடி நிற்க வேண்டிய நிலை தனக்கு ஏற்படும் வரை...!

எனினும் தற்காலத்தில் உதவுவதிலும் கூட கூடுதல் கவன‌ம் அவசியமெனப்படுபவதால் தன்னையும் பாதுகாத்துக்கொன்டு, தன்னால் இயன்ற உதவிகளை முடிந்தளவு பிற‌ர்க்குச் செய்து ஆத்ம திருப்தியோடு வாழ்வதே இக்காலத்தில் சாலச் சிறந்த செயலாக அமையக்கூடும்.!

சாந்தியின் ஆன்மா சாந்தியடையட்டும்...!

No comments: