.

.
.

Wednesday, April 9, 2014

இருள் சிநேகிதி ‍‍-  நான்காம் பாகம்

 

முன்கதை : ஒரு பணக்கார முரடனுக்கு மனைவியாகி, அவன் சிறை சென்றதும், வேறு நாதியின்றி தன் மாமன் மகன் நாதன் வீட்டில் தஞ்சம் புகுந்தாள் சரசு. இதனால் அவள்  ச‌ந்தேகிக்கப்பட்டு சிறைமீண்ட‌ அவள் கணவனால் வெட்டிக்கொலை செய்யப்படுகிறாள் . இனி...!

ந‌டசத்திரங்களற்ற அடர் கருமை படர்ந்த வானம், ஊரே உற‌க்கத்தின் பிடியில் இரவின் நிசப்தம் மேலும் பயத்தைக்கூட்ட , இருள் மட்டுமே சாட்சியாக‌, ஒரு கோரம் கொடூரமாய் அங்கே அரங்கேறி முடிந்தது.

நாதனை வெட்டிச் சாய்த்துவிட்டு, சரசுவின் தலையைத் துண்டித்து துடிதுடிக்க கொலை செய்த இராஜன், சரசுவின் உடலில் பீறிட்டுப் பெருகிய இரத்த வெள்ளத்தை ஒரு மன நோயாளியின் மன நிலையோடு பார்த்து இரசித்துக் கொன்டு நின்றான், பின்னர் தான் வந்த வேலை முடிந்ததென்று தன் மேல் படிந்த இரத்தக் கறைகளோடும் கையில் வைத்திருந்த பாராங்கத்தியுடனும் அருகாமையிலிருந்த காவல் நிலையத்தில் சரண‌டைந்தான்.

ஏதோ பெரிதாய் சாதித்து விட்டதைப்போல் மிகவும் சாந்தமாய் மன நிறைவோடு காணப்பட்டான் இராஜன். தனக்கு உரிமையானதை அழித்தாவது பிற‌ர் அடையாமல் தடுக்கும் அவன் குணம் ஈடேறியதில் அவனுக்குப் பரம  திருப்தி.

அரைகுறை விழிப்பும் களைப்புமாய் இருந்த காவல்துறை அவனைக் கண்டு அதிர்ந்து விழித்துக் கொன்டது! விடயமறிந்து அவனை சிறையில் தள்ளிவிட்டு அவனிடமிருந்து கற‌ந்த தகவல்களோடு நாதனின் வீட்டிற்கு விரைந்தது.

உறக்கத்தின் பிடியில் மெய்மறந்திருந்த அந்த வசிப்பிடமும், அங்கே நிகழ்ந்து முடிந்த சம்பவம் அறிந்து அவசர அவசரமாய் உற‌க்கம் உதறி நாதனின் வீட்டின் முன் குவியலானது. நடந்த சம்பவம் அறிந்து அனைவர் முகத்திலும் பயமும் அதிர்ச்சியும் பிரசன்னமானது..!

காவல்துறை இரத்த வாடை வீசிய அந்த வீட்டினுள் ஐயத்துடன் அடியெடுத்து வைத்தது. முன்னறையிலேயே அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.  படுக்கை போர்வை யாவும் இரத்தம் தோய்ந்து வழிய, இரத்தவெள்ளத்தில் தன்னிலையிழ‌ந்து கிடந்தான் நாதன், சற்றே தள்ளி அது நாள் வரை அவன் உடலோடு ஒன்றியிருந்து இன்று அந்நியமாகிப்போன  அவன் கரம் துடிப்பையிழந்து சவ‌மாகியிருந்தது.

அவன் சுருண்ட கேசம் நனைந்து, அழகான முகம் வாடி , உடல் முழுதும் இரத்தகளறியால் ஈரமாகி, கண்கள் மூடி, சன்னமாய் இழையோடியது மூச்சு மட்டும்..!, காவல் துறை விரைந்து செயல்பட, அவனை அவசரஊர்தி(ஆம்புலன்சு) அள்ளிக்கொன்டு மருத்துவமனைக்கு விரைந்தது.   

அடுத்து அந்த வீட்டின் பின்னறையில் அறை முழுதும் சிவப்பு சாயத்தை கொட்டிக் கவிழ்த்ததைப்போல் ஒரே இரத்த வெள்ளம், சிவந்த நிற‌மொன்றே அங்கே பிரதானமாய் பிரவகிக்க, சிவப்புச் சமுத்திரம்போல் விளங்கியது அவ்விடம், அதில் சிதைந்த தாமரையாய் புதைந்து கிடந்தாள் சரசு ! இரவின் குளிரோடு அங்கே அலைபாய்ந்த சிறு காற்றும் இரத்த வாடையை அள்ளித் தெளித்துக்கொன்டிருந்தது.


அந்த இரத்தக் குவியலுக்கு நடுவே கைதேர்ந்த சிற்பி வடித்த அழகான சிலையொன்று சிதைந்து சின்னாபின்ன‌மானதைப்போல் அதுவரையில் பேச்சோடு செயலும், உடலும் உயிருமென‌ ந‌டமாடி இன்று பிணமாகிப்போன சரசுவின் உடல் அதுவும் தலைவேறு உடல் வேறாக..!

கண்டோர் கண்கள் கலங்கின, இரத்தவாடை முகத்தில் அறைய குடல் பெயர்ந்து வாய் வழி வந்து விடுவதைப்போல் குமட்டிக்கொன்டு வந்தது அவர்களுக்கு. காண‌முடியாதோர் கைக்குட்டையால் முகம் மூடி வெளியேறினர். கடமை ஆற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளானவர்கள் வேறு வழியின்றி தங்கள் இதயத்தை இரும்பாக்கிக்கொன்டு இரத்தத்தில் ஊறிய அவள் சிரசையும் உடலையும் அங்கிருந்து அப்புற‌ப்படுத்தி மருத்துவமனைக்கு அள்ளிச்சென்றனர்.

அதற்குப் பிற‌கு அந்தக் கொலைக்களம் சாட்சிபீடமாக மாற்றப்பட்டு, கோடுகள் கிழித்து, யாரும் பிரவேசிக்க‌ இயலாமல் தடுப்புகள் சுற்றி, புகைப்படங்கள் எடுத்து. காரியங்கள் முடிந்ததும் அந்த வீடு யாரும் உட்புகாமல் சீல் வைக்கப்பட்டது.

எல்லாம் ஓய்ந்தது. ஆளுக்கொன்றைப் பேசிக்கொன்டு, சூள்கொட்டியவாரே ஊர் களைந்து போனது. விடிய இன்னும் சில பொழுதே எஞ்சியிருக்க, தனித்து விடப்பட்ட அந்த வீட்டின் ஓர் மூலையில் புகையால் செதுக்கிய சிற்பம் போன்று சூனியத்தை வெறித்த பார்வையோடு, ஓர் உருவம் அசைவற்று அமர்ந்திருந்தது. வாழ்க்கையைத் தொலைத்து உடலிலிருந்து உயிரும் தொலைந்து விட்ட அப்பாவி சரசுவின் ஆன்மாதான் அது...!
தொடரும்...            

  

No comments: