.

.
.

Monday, April 7, 2014

 கடுப்படிக்கும் விளம்பரங்களும், கவலைப்படும் தமிழ் நெஞ்சங்களும்...!நம் நாட்டில் மிகப்பெரிய மூவினங்களாக அங்கீகரிக்கப்பட்டவை மலாயர், சீனர் மற்றும் இந்தியர்கள், (வெளி நாட்டுக்குடியேறிகள் தற்சமயம் அதிகரித்து வருவது வேறு ஒரு தலைவலி..!) இந்நாட்டில் திராவிட இனங்களான‌ தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்களோடு சீக்கியர்களும் வாழ்ந்து வருகின்றனர், எனினும் தமிழ் மொழி பேசும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் தமிழ் மொழி இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மூன்றாவது மொழியாக ஆங்கிலம், மலாய்க்கு அடுத்து இந்தியர்களுக்கு தமிழும், சீனர்களுக்கு மான்டரீன் மொழியும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒற்றுமையில் சிறந்தவர்கள் சீனர்கள் என்பது வெள்ளிடைமலை, தங்கள் பெயர்களிலேயே தங்களை பிரிவுபடுத்தும் சாதிப்பிரிவுகள் பல இருந்தாலும், த‌ங்கள் இனத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் மான்டரீன் மொழியை தங்கள் பிரதிநிதித்துவ மொழியாக உள‌மாற ஏற்று இந்நாட்டில் உருப்படியாய் வாழ்ந்து வருகிறார்கள், தங்களை பிரதிநிதிக்கும் மொழிக்கும் அதிக முக்கியத்துவம் ஏற்படுத்திக்கொன்டு !  இன்று சீன மொழியை யாராவது சிறுமைபடுத்திப் பார்க்க முடியுமா ? அப்படிச் செய்ய முனைந்த அரசியல்வாதிகளின் மூக்கை அவர்கள் எப்படி உடைப்பார்கள் என்பதை அரசியல் அறிந்தோர் நிச்சயம் அறிந்திருப்பர், ஆனால் இந்தியர்கள் ? 

தற்கால சூழலில் ம்லேசிய இந்தியரிடையே பல பிரிவுகள், ஆயிரத்தெட்டு அரசியல் கட்சிகள், சாதிச்சங்கங்கள் இவை தனிமனிதனுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆற்றிடும் நன்மைகள் என்ன என்பதை எல்லோரும் சிந்தித்துச் சீர்தூக்கிப்பார்க்க‌ வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு ! எனும் உண்மை தற்காலத்தில் மறக்கப்பட்டு வருவது கண்கூடு. சுயநலம், சுயலாபம் மட்டுமே பிரதானம் என இயங்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம். பொருளாதாரத்தில் உயர்ந்தோர் மேல்நாட்டு ஆங்கிலேயர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முயல்வது மறுபுறம்..!

நேற்று வடக்கு நெடுஞ்சாலையில் (பினாங்கிலிருந்து தைப்பிங் செல்லும் வழியில்) பயணித்துக் கொன்டிருக்கையில் ஒரு காட்சி, அது ஒரு ரொட்டி(பிஸ்கோத்து) விளம்பரம், பெரிய காட்சிப்பேழையாக‌ (பேனராக) வைக்கப்பட்டிருதது, அதிலே நம் நாட்டின் மூவினப் பெண்களும் அந்த பிஸ்கோத்தை உண்டுவிட்டு தங்கள் கருத்தை ஒரு வார்த்தையில் சொல்கிறார்களாம், மலாய் பெண்மணி மலாயில் ஒரு வார்த்தை, சீனப்பெண்மணி மாண்டரீன் மொழியில் ஒரு வார்த்தை, அடுத்து சேலையணிந்த ஒரு பெண்மணி ஒரு வார்த்தை சொல்கிறார் அது என்னவென்றே புரியவில்லை, காரணம் அந்த எழுத்து இந்திமொழியில் இருக்கிறது !!!.

பார்த்தீர்களா தமிழுக்கு நேர்ந்த தலைகுனிவை ?, இது மட்டுமல்ல, இப்போது பல தொலைக்காட்சி விள‌ம்பரங்களிலும் பல வகைகளில் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி இந்தியர்களில் ஒரு பிரிவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், பொருளாதரத்திலும், கல்வி நிலையிலும் மேம்பட்டு உள்ள சீக்கியர்களை மட்டுமே இந்தியர்களாக அடையாளம் காட்டும் முயற்சி தற்பொழுது பரவலாக இங்கே சிலரால்  மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் காணக்கிடைக்கும் காட்சிகளே.ஏனென்று கேட்க பாவம் இந்த அநாதைச் சமுதாயத்திற்கு ஆளில்லை...! 

ஏன் இந்த நிலை ? என்ன செய்து கொன்டிருக்கின்றார்கள் நம் பிரதிநிதிகள் ? இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு வேறென்ன வேலை ? ஓட்டுப்போட மட்டும்தான் நாமா ? நமக்கென ஒரு பிரச்சனையென்றால் இவர்கள் யாரும் கேட்க மாட்டார்களா ?

தமிழுக்கு முக்கியத்துவம் கோரப்பட‌ வேண்டும், சிங்கையில் அமைந்துள்ளதைப்போல அரசியல்ரீதியில் தமிழ் இங்கே இந்தியர்களுக்கு கட்டாய மொழியாக்கப்பட வேண்டும், மேற்கல்விகளுக்கும் தமிழ் அவசியமாக்கப்படவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் தமிழ் சார்ந்த மேன்மைகளையும், அதனால் விளையும் நன்மைகளையும் இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசியல்வாதிகள் தமிழறிந்தவர்களாக, தமிழை வாழவைப்பவர்களாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும் ! இனிவரும் காலங்களில் இவற்றை செய்வோமா நாம் ?

No comments: