.

.
.

Wednesday, November 30, 2016

படித்த‌தில் பிடித்தது - அலை ஓசை

நிகழ்கால வாசிப்பில்....!

அலை ஓசை,  பேனா மன்னர் கல்கி அவர்களின் எழுத்தாக்கத்தில் உருப்பெற்று உயரிய இலக்கிய விருதா சாகித்திய அகாடமி விருது (1956) பெற்ற அரசியல் + சமூக நாவல்.

இப்புதினம் பூகம்பம் (34 பகுதிகள்), புயல் (28 பகுதிகள் ), எரிமலை (26 பகுதிகள் ) மற்றும் பிரளயம் 43 பகுதிகளாகப் படைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றங்களை மனித வாழ்வோடு ஒப்புவமை செய்து சுதந்திர போராட்ட கால பின்புலத்தில் இப்புதினத்தைத் தீட்டியிருக்கிறார் கதாசிரியர்.


நீண்ட நெடிய இப்புதினம் சீதா, சூரியா, இராகவன், தாமினி ஆகிய நால்வரை முதன்மைக் கதாமாந்தர்களாகக்கொன்டு, பின்னிப் பிணையும் இவர்கள் நால்வரின் வாழ்க்கைச் சிக்கல்களுடன், இயற்கைப் பேரிடரான பீஹார் பூகம்பம், அரசியல் பேரிடரான பஞ்சாப் கலவரம், மகாத்மா காந்தியின் வாழ்க்கை முடிவு ஆகியவற்றை முக்கிய சம்பவங்களாகக் கொன்டு மலர்ந்திருக்கிற‌து. ஆச்சரியங்களும், திடுக்கிடும் சம்பவங்களும், அதிக திருப்புமுனைகளும் சூழ்ந்த சிறந்த புதினமே "அலை ஓசை".

இப்புதினத்தின் முதன்மைக் கதாமாந்தர்களைக் கொஞ்சம் கவனிப்போம்...

சீதா, அழகும், கலகலப்பும் நிறைந்த படித்த பெண். பேச்சுத்திறமை வாய்த்தவள். காந்தீயக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவள். தவறான நபரை மணந்ததினால் வாழ்வில் ப‌ல்வேறு சோதனைகளை சந்தித்த‌ துர்பாக்கியசாலி.

சூரியா எனும் சூரியநாராயண‌ன், சீதாவின் மாமன் மகன், விவேகமும், மதி நுட்பமும் நிறைந்த வாலிபன். அரசியல் ஈடுபாடுகொன்டு காங்கிரசில் இணைந்து செயல்படுபவன். சீதா இராகவனை மண‌க்க முக்கிய காரணியானவன். தனது அத்தை ராஜம்மாளுக்கு கொடுத்த வாக்கின்படி பின்னாட்களில் சீதாவுக்கு பெரும் துணையாய் விளங்கியவன். தன் இலட்சியத்தோடு ஒத்துப்போன தாமினியிடம் மனதைப் பறிகொடுத்தவன். 

இராகவன் நன்கு படித்த, தோற்றச் சிறப்பு மிக்க நவநாகரீக வாலிபன். நல்ல உத்தியோகத்திலிருப்பவன். மேல்தட்டு வாழ்க்கை வாழ்பவன். எனினும் நல்ல குணநலன்கள் வாய்த்திராத சந்தேகப் பேர்வழி. தாமினியை காதலித்து அது நிறைவேறாத பட்சத்தில் அவளைப் போன்ற உருவ ஒற்றுமை படைத்த சீதாவை மண‌முடித்தவன்.   

தாமினி நன்கு படித்த அழகான நவ‌நாகரீக மங்கை. இவள் பிறப்பும், வளர்ப்பும், வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்தது. இராகவனுடன் தன் காதல் ஈடேறாததை பெரிதுபடுத்தாது மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொன்டு தன் வாழ்வை பயனான வாழ்வாக மாற்றிக்கொன்ட மிகச் சிறந்த பெண்மணி. அன்பும், தியாகமும், சேவை மனப்பான்மையும் நிறைந்தவள். இப்புதினத்தில் நம் மனதைத் தொட்ட மிகச் சிறந்த கதாபாத்திரம்.

இந்த புதினத்தைப் படித்து முடித்த பின்னரும் நம் மனதில் நின்று நினைவை நிறைப்பவள் இந்தத் தாமினியே. அழகு, அறிவு ம‌ட்டுமின்றி அன்பும், தியாகமும் ஒரு பெண்ணை எத்தனை உயர்ந்த பெண்ணாய் உலகம் உணரச் செய்யும் என்பதற்கு உதாரணமானவள் தாமினி. இந்த உலகில் இன்னமும் அன்பும், மகிழ்ச்சியும் நிலைகொள்வதற்கு தாமினி போன்ற அற்புத ஜீவன்களே காரணம்.       

இனி அலை ஓசையெனும் மிகப்பெரிய புதினத்தின் மிகச்சிறிய கண்ணோட்டம் காண்போம் வாருங்கள்....

இராகவன், தாமினியை காதலித்து மண‌முடிக்க எண்ணுகிறான், இருப்பினும் அவன் தாயாரின் குறிக்கீட்டால் அவர்களின் திருமணம் தடைபட தாமினி அவனைவிட்டு பிரிந்து சென்று பீஹார் பூகம்பத்தில் சிக்கிய மக்களுக்குத் தொண்டு புரியும் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். தன் எதிர்பார்ப்பு நிறைவேறாது மனவேதனையில் வாடும் இராகவன் பெற்றோரின் வற்புதலுக்கிணங்க லலிதா எனும் பெண்ணை மணமுடிக்க ராஜம்பேட்டைக் கிராமத்திற்கு வருகிறான்.

அவன் பெண்பார்க்க வந்த இடத்தில் மணப்பெண் லலிதாவின் அத்தை மகளாகிய சீதா எனும் அழகிய பெண்ணின் தோற்றம் தன் காதலி தாமினியின் தோற்றத்தை ஒத்திருப்பதைக் கண்டு பிரமித்து அவளையே திருமண‌ம் புரிய முயல்கிறான். சீதாவின் துறு துறுவெனும் செயல்பாடுகளும், கலகலப்பான பேச்சும், அழகிய தோற்றமும் இராகவனின் பெற்றோரையும் கவர லலிதாவை விட்டுவிட்டு சீதாவையே பெண் கேட்கின்றனர்.

பல்வேறு மனஸ்தாபங்களுக்கிடையில் சீதாவின் மாமனும் லலிதாவின் அண்ணனுமாகிய சூரியாவின் ஒத்துழைப்பினால் சீதா இராகவன் திருமணம் நடந்தேறிவிடுகிறது. இத்திருமணத்தை சீதாவின் தந்தை துரைசாமி அய்யர் தடுத்து நிறுத்த முயல்கிறார். எனினும் அவர் எண்ணம் ஈடேறாமல் செய்துவிடுகிறான் சூரியா. இதுவே சீதாவின் வாழ்வில் நிகழும் மிகப்பெரிய விபரீதமாய் பின்னாட்களில் அவள் வாழ்வை சிதைத்துச் சூரையாடுகிறது.

இராகவன் அதிகம் படித்தவன் என்றாலும் குண‌நலன்களில் சிற‌ந்தவனல்ல. திருமணமான பின் சிலகாலம் மனைவியுடன் மனமொன்றி வாழ்ந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானாலும், மீண்டும் தாமினியின் பின்னே தறிகெட்டு ஓடுகிறது அவன் மனம், போதாதற்கு சீதாவையும், சூரியாவையும் இணைத்து சந்தேகித்து சீதாவை சொல்லாலும் செயல்களாலும் துன்புறுத்துகிறான். இதனால் சீதாவின் வாழ்வு அலையில் சிக்கிய ஓடம்போல் அல்லாடுகிறது. அந்நாட்களில் மகாத்மா காந்தியின் புகழ் நாட்டில் வெகுவாய் பரவ காந்தியின் தீவிர பக்தையாய் மாறிவிடுகிறாள் சீதா.
அலை ஓசை க்கான பட முடிவு

தன் கண‌வனின் துர்நடத்தையாலும், ச‌ந்தேக குணத்தாலும் வேதனையடைந்து சீதா தற்கொலையை நாடுகிறாள், இருப்பினும் அதிர்ஸ்டவசமாக சூர்யாவினால் காப்பாற்றப்படுகிறாள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான‌ சூரியாவும் தாமினியும் போலீசாரால் வலைவீசி தேடப்படுகின்றனர், இந்நிலையில் தாமினியிடம் மறுபடியும் இராகவனுக்கு சந்திப்பு ஏற்பட்டதால் இராகவனின் போக்கு மிகவும் மாறிவிடுகிறது. தாமினியோ தனது இலட்சியங்களோடு ஒத்துப் போகும் சூரியாவை மண‌முடிக்கப் போகிறாள் எனும் செய்தியறிந்து குரோதத்துடன் சீதாவை மேன்மேலும் துன்புறுத்துகிறான்,  இதனால் மனமுடைந்த சீதா வாழ்வே வெறுத்து ஒரு கட்டத்தில் தன் மகள் வசந்தியை தன் மாமியாரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு இல்லற வாழ்விலிருந்து விலகிப்போக முயற்சிக்கிறாள். 

மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் இணைந்து சேவையாற்றப் புற‌ப்படுகிறாள் சீதா. ஆனால் தாமினி என நினைத்து தவறுதலாய் சிலரால் கடத்தப்பட்டு மீளும் சீதா மீண்டும் கணவனை நாடாமல் கல்கத்தாவில் வசிக்கும் லலிதாவின் தோழியாகிய சித்ரா அமர்நாத் தம்பதிகளிடம் சேர்ந்து பின்னர் தேவப்பட்டணத்தில் வாழும் லலிதா பட்டாபிராமன் தம்பதியரிடம் அடைக்கலமாகிறாள். அவர்கள் ஊரில் நடைபெறும் நகரசபைத் தேர்தலில் பட்டாபிராமனுக்கு சேர்மேன் பதவி கிடைக்க பொதுச்சேவையில் களமிறங்கிப் பாடுபடுகிறாள். இதனால் அவள் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

பட்டாபிராமன் தேர்தலில் வெற்றியடைகிறான். தனது வெற்றிக்கு பாடுபட்ட சீதாவின் அழகில் மயங்கி அவளிடத்தில் மனதைப் பறிகொடுக்கிறான். அவனின் தவறான நோக்கத்தை அறிந்து வேதனையடைகிறாள் சீதா. எனினும் இவ்விவரம் அறிந்து அதுவரை அவளுக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரியாகவும், தோழியாகவும் விளங்கிய லலிதா மிகவும் கோபமுற்று சீதாவை வீட்டைவிட்டே துரத்திவிடுகிறாள்.

லலிதா, சூரியா உடன்பிறப்புக்களுக்கு சுண்டு(சியாம சுந்தர்) என்றொரு இளைய சகோதரனும் உண்டு, லலிதாவின் வீட்டிலிருந்து வெளியேறும் சீதாவை பின்தொடர்ந்து வந்து அவளின் அழகைப் பலவாறாக‌ப் புகழ்ந்து அவளை சினிமாவில் நடிக்கும்படி ஆசைகாட்டுகிறான் சுண்டு. எனினும் வேதனைகள் தந்த அனுபவப் பாடங்களில் கொஞ்சம் விவரம் புரிந்துகொன்ட சீதா அவன் ஆசையை நிராகரித்து தன் வாழ்க்கை பயண‌த்தைத் தனியே தொடர கல்கத்தாவிற்கு இரயிலேறுகிறாள்.

கல்கத்தாவில் சீதா அமர்நாத் சித்ரா தயவால் மீண்டும் தன் கண‌வனையும், குழந்தையையும் சந்திக்கிறாள் . கடும் காய்ச்சலால் பாதிப்புற்று உயிருக்குப் போராடும் இராகவன் சீதாவின் பணிவிடைகளால் உயிர் பிழைத்துவிடுகிறான். பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிற‌து.  இராகவன் மனம் திருந்தி சீதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொன்டு தொழில் மாற்றலாகி பஞ்சாப்பிற்கு செல்கிறான்.

சில காலம் கழித்து தொழில் விடயமாக அவன் டில்லி சென்றிருந்த‌ சமயத்தில் பஞ்சாப்பில் கலவரம் வெடிக்கின்றது, அண்ணன் தம்பிகளாய் பழகிய இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்க்கின்றனர். இரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தன் குழந்தை வசந்தியுடன் அந்தக் கலவரத்தில் சிக்கிக்கொள்கிறாள் சீதா. அச்சமயம் ஒரு முஸ்லீம் சாகீபு அவளைக் காப்பாற்றுகிறார். அவள் குழந்தை வசந்தியை தாமினி தீவிரமான போராட்டத்திற்குப்பின் காப்பாற்றுகிறாள். அந்த முயற்சியில் அவளின் ஒரு கை துண்டாகிவிடுகிறது. ஒரு கண் சிதைந்து, முகத்தில் நீண்ட வெட்டுக்காயம் ஏற்பட்டு தாமினி குரூபியாகிவிடுகிறாள்.

டில்லியில் இருக்கும் இராகவன் தன் மனைவி சீதாவையும்,  குழந்தை வசந்தியையும் தேடி பஞ்சாப்புக்கு வருகிறான், தன் மனைவியை முஸ்லீம் சாகிபு ஒருவன் காப்பாற்றிக்கொன்டு சென்றுவிட்டான் என்பதை அறிந்து கடும் சினம் கொள்கிறான். தன் அரசாங்கப் பதவியைப் பிரயோகித்து தான் தங்கியிருந்த வீட்டு இராணுவ அதிகாரியின் ஒற்றர்கள் மூலம் ஒரு பெண் இரு ஆண்களுடன் படகிலேறி தப்பிச் செல்லும் செய்தியைக் கேள்விப்பட்டு உண்மையை தீர விசாரிக்காது துப்பாக்கியுடன் அவர்களைத் தேடிவந்து சுடுகிறான், துப்பாக்கிச் சூட்டில் படகில் துளை விழ அதிலிருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் நீரில் விழுவதைக் கண்டு குடும்ப கெளரவத்தைக் காக்கும் தன் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகல்கிறான்.

உண்மையில் அந்த சாகிபு சீதாவின் தந்தையாகிய துரைசாமி அய்யர், தன் மகளைக் காப்பாற்ற மாறுவேடத்தில் வந்தவர், அவர்களுடன் பயணித்த மற்றொரு ஆண் சூரியா. சூரியா சீதாவைக் காப்பாற்றிக் கரைசேர்க்கிறான். அவள் தந்தையும் பிழைத்துக்கொள்கிறார். ஆனால் பின்னாட்களில் சீதா இறந்துவிட்டாள் என்றே சூரியா இராகவனிடம் தெரிவித்துவிடுகிறான். சீதாவை அவள் கண‌வனிடமிருந்து மணவிலக்கு பெறச் செய்து தானே அவளை மண‌முடித்து மகிழ்ச்சியாய் வாழவைக்க வேண்டும் எனும் புரட்சிகரமான சிந்தனையைக் கையிலெடுக்கிறான் சூரியா. இதற்காகத் தன் மனங்கவர்ந்த தாமினியையும் துறக்கத் தயாராகிறான்.

நீரில் விழுந்த அதிர்ச்சியில் சீதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துவிடுகிறது.,  காது கேளாது, வாய் பேச முடியாது அடிக்கடி தளர்ச்சியுற்று மயங்கி அதீத பலவீனத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். அவள் செவிகளில் அலை சை போன்ற பேரிரைச்சல் இடைவிடாது ஒலிக்கிறது, ஆரம்ப காலத்தில் இந்நிலை நோயுற்று மறைந்த அவள் தாய் ராஜம்மாளுக்கும் ஏற்பட்டிருந்திருக்கிறது.

தன் தந்தையின் அரவணைப்பிலும் சூரியாவின் பாதுகாப்பிலும் இருக்கும் சீதா தனது இறுதி ஆசையாக மகாத்மா காந்தியை நேரில் சென்று காண‌ வேண்டும் என விரும்புகிறாள். அச்சமயம் காந்தி சுடப்பட்ட செய்தி நாட்டை உலுக்குகிறது. அவள் அதிக நாள் உயிரோடிருக்கமாட்டாள் எனும் நிதர்சனத்தைப் புரிந்துகொன்ட சூரியா அவள் இறுதி ஆசையை நிறைவேற்ற உண்மையை தெரிவிக்காமலேயே அவளை மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்திற்கு அழைத்துச்செல்கிறான்.

