.

.
.

Friday, May 2, 2014

மந்திரத்து மாங்கனி..!


இந்நவீன கணிணி யுகத்தில் பலர் அமானுக்ஷ்யங்களை நம்புவதில்லை, ஆவி, பேய், பிசாசு, பூதம், மந்திரம் மாயம், இறை நம்பிக்கை யாவற்றையும் எள்ளி நகையாடும் காலமும் கூட. உண்மையில் இவ்விடயங்கள் அளவுக்கு மீறி மிகைப்படுத்தப்பட்டு போலி என வகைப்படுத்தப்பட்டுவிட்டது. இவ்வுலகில் நம் ஐம்புலன்களால் தரிசிக்க‌ இய‌லாத மர்மங்களும் உள்ளன‌ என்பதை ஆராய்ந்து பார்த்தால் நம்மால் உணர இயலும். இயற்கையின் ஒருபுறம் அழகும் ஆற்றலும் என்றால் அதன் மறுபுறம் மர்மங்களும் அமானுக்ஷ்யங்களும் என்பது உண்மை. நாம் நம்ப மறுப்பதால் அவை உண்மையல்ல என்றாகிவிடுவதுமில்லை, அப்படியானதொரு சம்பவமே இது.

மோகனும் நளினியும் ஆதர்ச‌ தம்பதிகள். காதலித்து மணம் புரிந்துகொன்டவர்கள். மோகன் மேலதிகாரியாக பணியாற்றிய தொழிற்சாலையில் நளினி அலுவலகப்பிரிவில் அதிகாரியாய் பணியாற்றினாள், மோகனின் வசீகரமான தோற்றமும், தொழில் நேர்த்தியும் நளினியை ஈர்க்க, நளினியின் நளினமும் அடக்கமும் மோகனைக் கவர்ந்தது. நளினி வசதியான குடும்பத்துப் பெண். மோகன் இளம்வயதிலேயே தந்தையை இழந்த நடுத்தர குடும்பத்து வாலிபன், வசதி குறைவு. எனவே நளினியின் குடும்பம் மோகனுக்கு பெண்கொடுக்க மறுக்க, நளினி இரவோடிரவாக வீட்டைவிட்டு வெளியேறி மோகனிடம் தஞ்சமடைந்தாள். இருவீட்டார் மனக்கசப்புடன் நளினி மோகன் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் அதே தொழிற்சாலையில் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

அவர்களின் இல்லறஓடம் வாழ்க்கை சமுத்திரத்தில் நிதான‌மாக பயணித்துக்கொன்டிருந்தது. முதல் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பராமரிக்க அவர்களின் இருவீட்டிலிருந்தும் யாரும் முன்வரவில்லை, வெளியாரிடம் பிள்ளையை விடுவது அவர்களின் மனதிற்கு உகந்ததாகப் படாததால் நளினி தன் வேலையை கைவிட்டு முழு நேர இல்லத்தரசியானாள்.
ஒன்றன் பின் ஒன்றாய் நான்கு குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தனர். செலவுகள் அதிகரிக்க‌ வருமான பற்றாக்குறை ஏற்படத்துவங்கியது. நளினிக்கும் மோகனுக்கும் பொருளாதாரக் குறைவால் நிறைய சன்டை சச்சரவுகள் ஏற்படத்துவங்கின.

சில காலங்களில் நளினி சூழ்நிலைக்கேற்ப தனனை தயார்படுத்திக்கொன்டு சிக்கனமாக வாழ்க்கையை செயல்படுத்தத்துவங்கினாள், ஆனால் மோகன் மனதிலோ, வளமாக வாழ வேண்டும், முடிந்தால் ஒரே நாளில் பணக்காரனாகிவிடவேண்டும் எனும் பேராசை உள்ளத்தை அரித்தெடுத்தது..!

எல்லோரும்  நாடும் எளிய வழியாக நான்கு நம்பர் துணையை மோகனும் நாடிட வ‌ருமானத்தில் ஒரு பகுதி நான்கு இலக்க எண் கடைக்காரருக்கு போக ஆரம்பித்தது. அது போதாதென்று எங்கெல்லாம் சாமியாடிகளும், பூசாரிகளும், குறிசொல்பவர்களும் நான்கு இலக்க எண் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டாலும் உடனே அங்கே ஆஜராகி பணத்தை செலவழிக்க ஆரம்பித்து விடுவான் மோகன்.

ஒருநாள் மோகனுடன் பணியாற்றும் ஒருவர், தாம் அறிந்த சாமியார் ஒருவர் வீட்டில் வந்து பூஜை செய்தால் உடனே சகல வறுமைகளும் நீங்கி நம்பர் அடித்து பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என ஐடியா வழங்கினார்.

மோகன் உடனே நளினியிடம் கலந்து பேசி அந்த‌ சாமியாரை வரவழைத்து வீட்டில் பூசை போட முடிவு செய்தான். நளினிக்கு இதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லை. கணவனையும் தடுத்துப்பார்த்தாள். ஆனால் மோகன் காதுகளில் எதுவும் ஏறவில்லை.

மோகன் மிகவும் ஆர்வத்துடன் சாமியாரை சந்தித்தான் . அவர் நடுத்தர வயதினராக தாடி மீசையுடன் காட்சியளித்தார். மோகனின் குறையைக் கேட்டு, கண்கள் மூடி சில நிமிடம் கழித்து மோகன் வீட்டில் தீய சக்தியொன்று  இருப்பதாகவும் அதை விரட்டினால் நில‌மை சரியாகிவிடும் என்றார். பின்னர் அவர் மோகனுடைய‌ வீட்டில் பூசை செய்வதற்கு நாள் குறித்துத்தந்தார். ஒரு நீண்ட பட்டியலைத்தந்து அதிலுள்ள பொருட்களை வாங்கி வைக்கும்படி பணித்தார்.

குறிப்பிட்ட நாளும் வ‌ந்தது. பூசை அன்றிரவு நடந்தது, ஆரம்ப முதலே இதெல்லாம் பிடிக்காத நளினி குழந்தைகளை அழைத்து வைத்துக்கொன்டு ஒரு ஓரமாய் அமர்ந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தாள்.

சாமியார் பூசையை ஆரம்பித்தார், அதற்கு முன் அவர்கள் வீட்டு சாமி மேடையைக் கண்டு அதிலிருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் படத்தை எடுத்துவிடுமாறு மோகனை பணித்தார். தன் பூசை சம்பந்தப்பட்ட எதையும் சாமி மேடையில் வைக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு கட்டளையிட்டார்.

 பூசைக்கு பயன்படுத்தும் சிவப்புத்துணிகளை எட்டாக எடுத்து அதில் உரித்த வாழைப்பழம், அரிசி, இன்னும் சில பொருட்கள் சேர்த்து எட்டு பொட்டலங்கள் செய்து வைத்தார். சந்தண‌ம், மஞ்சள், அரிசி, மிளகு யாவற்றையும் குழம்பாய்க் கரைத்து வீடு முழுதும் தெளித்தார்.

நடுவீட்டில் ஹோமம் வளர்த்து வீட்டிலுள்ள அனைவரையும் வெளியேற்றிவிட்டு, நெருப்பில் ஏதோ ஒன்றைத்தூவ அடர்த்தியான வெண்புகை எதிரே இருப்பவர் முகமும் தெரியா வண்ணம் மறைத்தது. நல்லவேளை அதற்கு முன்பே நளினி வீட்டிற்கு வெளியே குழந்தைகளுடன் வந்து நின்று கொன்டாள். பூசாரி மோகனின் துணையோடு வீட்டின் விள‌க்குகள் அனைத்தையும் அடைத்தார். வீடு இருண்டு புகை மண்டலமாகிப் போனது. எல்லோரையும் வெளியேற்றிவிட்டு பூசாரி மட்டும் ஒரு மண்பானையுடன் வீட்டினுள் சென்றார். சற்று நேரத்தில் வெளியேறியவர், மூடிக்கட்டிய அப்பானையினுள் ஏதோ ஒன்று பிராண்டுவதை அனைவருக்கும் காண்பித்தார் (பானையைத் திறக்காமலேயே) அந்தப் பானையும் மிகவும் பாரமாக இருந்தது.

எல்லாம் முடிந்தது. வீட்டிலிருந்த தீய சக்தியை பானைக்குள் பிடித்து விட்டேன். இனி கட்டி வைத்துள்ள பொட்டலங்களை எட்டுத்திசையிலும் கட்டிவைத்து பூசை செய்தால் எல்லாம் நல்லபடியாகும் எனக்கூறி தட்சிணையைப் பெற்றுக்கொன்டு புறப்பட்டார் சாமியார்.

மோகனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது, சாமியார் கூறியபடியே வீட்டின் எட்டுத்திக்கிலும் ஆணியடித்து சாமியார் தந்த பொட்டலங்களை மாட்டி வைத்து தூப தீபம் காட்டி வழிபடத்துவங்கினான்.      
  
குறிப்பிட்டபடியே சில நாட்களில் மோகனுக்கு நான்கு இலக்க எண்ணில் 5000 வெள்ளிக்கு நம்பர் அடித்தது. மிகவும் அகமகிழ்ந்துபோனான் மோகன். முன்னிலும் தீவிரமாக மாட்டிவைத்த பொட்டலங்களுக்கு வழிபாடு செய்யத்துவங்கினான்.

மோகனின் நாட்கள் மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்த சில நாட்களில் நளினியின் நிலமை மாறத்தொடங்கியது. வீட்டில் யாரோ தன்னைப் பின்தொடர்வது போலவும் தான் கவனிக்கப்படுவது போலவும் உணரத்தொடங்கினாள்.பயமும், பதற்றமும் அவளை ஆட்கொள்ளத் துவங்கியது.

ஒருநாள் மதியம் வீட்டு வேலைகள் முடிந்து நளினி முன்னறையில் குழந்தைகளுடன் ஓய்வாக படுத்திருந்தாள் அவளின் 5 வயது மகன்  அவளுக்கு அருகாமையில்  அமர்ந்து பிஸ்கோத்துகளை உண்டுகொண்டிருந்தான்.

அரைகுறை உறக்கத்தில் இருந்த நளினிக்கு தன் கால்மாட்டில் யாரோ ஒரு பத்து பண்ணிரன்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது. கழுத்து முதல் முழங்கால் வரை  சிவப்பு நிறத்துணியை அவன் அணிந்திருந்தான். லேசான விழிப்பு நிலையில் தன் மகனை நோக்கி  "தம்பி அண்ணனுக்கு கொஞ்சம் பிஸ்கோத்து கொடுப்பா " என்றாள் நளினி. அவள் குரல் கேட்டு அவள் கால‌டியில் பின்புறமாக அமர்ந்திருந்த அந்த உருவம் அப்படியே முகத்தை கழுத்துப்பக்கம் திரும்பி அவளைப் பார்க்க அதிர்ந்துபோனாள் நளினி. மலாய் சிறுவனைப்போல் காட்சியளித்த அந்த உருவத்தின் முகத்தில் கண்கள் இரண்டும் இரு கருந்திராட்சைகள் போன்று முழு கருப்பாக விழிவெண்படலமின்றி காட்சியளித்தது. அந்த உருவம் அவளை நோக்கி விகாரமானதொரு சிரிப்பை சிந்த, பதறியடித்து எழுந்தாள் நளினி. பக்கத்தில் மகன் மட்டும் சாப்பிடுக்கொன்டிருக்க இப்போது அந்த சிறுவனை அங்கே காணவில்லை...!

நளினிக்கு வியர்த்துக்கொட்டியது. ஏதோவொன்று சரியில்லை என ஆரம்பம் முதலே அவள் சங்கடப்பட்டது உண்மைதான் என அவளுக்கு தோன்றியது. அந்த சிறுவனின் ஆடை, வீட்டில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பொட்டலங்களின் துணியைப் போலவே இருந்ததையும் அவள் நினைத்துப்பார்த்தாள். அதன் பின்னர் அவளின் உடல் நிலை மிகவும் மோசமாகிப் போனது, உடல் பலகீனமாகி, இரத்தசோகை பீடித்து, முகமும், நகமும் வெளுத்து, நடக்கவும் இயலாமல் படுத்தபடுக்கையானாள். 

குழந்தைகளும் நோய்வாய்ப்படலாயினர். மருத்துவச்செலவு ஏகத்துக்கும் எகிறிய்து. மருத்துவர்கள் நளினியை பரிசோதித்துவிட்டு அவளுக்கு ஒரு குறையும் இல்லை, ஆனால் இரத்த அளவு மட்டும் வெகுவாகக் குறைந்திருக்கிறது எனத்தெரிவித்தனர். வறுமையும். பிணியும் அக்குடும்பத்தை அளவுக்கு மீறி ஆட்டிவைக்க ஆரம்பித்தது.

நளினியின் பேச்சை அதுவரை கேட்காத மோகனுக்கு இதயம் துனுக்குற ஆரம்பித்தது. அதற்கு முன் இல்லாது இப்போது அவன் கண்களிலும் அவ்வீட்டின் அரவமற்ற பகுதிகளில் நிழலுருவங்கள் தென்பட, அவன் சந்தேகம் அதிகரிக்கத்துவங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூசைக்கு முன்னர் அப்படி எதுவும் அந்த வீட்டில் அவ்ர்களுக்கு தென்படவில்லை.

நளினி மிகவும் ஆரோக்கியமான பெண்மணி, திடசிந்தை கொன்டவளும் கூட. காய்ச்சல் சளி என்றுகூட நொந்தவள் கிடையாது.  இன்று இப்படியாகிவிட்டாளே என்று வருந்திய மோகன் ஒரு முடிவுக்கு வந்தான்.

குறிப்பிட்ட அந்த நாளன்று வீடு முழுதும் மஞ்சள் நீரைத்தெளித்து வீட்டின் எட்டுத்திசையிலும் கட்டிவைத்த பொட்டலங்களை

 எடுத்து ஒரு பையில் கட்டி தூர வீசினான். தனியாக எடுத்து வைத்திருந்த லக்ஷ்மி ந‌ரசிம்மர் படத்தை பூசையறையில் மீண்டும் எடுத்து வைத்து வழிபட்டான். ஆச்சரியப்படும் விதமாக இரண்டொரு நாளில் நளினி பழையபடி நலமாக நடமாடத் துவங்கினாள். குழந்தைகளும் தேறிட குடும்பம் ஒரு வழியாக சகஜ‌ நிலைக்குத் திரும்பியது...!

அதன் பின்னர் மோகனுக்கோ நளினிக்கோ நிழலுருவங்கள் எதுவும் கண்ணில் தென்படவேயில்லை...!

மே 2016 "மன்னன்" மாத இதழில் வெளிவந்த படைப்பு

1 comment:

sivayogi sivakumar said...

கதை சுவாரஸ்யமாய் போகுது.