.

.
.

Thursday, March 27, 2014


 இருள் சிநேகிதி ‍ - மூன்றாம் பாகம்


இப்பூவுலகில் நாள்தோறும் பல்லாயிரம் உயிர்கள் பிறக்கின்றன, அதேபோல் இறக்கவும் செய்கின்றன, இருப்பினும் சிலரது பிற‌ப்புகள்  சரித்திரமாவதைப்போல்  சிலரது இறப்புகள் சர்ச்சையாகிவிடுகின்றன‌. பல்வேறு மர்ம முடிச்சுகளைத் தாங்கி முழுமையான, ஆதாரப்பூர்வமான முடிவுகள் ஏதுமின்றி MH370 விமானத்தில்  பயணித்தவர்களின்  வாழ்க்கைப்பயணமும் நடுக்கடலோடு சங்கமமாகிவிட்டது எனும் அனுமானமும் இப்பிரச்சனைக்கான‌ வழியைவிட வலியைத்தான் அதிகரிக்கின்றது.  சலனங்களும், சஞ்சலங்களும், சந்தேகங்களாய் தொடர, நமது பிரார்த்தனைகளும் அந்த விமானத்தில் பயணித்த அனைவருக்காகவும்...! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முன்கதை : பெற்றோரை இளம் வயதிலேயே பறிகொடுத்து தனது மாமனின் வீட்டில் வேலைக்காரியாய் அடைக்கலம் புகுந்த அழகான அபலைப்பெண் சரசு இராஜன் எனும் பணக்கார சண்டியர் ஒருவனுக்கு மனைவியாகிறாள். விதிவசத்தால் ஒரு கொலைக்குற்றத்தில் சரசுவின் கணவன்  மரணதண்டனைக் கைதியாகி சிறை செல்ல, அவனின் தாயாரால் வீட்டைவிட்டு அடித்து துரத்தப்படுகிறாள் சரசு, இனி....

போக்கிடம் இன்றி புகலிடமும் இன்றி தன் விதியை நொந்தவாரே வீதியில் கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள் சரசு. இராஜன் தாயாரின் இராட்சத‌ குணமறிந்த ஊர்மக்கள் யாரும் சரசுவுக்கு உதவ முன்வரவில்லை.

இந்த செய்தி அதே ஊரில் வாழ்ந்து வந்த நாதனுக்கும் எட்டியது. அவளுக்கு உதவ வேண்டும் எனும் வேட்கையுடன் அவன் அவளைத் தேடி விரைந்தான்.

அசோக‌ வனத்து சீதை போல வாடிய முகமும் வருத்தமளிக்கும் தோற்றத்துடனும் அவளைக் கண்டான். மிகவும் பரிதாபகரமாக காட்சியளித்தாள் சரசு. அவளை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான் நாதன். சரசுவின் கணவன் மகா முரடன், ஒரு வாலிபனின் வீட்டில் அவள் தங்கினாள் என்பதை அறிய நேர்ந்தால் தாங்கொனாத வருத்தமும் கோபமும் அவனுக்கு ஏற்படும், அதன் விளைவு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமோ என பயந்து பிடிவாதமாக ம‌றுத்தாள் சரசு. ஆனால் நாதன் அவளை விடுவதாயில்லை, ஆறுதல் வார்த்தைகள் கூறி விரைவில் அவளை அவள் கண‌வனை சந்திக்க அழைத்துச் செல்வதாகவும் அவனிடம் கலந்தாலோசித்து அவளுக்கு நியாயம் கோருவதாகவும் வாக்களித்தான் . அவன் வார்த்தையை நம்பி அவனைப்  பின்தொடர்ந்தாள் சரசு.

நடந்தவற்றை அறிந்த இராஜனின் தாயார், அவளூக்கு இழைத்த கொடுமைகள் போதாதென்று இராஜனின் மனதிலிருந்தே ச‌ர‌சுவை  தூக்கியெறிந்து, அவனுக்குப்பின் அவளுக்கு கிடைக்கப் போகும் சகாயங்களை அறவே கிடைக்க விடாமல் செய்ய கங்கணம் கட்டிக்கொன்டாள்.

தன் திட்டப்படி சரசுவை முந்திக்கொன்டு இராஜனை சிறையில் சந்தித்தாள் வழக்கப்படி தாய்க்கும் மகனுக்குமான சோக உபசார வார்த்தைகளுக்குப்பின் கதறிக் கதறி அழுது சரசுவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக வத்தி வைத்தாள் இராஜனின் தாய். சரசுவிற்கும் நாதனுக்கும் தகாத உறவு உள்ளதென்றும், தட்டிக் கேட்ட தன்னை தாக்கிவிட்டாள் எனவும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாள்.

