.

.
.
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, December 31, 2013

2014 புத்தாண்டில் பாலாவின் பரதேசியும் எமது மூதாதையர்களும்...!




ந‌ம் நாட்டில் குறிப்பிடத்தக்க‌ அரசியல் அதிர்வுகள் மற்றும் சமூகத்தை திரும்பிப்பார்க்க வைத்த, அரசியல் பேசவைத்த, சிலருக்கு ஏற்றமாகவும், பலருக்கு ஏமாற்றம் நிறைந்த ஆண்டாகவும் மலர்ந்து இன்று விடைபெறும் 2013 க்கு நாமும் இன்று விடை கொடுப்போம்.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும்  அந்த ஆண்டு விடைபெறுவதையொட்டி ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அவ்வாண்டின் சிறந்ததாக அடையாளம் காண‌ப்பட்ட , மக்கள் மனதைக் கவர்ந்த, வசூலை அள்ளிக்குவித்த 10  படங்களை வரிசையிட்டு திரையிடுவது ஆண்டுதோறும் வழக்கமே, இவ்வாண்டும் அவ்விதம் திரையிடப்பட்ட படங்களில் நான்காம் இடத்தை பிடித்து அண்மையில் ஒலியேறியது இயக்குனர் பாலாவின் "பரதேசி" திரைப்படம்.


இயக்குனர் பாலா "நான் கடவுள்" திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றவர்.
இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் மாணவருமாவார். தமிழ் சினிமாவில் இவரது ஆளுமை ஆழமாகவே பதிந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. தான் இயக்கும் கதாபாத்திரங்களின் வழி ரசிகனையும் ஆட்டிப்படைக்கும் சித்துவேலை இவருக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. ஆனால் அது எல்லா சமயங்களிலும் சோக அலைகளிலேயே ரசிகனை மூழ்கடித்துவிடுவது வருத்தமே.

இவர் படங்களின் காட்சிகளைபோல, கதாபாத்திரங்கள் போல பாடல்களும் அருமையாகவே அமைந்திருக்கும், உதாரணத்திற்கு  இசைஞானி இளையராஜாவின் குரலில்/ இசையில் ஒலித்த‌ உயிரைத்தாலாட்டும் "எங்கே செல்லும் இந்த பாதை" எனும் சேது படப் பாடல். என்றும் மனதைவிட்டு அகலாத மிக மிக அருமையான பாடல். எப்பொழுதும் மனதைக் கவர்ந்த பாடல்களில் முதலிடம் வகிக்கும் பாடல் இது...!

சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) ஆக இறுதியாக தற்சமயம் எட்டிப்பார்த்திருப்பது பரதேசி (2012).

சேது படத்தில் முதலில் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கும் கதாநாயகன் விக்ரம் பின்னர் தலையில் தாக்கப்பட்டு சித்தம் கலங்கி,  கருகி, கரைந்து, மொட்டைத்தலையும் சீரழிந்த தோற்றமுமாக காட்சியளிக்கும் போது நம்மையறியாமலேயே  நம் கண்களில் துளிர்க்கும் கண்ணீர்..!. "ந‌ந்தா" படத்தின் இறுதிக்காட்சியில் தற்போது சிங்கமாய் கர்ஜிக்கும் அன்றைய அமைதி நாயகன் சூர்யா தன்னை புற‌க்கணித்து ஒதுக்கிய தன் தாய்  அவர் கையால் ஊட்டும் விக்ஷம் கலந்த உணவை தெரிந்தே தன் நீலக்கண்கள் விரிய வாங்கி உண்பாரே, அப்போது ஏற்படும் மனவலி..! அது மட்டுமா "நான் கடவுள்" படத்தின் பெயர் திரையிடப்படும் பொழுது காட்டப்படும் காட்சிகளில் ஒரு காட்சி, முடமான ஒரு பிச்சைக்காரப் பெண்மணியை வில்லன் இடுப்பில் எட்டி உதைக்க அவர் சரிந்து விழுவார் பாருங்கள்...!, அந்த கணத்தில் அது சினிமா என்பதையும் மற‌ந்து அந்த வில்லனை எட்டிப்பிடித்து நாலு அறை விட கைகள் பரபரக்கும். தடுக்க முடியவில்லையே எனும் தாக்க‌ம் (இதற்குமேல் இந்தப் படத்தைப் பார்க்க இதயத்தில் வலுவில்லையென‌  எழுந்து ஓடிவந்துவிட்டது கூடுதல் தகவல்..! )


