.

.
.

Tuesday, September 24, 2013

ஒரு காரும் சில ரகசியங்களும்...! (நிறைவு)

ஜனனி வேலை முடிந்து வீடு திரும்ப பொது பேருந்துக்காக காத்திருந்த வேளையில்,  அவளுக்கு சற்று அருகாமையில் ஒரு கார்  வந்து நின்றது. அந்தக் காரில் சிரித்த முகத்துடன் மூன்று பதின்ம வயதுப் பெண்கள் அமர்ந்திருந்தனர். ஜனனி கவனித்துக் கொன்டிருக்கும்போதே அதில் ஒரு பெண் காரின் கதவைத் திறந்து கொன்டு அவளை நோக்கி வந்தாள்.

பதின்ம வயதுக்கேயுறிய துள்ளல் நடை, குறும்புப்பார்வையோடு காட்சியளித்தாள் அப்பெண், மிகவும் மெலிந்த தேகம், அவள் தன் தலைமுடியை அள்ளி உச்சியில் குதிரை வால் இட்டிருந்தாள்,  அவளின் சிறிய முகம் நிறைய பருக்கள். கைவளையல் அகலத்தில் காதில் வளையம். அழுத்தமான உதட்டுச் சாயம், நக‌ப்பூச்சுகளோடு, உடலைக்கவ்விப் பிடித்திருக்கும் இறுக்கமான கருமை நிற பனியன், ஜீன்சு காற்சட்டை என
நவநாகரீக யுவதியாகக் காட்சியளித்தாள் அப்பெண்.

அவள் ஜனனியின் அருகாமையில் வந்து, "அக்கா, இங்கே தாமான் பாய்டூரி எங்கே இருக்குன்னு தெரியுங்களா? எனக் கேட்டாள், அது ஜனனி வாழும் குடியிருப்பும் கூட...!

உடனே ஜனனி, "இப்படியே நேரா போனா கொஞ்ச தூரத்திலே ஒரு ட்ராஃபீக்(சாலை சமிக்ஞை விளக்கு) வரும், அங்கே இடது பக்கம் திரும்பி நேரா போனீங்கன்னா, ஒரு மாரியம்மன் ஆலயம் அதற்கடுத்து கொஞ்ச தூரத்தில் தாமான் பாய்டூரி போர்டு இருக்கும் பாருங்க, அது தான் தாமான் பாய்டூரியின் நுழைவாயில் என வழியைக் குறிப்பிட்டுச் சொன்னாள்.

அதற்கு அந்தப் பெண் "ரொம்ப நன்றிங்கக்கா, நீங்க எங்கேக்கா இருக்கீங்க ? என நட்போடு கேட்டாள், ஜனனி வெகு சகஜமாக தானும் அதே தாமானில் தான் குடியிருப்பதாகக் அவளிடம் கூறினாள். அதற்கு அவள் "சரிங்கக்கா நான் வரேன் எனக் கூறிவிட்டு காரிடம் சென்றவள், வாகனமோட்டும் இன்னொரு பெண்ணிடம் ஏதோ பேசிவிட்டு மீண்டும் ஜனனியிடம் வந்தாள்.

"அக்கா, நாங்க தாமான் பாய்டூரிக்குத்தான் போறோம், நீங்களும் கூட வந்தா இன்னும் வழி கண்டுபிடிக்க ஈசியா(சுல‌பமா) இருக்கும், அப்டியே உங்க வீட்டாண்ட உங்களை எறக்கி விட்ருவோம், என கேட்டுக்கொன்டாள் அப்பெண். "ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோவ் " எனும் சினிமா வசனம் போல் தனக்கு வந்த ஆபத்தும் அப்போது கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாது போய்விட ஜனனியும், அவளுக்கு சரியென தலையாட்டி சம்மதம் தெரிவித்தாள். மனதுள் "ஆமாம் இந்த பஸ்ஸூக்கு காத்திருந்து ரொம்ப லேட்டாயிருமே, பெசாம இந்த சின்னப் பொண்ணுங்களோட காரில போயி வீட்டிலேயே இறங்கிக்கலாம் என ஆனந்தமடைந்தாள்.


அவளை அழைத்து வந்த பெண்  காரின் முன்னிருக்கையில் அவளை அமரச்செய்துவிட்டு, வாகனமோட்டும் பெண்ணை நோக்கி அர்த்தபுக்ஷ்டியான பார்வை ஒன்றை வீசிவிட்டு பின்னாலிருந்த‌ இன்னொரு பெண்ண‌ருகில் அமர்ந்து கொன்டாள். கார் புற‌ப்பட்டது.

சற்று தாட்டிகமாகவும், மாநிறமாகவும் காணப்பட்ட வாகனமோட்டும் பெண் அவளை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு காரை செலுத்த ஆரம்பித்தாள், காரின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது.... 

காரில் உள்ளூர்ப் பாடல் ஒன்று சத்தமாக ஒளியேறிக் கொன்டிருந்தது.
அது ஒரு நகைச்சுவைப்பாடல், பிரபலமான உள்ளூர்ப் பாடகர் ஒருவரின் படைப்பு. தனக்கு மண‌முடிக்க பெண் கிடைக்காத கொடுமையை இனிய பாட‌லாக வடிவமைத்துப் பாடியிருந்தார், இடையிடையே பாடலில் மலாய் வர்ர்த்தைகள் வேறு..!

பாடலில் மெய்மறந்திருந்தாள் ஜனனி, அச்சமயம் அவள் சற்றும் எதிர்பாரா விதமாய், அவள் பின்னால் அமர்ந்திருந்த பெண் (அவளை அழைத்து வந்தவள்) பின்னாலிருந்து ஒரு முரட்டுத்துணியை அவள் முகத்தில் போர்த்தி அதை இறுக்கி முறுக்கத் தொடங்கினாள். இதை சற்றும் எதிர்பாராத ஜனனி நிலை தடுமாறிப் போனாள்..!

துணி அவள் முகத்தை இறுக்க அவளுக்கு பொறி கலங்கிப் போனது, நொடியில் நிதானித்துக் கொன்டவள் கால்களை உதைத்துக்கொன்டு போராட ஆரம்பித்தாள். தனது கைகளை ஒருத்தி பற்ற முயல்வதை உணர்ந்தவள் வெகு வேகமாய் தனது பலமனைத்தும் திரட்டி திமிறினாள். அவள் ஓங்கி வீசிய அவள் கரம் பக்கத்தில் அமர்ந்து வேகமாக காரை ஓட்டிக் கொன்டிருந்த பெண்ணின் முகத்தில் பதிந்து அவள் முகத்தை பிராண்டி பதம் பார்க்க ஆரம்பித்தது.

காந்தியடிகள் கூறியது போல ஒரு பெண்ணுக்கு அவள் நகமும், பற்களும் சிற‌ந்த ஆயுதங்கள் என்பது அங்கே மெய்யானது, நன்கு பராமரிக்கப்பட்டு நீள‌மாய் வளர்ககப்பட்டிருந்த ஜனனியின் நகங்கள் அந்தக் காரோட்டிப் பெண்ணின் முகத்தை நன்கு பதம் பார்த்தது. அவள் நெற்றி, முகம், கன்னம், மூக்கு, உதடு என ஆழமாய் பிராண்டியதில் அவள் முகத்தில் தோல் கிழிந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது, இதைச் சற்றும் எதிபாராத அப்பெண் நிதானமிழந்து காரை தட்டுத்தடுமாறி  செலுத்தலானாள்.

அதே சமயத்தில் காரின் தடுமாற்றத்தால் ஜனனியின் முகத்தில் துணி போர்த்தி முறுக்கியிருந்த பெண்ணின் பிடியும் தளர, அதுவே சமயமென தன் முகத்தைக் கவ்வியிருந்த துணியை முழு பலங்கொன்டு பறித்து வீசினாள் ஜனனி.

