.

.
.

Tuesday, April 29, 2014


சிவகாமியின் சபதம் -தேன் சாகரத்தில் சிறு தேனீயின் அநுபவம் கல்கி எனும் எழுத்துலகமேதை அடியேனுக்கு அறிமுகம் ஆக முக்கிய‌காரணியாய் விள‌ங்கிய அந்த நல்லுள்ளத்திற்கு நன்றி பல. இந்த பதிவு அந்த நட்புக்கு சமர்ப்பணம்...!

தமிழ்கூறு நல்லுலகு க(கொ)ண்ட அற்புத எழுத்துச்செல்வர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்கி எனும் பரிணாமம் கொன்ட இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் சாகித்திய அகாதமியின் விருது பெற்ற எழுத்தாள‌ருமாவார். சிற‌ந்த வரலாற்றுப்புதினங்களின் படைப்பாளியான‌ இவரின் வாழ்க்கை வரலாற்றை https://en.wikipedia.org/wiki/Kalki_Krishnamurthy வழி நாம் அறியலாம்.

"சிவகாமியின் சபதம்"  பேனா மன்னர் கல்கியின் கைவண்ணத்தில் மலர்ந்து 12 வருடங்கள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வலம் வந்து எண்ணற்ற வாசகர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற புகழ்பெற்ற காவியமாகும்.
 
தமிழ் வாசகர்களின் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற இப்புதினம் "பேனா மன்னரின்" எழுத்து ஆளுமைக்கும், அவரின் ஒப்புவமையற்ற கதை சொல்லும் பேராற்றலுக்கும் தக்க சான்றாக விள‌ங்குகிறது என்றால் அது மிகையல்ல !


பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என இக்கதையில் நான்கு பிரிவுகள் உள்ளன. முக்கியக் கதாமாந்தர்களாக பேரழகியும், பரதத்தில் கைதேர்ந்த ஆடலரசியுமாகிய சிவகாமியும் அவள் மனங்கவர்ந்த காதலனாக காஞ்சி இள‌வரசன் முதலாம் நரசிம்ம பல்லவனும் விளங்குகின்றனர். இருப்பினும் கலையும், வீரமும் நமது பெருமைக்குரிய பாரம்பரியம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென பறைசாற்றும் இவ்வ‌ரலாற்றுப் புதினத்தில் இன்னார் மட்டுமே முக்கிய கதாமாந்தர் என அறுதியிட்டுக் கூற இயலா வண்ணம் பரஞ்சோதியாரின் வரலாறு மற்றும் மகேந்திர பல்லவன் வரலாறு, நாகநந்தி வரலாறு என பல்வேறு கோணங்களாக‌ கதை வடிக்கப்பட்டு வெகு நேர்த்தியாக‌ ஒன்றுசேர்த்துப் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.


சிவகாமி, நரசிம்ம பல்லவனை முதன்மை கதாமாந்தர்களாகவும் மேலும் இவர்களைச்சுற்றி பல துணைக் கதாபாத்திரங்கள், சிவகாமியின் தந்தை தலைமைச் சிற்பி ஆயனார், நரசிம்ம பல்லவனின் தந்தையார் காஞ்சி மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்ம பல்லவனின் ஆப்த நண்பன் பரஞ்சோதி (பின்னாளில் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டு 64 நாயன்மார்களில் ஒருவராக புகழ்பெற்றவர்) மேலும் வில்லத்தனம் புரியும் கள்ள மனமும் வஞ்சக குணமும் படைத்த புத்தபிட்சு நாகநந்தி மற்றும் அவர் ச‌கோதரனும் சாளுக்கிய மன்னனுமாகிய புலிகேசி ஆகியோர் இக்கதையில் பெரும்பங்கு வ‌கிக்கின்றனர்.

பரஞ்சோதி யாத்திரை - விளையாட்டுத்தனம் நிறைந்த வாலிபன் பரஞ்சோதி கல்வி கற்று கல்விமான் எனும் அந்தஸ்தை அடைந்து தன் மாமன் மகளை மணக்க வேண்டி திருநாவுக்கரச பெருமானை நாடி சீட‌ராக இணைந்திட‌ காஞ்சி மாநகருக்கு வருகிறார், காஞ்சிவாசம் அவர் வாழ்வில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. விதிவசத்தால் அவர் புத்தபிட்சு நாகந‌ந்தியால் தனைத் தீண்டவந்த நாகத்திடமிருந்து காப்பாற்றப்பட்டு அவர் சிநேகத்தை பெறுகிறார். தொடர்ந்து சிவாகாமியை மத யானையிடமிருந்து காப்பாற்றி, அரண்மனைக் கைதியாகி, சிறைதப்பி, மீண்டும் காஞ்சி மன்னருக்கே தளபதியாகி, இளவரசன் நரசிம்மனின் உயிர்த்தோழனாகி, இறுதியில் போரின் மூர்க்கங்கள் தந்த தாக்கத்தில் சிவனடியாராகிவிடுகிறார்.
இன்று (29/4/2014) சிறுத்தொன்டநாயனார் அவர்களின் குரு பூசை தினமுமாகும்.

முதலாம் பகுதியில் பரஞ்சோதியைப் பற்றி விஸ்தரிக்கும் கதாசிரியர் கூடவே கலையும், வீர‌மும் காதல் கொள்ளும் அழகை சிவகாமி , இள‌வரசன் நரசிம்ம பல்லவன் வழியும்,  காஞ்சி மன்னனின் பராக்கிரமம், ஆளுமை, சாணக்கியம், கலையுள்ளம் ஆகியவற்றையும் அழகுறப் படைத்துச் செல்கிறார்.

காஞ்சி முற்றுகை - கலைகளின் பிறப்பிடமாக சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து கலையம்சத்தோடு காண்போர் கவனத்தை ஈர்க்கிறது காஞ்சி மாநகர்.காஞ்சி மாநகரின் ம‌கோன்னதம் உண‌ர்ந்து அதை அடைய தன் சகோதரன் நாகநந்தியின் உதவியுடன் போருக்குப் புறப்படுகிறான் சாளுக்கிய மன்னன் புலிகேசி, ஆனால் சாணக்கியத்தில் சிறந்த மகேந்திரபல்லவ மன்னனை வெல்ல அவனால் முடியாது போய்விடுகிறது. பின்னர் காஞ்சி மன்னரிடம் சமாதானத் தூது விடுக்கிறான். "யானைக்கும் அடி சறுக்கும்" அல்லவா ? கள்ளத்தனம் நிறைந்த மன்னன் புலிகேசியின் நட்பை ஏற்கக்கூடாது என இளவரசன் நரசிம்மனும் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியும், யாவரின் கருத்தையும் புற‌ந்தள்ளி புலிகேசியுடன் நட்பு பாராட்டி தனக்கும் நாட்டுக்கும் தீமை விளைவித்துக்கொள்கிறார் மன்னர் மகேந்திரபல்லவன். சாளுக்கிய ம‌ன்னனின் சாயம் வெளுக்கிறது, போர் மூள்கிறது. காஞ்சியின் வளங்கள் அழிக்கப்பட்டு, ஊர்கள் சூரையாடப்படுகின்றன. காஞ்சி மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்படுகின்றனர். அவர்களோடு நம் கதாநாயகி சிவகாமியும் அவர்களிடம் அகப்பட்டுக்கொள்கிறார்.

பிட்சுவின் காதல் ‍ - சிறைபிடிக்கப்பட்ட ஆடலரசி சிவகாமி
சாளுக்கிய மன்னனின் சூழ்ச்சியால் தெருத்தெருவாக அந்நாட்டின் நாற்சந்திகளில் ஆடவைக்கப்படுகிறாள். எனினும் சாளுக்கிய மன்னனின் சகோதரனும் ஏற்கனவே சிவகாமிக்கு அறிமுகமானவருமாகிய புத்தபிட்சு
நாகநந்தி அவளை அந்த அவலத்திலிருந்து மீட்டு அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து தன் ச‌கோதரனால் மேலும் இடர் ஏற்படா வண்ணம் பாதுகாக்கிறார். கூடவே தன் வரலாறைத் தெரிவித்து  இள‌வயது முதலே தமது இதயத்தில் பதிந்த அழகோவியம் சிவ‌காமியின் வடிவத்தைப் போன்றதுவேயாகும் எனவே தானும் அவளைக் காதலிப்பதாகக் கூறி அவள் காதலை யாசிக்கிறார். அவர் காதலை மறுத்து தான் நரசிம்மனுக்கு மட்டுமே உரியவள் என்பதில் உறுதியாய் நின்று  நாகநந்தியை நண்பராக மட்டுமே ஏற்றுக்கொள்கிறாள் சிவகாமி.

இதற்கிடையில் இள‌வரசன் நரசிம்ம பல்லவனும், தளபதி பரஞ்சோதியாரும் மாறுவேடத்தில் வந்து சிவகாமியைக் காப்பாற்ற விழைகின்ற‌னர். எனினும் அவர்களோடு ஊர் திரும்ப மறுத்து, சாளுக்கிய அரசை போரிட்டு வென்று தன்னை மீட்டால்தான் மீண்டும் காஞ்சி திரும்புவேன் என வீர சபதம் செய்கிறாள் சிவகாமி. இதைச் சற்றும் எதிர்பாராத நரசிம்மபல்லவனும் , பரஞ்சோதியும் வருத்தமும் ஏமாற்றமும் சூழ‌ நாடு திரும்புகின்றனர்.