ஆத்திரக்காரனுக்கு எப்போதுமே புத்தி மட்டுதானே ? இராஜனின் கண்களை கோபம் மறைத்தது. அளவற்ற சினத்துடன் தன் தாயிடம் தன் சொத்துக்கள் அனைத்தும் தன் குடும்பத்தினர்க்கே சேர வேண்டும் என உயில் அமைத்துக் கொடுத்தான், அவன் தாயின் சூழ்ச்சி பலித்து அவள் எண்ணம் ஈடேறியது.

அவளுக்குப்பின் ஏதுமறியாத சரசு நாதனின் துணையுடன் இராஜனைக் கண்டு உண்மை நிலையைத் தெரிவிக்கச் சென்றாள். நாதனுடன் தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள் சரசு என்பதை அறிந்தவுடன், தன் தாய் சொன்ன யாவையுமே உண்மைதான் என உறுதிபடுத்திக்கொன்டான்  இராஜன். அவளைப் பார்க்க விரும்பவில்லை என திருப்பி அனுப்பிவிட்டான். வருத்தமும் ஏமாற்றமும் சூழ வீடு திரும்பினாள் சரசு.

நாதனிடம், அவன் வீட்டை விட்டு தான் புறபடப் போவதாகக் கூறினாள் சரசு. நாதன் அண்டை ஊர்களில் குடியிருக்கும் தன் சகோதரிகள் யாராவது சரசுவுக்கு அடைக்கலம் தர‌க்கூடும் எனவும், கூடிய விரைவில் அவளை அவர்களிடத்தில் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்து அதுவரை தன் வீட்டிலேயே தங்க வேண்டுமென்று வற்புறுத்தி வெற்றி கண்டான்.

யாருமே எதிர்பாராத ஒன்று வெகுவிரைவில் நடந்தது. சரசுவின் விடயத்தால் அதிகம் கடுப்பான இராஜன் சிறைச்சாலையிலிருந்து  மிகவும் தீவிரமாக முனைந்து தப்பினான். யாருமறியாது தக்க ஏற்பாடுகளை செய்துகொன்டு சரசுவைப் பழிவாங்க‌ அவள் குடியிருக்கும் வீட்டை அடைந்து அவ்வீட்டின் அருகாமையில் இரவை எதிர் நோக்கிப் பதுங்கிக் காத்திருந்தான்.

இரவு வந்தது, ஊர் உறங்கியது, நாதனும் சரசுவும் அவரர் அறையில். நடுநிசி வரை காத்திருந்த இராஜன் வீட்டுற்குள் புகுந்தான். அவன் கையில் பளபளக்கும் நீண்ட பாராங்க‌த்தியொன்று வீற்றிருந்தது.

முதலில் அவன் கண்டது முன்னறையில் உறங்கும் நாதனை. வெறியேறிய சிவந்த கண்களில் தீப்பொறி பறக்க அவனை வெறித்து நோக்கியவாரே அருகில் சென்றான். தன் பலமனைத்தும் ஒன்று திரட்டி பாராங்கத்தியை அவன் கழுத்தைக் குறிவைத்துப் பாய்ச்சினான். மிகச்சரியாக அந்நேரத்தில் விழிப்பு வர எமகிங்கரனைப்போல் தன் முன் நின்ற இராஜனைக்கண்டு திகைத்தான் நாதன், அவன் நோக்கம் அறிந்து சுதாரித்து படுக்கையிலிருந்து அவன் நகர அதேவேளை இராஜனின் கத்தி அவனை பதம் பார்க்க அவன் மேல் பாய‌ கழுத்துக்கு வைத்த குறி தப்பி தோள்பட்டையை தாக்க‌  அடுத்த கணம் அவனின் கை துண்டாகி தனியே வீழ்ந்தது, காப்பாற்றிக்கொள்ளும் வாய்ப்பின்றி அலறிச் சரிந்து இரத்த வெள்ளத்தில் மூர்ச்சையானான் நாதன்.

அடுத்த ப‌லியாக சரசுவைத் தேடினான் இராஜன் அவள் ஒரு அறையில் தரையில் பாயும் தலையணையும் வைத்து படுத்திருந்தாள், தன் வாழ்வில் நிகழ்ந்த அடுக்கடுக்கான சோதனைகளையும் அது தந்த வேதனைகளையும்     
எண்ணி உறக்கமின்றி தவித்துக் கொன்டிருந்தவள் வீட்டில் ஏதோ அமளி கேட்டு எழுவதற்கும் இராஜன் அவளைக் கண்டு பிடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவளின் கண்ணீரை சட்டை செய்யாத இராஜன் க‌த்தியை அவளை நோக்கி வீசினான்.

மிகச்சரியாக அந்தக் கத்தி அவள் கழுத்தைப் பதம் பார்க்க , அந்த அறை முழுதும் இரத்த வெள்ளத்தில் நிரம்பி வழிய....தலை வேறு உடல்வேறாகி தரையில் சரிந்தது சரசுவின் உயிரற்ற உடல்....!

 சரசுவின் பயணம் இனி புதிய பரிமானத்தில்.....தொடரும்...!. 

No comments: