.

.
.

Wednesday, August 21, 2013

யதார்த்தவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும்...!அழகான அண்டை நாடு...! சுபிட்சத்திற்கும், சுத்தத்திற்கும் பெயர் பெற்ற நாடு.  தொழில் வாய்ப்புகள், கல்வி , மருத்துவம் என சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி அருகாமையிலுள்ள ஏனைய நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் நாடு...! நாட்டின் சட்ட திட்டங்களையும், அதன் அமுலாக்கங்களையும் மிகவும் நேர்த்தியாக அனுசரித்துவரும் நாடு .


சாந்தி, எஸ்.பி.எம் படிப்பை அவள் முடித்து சில வருடங்கள் கடந்திருந்தன‌. சுமாரான தோற்றமும், நடுத்தர உயரமும் கொன்டவள், நல்ல சிநேகபாவம், யாரையும் எதிர்நோக்குங்கால் மதித்துப் புன்னகைக்கும் கணிவானவள்.
அவளுக்கு பக்கத்து நாட்டில் வேலை கிடைத்து மூன்று வருடங்களாக அங்கே பணியாற்றி வந்தாள். அங்கே உயர்தரமான கணினி தொழிற்சாலை ஒன்றில் அவளுக்கு தொழிற்சாலை ஊழியராக வேலை கிடைத்திருந்தது.

ஒவ்வொரு முறையும் வேலை முடித்து தொழிற்சாலை பேருந்தில் பயணித்து இரு நாட்டு சுங்கச் சாவடிகளையும் கடந்து வீடு திரும்புவாள். நாணய மதிப்பில் அந்நாடு உயர்ந்திருப்பதால், இரு மடங்கு வருமானம் கிடைப்பதை உத்தேசித்து அவளைப்போலவே ஆயிரக்கணக்கானோர் நாடு கடந்து பயணித்து, பணியாற்றி வீடு திரும்புவர் அங்கே..!  


திருமண வயதை நெருங்கிய அவளுக்கு, அவள் வீட்டில் மணமுடிக்க முடிவெடுத்திருந்தனர். மண‌மகன் அவள் மனங்கவர்ந்தவன். ஒரே குடியிருப்பைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாய் படித்து, ஒன்றாகவே இதயத்தையும் இடம் மாற்றிக் கொன்டவர்கள் அவர்கள் இருவரும், இரு குடும்பமும் நல்ல நெருக்கம், எனவே மணமுடிக்க எந்தத் தடையும் இல்லாது, இனிதே கலந்து பேசி கூடிய விரைவில் அவர்களுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தனர் இரு வீட்டாரும். மணமகன் சந்திரன்,  களையான முகமும், உயரமான தோற்றமும் கொன்டிருந்தான். சொந்த நாட்டில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தான்.

திருமணமாக இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியிருந்தன, சாந்தியை வேலையை விட்டு விலகும்படி சந்திரனும், அவள் குடும்பத்தினரும் வலியுறுத்தினர். சந்திரன் , திருமண‌த்திற்குப்பின் சாந்தி வேலைக்கு செல்லக்கூடாது என அன்புக் கட்டளையிட்டான். தன் பணியிடத்தில் வேலை நிறுத்த கடிதம் கொடுத்தாள் சாந்தி. நல்ல வேலை, நிறைவான வருமானம் இதைப் போய் விடுவதா என சாந்திக்கு வருத்தமாக இருந்தது, இருப்பினும் அனைவரும் விரும்பியபடி முடிவெடுத்தாள், மனதுள்ளோ, இது சரிப்பட்டு வராது, சில காலம் கழித்து சந்திரன் மனதை மாற்றி வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் என தனக்குத்தானே சமாதானம் செய்து கொன்டாள்.

காலம் கரைந்து கொன்டிருந்தது, திருமண நாள் இன்னும் இரு வாரங்களில், அவள் வேலையை விட்டு, திருமதி. சந்திரன் எனும் அடைமொழியோடு இல்லத்தரசியாக பதவி உய‌ர்வு பெரும் நாள் நெருங்கிக் கொன்டிருந்தது.

அன்று அவளுக்கு இரவு நேரப் பணி, மாலை ஏழு மணிக்கு வேலை துவங்கி மறு நாள் காலை ஏழு மணிக்கு வேலை முடிவுறும். இரவில் கண்விழித்துப் பணிபுரிந்த அயர்வோடு, மறுநாள் காலை வேலை முடிந்து பேருந்து இருக்கையில் உறங்கியவாறே வீடு திரும்பிக் கொண்டிருந்தாள், "செக்போயின்ட் வந்துட்டது, எல்லோரும் போயி செக் பண்ணிட்டு வந்திருஙக" என பேருந்து ஓட்டுனர்   குரல் கொடுக்க அதுவரை கோழிதூக்கம் போட்டுக் கொன்டு வந்த சாந்தியும் ஏனைய தொழிலாளர்கள் அனைவரும் மெல்ல மெல்ல பேருந்தைப் பிரிந்து சுங்கச்சாவடியின் பரிசோதனை கடக்க உட்சென்றனர். பேருந்து ஓட்டுனர் அவ்வழியிலேயே பரிசோதனை கடந்து மறுமுனையில் தொழிலாளர்களுக்காக‌க் காத்திருந்தார்.

சுங்கச் சாவடி, பளிச்சிடும் மைதானம் போல் பரந்து விரிந்திருந்தது, ஆங்காங்கே ஒளிர்விடும் மின்சார விள‌க்குகள், இரு கைகள் இணைத்து அணைத்தாலும் கைகளுக்குள் வசப்படாத‌ பெரிய பெரிய உலோகத் தூண்கள், கண்ணாடியாய் பிம்பங்களை பிரதிபலிக்கும் சலவைக்கல் தரை. ஆங்காங்கே பணியிலிருக்கும் அதிகாரிகள், கூடவே இங்கும் அங்குமாய் பயணிகள் பலர்
பல நிறங்களில், பல மொழிகளின் துணையோடு அங்கே...

பிரமிப்பூட்டும் அந்தக் காட்சிகளை ரசிக்கும் நிலையில் இல்லாத சாந்தி களைப்போடு தனது சிறிய கைப்பையை தோளில் மாட்டிக்கொன்டு கடப்பிதழ் பரிசோதனைக்காக  விரைந்து 

கொன்டிருந்தாள், அப்போது அவள் பின்னாளிருந்து யாரோ அழைக்க நின்று

 பின்னோக்கி திரும்பினாள், அங்கே....

தொடரும்....