.

.
.

Friday, September 6, 2013

மாயமனிதனும் மாபெரும் இலக்கியவாதியும்


ஒருநாள் ஒருபொழுது திடீரென யார் கண்ணுக்கும் புலப்படாமல் , மாயமாய் மறைந்து காற்றாய் உலவும் நிலை நமக்கு நேரிட்டுவிடுகிற‌து, அப்போது மன‌ நிலையும் உடல் நிலையும் எப்படி இருக்கும் ? என்னென்ன காரியங்கள் செய்யத் துடிக்கும் இந்த மனது ?

அன்பான‌வர்களை அவர்கள் அறியாமலேயே பின் தொடர்ந்து வேவு பார்க்கச் செய்யுமா ? வேண்டாதவர்களை அவர்கள் அறியமாட்டார்கள் எனும் தைரியத்தில் துன்பம் இழைத்து பழி வாங்கத் தூண்டுமா ? விளிம்பு நிலை மாந்தர்களுக்கு நன்மைகள் புரிந்து அவர்களை மகிழச் செய்து இரசிக்குமா ? அல்லது இதுதான் சமயமென்று மேலும் அசம்பாவிதங்களை தோற்றுவித்து ஏற்கனவே அரசியல்வாதிகளாலும், அடாவடிப் பேர்வழிகளாலும் நொந்து போன மக்களை மேலும் நோகடித்து பிறர் துன்பத்தில் குளிர் காய விழையுமா?   

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆங்கிலத் திரைப்படம் (Hollow Man )  Kevin Bacon, Elisabeth Shue ஆகியோரின் நாயக நடிப்பில் வெளிவந்த அறிவியல் புனைவிலான திகில் திரைப்படம்.

விஞ்ஞானி செப‌ஸ்டியன் கேய்ன் (Kevin Bacon ) உயிரினங்களை உருவம் களைந்து மாயமாய் மறையச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். மிருகங்களைக் கொன்டு அவர் செய்த பரிசோதனை முழு வெற்றியைத் தருகிறது. தமது ஆய்வில் மிருகங்களை மறைத்து மீளவும் மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்த களிப்பில், அடுத்த‌க் கட்டமாக மனிதரை மாயமாய் மறைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் தமது விஞ்ஞானிகள் குழுவினரின் உதவியோடு தம்மையே பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்கிறார். அவர் உடலில் அவர் கண்டுபிடித்த ஆய்வு மருந்து செலுத்தப்படுகிற‌து. கடுமையான வலியையும் வேதனையையும் அடைந்து, தமது உடலின் தோல், நரம்புகள், சதை  இறுதியில் எலும்புக்கூடு என ஒன்றன் பின் ஒன்றாய் உடல் முழுமையாய் மறைந்து மாய மனிதனாக ஆகிவிடுகிறார் . அதன் பின்னரே திரைக்கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது, உடல் மறைந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பானது அவர் மறையத்தான் உதவியதே தவிர, மிருகத்தின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக அதன் உடலை மீண்டும் உருப்பெற செய்ததைப்போல அவரை மீட்டுத்தர உதவவில்லை, தோல்வியில் கையைப்பிசைகிற‌து விஞ்ஞானிகள் கூட்டம்.

தனது உடலை இழந்து மாயமனிதனாக மாறிய நிலை ஆரம்பத்தில் மகிழ்ச்சியளித்தாலும், ஒரு கட்டத்தில் அது விஞ்ஞானி செபஸ்டியனுக்கு சலிப்பையும், வெறுப்பையும் தருகிறது. வெறுப்பு குரோதமாக வடிவெடுக்க‌ தனது உருவம் திரும்ப மீளாது எனும் முடிவுக்கு வந்து அதீத கோபம் கொள்கிறார். விளைவு, தனது மன விகாரங்களுக்கு உயிரூட்ட ஆரம்பிக்கிறார். பல வில்லங்கங்களை புரிகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் உலகிற்குத் தெரியாமல் தனது தோல்வியுற்ற கண்டுபிடிப்பை மறைக்கவும், தன்னை தற்காத்துக்கொள்ளவும் ஒரு பயங்கர முடிவை எடுக்கிறார் . அதன் தொடர்பில் தனது விஞ்ஞானக் குழுவினரையே ஒவ்வொருவராக கொடூரமாகப் பலிகொள்கிறார். இறுதியில் கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கொப்ப  தமது விஞ்ஞானிகளில்  ஒருவரான‌ கதாநாயகியைக் கொல்ல முயற்சிக்கையில், தனது எண்ணம் ஈடேறாமல் அவர் கையாலேயே கொடூரமாக அழிக்கப்படுகிறார்.

இது தமது உடல் அருவமானதை சாதகமாக்கிக்கொன்டு தீமைகள் புரிந்த ஒரு மனிதனின் கதை.

வாழும் காலத்திலேயே ஒரு மனிதனுக்கு மறைந்து உறையும் நிலை  நேர்கையில்,  அவன் வாழ்க்கை, அவனை பிண்ணிப் பிணைந்திருக்கும் அவனது உற‌வுகள், பகைகள் ஆகியவற்றை அவன் கைக்கொள்ளும் விதம், உண்டு, உறங்கி உயிர் வாழும் சராசரி மானுடப் பிற‌வியாக இன்றி, சமூகத்தின் பால் அக்கரை கொன்ட ஒரு  சீர்திருத்தவாதிக்கு இந்நிலை வாய்த்தால் அவனுடைய செயல்பாடுகள் ? இக்கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது மேற்குறிப்பிட்ட கதைக்கு நேர்மாறாக அமைந்த ஒரு மாயமனிதனின் புதினம். 

கதைச்சுருக்கம் - அநியாயத்தைக் கண்டால் பொங்கியெழுந்து நீதிக்குப் போராடும் நடுத்தர வர்க்கத்து நாயகன்(மெய்யப்பன்). மணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான அவர் அவ்வூரின் பெரிய மனிதர் போர்வையில் ஒளிந்து கொன்டு பலவித அநியாயங்களை நிகழ்த்தும்  பணம், பதவி, அந்தஸ்து படைத்த வில்லனின் (கேசவராயன் ) சூழ்ச்சியால் கொலையாளியாக சித்தரிக்கப்பட்டு சிறை செல்கிறார், சந்தர்ப்பமும், சாட்சிகளும் அவருக்கு எதிராக பிண்ணப்பட, சதி வலையில் சிக்கிக்கொன்ட அவர் செய்யாத குற்றத்திற்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அநுபவித்து விட்டு வீடு திரும்புகிறார்.

மனவி மக்களைக் காண பேராவலுடன் வீடு திரும்பும் அவரை அவர் மனைவி ஊராரின் பழிச்சொல்லுக்குப் பயந்து வீட்டிலேயே ஒதுக்கியும் ஒளித்தும் வைத்து வேதனைப்படுத்துகிறார். மனமுடைந்த நாயகன் வீட்டை விட்டு வெளியேறி தமது ஆப்த நண்பனின் உதவியோடு வடதேசம் நோக்கிப்புற‌ப்படுகிறார், இடையில் நண்பரிடமிருந்து பிரிந்து வட நாட்டில் வேலை தேடிக்கொன்டு அங்கேயே வாழ்ந்தும் வருகிறார், வீட்டைப் புறக்கணித்து பிரிந்தாலும் மனைவி மக்களுக்கென தமது ஊதியத்தின் ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறார்.

அச்சமயத்தில் விஞ்ஞானத்திலும், மெய்ஞ்ஞானத்திலும் உயர் அறிவு பெற்ற ஞானி (மெய்கண்டார்)  நட்பு அவருக்கு வாய்க்கிறது. அவருடன் நெருங்கிப் பழகும் நாயகன் அவர் உருவங்களை மறைய வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்து பிரமிக்கிறார், ஞானியிடம் தன்னை சோதனையில் ஆட்படுத்திக்கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் . ஆரம்பத்தில்  தயங்கினாலும் பின்னர் நாயகனை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்கிறார் ஞானி.