சிவகாமியின் இச்செய்கையினால் இள‌வரசன் நரசிம்மபல்லவனுக்கு சிவகாமியின் மேல் கோபமும், வெறுப்பும் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியில் அவர் தமது தந்தை மன்னர் மகேந்திரபல்லவனின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு நாட்டு நலனைக் கருத்தில் கொன்டு பாண்டிய‌ நாட்டு இள‌வரசியை கரம்பிடித்து இரு குழந்தைகளுக்கும் தந்தையாகிறார். மன்னர் மகேந்திரபல்லவனின் மறைவைத்தொடர்ந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும் நரசிம்ம பல்லவன் முழுமூச்சாய் படைதிரட்டி ஏழு வ‌ருடங்கள் கடந்த நிலையில் சாளுக்கிய நாட்டின் தலைநகரான‌ வாதாபியின்(இன்றைய கர்நாடகா) மேல் போர் தொடுத்து சாளுக்கிய அரசை தோற்கடித்து சிவகாமியை மீட்கிறார்.              

சிதைந்த கனவு - ஊர் திரும்பிய சிவகாமி உண்மை நிலையை அறிகிறாள். நரசிம்மனை மணக்கும் தன் ஆசையில் மண்விழுந்ததை உணர்ந்து வருந்தி வாடிப்போகிறாள். தன்னை ம‌றந்து மன்னன் நரசிம்மன் வேறொருத்திக்கு சொந்தமாகிவிட்ட நிலையில் தன் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் தேடும் முயற்சியில் தன்னையும் தன்னில் குடிகொன்டிருந்த ஒப்பற்ற ஆடல் கலைத் திற‌னையும் முழுமையாய் இறைவனுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்கிறாள்  சிவகாமி. ஒரு சிற்பியின் மகளான சிவகாமி எனும் கலைப்பொக்கிக்ஷம் எந்த மனிதனுக்கும் சொந்தமாகாமல் தான் கைக்கொன்ட நாட்டியத்திறமையாலும் தன் மன உறுதியாலும் இறை அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டாள் என்பதோடு கதை நிறைவை நாடுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டது மட்டுமே முழுமையான கதை அல்ல, இதில் அட‌ங்காத பல அருமையான‌ கிளைக் கதாபாத்திரங்களும், முடிச்சுகள், திரும்பங்கள் என எண்ணிலடங்கா சுவார‌சியங்களும் இப்புதினம் முழுதும் விரவிக்கிடக்கின்றன, அவற்றை முழுமையாய் உணர இயன்றோர் இப்புதினத்தை நிச்சயம் வாசித்திட வேண்டும்.

அள்ளி அள்ளி உண்ண உண்ணத் தெவிட்டாத தேன‌முதம் போல் இன்னமுதாய் படிக்க படிக்கச் சுவையூட்டுகிறது இப்புதினம். காட்சிகள், கதாமாந்தர்களைப் பற்றிய வர்ணனைகள் யாவும் இக்கதை நம் கண்முன்னேயே நடப்பதைப் போலவே உணரச்செய்கிற‌து. கலை, வீரம், காதல், அன்பு, நகைச்சுவை, ஆன்மீகம்,  நட்பு, மாந்த்ரீகம், விவேகம் என எல்லா எல்லைகளையும் தொட்டு வாசகனின் சிந்தனையோடு பயணிக்கிறது இக்கதை...!

இக்கதையை ஆழ்ந்து வாசிப்போருக்கு நம் புராதனம் குறித்து அள‌ப்பறிய பெருமையோடு சிவகாமியை நினைக்கையில் சோகமும் நெஞ்சில் நிழலாடுவதை தவிர்க்க இயலாது.

காதல் கைகூடினால் அது வாழ்க்கையாகிவிடுகிறது, அதுவே தோல்வியடைந்தால் காவியமாகிவிடுகின்றது, சிவகாமிக்காக இதயம் கனக்க நம் கண்களும் குளமாகிவிடுகின்றன.

பி.கு : இதுவரை தமிழ்ப்பூங்காவில் அழகோவியமாக நடனமிட்டுக்கொன்டிருந்த ஆடலரசி சிவகாமி இன்றுடன் இங்கிருந்து விடைபெறுகிறார்.  :(


No comments: