.

.
.

Saturday, August 24, 2013

 யதார்த்தவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும்...!(2)

 

அம்மா, அம்மா என தன்னை அழைத்தபடி   ஒரு மூதாட்டி தனக்குப் பின்னால்

நின்றிருப்பதைக் கண்டதும், ஆச்சரியத்துடன் சாந்தி அவரை ஏறிட்டு நோக்கினாள்  , சுமார் 70 அல்லது 80 வயது மதிக்கத்தக்க அம்மூதாட்டி பச்சையும் சாம்பலும் கலந்த பட்டுப்படவையில் பாந்தமாக, படிய வாரி சிறியதாகக் கொண்டையிட்ட கேசம் துவங்கி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, காதிலே எட்டுக்கல் தங்கத்தோடு, கழுத்திலே சங்கிலி என நல்ல வசதியான தோற்ற‌த்தோடு மங்களகரமாக காட்சியளித்தார்.

"ஏன் பாட்டி, என்னையா கூப்பிட்டீங்க? என வியப்புடன் கேட்டாள் சாந்தி, அதற்கு அந்தப் பாட்டி லேசாகச் சிரித்தபடி," ஆமாம்மா பாட்டி இதோ இந்த பேக்க தூக்க முடியாம தவிச்சு கிட்டு நிக்கிறேன்மா, யாரையாச்சும் உதவி கேட்கலாம்னு பார்த்திருந்தேன், உன்னைப் பார்த்தேன், பாட்டிக்கு கொஞ்சம் உதவி செய்யுறியாம்மா ? உனக்கு புண்ணியமாப் போகும், பாட்டி அத்தனை நைச்சியமாக தன்னை பாட்டி, பாட்டி என விளித்துக்கொன்டு சாந்தியை மூளைச்சலவை செய்தாள்.

இயற்கையிலேயே மிகவும் பரந்த மனப்பான்மை கொன்ட சாந்திக்கு அப்போழுது தூக்கக் கலக்கம் வேறு! மனம் சமயோசிதமாக எதையுமே யோசிக்கவில்லை, வயசான பாட்டிதானே, என்ன வந்துவிடப் போகுது என யதார்த்தமாக நினைத்துக்கொன்டு " சரி பாட்டி , வாங்க நான் உங்களுக்கு உதவி செய்யுறேன், எனக் கூறி பாட்டியின் காலடியில் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய கருமை நிற பையை கையில் எடுத்துக் கொன்டாள்.

உண்மையிலேயே அந்தப் பை மிகவும் கனமாக இருந்தது, "என்னப் பாட்டி பேக்கு இவ்ளோ கனமா இருக்கு ? பாட்டியை நோக்கி கேள்விக்கணை தொடுத்தாள் சாந்தி, சற்று அதிர்ச்சியுற்றாலும் சாமர்த்தியமாய் மறைத்துக்கொன்டு, இல்லேம்மா எல்லாம் வெறும் புடவைங்கதாம்மா, வேற ஒண்னும் இல்லை என‌ போலியாய்ச் சிரித்தாள் பாட்டி, அவளின் பொல்லாத நோக்கம் புரியாத சாந்தி, நரியின் வஞ்சகத்திற்கு இரையான ஆட்டைப்போல தலையாட்டி அவள் கூற்றை ஏற்றுக் கொன்டு அந்தப் பையை தூக்கிக் கொன்டு நடந்தாள்.

அந்தக் கிழவி சாந்தியை  முன்னே நடக்கச் செய்து விட்டு , சற்றுப் பின் தங்கி மெல்லப் பின்னால் தலை குனிந்தவாரே தனது இடையில் சொறுகியிருந்த சுருக்குப் பையை கையில் வைத்து எதையோ துளாவுவதாய் பாவனை செய்தபடி மெல்ல நடந்தாள். சாந்திக்கு மீண்டும் தொழிற்சாலை பேருந்தை அடைய வேண்டிய அவசர நிலை வேறு, எனவே பாட்டியின் பையுடன் முடிந்தளவு வேகமாக நடந்தாள்.

சற்று தூரம் நடந்த பின், பின்னாள் திரும்பி வாங்க பாட்டி என அந்த மூதாட்டியை தன் உடன் வருமாறு அழைத்தாள், அவளோ தந்திரமாக, வேகமா நடக்க முடியலேம்மா, முட்டி வலி, நீ வயசுப் பிள்ள வேகமா நடக்கலாம் என்னால முடியுமா? , தோ, உன் கூடவே வரேன், நீ போம்மா என்றாள், சரி பாட்டி என முன்னால் நடந்தாள் சாந்தி.

கடப்பிதழ் சோதனை கடந்து வெளியேறும் நுழைவாயிலை நெருங்கிக் கொன்டிருந்த போது, ஒரு அதிகாரி விரைந்து வந்து அவளைத் தடுத்து நிறுத்தினார். "உங்கள் பையை பரிசோதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

அவள் கையிலிருந்த அந்த பிரயாணப் பையை பரிசோதனை மேசையின் மேல் வைக்கும்படி பணித்தார். சாந்தி உடனே "இது என் பை இல்லை, இந்த பாட்டியுடையது" எனக் கூறியவாறே பாட்டியைக் காண்பிக்க பின்னால் திரும்பினாள், பின்னால் கண்ணுக் கெட்டிய வரை பாட்டியின் நிழலைக்கூட காண முடியவில்லை, பரிசோதனை என வந்ததும் அம்மூதாட்டி அவ்விடத்தினின்று மாயமாகிப் போய் எங்கோ ஒளிந்து விட்டாள்.