அவர் முயற்சி வெற்றியடைந்து நாயகன் உருவம் மறைந்து மாய மனிதனாகி விடுகிறார். அருவமாகிப்போன அவர் தன் ஊர் நோக்கி விரைகிறார். அங்கே மாய வடிவில் தன் குடும்பத்தினரிடையே உலவுகிறார், பொதுவில் நடைபெறும் சில தீமைகளை தடுத்து வெற்றி கொள்கிறார், தமது நண்பர்களின் வாழ்வுக்கு உதவுகிறார்.த‌ன்னை வஞ்சித்த வில்லனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுக்கிறார், அப்போது அவரை மாய வடிவெடுக்க உதவிய ஞானியார் வழியாக அவ்வில்லனின் பிண்ணனியை அறிந்து தனது  பலிவாங்கும் முயற்சியில் தயங்குகிறார்,

இறுதியில் முடிவு என்ன‌ ? நாயகனின் உருவம் மீண்டதா ? அவர் நினைத்தபடி அவர் குடும்பத்தில் அன்பும் நலமும் சூழ்ந்ததா ? தம்மை வஞ்சித்த வில்லனை அவர் நினைத்தபடி பழிவாங்கினாரா ? என்பதையெல்லாம் நான் சொல்ல மாட்டேன், வாய்ப்புக் கிடைத்தால் டாக்டர்.மு.வ. அவர்களின் "மண்குடிசை" நாவலைப் படித்து முடிவைத் அறிந்து கொள்ளுங்கள்.   

அன்றும் இன்றும்  தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு.வ அவர்களின் கைவண்னத்தில் மலர்ந்த நாவல் இது. மறைந்து பல்லாண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் இலக்கியவாதிகளின் எழுத்திலும் பேச்சிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் டாக்டர் மு.வ என்றால் அது மிகையல்ல‌.


   
நிறைய தனிமனித‌/சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கிறது இந்நாவல்.இந்நாவலில் மூன்று தம்பதியரின் குடும்ப வாழ்வு வாசகர்களுக்கு படிப்பிணையாக சொல்லப்பட்டுள்ளது, அதில் கதாநாயகன் மெய்யப்பன் ஊருக்குப் பயந்து அவரை புறக்கணிக்கும் மனைவி ரேவதி (பிணைப்பிழந்த இல்லற‌ வாழ்வு), மெய்யப்பனின் நண்பன் பாண்டியன், ஆடம்பரத்துக்காக‌ அவரைப் பிரிந்து வாழும் அவர் மனைவி அஞ்சலி (பிரிவில் ஊசலாடும் மண‌வாழ்வு ) இவை இரண்டும் கடந்த மேன்மையான இல்லற வாழ்க்கை நடத்தும் குமரவேலு, அவர் அன்பு மனைவி மங்கை நல்லாள் (என்ன ஒரு அழகான பெயர் !, பேராசிரியர் மு.வ அவர்களின் அபிமானிகள் பலர் தங்கள் வீட்டு மழலைகளுக்கும் மு.வ வின் கதாபாத்திரங்களின் அற்புதமான தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தனர் என்பதை அறிந்ததுண்டு, இப்பெயரை காணும்போது அது ஏனென்று புரிகிறது, பெயரிலேயே பெண்மையின் மேன்மை அனைத்தும் சொல்கிற‌து இந்த இனிய பெயர்  ! ).   

இந்நாவல் குடும்ப வாழ்வியலில் அன்பின் அவசியம், கணவன் மனைவி மற்றும் குழந்தைகளிடையே மலரவேண்டிய பிணைப்பின் முக்கியத்துவம், நட்பின் மேன்மை, நல்ல நண்பர்களின் உறுதுணை வாழ்வில் ஏற்படுத்தும் நன்மைகள் எத்துணை மகத்தானது என்பதையும் உண‌ர்த்துகிற‌து.

கண்கவரும் புள்ளிகோலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாங்குற‌ அமைந்த புள்ளிகளைப்போல் கதைக்கு உயிரோட்டமாய் பல தத்துவங்கள் நாவல் முழுதும் ஆங்காங்கே அழகாய் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. படிப்போருக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் நாவல் இது.

No comments: