.

.
.

Friday, May 9, 2014

ஜஸ்டீனா..!!

மனித வாழ்க்கை மகத்தானது அது தனக்கும் பிற‌ர்க்கும் பயன்விளைவித்து மகிழும்பொழுது..! அழுதுகொன்டே பிறக்கிறோம், அழுதுகொன்டும், சிரித்துக்கொன்டும் காலத்தை முடித்து, முடிந்தால் சில வாரிசுகளை விட்டுவிட்டு, வாழ்வை முடித்து பிற‌ரை அழவைத்துப் புறப்படுகிறோம் .

ஆறடியில் முடிந்துவிடும் வாழ்க்கை என்பதை உணர்ந்த பொழுதிலும்  பணம், புகழ், அந்தஸ்த்திற்காக அல்லும் பகலும் பாடுபடுவதே நிரந்தரமாகிவிட்ட  சூழலில், இம்மண்ணில் எத்தனை பேருக்கு சுயநலம் களைந்து பொதுநலம்  பேணும் தெய்வீககுணம்  வாய்த்திருக்கிறது ?

ஒரு மனிதன் கண்முன்னே துடிதுடித்து  உயிருக்குப் போராடும்போதும், இரத்தம் சிந்தி நோகும்போதும் அவனைக் காப்பாற்றுவதை விட அவன் அனுஅனுவாய் சித்திரவதைப்பட்டு வாடுவதை காணொலி தொலைபேசியில் படமெடுத்து அதை யுடியூப்பிலும் பகிர்ந்து ரசித்து மகிழும் அரக்க மனங்களல்லவா இப்போது பூமியில் மலிந்துள்ளன !!

இவர்களுக்கு மத்தியில் தேவதைகளாய் சில அன்பு மனங்கள் மனிதவடிவில் நம்மிடையே வலம்வருவதுமுண்டு , நம் வாழ்வில் ஒளியேற்றிச் செல்வதுமுண்டு, பிரதிபலன் பாராது பிறர் வாழ்வில் நன்மை செய்து மகிழ்வதுமுண்டு ,அவர்கள் நம்மை பிரிந்து சென்றாலும், காலச்சுழற்சியில் கரைந்து போனாலும்,  அவர்கள் ஏற்றிவைத்த தீபமும், பதித்துச் சென்ற தடங்களும் மனவானில் என்றென்றும் சுடர்விட்டுப் பிரகாசித்து  நாம் வாழும் காலம்வரை அவர்களை நம் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொன்டுதானிருக்கிறது, அப்படி இந்த வாழ்வில் தீபமேற்றிய ஒரு தேவதையின் கதை இது....!

நடுத்தர குடும்பம், கல்விதான் எதிர்காலம் எனும் நிலை, இடைநிலைப்பள்ளிப் படிப்பு முடிந்தது, மேற்படிப்புக்கு பெரிய அளவில் செலவு செய்யும் வசதியில்லை..! கன‌வு கண்ட உயர்நிலைக்கல்வி தடைப்பட்டுவிட்டது !! தோல்வி மனதைக் குடைந்தது, இரவில் கண்ணீரால் தலையணை நனைந்தது, ஆறுதல் சொல்லவோ, வழிகாட்டவோ, பொருளாதாரத்தை விரட்டியே பொழுதுபோக உழைக்கும் பெற்றோரால் இயலவில்லை..!

பதின்ம வயது ஆகிவிட்டது, இன்னும் எத்தனை காலம் தான் நம் உயர்வுக்காக பெற்றோர் உழைப்பை சுரண்டுவது.. ? ந‌ம் வசதிக்காக அவர்கள் பண‌த்தை பிடுங்கித்தின்பது !  இறுதி முடிவு, படிப்பை உதறிவிட்டு வேலைக்கு செல்வது.

 "எட்டாத பழம் எப்பொழுதுமே புளிக்குமல்லவா ! அப்படித்தான், கரும்பாய் இனித்த கல்வி, வேம்பாய் கசந்து வாழ்க்கையை வேறு பக்கம் திசைதிருப்பிவிட்டது. இடைவேளையில் பயின்ற கணிணி சான்றிதழ்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தன‌ . வீடு , பள்ளி என்ற வாழ்க்கை மாறி வீடு, தொழிற்சாலை   என்ற நிலை ஏற்பட்டது..!

கல்வியின்பால் இருந்த ஈர்ப்பு மங்கி மறையலாயிற்று. நாம் மிகவும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் ஈடுபாடு காட்டும் எந்த ஒன்றும் அது உயிரோ, பொருளோ நம்மை விட்டு விலகிவிட்டால் அதன் பிரிவின் தாக்கம் நிச்சயம் நம்மனதைக் காயப்படுத்தும். ஆனால் நாள‌டைவில் அது பெரிய முக்கியத்துவம் இல்லாத ஒன்றாய் மாறிவிடும். தோல்வி, ஏமாற்றம், ஏக்கம், சோகம், பிரிவு எல்லாமே இவ்வகைதான். காலம் ஒரு மிகச்சிறந்த மருந்து. அதற்கு மனதின் காயங்களையும் ஆற்றும் வல்லமையுண்டு..!

இரப்பர் கையுறை தொழிற்சாலையில் அலுவலகத்தில் வேலை. அலுவலகத்தில் பெரும்பான்மை சீனர்களும், அவர்களுக்குச் சற்றுக் குறைவாய் ம‌லாய்க்காரர்களும், ஓரிரு இந்தியப் பணியாளர்களும் பணியாற்றினர். ஆனால் தொழிற்சாலை ஊழியர்களில் பெருமளவு இந்தியர்களே..! பெரிய தலைகளில் (அதிகாரிகளில் ) ஒருவர்கூட இந்தியரில்லை..!

நாட்கள் நகர்ந்து கொன்டிருந்தன, அப்போது ஒரு செய்தி வந்தது ஏற்றுமதி இறக்குமதிப் பிரிவுக்கு (Logistic Department)  ஒரு இந்தியர் மானேஜராக (உயர் அதிகாரியாக‌) வரப்போகிறார் என்ற செய்திதான் அது..!

குறிப்பிட்ட நாளும் வந்தது, அவர் வந்தார், ஆறடி உயரத்தில், செம்மை நிற‌த்தில், நடுத்தரமான உடல்வாகோடு, ஆனால் அவர் ஆண‌ல்ல..! ஒரு பெண்..! அதுவும் அழகான நடுத்தர வயதுடைய ஓர் இந்தியப் பெண்..! அவர் பெயர் ஜஸ்டினா..!

ஜஸ்டினா மிகவும் அழகாக இருந்தார். அலைஅலையாய் தோள்வரை புரளும் கூந்தல், மேல் நாட்டு பெண்களை நினைவுறுத்தும் நடையுடை பாவனை, அலங்காரங்கள், நுனி நாக்கு ஆங்கிலம். ஆழ்ந்த சாக்லேட் நிற ஆல்மென்ட் கண்கள், மெலிந்த உதடுகள், கூரான நாசி. ஒட்டு மொத்த தொழிற்சாலையும் அவரைத்திரும்பிப்பார்த்து ரசித்தது. அவர் அதிகாரியாய் பணியிலமர்ந்தார்.  அலுவலகமே அவரிடம் நட்பு பாராட்டி மகிழ்ந்தது.

ஏற்றுமதி இற‌க்குமதிப் பிரிவு என்பது சாதாரணமல்ல, தொழிற்சாலையிலேயே மிகவும் பிரச்சனையான பகுதி அதுவே, தொழிற்சாலைகளுக்கு வரவேண்டிய பொருட்களையும், அனுப்ப வேண்டிய பொருட்களையும் திறம்பட நிர்வகித்து அவரவரிடம் சேர வேண்டிய பொருளை உரிய நேரத்தில் சேர்ப்பிக்கத்தவறினால் அலுவல் பிரிவு அதிகாரிகளிலிருந்து தொழிற்சாலை நிறுவனர் வரை அனைவருக்கும் பதில் சொல்லி ஆகவேண்டும், திட்டு வாங்கவேண்டும்.

பிரச்சனை மிகுந்த அந்த வேலையில் யாரும் நிலைப்பதில்லை, ஓரிரு மாதங்களிலேயே ஓடிவிடுவார்கள்..! ஆனால் ஜஸ்டினா திறம்பட பணியாற்றினார், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை சரியான முறையில் செயல்பட வைத்தார், எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்தார், யாரும் அவரை குற்றம் சாட்டவோ, பழி சொல்லவோ அவர் வாய்ப்பை வழங்கவேயில்லை, அதையும் மீறி தம் மேலாதிக்கத்தை காட்ட முனைந்து அவரிடம் வீண்சண்டைக்கு வந்து அலுவலகத்தில் அனைவரின் முன்பாக அவரிடம் சத்தமிட்ட ஒரு சீன அதிகாரியை "இங்கே வந்து குரைக்காதே, நீ பேச வேண்டியதை  எம்டியிடம் பேசு" என்று திட்டி தலைகுனியவைத்து திருப்பி அனுப்பினார்..! நல்ல தைரியசாலி..!          

அவரிடம் பேசியது கிடையாது, சந்திக்கும் தருணங்களில் ஒரு புன்ன‌கை நலம் விசாரித்துப் போகும். ஓரிரு மாதங்கள் கடந்த பின் ஒருநாள் அவர் தன் உதவியாள‌ரிடம் வேலைமுடிந்ததும் என்னை அவர் அறைக்கு அழைத்து வரச் சொன்னதாக தகவல் வந்தது. என்ன விடயம் என்று சொல்லவில்லை, பயம் மனதைக் கவ்வியது, எங்களின் தொழிற்பிரிவுகள் வெவ்வேறு, இருந்தும் ஏன் அழைக்கிறார் ? திட்டப் போகிறாரோ என்று பயமாக இருந்தது.

வேலை முடிந்து அலுவலக‌ம் காலியாகிக்கொன்டிருந்தது. கைப்பையை எடுத்துக்கொன்டு அவர் அறைக்கு தயங்கித்தயங்கிச் சென்றேன். அவர் குளிர்சாதன அறையில் அமர்ந்திருந்தார், பூச்சாடியில்  வெளீர் மஞ்சள் நிறப்பூங்கொத்துக்கள்  மேசை ஓரத்தில் அவரைப்போலவே அழகாக..!
   
"வா சிவனேஸ்" நான் தயங்கி நிற்பதைப் பார்த்து கனிவான பார்வையும் மென்மையான புன்னகையோடும் வரவேற்றார். அவர் எல்லோரிடமும் ஆங்கிலம் தான் பேசுவார். இன்று அழகான தமிழில் ..!!

தான் கவனித்துக்கொன்டிருந்த கோப்புகளை ஓரமாய் எடுத்து வைத்துவிட்டு "உட்கார்" என்றார், 'ஆமாம் எவ்வளவு நாளா இங்கே வேலை செய்யுற" ? எனக்கேட்டார், பதிலை அறிந்து கொன்டதும் "நீ விஞ்ஞானப் பிரிவுல (science stream) படிச்சியாமே ? அப்புறம் ஏன் மேற்படிப்புக்கு போகல ? அக்கறையுடன் கேட்டார். "இல்லை வாய்ப்புக்கிடைக்கலை அதான்" என்றதும், தலையை மெல்ல ஆட்டியவாறு வாய்ப்பு எப்படித்தானா கிடைக்கும் ? நீதான் முயற்சி செய்யனும், மேற்படிப்பு படிக்கனும், நல்ல நிலைக்கு உன்னை உயர்த்திக்கனும், இப்படியே சில நூறு வெள்ளிகளுக்காக வாழ்க்கையை அடகு வைத்துவிடக் கூடாது என அவர் சின்ன சின்ன வாக்கியங்களில் தன் கருத்தை தெரிவித்துப் பேசிக் கொன்டிருந்தார். எனக்கோ அவர் என்பால் கொன்ட அக்கறை மனம் நெகிழச்செய்தது. தலையில் ஒளிவளையத்தோடும் இற‌க்கைகள் இரண்டோடும் ஒரு தேவதை என் முன் பேசிக்கொன்டிருப்பது போல் தோன்றியது. வாய்மூடி அவர் பரிவுடன் கூறுவதை மனதால் உள்வாங்கிக் கொன்டிருந்தேன்.

அவர் அதிகம் பேசவில்லை ஒரு பத்து வாக்கியம் அவ்வளவுதான். கடைசியாக புறப்படுமுன் "அந்த வானத்தைப்பார் இன்றிருக்கும் மேகங்கள் நாளை அங்கே நிலைப்பதில்லை, மனித வாழ்வும் அப்படியே, மாறாத எதுவும் நிலைப்பதுவுமில்லை, முன்னேறுவதுமில்லை..! உடனே உனக்குத்தகுந்த மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாளில் உன்னை இங்கே நான் பார்க்கக்கூடாது" என அன்பாகக் கூறி வ‌ழிய‌னுப்பினார்.

வீடு திரும்பினேன், அவர் கூறியவை மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக்கொன்டேயிருந்தது. கைம்மாறு கருதா அவர் பரிவு மனதை மிகவும் பாதித்தது பலர் சொல்வதை புற‌க்கணித்துவிடும் மனதானது. ஏனோ யாரோ ஒரு சிலர் சொல்வதை மட்டும் உள்வாங்கிக்கொன்டு மீள்பார்வை செய்து மகிழ்கிறது.அதன்படி நடக்கவும் விழைகிறது.

அதன் பின்பும் ஜஸ்டினா, பார்க்கும்போதெல்லாம் எப்பொழுதும் போல்  ஒரு புன்னகைதான் செய்வார், ஆனால் என்மனமோ " நான் சொன்னதை நீ மதிக்கவேயில்லையே" எனத் திட்டுவதைப்போல் கற்பனை செய்து பயம் கொள்ளும்.

கல்வி வேண்டாம்..!  என்று புறக்கனித்த நிலை போய், ஜஸ்டினா இத்தனை பரிவுடன் சொன்னாரே என்பதற்காகவே ஏதாவது பகுதி நேரமாகப் படிக்க வேண்டும் எனும் முயற்சியில் பகுதி நேர‌ கணிணி டிப்ளோமா படிப்புக்கு விண்ணப்பித்து, அதை ஜஸ்டினாவிடம் தேடிப் போய் சொன்னதும் சிரித்தபடி தலையசைத்தார்.

வீட்டில் பெற்றோர் உன் சம்பள‌த்தை  உன் படிப்புக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள் என்ற‌னர் . பகுதி நேரக் கல்வி என்பது அத்தனை சுலபமல்ல..! வேலை முடிந்து மாலை ஏழு மணிக்குமேல் பொதுப் பேருந்தில் பயணித்து, பசி, தூக்கம் இரண்டும் கலந்த மயக்கத்தோடு படித்து, அயர்வோடு வீடு திரும்பி..! :(

காலம் தன் கடமையை மிகச் சரியாகவே செய்கிறது. சில காலம் கழிந்து வீட்டைப்பிரிந்து, உணவு, உடை, உறைவிடம் தந்து தாய்க்கோழி தம் இறக்கைக்குள் பிள்ளையைக் காப்பதுபோல் தங்கள் கவனத்தில் வைத்துக் காப்பாற்றிய பெற்றோரைப் பிரிந்து சிங்கைக்கு பயணம். ஒரு நாள் இரு நாள் அல்ல! ஒரு சில வருடங்களுக்கு, கல்வியும், பணியும் அங்கே கரைசேர. தனிமையான, த‌ன்னம்பிக்கை நிறைந்த யாத்திரை போன்ற வாழ்வு அது.! 

மீண்டும் திரும்பிய பின் இன்றுவரை ஜஸ்டினாவை சந்திக்க இயலவில்லை. ஆனால், ஒவ்வொரு முறை வானத்தை நோக்கும்போதும், நகரும் மேகங்களூடே அவர் முகம் ஆசிர்வதித்து புன்னகைப்பதை இன்றும்
தரிசிக்கமுடிகிறது...!


ஒரு தீபம் தன் ஒளியை இழக்காமலேயே பல தீபங்களை ஏற்றும் வல்லமை கொன்டது, சில மனிதர்களும் அவ்வாறே, பழகினாலும், பார்வையாள‌ர்களாகவே நிலைப்பவர்களும் உண்டு, பிறர் வாழ்வில் நுழைந்து மாற்றங்கள் நிகழ்த்துபவர்களுமுண்டு...!

சில தெய்வீக உள்ளங்களும் அப்படித்தான். இந்த கணிணி வாழ்க்கை எவ்வளவோ நல்ல உள்ளங்களை இதயத்தில் நட்பாகப் பதிவு செய்தாலும் "ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை" எனக் கண்டித்தும் "எழுத்துலகில் உன் ஆளுமையை ஆழ‌மாகப் பதிவு செய்" எனவும் "உன் பதிவுகள் முண்ணனி இதழ்களை அலங்கரிக்க வேண்டும்" என்றும் வாழ்த்தும் தேவதைகளையும் இது பெற்றிருக்கிறதே எனும் வியப்போடும் நன்றியோடும் விடைபெறுவோம்...! :)
        

2 comments:

சி.ப.ரஞ்சிதமலர் said...

inte kathai nalayiruku....yarunta jasdhina enaku teriyuma

சி.ப.ரஞ்சிதமலர் said...

Kathai arumai...ama jasdhinave enaku teriyuma