அவ்விடம் முழுதையும் கண்களால் அலசி ஆராய்ந்தாள் சாந்தி, எங்குமே அந்தப் பாட்டி தென்படாதது கண்டு துனுக்குற்றாள், அதிர்ச்சியுடன் திரும்பியவளை ஒரு மாதிரியாக மேலும் கீழும் பார்த்தபடி, அவள் தூக்கி வந்த பையை பரிசோதிக்க ஆரம்பித்தார் அந்த அதிகாரி, அவர் அனுபவத்தில் எவ்வளவு பேரை பார்த்திருப்பார் !? 

கவனமாக ஆராய்ந்ததில், உள்ளே துணிமணிகளில் சுற்ற‌ப்பட்டு மிகவும் லாவகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தமது கையை விட அகலமான அந்த‌ வெண்ணிற பொட்டலங்களை , வெளியே எடுத்து வைத்தார். சாந்தி அதிர்ச்சியில் சிலையாகிப் போய் நின்றாள்.விடயம் தெரிந்து மேலும் அதிகாரிகள் அங்கே கூடினர். அனைவரும் சாந்தியை பார்த்தபடி தங்களுக்குள் பேசிக் கொன்டனர். 

அங்கே நடமாடிக் கொன்டிருந்த மக்களும் அவ்விடத்தில் ஏதோ விபரீதம் என்பதையுண‌ர்ந்து நின்று கவனிக்க ஆரம்பித்தனர், ஓர் அதிகாரி அந்தப் பொட்டலத்திலிருந்த பொருளை ஆராய்ந்து விட்டு அவளை நோக்கி "நீ போதைப்பொருளை கள்ளக்கடத்தல் செய்கிறாயா " என ஆங்கிலத்தில் அவளை கேட்க, ஏற்கனவே அங்கு நடந்தவற்றை ஊகித்து நிலைகுலைந்து போயிருந்த‌ சாந்தியை, அதிகாரியின் கேள்வி மேலும் பயமுறுத்த‌ அவள்  கண்கள் கலங்க, இல்லை! இல்லை! என அலறிப் புலம்பியவாறே கீழே சரிந்தாள். கண்கள் இருள, கொடிய ராட்சத‌ தீ நாக்குகள் நீண்டு சுழலும் அதள பாதாள‌த்துள் தாம் அள்ளி வீசி எறியப்படுவதாய் மனசு உணர‌ நடுநடுங்கிப் பயத்தில் மயங்கி விழுந்தாள்.

அவள் மயக்கம் தெளிவித்து, கொடிய போதைப்பொருளை பெருமளவு கள்ளக்கடத்தல் செய்த குற்றத்திற்காக‌, கைவிலங்கிட்டு, அவளை  தடுப்புக் காவலில் வைத்தனர்.

சாந்தியின் குடும்பத்தினர்க்கு செய்தி போனது, அதிர்ச்சியில் மொத்தக் குடும்பமும் அரண்டு போனது. அய்யோ!  என அலறிப் புலம்பினார் சாந்தியின் தாய். நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் சுக்கு நூறாய் நொறுங்கிப் போனது சந்திரனின் இதயம்....!

உடனே சாந்தியின் பெற்றோர்  சந்திரனை அழைத்துக்கொண்டு சாந்தியை காண‌ச் சென்ற‌னர். தடுப்புக் காவலில் சோகமே உருவான‌ சாந்தியைக் கண்டு அவள் பெற்றோர் வாய்விட்டுக் கதறினர். சந்திரன் அவளை ஏறிட்டு நோக்கியபடி மெளனமாய் நின்றான், புயலடிக்கும் அலைகட‌லாய் அவன் மனம் ஆர்ப்பரித்துக் கொன்டிருந்தது. அவன் கண்களில் மல்கிய கண்ணீர், கன்னங்களில் வழிந்து மேலாடையை நனைத்தது.

சாந்தியால் பேசக்கூட முடியவில்லை, நடந்த சம்பவங்களால் மிகவும் அதிர்ச்சியுற்று பிரமை பிடித்து நின்றாள். தடுப்புக்காவலை தாண்டி அவள் ஆன்மா சந்திரனைப்பற்றிக்கொன்டு அந்தச் சிறைபிலிருந்து விடுபட துடியாய்த் துடித்தது. வெளி நாட்டு சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தான் விடுதலை அடைவோமா ?, மீண்டும் சந்திரனின் கைகளை பற்றிக் கொன்டு சுதந்திரக் காற்றை சுவாசிப்போமா ? என சாந்தியின் மனம் நொடிக்கு நூறு தடவை ஏங்கித் தவித்து, ஓலமிட்டுக் கதறியது.    

சாந்தி கைதான சம்பவம் இரு நாட்டு நாளிகைகளிலும் செய்தியாக வெளிவர ஊருக்கே அந்த சம்பவம் தெரிந்து போனது. சாந்தியின் பெற்றோர் காதுபடவே, அவளை தவறாக விமர்சித்து அவர்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினர் மனிதப் போர்வை போர்த்திய சில மனிதாபிமானமற்ற‌ அக்கம் பக்கத்து குடியிருப்பு வாசிகள்.

வழக்கு விசாரணைக்கு வந்தது, அவள் நிலை கேள்விக்குறியானது.

எதிர்வரும் பதிவில் இத்தொடர் நிறைவு பெறும்....

தொடரும்...