.

.
.

Tuesday, December 31, 2019

அந்த அமாவாசை இரவில்... ( பாகம் 3)



குறிப்பிட்ட அமாவாசை தினமும் வந்தது. நன்கு இருட்டிய பின் யாருக்கும் தெரியாமல் வேலு தனது பழைய ஜாக்குவார் சைக்கிளை ஒட்டிக்கொண்டு வாசுவைப் பார்க்கச் சென்றான். தாங்கள் சந்திப்பதாய் குறிப்பிட்ட இடத்தில் வாசு அவனுக்கு முன்பே வந்து காத்திருந்தான். பயத்தில் அவன் முகம் வெளிரியிருந்தது. வேலுவின் கையை அழுந்தப் பற்றிய வாசுவின் கை பயத்தில்  வியர்த்துப் பிசுபிசுத்தது.

"டேய் வேணாம்டா வேலு !! நாம அங்கப் போக வேணாம், நம்மளயெல்லாம் அந்தப் பூசையிலே சேர்க்க மாட்டாங்களாண்டா !! அந்தச் சீனப் பயலுக பொல்லாதவனுங்களாம் ஏமாந்தா ஆளையே வெட்டிப் பலி கொடுக்கிற ரகமாம், நாம ஏடாகூடமாய் போய் மாட்டிக்கிட்டா வெட்டிப் பொலி போட்ருவானுங்கடா, வாணாம்டா வம்பு, குறுக்கே விழுந்து தடுத்தான் வாசு.

வாசுவின் எச்சரிக்கைகள் எதுவும் வேலுவின் காதில் ஏறவில்லை, என்ன செய்வது ? விதி வலியதல்லவா ? அறிவுரை கேட்டுத் திருந்தாதவர்களை அடித்துத் திருத்தத்தான் அனுபவம் எனும் மிகப்பெரிய ஆசான் கையில் ரோத்தானுடன் காத்துக்கொண்டிருக்கின்றானே ! அடிபட்டுத்தான் திருந்தவேண்டும் என வேலுவிற்கு விதித்திருந்ததால் வேலு வாசுவின் புலம்பலை கண்டுகொள்ளவேயில்லை.

கடைசி நேரத்தில் காலை வாரிவிட்ட வாசுவின் மேல் செம்ம கடுப்பாகிப்போனான் வேலு. அவன் கண்கள் சிவக்க மீசை துடித்தது, அந்தியில் போட்டிருந்த சாராயமும் தன் பங்கு வீராவேசத்தைக்காட்ட  நாலு கெட்ட வார்த்தைகளால் வாசுவை நாறடித்துவிட்டு தனியே அந்தக் காட்டை நோக்கி புயலாய் புறப்பட்டு இருளில் மறைந்தான்.

அவன் போன திசையை வேதனையுடன் ஏறிட்ட வாசு அருகாமையிலிருந்த தன் வீட்டை நோக்கி கால்களை எட்டிப்போட்டு நடக்க ஆரம்பித்தான்.

உலகைப் போர்த்திய காரிருள், முகத்தில் அறையும் குளிர்காற்று, இரவுப்பிராணிகளின் ஓசைகள்  என எதையும் பொருட்படுத்தாத வேலு சன்னமான தன் சைக்கிள் விளக்கொளியின் துணையுடன்  பயணித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கிருந்த மனோநிலையில் பணம் மட்டுமே வாழ்வின் பிரதானமாய்பட்டது. பணமில்லாதவன் பிணமாகவல்லவா இவ்வுலகம் பார்க்கிறது. பயம், வலி, சோகம் என இருக்கும் எல்லா துயரங்களையும் விட ஏழ்மை நிலை எவ்வளவு கொடியது என்பதை அனுபவித்த மனம் மட்டுமே அறியும்.

மெளனம் மனிதனை ஆட்கொள்ளும் தருணம் அவன் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது. எப்படியாவது அந்தப் பூசையை எட்டிப்பார்த்து நாலு நம்பர் தேறிட்டா, நாளை நாமும் கோடிஸ்வரன், நினைக்கவே வேலுவிற்கு இனித்தது. பூசையை நடத்துபவர்கள் சீனர்கள் என்றாலும் மொழி அவனுக்கு ஒரு தடையல்ல. அவன் அறிந்திருந்த சீன மொழி அவனுக்கு கைகொடுக்கும். அவர்களுக்கு தட்சிணையாய்க் கொடுக்க கடன் வாங்கிவந்த பணம் சில நூறுகள் அவன் காற்சட்டையில் அடங்கியிருந்தன.

சடுதியில் வேலு காட்டை அடைந்தான். சாலை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு செம்பனைக் காட்டுக்கு உள்ளே செல்லும் ஒற்றையடிப் பாதையில் மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

அந்தக் காட்டுப் பாதையின் இருமருங்கிலும் இராட்சதர்களைப் போல் அகன்று உயர்ந்த செம்பனை மரங்கள். தலைவிரித்தாடும் பேய் கைகளை ஆட்டி அழைப்பதைப்போல் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருக்க அவற்றில் சிவந்த கண்கள் அவனை எரிப்பதைப்போல் முறைப்பதாய்த் தோன்றியது. பயம் உயிரைப்பிடுங்கியது. இருந்தாலும் பணத்தாசை வென்றது. தனக்குத் தானே தைரிய மூட்டிக்கொண்டு காட்டிற்குள் நடந்தான் வேலு.

மனதிற்குள் தன் குலதெய்வத்தை வேண்டிக்கொன்டு நடந்தவனை இரு உருவங்கள் வெகு அருகாமையில் கண்காணித்துக்கொண்டிருந்தன. வெளி சாலை விட்டு வெகு தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டவனை பின்தொடர்ந்து வந்த அந்த இரு உருவங்களில் திடீரென அவன் பின்னால் பாய்ந்து ஒரு பெரிய சாக்கு மூட்டையை அவன் தலை வழி புகுத்தி அவனை கட்டி இழுத்துச்செல்ல ஆரம்பித்தனர். பயத்தில் சர்வ நாடியும் ஒடுங்கிப்போன வேலு என்ன நடக்கிறது என்று அவதானிப்பதற்குள் சாக்கு மூட்டைக்குள் அவனுக்கு மூச்சுத்திணற ஆரம்பித்தது....

தொடரும்....


நன்றி