அது ஒரு அழகான இயற்ர்கைக்காட்சிகள் நிறைந்த, பசுமை வளம் கொழிக்கும் பட்டணம். நம்மவர்கள் நிறைந்த ஊர் , ஆளுங்கட்சி அரசாங்கத்தின் கனிவான பார்வையினால் எல்லா வசதிகளும் அங்கே பஞ்சமில்லாமல் நிறைந்திருந்தன. நல்ல அழகான கோயில்களும், பழகுவதற்கு இனிமையான மனிதர்களும் நிறைந்த ஊர் அது! குறிப்பாக அந்த ஊரின் சாலைகளைப் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும் அவ்வளவு வளைவு நெளிவு மிகுந்தவை, மலேசியக் கணக்கெடுப்பின் படி பார்த்தால் கண்டிப்பாக அதிகம் விபத்துக்கள் ஏற்படும் முதல் மூன்று இடங்களுக்குள் அந்த ஊர் இடம் பெற்றுவிடும்! அவ்வளவு பிரசித்தம்!
சரி நமது கதைக்கு வருவோம், அவர் பெயர் நாதன், அவர்தான் இன்றைய நமது கதையின் கதாநாயகன், அசப்பில் நம்ம காதல் மன்னன், கமலஹாசன் இல்லைங்க, அவருக்கும் முன்னே ஒருத்தர் இந்த நாள் அஜித்குமார் போல அந்த நாளில் அசத்திக்கொன்டிருந்தாரே, அவர்தாங்க நம்ம ஜெமினி கணேசன், சும்மா சொல்லக்கூடாது கோடு வரைந்தாற்போன்ற அவரது மீசையும், மரத்தைச் சுற்றி சுற்றி கதாநாயகிகளோடு ஓடிப்பிடித்து அவர் பாடிய டூயட்டுக்களும், அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதா என்ன? நம்ம நாதனும் அவர்போலவே இருப்பார், ஆனால் என்ன, அவர் நல்ல சிவந்த நிறம், இவர் கொஞ்சூண்டு கருப்பு! அதனாலென்ன, கருப்பு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, கவிப்பேரரசு கூட பாடல் புனைந்திருக்கிறாரே, கருப்புத்தான் எனக்குப்பிடிச்ச கலருன்னு! அதனால் கவலையில்லை, நாம் கதையைத் தொடருவோம்!
இவருக்கு வயதென்று பார்த்தால், வருகிற தீபாவளிக்கு மறுநாள் (அவர் பிறந்த நாள்) 60 முடிந்து வெற்றிகரமாக 61 ல் காலெடுத்து வைக்கப்போகிறார், ஆனால் நல்ல மனிதர், ஆரோக்கியமாகவே தன்னை வைத்துக்கொன்டு, வயதைக் கேட்பவர்களிடமெல்லாம் அந்த வயதை பெருமையாய் சொல்லி, "ஆ, நம்பமுடியவில்லையே, நீங்கள் பார்ப்பதற்கு 40 வயது போல இருக்கிறீர்களே" என்று மற்றவர்கள் புகழாரம் சூட்டுவது அவருக்கு ரொம்பவே பிடித்துப்போன விக்ஷயம். அதை தெரிந்து கொன்டு அவரைச்சுற்றி இருப்பவர்கள் அவரைப்புகழ்ந்தே அவர் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்பது வேறு சங்கதி!
தனது அருமை பாரியாள் அமிர்தம், மற்றும் மூத்த பையன் ராஜன், இளைய மகள் ராதாவோடு அவர் நாம் மேற்சொன்ன அந்த அழகான ஊரில் வசித்து வந்தார். தான் வாழும் தாமானில் ஒரு நாட்டாமையைப்போல நிமிர்ந்து அவர் நடந்தால் அக்கம் பக்கமெல்லாம் "அட்டா நம்ம நாதன் சார், பார்க்க எவ்வளவு லட்சணம் என்று ஊரே பேசும், அந்த அளவு அந்த முன்னாள் ஆசிரியர் தன் வசிப்பிடத்தில் பெயர் பெற்று வாழ்ந்து வந்தார்.
வேலை முன்னால் என்று ஆகிவிட்டால், செலவுகள் என்ன இல்லை என்றா ஆகிவிடுகிறது? அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வகையில் அல்லவா உள்ளது!
அவரும் சளைக்காமல் தனது திறமையெல்லாம் திரட்டி வேலை தேடி வெற்றிகரமாக ஒரு தனியார் கல்விக்கூடத்தில் இணைந்து கொன்டார், ஆங்கிலப்பாட போதகராக. நல்ல மொழிவளமும் இயல்பாகவே அதிகம் பேசும் திறமையும் அவருக்கு அந்த வேளையை நிரந்தரமாக்கித் தந்தது, மாணவர்களும் சார் சாரென்று அவரை மொய்த்துக்கொள்வர் காரணம் இவர் முசுடாக இல்லாமல் நல்ல நகைச்சுவை உணர்வோடு பாடம் கற்பிப்பதோடு நல்ல நண்பர் போலவும் உறவாடி மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் ஏற்படுத்திக்கொன்டார். என்னதான் சிரித்தபடியே வலம் வந்தாலும் பாடம் ,படிப்பு, கற்பித்தல் என்று வந்து விட்டால் நம் நாதன் சாரை யாருமே வெல்ல முடியாது, அவ்வளவு கனக்கச்சிதமாக பாடங்களை மாணவர்களின் மனதில் ஆணியடித்தாற் போன்று சொல்லிக்கொடுத்து அவர்களை சிறப்பான தேர்ச்சி பெற வழிவகுப்பார், அவர் கொடுத்த வீட்டுப்பாடங்களை செய்யாமல் எந்த மாணவனும் இருக்க மாட்டான், காரணம் அவர் அடிப்பார், தண்டிப்பார் என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் அது மிகவும் தப்பு!, அந்த குறிப்பிட்ட பாடம் செய்யாத மாணவனை அன்று மதிய ஓய்வுக்கு செல்லவிடாமல் தடுத்து அவனுக்கு அறிவுரை கூறத்தொடங்கிவிடுவார் நம் நாதன் சார். அவனுக்கோ கண்கள் இருண்டு, காதுகள் பஞ்சடைத்து விடும். அதன் பிறகு மறந்தும் அவன் தன் பாடங்களைச் செய்ய மறக்கமாட்டான்! இவரது இந்த சைக்கோலஜி மிகவும் கைகொடுத்ததால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் அவரை மிகவும் பிடித்துப் போனது, சம்பளத்தையும் உயர்த்தி அவர் மனதை குளிர வைத்தார்!.
இப்படியாக காலங்கள் இனிமையாக கழிந்துவர, சில வருடங்களில் அவரது மகன் உயர் கல்வியில் நல்ல தேர்ச்சிப்பெற்று தலைநகரில் அமைந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பொறியியலாளர் பணியில் அமர்ந்தார், அவர் அருமை மகள் ராதாவோ கல்லூரிப்படிப்பு முடிந்து தான் மிகவும் நேசித்த தாதிமைத் தொழிலுக்குச் சென்றாள், கூடவே அவள் தன் மனங்கவர்ந்த சிவாவை பெற்றோர் சம்மதத்தோடு மணம் புரிந்து கொன்டாள். பிறகென்ன கடைமைகள் முடிந்தன.
நம் நாதன் சார் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டு பார்த்ததில் தனது ஓய்வூதியமே தனக்கும் தனது மனைவிக்குமான வாழ்க்கைத் தேவைக்கு போதுமென முடிவு செய்தார். தன் மனைவியிடம் தான் வேலையை நிரந்தரமாக விட்டு விடப்போவதாக திடீர் அறிவிப்பு செய்தார்.
மனைவி ஒன்றும் சொல்லவில்லை, இவரிடத்தில் வாயைக்கொடுத்து நமக்கு ஆகப்போவதென்ன என்பது போல அமைதியாக இருந்தார், இருந்தாலும் அவர் மனது இரண்டு அமிர்தமாக உருவெடுத்து, "சே பாவம் எவ்வளவு நாள் சிரமப்பட்ட மனுக்ஷன், வீட்டில் ஓய்வெடுத்துப் போகட்டுமே" என்று அனுசரனையாக ஒன்று நினக்க சொல்ல மற்றொரு அமிர்தமோ " அந்த ஓய்வூதியம் மட்டும் எப்படி போதும், செலவுகள் மலிந்த இந்த காலத்தில்" என மிரட்டியது. வாயை மட்டும் திறக்கவேயில்லை அவர்.
நாதன் சார் தன் முடிவைத் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார், அவரை மிகவும் தோழமையோடு நடத்திக்கொன்டிருந்த தலைமை ஆசிரியருக்கு இவர் முடிவு அறவே பிடிக்கவில்லை, தன் பங்குக்கு அறிவுரை கூறினார், எதுவுமே நம் நாதன் சார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இறுதியாக ஆண்டு முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் இந்த வருடம் முடியும் வரை காத்திருந்து பிறகு நின்று விடும்படி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ள நாதன் சார் அரை மனதோடு சம்மதம் தெரிவித்தார். பின்னர் வழக்கம் போல தனது பள்ளி, பாடங்கள், கற்பித்தல் எனத் தன் கடமையை தொடர்ந்து வந்தார் அவர் வாழ்க்கையையும் கூடவே தான் கொன்டிருந்த நோக்கங்களையும் மாற்றிய அந்த பயங்கரமான நாள்வரை...
No comments:
Post a Comment