<
முக்கிய அறிவிப்பு : (இப்பதிவை எக்காரணம் கொன்டும் அலுவலகத்திலோ வேலை நேரத்திலோ படிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம், மீறினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் முன்கூட்டியே அறிவிக்கிறோம்)
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..ஆகா என்ன ஒரு தேமதுர கானம்... சுசிலாம்மா தானே அது?, என்னவொரு இனிமை குழைவு... அப்படியே தேனில் தொட்ட பலாச்சுளையாட்டம் என்னே இனிமை என்னே இனிமை... சரி சரி விக்ஷயத்திற்கு வருவோம்.. இந்தப்பாடலின் உட்கருத்து என்ன? அன்பு என்று சொல்வீர்கள், ஆனால் அதையும் தாண்டிய ஒரு புனிதமான காரணம் உண்டு அது:
தூக்கம்!!!!
உண்மைதான் நல்ல தூக்கம்தான் நல்ல வாழ்வுக்கு அடிப்படை.நம்புகிறீர்கள், இல்லையா ? சரி வாருங்கள் அந்த நல்ல தூக்கத்தை அடைவது எப்படி என்பது விஞ்ஞானப்பூர்வமாக விளக்கப்பட்டிருப்பதைக் காண
வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும், போர்க்களம் மாறலாம், போர்கள்தான் தீருமா? உண்மைதான் சேயாக ஐயிரு திங்கள் சுமந்து ஈன்று புறம் தந்த அன்புத்தாயின் மடி சாய்ந்து வாழ்வு துவங்கி, பின்னர் ஆடி அடங்கி, அங்கமெல்லாம் ஒடுங்கி பூமித்தாயின் மடிசேரும் வரை வாழ்வென்பது ஒரு போர்க்களம்தான்!
இந்த வாழ்க்கை போர்க்களத்தை வாளும் வேலும் கொன்டு வென்று விட முடியாது, அறிவுக்கூர்மையோடு, ஆரோக்கியச் சிறப்பும் வாய்த்தால்தான் இந்த வாழ்க்கைப் போராட்டங்களின் பல்முனைத் தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.
அறிவுக்கூர்மைக்கு பட்டறிவும் படிப்பறிவும் ஆதாரம் என்பதை அனைவரும் அறிவர், ஆனால் ஆரோக்கியச் சிறப்புக்கு?
சுவாசிக்க தூய்மையான காற்று, சுத்தமான நீர்ப்புழக்கம், உடலுக்குத்தேவையான் சத்துக்கள் அனைத்தும் அடங்கிய சமசீர் ஆகாரம் இவற்றோடு அதி முக்கியமாய் ஆரோக்கிய உடலுக்கு தேவை ஓய்வு! ஓய்வின்றி உழைக்கும் போழுது உடலும், மூளையும் எளிதில் உளைச்சலுக்கு உள்ளாகும், கூடவே நாம் கூர்மையாக சிந்திக்கவும் செயல்படவும் இயலாதபடி தடுத்துவிடும். இதனால் செயல் திறன்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. இது மட்டுமன்றி இருதயம், இரத்தக்குழாய்கள், மூச்சு உறுப்புக்கள் அனைத்தும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.
இத்தகைய பிரச்சனைகளிலிருந்து உடலைத் தற்காக்கும் ஓய்வென்று வரும்பொழுது உறக்கம் மிகச்சிறந்த ஓய்வு நிவாரணியாக விளங்குகிறது,
சரித்திரத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் குறைந்தபட்சம் 9 மணி நேரம் உறங்கியதாகக் அறியவருகிறது, ஆனால் இந்த நவீன யுகத்தில் சராசரி மனிதன் 7 மணி நேரம் உறங்குவதே அதிசயமாகிக்கொன்டுவருகிறது.
இத்தகைய அருமையான ஓய்வை வாழ்வில் இழப்பவர்கள் எரிச்சல், பொறுமை இன்மை, கோபம், பதட்டம், ஞாபக மறதி கூடவே செயல் திறன் குறைவு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.
நம்மில் பலர் கும்பகர்ணனுக்கே பாடம் நடத்தக்கூடிய அளவு தூங்குவதில் திறமை? பெற்றிருந்தாலும் வெகு சிலருக்கு தூக்கம் வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது , அதற்கு பெரும்பாலும் கவலை, வயிற்றுக்கோளாறு, நோய், சரியான படுக்கை அமையாமை, புதிய இடம்/சூழ்நிலை, பயம் இவற்றோடு முதுமை போன்றவைகள் காரணிகளாக அமைந்து விடுகின்றன.
இத்தகையோரை மனதில் கொன்டு வடிக்கப்பட்ட பதிவே இதுவாகும், சரி இப்போழுது இயல்பாகவும், அமைதியாகவும் நித்திராதேவியை (சத்தியமா தூக்கம்தாங்க!) மடிசாய சில எளிய வழிமுறைகள் :
1. நல்ல உடற்பயிற்சி, மாலை வேளைகளில் மெது நடை மேற்கொள்வது சிறப்பு,(உடற்பயிற்சியாளர்கள் இதை "டெல்பி தூக்கம்" என்றழைப்பர்), இதில் நரம்புகள் தளர்ந்து இயல்பான தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.
காற்றோட்டம் நிறைந்த இடங்களில் சுவாசப் பயிற்சி செய்வதும் இயல்பு நிலைத் தூக்கத்திற்கு உதவும்.
2.காப்பி, சாக்லேட், சில மென்மையான பானங்கள்(soft drinks), மூலிகை பானங்கள் போன்றவற்றில் காப்பிப் பொருள்(caffeine) அமைந்துள்ளன, எனவே பகல் வேளைகளில் இவற்றை ஓரங்கட்டுவது இரவுத்தூக்கம் இனிதே தொடர வழி வகுக்கும்.
உடல்வலியைக் குறைக்க உட் கொள்ளும் வலி நிவாரணிகளும் தூக்கத்திற்கு சத்ருவாக மாறிவிடுவதுண்டு.
3.கவலையை மறந்து தூங்க சிலர் தண்ணியடிப்பதுண்டு( பச்சைத்தண்ணி இல்லைங்க, போதைத்தண்ணி பட்டை சாராயம், பீர் பிராந்தியென)அது ஏற்படுத்தும் மயக்க/போதை நிலை தூங்கும் உணர்வை ஏற்படுத்தினாலும்,மது மயக்கம் தணிந்த பின் தெளிவாகத் தூங்க முடியாது. எனவே வேண்டாமே அந்தத் தீயப் பழக்கம்!
4.புகைப்பிடிப்பது, வெண்சுருட்டு, சுருட்டு, பீடி போன்றவற்றின் பயன்பாடுகளும் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு அதிகரிப்பு என அபத்தங்களை ஏற்படுத்தி தூக்கம் கெடுக்கும்வெண்சுருட்டுப் பழக்கத்தைக் கைவிட்டவர்கள் அமைதியாகத் தூங்க முடிவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எனவே வேண்டாமே இந்த ஆறாவது விரல்!
5. உணவு, ஆம் எளிதில் சீரணமாகக்கூடிய உணவையே இரவில் உட்கொள்ள வேண்டும், ஏழு அல்லது ஏழரைக்குள் உணவுண்டுவிட்டு இரவு 10க்கு படுக்கை சென்றால் தூக்கத்தில் நோ பிரச்சனை!.
6.தூங்கப்போகுமுன் ஒரு கப் சூடான பால் அருந்துங்கள், அதிலுள்ள அமினோ அமிலப் பொருள் சேரோடோனின் மூலம் முளையை அமைதிப் படுத்தி தூக்கத்திற்கு வரவேற்பு தருவதாகத் தகவல்.
7.தூக்க மருந்துகளுக்கு ஒரு பை பை சொல்லிவிடுங்கள், நாளடைவில் அதன் சக்தி குறைந்து, மாத்திரையை நிறுத்தினாலும் தூக்கம் பெரிதும் பாதிப்புறும். எதற்கு அந்த வம்பு, பேசாமல் உபயோகிக்காமலேயே விட்டு விடலாம்.
8.படுக்கை அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கவேண்டும், அது நல்ல தூக்கத்துக்கு வகை செய்யும்.
9."கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு" என்ற பாடல் வரிகள் படி, தூங்குவதற்கு முன் எல்லாக் கவலைகளையும் மூட்டை கட்டி தூக்கி தூர எறிந்து விடுங்கள்! இனிமையான மெல்லிசை பாடல்களை அசைபோட்டுக்கொன்டு அமைதியாகத் தூங்குங்கள். இவை அத்தனையும் தவிர்த்து, ஒரு சூப்பர் வழி உள்ளது அது என்னவென்று பார்ப்போமா?
உடம்பில் சில இடங்களில் அழுத்தம் கொடுப்பதன் வழி தூக்கத்தை வரவழைப்பது(அக்குபிரக்ஷர்), அதற்குரிய இடங்கள் மனிக்கட்டிலும், முகத்திலும் உள்ளன.
முதலாவது : மணிக்கட்டின் உட்புறம் உள்ளது. கட்டை விரலிலிருந்து விலகி உள்ள மறுபுறத்தில் இது இருக்கிறது. இந்த இடத்தில் சில நிமிடங்கள் அழுத்திக் கொடுத்து பிறகு விட்டு விடவும்.
இரண்டாவது : புறங்கையில் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே அமைந்துள்ளது. மற்றொரு கையின் கட்டை விரலால் இந்த இடத்தை அழுத்திப் பிடித்து விட வேண்டும்.
மூன்றாவது : நெற்றிப்பொட்டில் இரு புருவங்களுக்கும் வெளி ஓரங்களில் இருக்கிரது. இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களால் அழுத்திப் பிடித்து விட வேண்டும்.
தூக்கம் வராத நிலையில் படுக்கையில் புரண்டு கொன்டிருக்கையில் இதில் ஏதவதொன்றைத் தேர்ந்தெடுத்துச் சில நிமிடங்கள் தோடர்ந்து அழுத்தம் கொடுங்கள், அப்புறம் பாருங்களேன், தூக்கம் தூக்கமாய் கனவுலகில் சிறகடித்துப் பறப்பீர்கள்!
முன்னறிவிப்பு : ஏற்கனவே அறிவித்தபடி இந்தப் பதிவை யாரும் அலுவலகத்தில்/வேலை நேரத்தில் படிக்க வேண்டாம், எச்சரிக்கையை மீறிப் பதிவை படித்து, படித்து முடிப்பதற்குள் நீங்கள் தூங்கி விழுந்து, மேலாளரிடம் திட்டு வாங்கி இன்ன பிற கக்ஷ்ட நக்ஷ்டங்களுக்கு ஆளானால் கம்பெனி பொருப்பேற்காது என்பதை ஸ்ட்டிரிக்காக தெரிவித்துக்கொள்கிறோம். (உங்களால்தான் வேலை போனது வேறு வேலை தேடித் தரவும்! என வரும் நேரடிச்சந்திப்புகள், மடல்கள், அஞ்சல்கள் எல்லாம் தடைசெய்யப்படுகின்றன என்பதையும் தெரிவிக்கிறோம்)
விதிவிலக்கு : (ஆஹா, ஓஹோ, அபாரம், அற்புதம் எனும் பாராட்டுப் பிண்ணூட்டங்களும், "ஏழு வருக்ஷமா சரியான தூக்கமே இல்ல , உங்க பதிவ படிச்சேன், முடிக்கறதுக்குள்ள தூங்கிட்டேன் " என்பன போன்ற புகழ்ச்சியுரைகளும் எப்பொழுதும் போல வரவேற்கப்படுகின்றன)
பி.கு : மேலும் இதுபோன்ற விஞ்ஞானிகளையே அச்சுறுத்தி வியக்க வைக்கும் விஞ்ஞானப் பதிவுகளோடு விரைவில் உங்களை சந்.தி..க்...(தூங்கிவிட்டேன்)