காரை நிறுத்தினாள் மாட்டிக்கொன்டு விடும் பயத்தில் கார் எங்கும் நிற்காமல் தட்டுத் தடுமாறி ஓடிக் கொன்டேயிருந்தது. பின்னாலிருந்த இரு பெண்களும் ஜனனியை மாறி மாறித்தாக்கினர். அவ‌ளை மயங்கச் செய்து அவள் அணிந்திருக்கும் நகைக‌ளை பறித்து செல்வது அவர்களின் நோக்கமாயிருந்தது. ஆனால் தன் அண்ணனிடம் ஓயாது போரிட்டு அடிதடியிலும் இறங்கி ஆணுக்கு நிகராக மல்லுகட்டும் ஜனனியிடம் அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை ! முக்ஷ்டியை முறுக்கி மாங்கு மாங்கு என்று எண்ண‌ற்ற குத்துகளை அப்பெண்களுக்கு வஞ்சனையின்றி வாரி வழங்கினாள் ஜனனி..!

அதே சமயத்தில் அந்தக் காரிலிருந்து வெளியேற‌ இன்னொரு கையால் காரின் கதவை திறந்து விட்டாள் ஜனனி. அவளிடமிருந்து தப்பிப்பதற்காக அவளை காரிலிருந்து பிடித்து வெளியே தள்ளினார்கள் அந்தப் பெண்கள். காரிலிருந்து வெளியே விழுந்த ஜனனியின் காற்சட்டையோ அந்தக் காரின் கதவிடுக்கில் மாட்டிக்கொன்டது, நிற்காமல் ஓடிக்கொன்டிருந்த அந்தக் கார்

ஜனனியை சாலையில் இழுத்துச் சென்றது. சற்று தூரம் அவளை இழுத்துச் சென்ற அந்தக் காரிலிருந்து அவள் காற்சட்டை கிழிந்து சாலையில் விழுந்தாள் ஜனனி ! அவளைத்தள்ளிவிட்டதோடு நெருப்பாய் பறந்து சாலையில் மறைந்துபோயினர் அந்தக் காரும் அது சுமந்திருந்த அந்தப் பெண்களும்.

நல்ல வேளை , ஜனனியின் வீரம் அன்று அவளை அப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது. அவ்வேளை சாலையிலும் அவ்வளவாக வாகனம் இல்லாததால் அவள் பிழைத்தாள். இல்லையேல் அவள் பாடு பெரும்பாடாகிப் போயிருக்கும்.

ஜனனி, தட்டுத் தடுமாறி எழுந்து சாலை ஓரத்தில் நின்று தனது ஆடைகளை சரி செய்தாள் . அவள் கைகளும் உடலின் பல பாகங்களும் சாலையில்
உராய்ந்த்தில் தோல் உரிந்து, இரத்தம் கசிந்து  எரிச்சல் ஏற்படத் துவங்கியது.

இவற்றையெல்லாம் கண்ணுற்று,அவளை நோக்கி வந்த ஒரு சீன ஆடவர், 
சற்று தூரத்தில் விழுந்திருந்த அவள் கைப்பையை எடுத்து அவளிடம் நீட்டினார். என்ன நடந்த்து ? பாலாய்க்கு (காவல் துறைக்கு ) அல்லது கிளினிக்குக்கு  அழைத்துச் செல்லவா எனப் பரிவுடன் கேட்டார். ஆனால் ஜனனிக்கோ சற்று முன் கற்ற அந்தப்பாடமே வாழ் நாள்வரை போதும் எனும் எண்ண‌த்தோடு, அவருக்கு ஒரு ந‌ன்றியை சமர்ப்பித்து விடைகொடுத்து அனுப்பினாள்.

அருகாமையிலிருந்த பேருந்து நிறுத்துமிடத்தை நோக்கி மெல்ல மெல்ல நடந்து சென்றாள் ஜனனி. அவள் கண்களில் வலி கலந்து வழிந்த கண்ணீரோடு அத்தனை நாளும் அவளைப் பேயாய் பிடித்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த  நகைமோகமும் சொல்லாமல் கொள்ளாமல் கரைந்தோடிக்கொன்டிருந்தது !   

  

No comments: