.

.
.

Wednesday, April 2, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்....! 

பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட நோபல் பரிசாளர் (2004) வாங்கரி மாத்தாய் அவ‌ர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம் (ஏப்ரல் 1 அவர் பிறந்த தினம்) 


இவரின் நினைவாக‌ (மறைந்த தினம் : 25/9/2011) இவருக்காக வரையப்பட்ட பதிவு http://tamilpoongga.blogspot.com/2012/09/blog-post.html

நீர்வளமும் நிலவளமும் நிறைந்த நம் நாட்டில் பசுமைக்கு பஞ்சமேயில்லை, இங்கே காணும் இடமெங்கும் மரங்களும் செடி கொடிகளும், பச்சை போர்வை போர்த்திய மலை வளங்களும் நீக்கமற‌ நிறைந்து அழகாக காட்சியளிக்கும். நாட்டின் வளர்ச்சியின் பேரால் ஆங்காங்கே இயற்கைவளங்கள் சுரண்டப்படுவதும், சூரையாடப்படுவதும் உண்மைதான், எனினும் அவையனைத்தையும் தாண்டி இன்னும் மண்ணின் மகத்துவத்தை காப்பாற்ற பசுமை வளங்கள் பயன்பட்டுக்கொன்டுதானிருக்கின்றன.

இதுபோன்ற‌ இயற்கையான பசுமை அழகோடு சில சமயங்களில் மனிதர்களின் கைவண்ணங்களிலும் பூங்காக்கள், பூந்தோட்டங்கள், காய்கறித்தோட்டங்கள், செயற்கைக் காடுகள் என பசுமை பூத்து குலுங்குவதுண்டு. அவ்வகையில், அண்மையில் நம் பிரதமரும் மக்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் உபயோகிக்கப்படாத நிலங்களில் தங்கள் தேவைகளுக்கான காய்கறிகளை பயிரிட்டுக்கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டிருந்தது சிறப்பு..! எல்லோரையும் விட சீனர்களே இவ்வாய்ப்பையும் அதிகம் பயன்படுத்திக்கொள்வதை பரவலாகக் காணமுடிகிறது.

பொதுவாகவே ம‌லாய்க்காரர்கள் "கெபூன்", "டூசூன்" என நிலங்களை வகைப்படுத்தி தங்கள் தேவைகளுக்கும், வியாபாரத்திற்கும் பழவகைகளும், காய்கறிகளும் பயிரிடுவது பல காலமாகவே இங்கு நடைபெற்று வருகிறது. சீனர்கள் சொல்லவே வேண்டாம், வீட்டிற்கு முன் கொஞ்சம் நிலமிருந்தாலும் அல்லது அக்கம் பக்கத்தில் இருக்கும் யாரும் உபயோகிக்காத நிலங்களை பண்படுத்தி பலவிதமான கீரைகள், காய்கறி வகைகளை நட்டு அசத்திவிடுவார்கள்.

நம்மவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன ? ஆர்வமும் வசதியும் கொன்ட பலர் தங்களுக்கு தேவையானவற்றை பயிரிட்டு பாங்கோடு வளர்த்துவரும் அழகையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் கைவண்ணத்தில் கத்தரி, வெண்டை, மிளகாய், கீரைவகைகள், கிழங்குவகைகள், வாழை, தென்னை, முருங்கை இவற்றோடு வெற்றிலை, மல்லிகை போன்றவையும் விளைவதுண்டு.

ஆனால் இவையனைத்தும் மண்ணோடு அதிகம் உறவாடும் வாய்ப்புப் பெற்ற கம்பம், தோட்டம் மற்றும் தரை குடியிருப்புப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே, அடுக்குமாடி ,அப்பார்ட்மென்ட் மற்றும் குடியிருப்பைச் சுற்றிலும் சாலையும் சிமெண்டுத்தரைகளும் சூழ அமைந்த வீடுகளில் வாழும் மக்களுக்கு இது போன்ற வசதிகள் வாய்ப்பது குறைவே.  

நாமும் சிலகாலம்வரை அப்படித்தான் வாழ நேர்ந்தது, இறையருளால் மிகவும் அழகான வீடு, அனைத்து வசதிகளுடனும் அமைந்திருந்தது இருப்பினும்  அங்கே நிலவசதி மட்டும் கிடையாது..! சுற்றிலும் சாலைகளும் சிமென்டுத்தரைகளுமாகவே அமைக்கப்பட்டிருந்தன. என்ன செய்வது ? கொஞ்சம் பூந்தொட்டிகளை வாங்கி வைத்து அதில் பூச்செடிகளை நட்டு வைத்து மகிழவேண்டியிருந்தது. அதிர்க்ஷ்டவசமாக‌ அண்மையில் குடியேறிருக்கும் வீடோ சுற்றிலும் நிறைய நிலவசதிகளோடு அமைந்தது, மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பிறகென்ன நம்ம தோட்டக் கலைத் திறமையை காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது...! :)

புற்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்து எதையும் சேர்க்காமல், கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் நிலங்களைக் கொத்தி நீர்பாய்ச்சி மண்ணை பண்படுத்தி பாத்திகள் அமைத்து நான்கு வரிசை மரவள்ளிச் செடிகள் ந‌ட்டாகிவிட்டது. அவை நட்ட இருமாதங்களில் கையகள இலைகளை செடிமுழுதும் நிறைத்துக்கொன்டு தற்போது ஓரடி உயரத்தில் எட்டிப்பார்த்து சிரித்துக்கொன்டிருக்கின்றன.

மிளகாய்ச்செடிகளில் முத்து முத்தாய் முகிழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சின்னச் சின்ன வெண்நட்சத்திரப் பூக்கள் .
ஓர் ஓரத்தில் முருங்கை மரம் துளிர்த்து வருகிறது, செங்கரும்பும், கறிவாழையும் மற்றொரு புறத்தில், மேலும் நிழலான பகுதியில் சிறு சிறு கன்றுகளாய் தக்காளி, கத்தரி, வெண்டைச்செடிகள் வளர்ந்து வருகின்றன. பாத்திகளின் இடைவெளிகளில் நிலக்கடலைச்செடிகள் நட்ட சில காலத்திலேயே அபரிமிதமான வளர்ச்சியுடன், இப்போது அதன் சின்னஞ்சிறு கிளைகளில் மஞ்சள் பூக்கள் மொட்டவிழ்ந்துகொன்டிருக்கின்றன.  

பொறுப்புடனும் பொறுமையுடன் நாம் செய்யும் இதுபோன்ற சிறு சிறு காரியங்களும் நமக்கு பெருமகிழ்வை அளிக்கவல்லவை. தோட்டம் அமைத்து அதில் வியர்வை சிந்தி உழைக்கும்போது அது நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. நம் கையால் நட்ட செடிகொடிகளின் பலன்கள் நமக்கு முழு மகிழ்ச்சியையும் ஆத்மதிருப்தியைத் தரும்.வாய்ப்புக்கிடைக்கும் நண்பர்கள் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

நீல வானம் மேலே படர்ந்திருக்க, காற்றின் அசைவுகள் நம்மைச் சூழ்ந்திருக்க, ஓர் ஓரத்தில் குப்பைகூளங்களை(எரிந்தபின் அவை எருவாகும்) கூட்டி சின்னதாய் ஒரு மூட்டமிட்டு சின்னத்தீ அதில் நடனமிட, மண்ணில் கால்பதித்து, நம் கையால் நாம் நட்ட செடிகளுக்கு நீர்பாய்ச்சும்போது , ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று என  பஞ்சபூதங்களும் நம்முடன் உறவாட‌, இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக நாம் மாறிவிடும் நிதர்சனத்தை நேரடியாக உண‌ரச்செய்யும் அந்தத‌ தருணங்கள் அனுபவத்தால் மட்டுமே அடையக்கூடிய வாழ்வின் உன்னதங்கள்...!
 

 

1 comment:

உமா பதிப்பகம் said...

இப்படி எல்லாம் தமிழில் பூங்காக்களை உருவாக முடியும். நல்ல நல்ல முயற்சிகள். வாழ்த்துகள்.