காந்தியை தெய்வமாய் போற்றி வழிபட்டு வந்த சீதா, அவருக்கு நேர்ந்த முடிவறிந்து மிகவும் வேதனையடைகிறாள். தன்னிலை மறந்து கால்போன போக்கில் சூரியாவைப் பிரிந்து நடந்துவிடுகிறாள். அவள் செல்லும் வழியில் அவள் காதில் தீராது ஒலித்துக்கொண்டிருந்த அலைஓசை சப்தம் நின்றுபோய் குணமாகிவிடுகிறது. அவள் காதுகளுக்கு கேட்கும் சக்தியும், வாய் திறந்து பேசும் வலிமையும் மீண்டும் கிடைத்துவிடுகிறது. சீதா மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறாள்.

போகிறபோக்கில் ஏதேச்சையாக இராகவன் வாழ்ந்து வரும் தனது புகுந்த வீட்டையே வந்தடைகிறாள் சீதா. மீண்டும் கணவனுடன் இணைந்து மகிழ்ந்து வாழ்வோம் எனும் பிரயாசையுடன் வீட்டை நெருங்க, தாமினியும், இராகவனும் சந்திப்பதைக் கண்டு அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறாள். தனது குழந்தை வசந்தி தாமினியால் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மன நிம்மதி அடைகிறாள். இராகவன் பர்தா அணிந்து தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் தாமினியிடம் அவள் உணமை நிலையறியாது தன்னை மண‌ந்துகொள்ளும்படி மன்றாடுகிறான்.

இராகவனின் செய்கையால் மீண்டும் மனமுடைந்த சீதா அங்கிருந்து புறப்பட்டு கால் போன போக்கில் நடந்து ஓரிடத்தில் மூர்ச்சையடைந்து வீழ்கிறாள். அவளைக் காப்பாற்றும் அவர்களின் குடும்ப நண்பர் பாமா எனும் பெண்மணி இராகவனுக்கு தகவல் அனுப்புகிறாள். இராகவனும், தாமினியும், சூரியா, குழந்தையுடன் சீதாவை வந்தடைகின்றனர். சீதா தாமினியிடம் இராகவனையும் குழந்தையையும் ஒப்படைத்து உயிர் நீத்துவிடுகிறாள்.

இறுதியில், இராகவன் தாமினியையே மணந்துகொள்கிறான். சூரியா இராகவன் மணக்கவிருப்பதாக இருந்த பாமாவை கரம்பிடிக்கிறான். புதினம் நிறைவை நாடுகிறது.

இப்புதினத்தில் இவையன்றி நம்மை வியப்பில் ஆழ்த்தும் வேறு பல சம்பவங்களும் உண்டு...

* சுதேசி மன்னர் ரஜினிபூர் மகாராஜாவிற்கும் தாமினியின் பிறப்பிற்கும் உள்ள சம்பந்தம்.
* தாமினியை வளர்த்த அவள் பெரியம்மா ரஸியா பேகத்திற்கும் துரைசாமி அய்யருக்கும் உள்ள தொடர்பு.
* சீதா, தாமினி இருவரின் உருவ ஒற்றுமையின் மர்மம்.
* ரஸியா பேகம் மனந‌லம் குன்றிய கொலைக்காரியாக  மாறியதற்கான பிண்ணனி.

அலை ஓசை க்கான பட முடிவுஇணையத்தில் இப்புதினம் நுட்பமான மனத் தருணங்களை சென்றடையும் மொழி வீச்சு எனப் புகழப்பட்டும், உயர்ந்த இலக்கியம் அல்ல என இகழப்பட்டும் இரு வித கருத்துக்களுடன் வலம் வருவதைக் காணமுடிகிறது. மேலும் காந்தியடிகளின் புகழ் பேசும் இப்புதினத்தில் அவரின் பிழைகள் எனவும் சில விடயங்கள் கதாபாத்திரங்களால் அலசி ஆராயப்படுவதை வாசகர்கள் காணலாம். 

இவை யாவற்றையும் இங்கே விள‌க்கிக்கொன்டிருந்தால் இதுவே ஒரு குறு நாவல்போல் ஆகிவிடும் என்ற காரண‌த்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் புதினத்தைப் படித்து முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பித்து விடைபெறுவோம்.

No comments: