.

.
.

Thursday, October 10, 2013

டாக்டர் மு.வ நினைவு நாளும் நமது இளைய தலைமுறையினரும்தமிழ்கூறு நல்லுலகம் மறக்கவியலா மாபெரும் இலக்கியவாதி, தமிழ்ப்  பேராசிரியர் டாக்டர் திரு.மு.வ. அவர்களின் நினைவு நாள் இன்று (10/10/1974).

கண்ணைவிட்டுப் பிரிந்தாலும் கருத்தை விட்டு அகலாது, மண் விட்டு  மறைந்தாலும் மனதை விட்டு மறையாது இன்றும் தமது படைப்புகளின் வழி தமிழ் வாசகர்களின் இதயங்களில் சிம்மாசன‌ம் இட்டு அமர்ந்திருப்பவர் மு.வ என அன்போடு அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசனார்  என்றால் அது மிகையல்ல‌. அவரைப் பற்றி தமிழ் கற்றோர் யாவரும் ஓரளவு அறிந்தே வைத்திருப்பர். இருப்பினும் என்றும் வற்றாத இலக்கியச் செல்வங்களையும், தனிமனித வாழ்வியல் மற்றும் சமூகம் சார்ந்த தத்துவங்களையும், சீர்திருத்தக் கருத்துக்களையும், தமது கதாமாந்தர்களின் வாயிலாக இப்படி நாமும் நல்வாழ்வு வாழவேனும் எனும் வேட்கையை வாசகர்களின் மனதில் ஏற்படுத்தியவருமான டாக்டர்.மு.வ அவர்களையும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் ஓரளவேனும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.

தோற்றம்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியவாதி திரு.மு.வா
ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரிலே திரு.திருமதி முனிசாமி  அம்மாக்கண்ணம்மாளுக்கு 25‍-4-1912 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரின் முதற்பெயர் திருவேங்கிடம் என்பதாகும், எனினும் தாத்தாவின் பெயர் பேரனுக்கு எனும் மரபுவழி "வரதராசன்" எனும் பெயர் இவ‌ருக்கு சூட்டப்பட்டது.

இவர் சிற‌ந்த தோற்ற‌ப் பொலிவும், புன்னகை பூத்த வதனமும், அன்பும், அறிவும் பொழியும் கண்களுமாக விளங்கியவர்.   அது மெய்யென்பது அவரது புகைப்படங்களை காணும் பொழுது புலனாகிற‌து.

இவர் நல்ல மனமும், பண்பட்ட நெஞ்சமும், இழப்புகளை எண்ணி வருந்தாத மனப்போக்கும். நேரத்தை கண்ணெனப் போற்றும் தகைமையும், கடமை உண‌ர்வில் சிறந்தும்  விள‌ங்கியவர்.

கல்வி
இவர் தமது ஆரம்பக்கல்வியை வேலத்திலும், வாலாசாவிலும் முடித்து திருப்பத்தூரில் தமது உயர்கல்வியை கற்றார். தொடர்ந்து முருகய்ய முதலியாரிடம் தமிழ் கற்று தமிழ்ப் புலவர் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றார், அதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு தமிழ்த் தேர்வில் சென்னையிலேயே முதல் நிலை மாணாக்கராக தேறி  ரூ.1000 திருப்பனந்தாள் பரிசை வாகை சூடினார். 1939ல் பி.ஓ.எல் பட்டமும், 1944 இல் எம்.ஓ.எல் பட்டமும் பெற்றார். இறுதியாக 1948 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன் முதலாய் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவர் 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரியில் இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) எனும் சிற‌ப்புப் பட்டத்தை முதல் முறையாக பெற்ற தமிழறிஞர் எனும் பெருமை கிடைக்கப் பெற்றார்.

இவர் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார்.

தொழில்
1928ல் தாலுகா அலுவலகத்தில் ஒரு எழுத்தராக மு.வ தமது பணியைத் துவங்கினார்.அதன் பின்னர் ஆசிரியப்பணியில் கால் பதித்து நகராட்சி உயர் நிலைபள்ளி ஆசிரியர்(1935), பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் (1939-1944) வரை பணியாற்றினார்.

1945 ஆம் ஆண்டு இவர் தாம் விரிவுரையாளராக பணி புரிந்த பச்சையப்பன் கல்லூரியிலேயே தமிழ்த் துறைத் தலைவராக பதவி வகித்தார்.

தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துணைப்பேராசிரியர்
பதவி(ஓராண்டு) வகித்த பின்னர் (1961‍-1974) வரை மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவராகவும் இறுதியில் 1961-1974 வரை மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் சிற‌ப்பாக பணியாற்றியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை
இவர் தமது மாமா மகள் இராதா அம்மையாரை 1935 ஆம் ஆண்டு திருமண‌ம் புரிந்து கொன்டார். இவ்விணையருக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என மூன்று செல்வங்கள், அவர்கள் மூவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருவதாகவும் அறியப்படுகிற‌து.


தமிழ்த்தொண்டு
தமிழ் இலக்கிய வானில் என்றும் மங்காத சூரியனாகப் பிரகாசிக்கும் திரு. மு.வ அவர்கள் மிகச்சிற‌ந்த 13 நாவல்கள், சிறுகதைகள், சிந்தனைக்கதைகள், நாடகங்கள், கட்டுரை நூல்கள், இலக்கியப் படைப்புகள், சிறுவர் இலக்கியங்கள், கடித இலக்கியங்கள், பயண இலக்கியங்கள், இலக்கிய வரலாறு, மொழியியல் படைப்புகள், வாழ்க்கை வரலாறுகள், ஆங்கில நூல்கள், சிறுவர் இலக்கண நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு நூல்கள் என எண்ண‌ற்ற எழுத்துப்படிவங்களை பாங்குற வடிவமைத்துப் பாருக்குத் தந்தவர், மக்கள் படித்துப் பயனடையச் செய்தவர்.

தமிழன்றிப் பிற‌மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன,

இவரின் சிற‌ந்த படைப்புகளுள் ஒன்று "அகள் விள‌க்கு" புதினம். இரு நண்பர்களின் வாழ்வை மையமாக வைத்து உருப்பெற்ற காவியம். அவர்களில் ஒருவர் தமது சிற‌ப்புகளை தவறாகக் கையாண்டு இறுதியில் சோகமான முடிவை அடைவதைச் சொல்லும் அற்புத எழுத்தோவியம். இப்படைப்பு ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும், எப்படி வாழக்கூடாது என்பதையும் இரு கதாமாந்தர் வாயிலாக விளக்குகிற‌து. இந்நாவல் இந்திய ஜனாதிபதியின் "சாகித்திய அகாடமி விருது" பெற்றது. மிக மிக அருமையான நெஞ்சைத்தொடும் நாவல். ஆழ்ந்து வாசிப்பவர்களை முடிவில் நிச்சயம் அழவைத்துவிடும் நாவல்.

இவரின் ஏனைய எழுத்துச் சித்திரங்களான "கள்ளோ காவியமோ" (இல்லற வாழ்விற்கு வழிகாட்டியாகத் திகழும் நாவல்), அரசியல் அலைகள், மொழியியற் கட்டுரைகள் ‍ஆகியவை சென்னை அரசாங்கத்தின் பரிசுகளை வென்றுள்ளது.

இவையன்றி இவரின் "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்", "மொழி நூல்", "கள்ளோ, காவியமோ" ?, "விடுதலையா"? "அரசியல் அலைகள்", "ஓவச் செய்தி" ‍ ஆகிய படைப்புகள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்கள் பெற்றவையாகும்.

இவர் கைவண்ணத்தில் 1948 இல் பொதிகைப் பதிப்பகம், கடலூரிலிருந்து திருவள்ளுவர் அல்லது வாழக்கை விளக்கம் என்னும் நூல் வெளியீடு கண்டது இந்நூலுக்கு  தமிழறிஞர் திரு வி.க அவர்கள் தமது முன்னுரையில் " வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சின்றும் அரும்பும் கருத்து சிந்தனைக்குரியது" என சிறப்பித்து கூறியிருக்கிறார்.

1949 இல் சைவசித்தாந்த நூற் பதிப்பகத்தின் வாயிலாக திருக்குறள் தெளிவுரை வெளியிடப்பட்டது. இவரின் படைப்புகளில் மிகவும் பிரபலமானதும், வணிக ரீதிரியில் மிகப்பெரிய வெற்றியையும் ஈட்டியது இவரின் திருக்குறள் தெளிவுரை நூலாகும். பல பதிப்புகள் கண்ட இந்நூலில் தற்சமயம் கைவசம் இருப்பது 110 வது பதிப்பு...!(1991). எளிமையாகவும் தெளிவாகவும் படைக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். பள்ளிச்சிறார்களும்  திருக்குறளை எளிதில் வாசித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டிருப்பது இப்படைப்பின் தனிச் சிறப்பாகும்.

 மறைவு
தமது 62 அகவைக்குள் 85 நூல்கள் இயற்றி தமிழுக்கு சிற‌ந்த தொண்டாற்றிய மு.வ. அவர்கள் தமது 10‍-10-1974 (இன்றோடு இவர் மறைந்து 39 ஆண்டுகள்) நாள‌ன்று  சென்னையில் இறைவனடி எய்தினார். அவர் புவிவிட்டு மறைந்தாலும், புகழுடம்போடு இன்றும் அவர் எழுத்தோவியங்களை வாசித்து பயன் பெறும் வாசக நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை இன்றளவும் இலக்கியவாதிகளால் அவர் விமர்சிக்கப்பட்டு வருவதிலிருந்தே நம்மால் உணர முடிகின்ற‌து. 

மு.வ ‍ - முன்னேற்றப்பாதைக்கு ழிகாட்டி என அவர் படைப்புகளை வாசித்து பயனடைந்தவர்களால் போற்றப்படுபவர். இவரின் ஒருசில படைப்புகளை வாசித்து பயனடைந்ததுண்டு. இப்பதிவின் நோக்கம் தமிழ் இலக்கிய வானில் என்றும் ஒளிவீசும் நிறைமதியான அறிஞர் மு.வ அவர்களை நினைகூர்வதோடு....
இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் நம் பொருளாதார, அரசியல், கல்வி நிலைகள் வருத்தத்திற்குரிய நிலையில் இருப்பது யாவரும் அறிந்ததே. இதன் விளைவாக‌ நமது இளைஞர்கள்  வன்முறைக்கலாச்சாரத்தில் நாட்டம் கொன்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்டு துப்பாக்கிக்குண்டுகளுக்கு நாளும் இரையாகி வருவதும் நாமறிந்த சங்கதிகளே..!

இருப்பினும் புற்றீசல்களாய் புற‌ப்பட்டு, கரையான்களாய் நம்மினத்தை அழிக்கும் இந்த பெரும் பிரச்சனையை களைந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம்..!   நம் இனத்தை , கலாச்சாரத்தை, பண்பாடு, மொழி ஆகியவற்றை நாளை தாங்கப்போகும் நமது தூண்களை காலனுக்கு பலியாக்கிக் கொன்டு வரும் இச்சூழ்நிலைகளைத் தடுக்க  நமது பங்காக நாமும் சில கடமைகளை ஆற்ற வேண்டும். நாம் படித்து, நல்ல தொழில் புரிந்து, நிறைய பண‌ம் ஈட்டி பெரிய வீடு,  கார், கையிலே பணம் என எல்லா வசதிகளோடும் வாழ்ந்து விட்டால் மட்டும் போதாது. இதன்வழி மட்டும் நம் வாழ்க்கை மேம்பட்டதாக, பாதுகாப்பானதாக அமைந்துவிடாது,  நாளை நமது இளைய தலைமுறையினர் கெளரவமாக இந்நாட்டில் வாழ வழி பிற‌ந்தும் விடாது.

இதைக்களைய நாம் செய்யவேண்டிய பல காரியங்களுள் மிகப்பெரிய நற்காரியம் இள‌ம்பிராயத்திலேயே நமது இளைய தலைமுறைகளை நன்னெறிப்படுத்துவதாகும். அதற்கு ஏதுவாக நற்பண்புகளை ஊட்டும், ஒழுக்கத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் மு.வ போன்ற அறிஞர்களின் படைப்புகளில் அவர்களை ஈர்ப்புகொள்ளச் செய்ய வேண்டும், அதற்கு முதலில் அவர்கள் வளமான தமிழை நலமாகக் கற்க‌, தமிழ்ப்பள்ளியில் பயிலவேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும்.  இந்த சமுதாய‌மும் ஒருங்கிணைந்து அதற்காக ஆவன செய்யவேண்டும்.

சீனர்கள் பல வழிகளில் ஏன் தாங்கள் அருந்தும் மதுவின் வழிகூட‌ தங்கள் இனப் பள்ளிகளுக்கு பங்களிப்பு செய்கின்றார்கள், நாம் இன்றைய நமது தலைமுறையை நன்னெறிகள் ஊட்டி நல்வழிப்படுத்த  இதுபோன்ற‌ வழிகளைக் கையாளத் தயங்கக்கூடாது. நமது இளைய சமுதாயத்தை மீட்டெடுப்பது நமது கடமை. தடுக்க மறந்து வாளாவிருந்தால் ஒரு நாள் நமது இளைய தலைமுறையின் வன்முறை நம்மையே பாதிக்கக்கூடும், அல்லது நாளை நமது இள‌வல்களும் வன்முறையாள‌ர்களாக வடிவெடுக்க அது வகை செய்யக்கூடும்.
1 comment:

Sathis Kumar said...

சிறப்பான கட்டுரை. இந்த கட்டுரை தமிழ் நாளேடுகளிலும் இடம்பெற ஆவண செய்யுங்கள்.