இப்படியான படங்களின் காரணகர்த்தாவான பாலா அண்மையில் தந்த படமே "பரதேசி". இப்படத்தைப்பற்றி நிறைய கூறலாம், ஆனால் அது என்னில் ஏற்படுத்திய வேறு பாதிப்புகளை பதிவு செய்யவே இந்தப் படைப்பு. ஒப்பந்தக்கூலிகளின் அவல வாழ்க்கையையும், அவர்களின் கண்ணீர் காவியங்களையும் பதிவு செய்த இப்படத்தை திரையில் காணும் போது மனக்கண்ணில் தெரிந்தவை யாவும், எமது மூதாதையர், ச்ஞ்சிக்கூலிகளாய் இந்நாட்டிற்கு கொன்டுவரப்பட்ட எமது பாட்டனின் பெற்றோர், அவர்களின் வாரிசுகளாய் இந்நாட்டிற்கு வளமை சேர்க்க இரத்தமும் வியர்வையும் சிந்திய எமது பாட்டன் பாட்டிமார், அவர்களைத்தாண்டி எமது பெற்றோர்களும் ஓரளவிற்கு தோட்ட வாழ்க்கைக்கு தங்கள் பங்கை வித்திட்ட பின்னர் தானே இரப்பர் தோட்டங்களுக்கான வர‌வேற்பு குறைய கைமாறிய தோட்டங்களில் இருந்து மேம்பாட்டாளர்களால் மனிதாபிமானமின்றி வெளியேற்றப்பட்டனர்.அவர்களே மனத்திரையில் முழுமையாய் இடம்பிடித்துக் கொண்டனர்.  

தோட்டங்களை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் அவல வாழ்க்கையை யார் கருத்தில் கொன்டது ? இன்று ஊடகங்களிலும், காட்சிகளிலும் இந்தியரல்லாதோர் பால்மரக்கத்தியைப்பிடித்துக்கொன்டு "போஸ்" கொடுக்கின்றனர், ஏதோ பால்மரத்தையே தாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்பதைப்போல..! நாமும் பார்த்து ரசித்துக்கொன்டுதான் இருக்கிறோம்..! இந்நாட்டின் இரப்பர் சரித்திரத்தின் மூலமும் முடிவும் யாரென்பதை அறிந்து வைத்துக்கொன்டே .. !

அன்று அட்டைக்கு இரத்த தானம் செய்து பல சமயங்களில் பாம்பு, பூரான் மலேரியாக்கொசு என பலவற்றுக்கும் உயிர்த்தியாகம் செய்து மீண்ட இந்த சமுதாயத்தை இன்று மீண்டும் தோட்டப்புரத்திற்கு செல்லலாமே என செல்லமாய் சீண்டும் நமது சமுதாய தலைவர்கள் சொல்வதைக்கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை..! ஒரே தமாக்ஷா இருக்குது போங்க...!

இனிவரும் 2014 எல்லோருக்கும் ஏற்றம் தரும் ஆண்டாய் மலர்ந்திட "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"  

    

Friday, September 6, 2013

மாயமனிதனும் மாபெரும் இலக்கியவாதியும்


ஒருநாள் ஒருபொழுது திடீரென யார் கண்ணுக்கும் புலப்படாமல் , மாயமாய் மறைந்து காற்றாய் உலவும் நிலை நமக்கு நேரிட்டுவிடுகிற‌து, அப்போது மன‌ நிலையும் உடல் நிலையும் எப்படி இருக்கும் ? என்னென்ன காரியங்கள் செய்யத் துடிக்கும் இந்த மனது ?

அன்பான‌வர்களை அவர்கள் அறியாமலேயே பின் தொடர்ந்து வேவு பார்க்கச் செய்யுமா ? வேண்டாதவர்களை அவர்கள் அறியமாட்டார்கள் எனும் தைரியத்தில் துன்பம் இழைத்து பழி வாங்கத் தூண்டுமா ? விளிம்பு நிலை மாந்தர்களுக்கு நன்மைகள் புரிந்து அவர்களை மகிழச் செய்து இரசிக்குமா ? அல்லது இதுதான் சமயமென்று மேலும் அசம்பாவிதங்களை தோற்றுவித்து ஏற்கனவே அரசியல்வாதிகளாலும், அடாவடிப் பேர்வழிகளாலும் நொந்து போன மக்களை மேலும் நோகடித்து பிறர் துன்பத்தில் குளிர் காய விழையுமா?   

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆங்கிலத் திரைப்படம் (Hollow Man )  Kevin Bacon, Elisabeth Shue ஆகியோரின் நாயக நடிப்பில் வெளிவந்த அறிவியல் புனைவிலான திகில் திரைப்படம்.

விஞ்ஞானி செப‌ஸ்டியன் கேய்ன் (Kevin Bacon ) உயிரினங்களை உருவம் களைந்து மாயமாய் மறையச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். மிருகங்களைக் கொன்டு அவர் செய்த பரிசோதனை முழு வெற்றியைத் தருகிறது. தமது ஆய்வில் மிருகங்களை மறைத்து மீளவும் மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்த களிப்பில், அடுத்த‌க் கட்டமாக மனிதரை மாயமாய் மறைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் தமது விஞ்ஞானிகள் குழுவினரின் உதவியோடு தம்மையே பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்கிறார். அவர் உடலில் அவர் கண்டுபிடித்த ஆய்வு மருந்து செலுத்தப்படுகிற‌து. கடுமையான வலியையும் வேதனையையும் அடைந்து, தமது உடலின் தோல், நரம்புகள், சதை  இறுதியில் எலும்புக்கூடு என ஒன்றன் பின் ஒன்றாய் உடல் முழுமையாய் மறைந்து மாய மனிதனாக ஆகிவிடுகிறார் . அதன் பின்னரே திரைக்கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது, உடல் மறைந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பானது அவர் மறையத்தான் உதவியதே தவிர, மிருகத்தின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக அதன் உடலை மீண்டும் உருப்பெற செய்ததைப்போல அவரை மீட்டுத்தர உதவவில்லை, தோல்வியில் கையைப்பிசைகிற‌து விஞ்ஞானிகள் கூட்டம்.

தனது உடலை இழந்து மாயமனிதனாக மாறிய நிலை ஆரம்பத்தில் மகிழ்ச்சியளித்தாலும், ஒரு கட்டத்தில் அது விஞ்ஞானி செபஸ்டியனுக்கு சலிப்பையும், வெறுப்பையும் தருகிறது. வெறுப்பு குரோதமாக வடிவெடுக்க‌ தனது உருவம் திரும்ப மீளாது எனும் முடிவுக்கு வந்து அதீத கோபம் கொள்கிறார். விளைவு, தனது மன விகாரங்களுக்கு உயிரூட்ட ஆரம்பிக்கிறார். பல வில்லங்கங்களை புரிகிறார்.

விஞ்ஞானி செபஸ்டியன் உலகிற்குத் தெரியாமல் தனது தோல்வியுற்ற கண்டுபிடிப்பை மறைக்கவும், தன்னை தற்காத்துக்கொள்ளவும் ஒரு பயங்கர முடிவை எடுக்கிறார் . அதன் தொடர்பில் தனது விஞ்ஞானக் குழுவினரையே ஒவ்வொருவராக கொடூரமாகப் பலிகொள்கிறார். இறுதியில் கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கொப்ப  தமது விஞ்ஞானிகளில்  ஒருவரான‌ கதாநாயகியைக் கொல்ல முயற்சிக்கையில், தனது எண்ணம் ஈடேறாமல் அவர் கையாலேயே கொடூரமாக அழிக்கப்படுகிறார்.

இது தமது உடல் அருவமானதை சாதகமாக்கிக்கொன்டு தீமைகள் புரிந்த ஒரு மனிதனின் கதை.

வாழும் காலத்திலேயே ஒரு மனிதனுக்கு மறைந்து உறையும் நிலை  நேர்கையில்,  அவன் வாழ்க்கை, அவனை பிண்ணிப் பிணைந்திருக்கும் அவனது உற‌வுகள், பகைகள் ஆகியவற்றை அவன் கைக்கொள்ளும் விதம், உண்டு, உறங்கி உயிர் வாழும் சராசரி மானுடப் பிற‌வியாக இன்றி, சமூகத்தின் பால் அக்கரை கொன்ட ஒரு  சீர்திருத்தவாதிக்கு இந்நிலை வாய்த்தால் அவனுடைய செயல்பாடுகள் ? இக்கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது மேற்குறிப்பிட்ட கதைக்கு நேர்மாறாக அமைந்த ஒரு மாயமனிதனின் புதினம். 

கதைச்சுருக்கம் - அநியாயத்தைக் கண்டால் பொங்கியெழுந்து நீதிக்குப் போராடும் நடுத்தர வர்க்கத்து நாயகன்(மெய்யப்பன்). மணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான அவர் அவ்வூரின் பெரிய மனிதர் போர்வையில் ஒளிந்து கொன்டு பலவித அநியாயங்களை நிகழ்த்தும்  பணம், பதவி, அந்தஸ்து படைத்த வில்லனின் (கேசவராயன் ) சூழ்ச்சியால் கொலையாளியாக சித்தரிக்கப்பட்டு சிறை செல்கிறார், சந்தர்ப்பமும், சாட்சிகளும் அவருக்கு எதிராக பிண்ணப்பட, சதி வலையில் சிக்கிக்கொன்ட அவர் செய்யாத குற்றத்திற்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அநுபவித்து விட்டு வீடு திரும்புகிறார்.

மனவி மக்களைக் காண பேராவலுடன் வீடு திரும்பும் அவரை அவர் மனைவி ஊராரின் பழிச்சொல்லுக்குப் பயந்து வீட்டிலேயே ஒதுக்கியும் ஒளித்தும் வைத்து வேதனைப்படுத்துகிறார். மனமுடைந்த நாயகன் வீட்டை விட்டு வெளியேறி தமது ஆப்த நண்பனின் உதவியோடு வடதேசம் நோக்கிப்புற‌ப்படுகிறார், இடையில் நண்பரிடமிருந்து பிரிந்து வட நாட்டில் வேலை தேடிக்கொன்டு அங்கேயே வாழ்ந்தும் வருகிறார், வீட்டைப் புறக்கணித்து பிரிந்தாலும் மனைவி மக்களுக்கென தமது ஊதியத்தின் ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறார்.

அச்சமயத்தில் விஞ்ஞானத்திலும், மெய்ஞ்ஞானத்திலும் உயர் அறிவு பெற்ற ஞானி (மெய்கண்டார்)  நட்பு அவருக்கு வாய்க்கிறது. அவருடன் நெருங்கிப் பழகும் நாயகன் அவர் உருவங்களை மறைய வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்து பிரமிக்கிறார், ஞானியிடம் தன்னை சோதனையில் ஆட்படுத்திக்கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் . ஆரம்பத்தில்  தயங்கினாலும் பின்னர் நாயகனை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்கிறார் ஞானி.

அவர் முயற்சி வெற்றியடைந்து நாயகன் உருவம் மறைந்து மாய மனிதனாகி விடுகிறார். அருவமாகிப்போன அவர் தன் ஊர் நோக்கி விரைகிறார். அங்கே மாய வடிவில் தன் குடும்பத்தினரிடையே உலவுகிறார், பொதுவில் நடைபெறும் சில தீமைகளை தடுத்து வெற்றி கொள்கிறார், தமது நண்பர்களின் வாழ்வுக்கு உதவுகிறார்.த‌ன்னை வஞ்சித்த வில்லனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுக்கிறார், அப்போது அவரை மாய வடிவெடுக்க உதவிய ஞானியார் வழியாக அவ்வில்லனின் பிண்ணனியை அறிந்து தனது  பலிவாங்கும் முயற்சியில் தயங்குகிறார்,

இறுதியில் முடிவு என்ன‌ ? நாயகனின் உருவம் மீண்டதா ? அவர் நினைத்தபடி அவர் குடும்பத்தில் அன்பும் நலமும் சூழ்ந்ததா ? தம்மை வஞ்சித்த வில்லனை அவர் நினைத்தபடி பழிவாங்கினாரா ? என்பதையெல்லாம் நான் சொல்ல மாட்டேன், வாய்ப்புக் கிடைத்தால் டாக்டர்.மு.வ. அவர்களின் "மண்குடிசை" நாவலைப் படித்து முடிவைத் அறிந்து கொள்ளுங்கள்.   

அன்றும் இன்றும்  தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு.வ அவர்களின் கைவண்னத்தில் மலர்ந்த நாவல் இது. மறைந்து பல்லாண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் இலக்கியவாதிகளின் எழுத்திலும் பேச்சிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் டாக்டர் மு.வ என்றால் அது மிகையல்ல‌.


   
நிறைய தனிமனித‌/சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கிறது இந்நாவல்.இந்நாவலில் மூன்று தம்பதியரின் குடும்ப வாழ்வு வாசகர்களுக்கு படிப்பிணையாக சொல்லப்பட்டுள்ளது, அதில் கதாநாயகன் மெய்யப்பன் ஊருக்குப் பயந்து அவரை புறக்கணிக்கும் மனைவி ரேவதி (பிணைப்பிழந்த இல்லற‌ வாழ்வு), மெய்யப்பனின் நண்பன் பாண்டியன், ஆடம்பரத்துக்காக‌ அவரைப் பிரிந்து வாழும் அவர் மனைவி அஞ்சலி (பிரிவில் ஊசலாடும் மண‌வாழ்வு ) இவை இரண்டும் கடந்த மேன்மையான இல்லற வாழ்க்கை நடத்தும் குமரவேலு, அவர் அன்பு மனைவி மங்கை நல்லாள் (என்ன ஒரு அழகான பெயர் !, பேராசிரியர் மு.வ அவர்களின் அபிமானிகள் பலர் தங்கள் வீட்டு மழலைகளுக்கும் மு.வ வின் கதாபாத்திரங்களின் அற்புதமான தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தனர் என்பதை அறிந்ததுண்டு, இப்பெயரை காணும்போது அது ஏனென்று புரிகிறது, பெயரிலேயே பெண்மையின் மேன்மை அனைத்தும் சொல்கிற‌து இந்த இனிய பெயர்  ! ).   

இந்நாவல் குடும்ப வாழ்வியலில் அன்பின் அவசியம், கணவன் மனைவி மற்றும் குழந்தைகளிடையே மலரவேண்டிய பிணைப்பின் முக்கியத்துவம், நட்பின் மேன்மை, நல்ல நண்பர்களின் உறுதுணை வாழ்வில் ஏற்படுத்தும் நன்மைகள் எத்துணை மகத்தானது என்பதையும் உண‌ர்த்துகிற‌து.

கண்கவரும் புள்ளிகோலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாங்குற‌ அமைந்த புள்ளிகளைப்போல் கதைக்கு உயிரோட்டமாய் பல தத்துவங்கள் நாவல் முழுதும் ஆங்காங்கே அழகாய் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. படிப்போருக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் நாவல் இது.