இரவில் மலரும் மலர்கள் காலையில் பிறர் ஆராதிக்கும் முன் உதிர்ந்து மறைவதைப்போல் சராசரி மனிதர்களாய் வாழ்ந்து மறைந்த உன்னத உயிர்கள் எத்தனையெத்தனை இம்மண்ணில் ? பிறர் அறியாவிட்டாலும் மண் மட்டும் அறியும் அந்த மலர்களின் அழகையும் மணத்தையும்... இது என் மனதில் தடம்பதித்த அன்பு மலர் ஒன்றின் வரலாறு . நான் வியந்த என்னை பாதித்த, பிரமிக்கவைத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர்...
இவ்வுலகில் பிறந்த எல்லா மாந்தருள்ளும் ஏதேதோ ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள். தோன்றிர் புகழோடு தோன்றுக என்று வள்ளுவர் சொல்லிச் சென்றதைப் பின்பற்றி தம் இருப்பை இவ்வுலகிற்கு புகழுடன் புலப்படுத்த மனிதர்கள் தாம் எப்படியெல்லாம் பிரயத்தனப்படுகின்றனர் ?
இலக்கியவாதியாய், ஆன்மீகவாதியாய், தொழில் அதிபனாய், அரசியல்வாதியாய், நடிகனாய், கலைஞனாய், விளையாட்டு வீரனாய், சமூக சேவகனாய் இன்னும் எத்தனை எத்தனை அவதாரங்கள் !! அத்தனையும் அவனை உலகிற்கு உணர்த்தும் விலாசங்கள்.
எனினும் அப்படி எந்தப் புகழுமின்றி சராசரி மாந்தராய் நம் கண் முன்னே நாம் வியக்க நமது மரியாதைக்குரியவர்களாய், அன்பிற்குரியவர்களாய் தம் இருப்பால் தம்மைச் சார்ந்தவர்கள் புகழத்தக்க வாழ்ந்து மறைந்தவர்களும் உண்டல்லவா ? அவரில் ஒருவரே நமது இன்றைய பதிவின் கதாநாயகி..!!
ஹரி ஓம் பாட்டி ! பெயரே விசித்திரமாய் இருக்கிறதல்லவா ? ஆம் அதுதான் அவரின் செல்லப்பெயர், சுவாமி பிரமானந்த சரஸ்வதி அவர்களின் சத்சங்கங்களில் எங்களுடன் தவறாது பங்கு கொள்ளும் அந்தப் பாட்டி எந்த ஓர் இந்தியரை எதிர்கொண்டாலும் சொல்லும் முதல் வார்த்தை "ஹரி ஓம்" என்பதுதான், அதனாலேயே அவருக்கு "ஹரி ஓம் பாட்டி" என்ற காரணப் பெயர் உண்டானது. அவர் பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் கண்ணம்மா.
பாட்டியின் வாழ்விடம் ஒரு மலாய்க்கார கம்பத்தில் அமைந்திருந்தது. அங்கே மலாயர்களோடு இந்தியர்கள், சீனர்களும் வீடுகட்டிக் குடியிருக்கின்றனர். அங்கே வாழும் அனைவருக்கும் வேண்டப்பட்டவர் நம்ம ஹரி ஓம் பாட்டி.
இவரது வரலாறு மிகவும் சுவாரசியமானது. பாட்டி இளம் வயதிலேயே அதாவது பதின்ம வயதிலேயே திருமணம் முடித்தவர். அவரது கணவர் ஓர் உடல் உழைப்புத் தொழிலாளி. ஓரளவு படித்தவர், இலக்கிய மணம் கமழ இனம், மொழி, கலை, கலாச்சாரம் என விஸ்தரிப்பாய் பேசுபவர், ஆனால்
உள்ளுக்குள் ஆள் பெரிய தில்லாலங்கடி. . பெண்கள் விடயத்தில் படு கில்லாடி. இவரைப் பற்றி ஊருக்குள் பிரபலமான கிசு கிசு ஒன்று...
அந்நாளில் பாட்டி ரொம்ப அழகு அப்படின்னுலாம் சொல்ல முடியாது. ஆள் கருப்பு, குள்ளம் வேறு, ஈர்க்குச்சி தேகம். அதனால் தானோ என்னவோ நான்கு குழந்தைகள் பிறந்த பின்னரும் வேறு பெண்ணை நாடியிருக்கிறார் அவர் கணவர்.
அவர்கள் வாழுமிடத்தில் ஒரு பெண்மணி, கணவனை இழந்தவர், தோசை வியாபாரம் செய்து பிழைப்பவர். நல்ல நிறமும் அழகும் வாய்த்தவர்.பாட்டியின் கணவர் எப்படியோ அவரை கவர்ந்துவிட்டார். மறுமணம் புரிவதாய் வாக்களித்து அவருடன் குடும்பம் நடத்தி பின்னர் முடியாது என மறுத்துவிட்டார். கடுப்பாகிப்போன அந்தப் பெண்மணி அவருக்குப் பிறந்த தன் குழந்தையை தூக்கி வந்து பாட்டியின் கையில் கொடுத்து, "இது ஒன் வீட்டுக்காரருக்கு பொறந்த பிள்ளைதான், என்னால கவனிக்க முடியாது" எனக்கூறி விட்டுவிட்டு போய்விட்டார். பாவம் பாட்டி என்ன செய்வார், தன் கணவரை எதிர்த்துப் பேசவும் முடியாது.
சோகம் தாங்க முடியாத பாட்டி, குழந்தையை பாயில் கிடத்திவிட்டு, வீட்டின் கொல்லையிலிருந்த ஆழமான கிணற்றில் "தொபுக்கடீர்" என்று குதித்துவிட்டார். இதை அக்கம் பக்கத்திலுள்ளவர் யாரோ பார்த்து உடனடியாய் பாட்டியை காப்பாற்றிவிட்டனர். இவ்வளவு துரோகம் செய்திருந்தும் அவர் கணவரை எதிர்த்து பாட்டி ஒரு வார்த்தையும் பேசியதில்லை. வெளியே சொல்லாது எல்லா வேதனைகளையும் தனக்குள்ளே பூட்டி வைத்துக்கொள்ளும் குணம் படைத்தவர். தன்னிடம் கொடுக்கப்பட்ட தன் கணவருக்குப் பிறந்த அந்த ஆண்குழந்தையையும் தன் குழந்தையாகவே பாவித்து அன்பாய் வளர்த்து மணமுடித்து வைத்தார்.
ஒழுங்காய் வேலைக்குப் போகாத கணவர், குடும்பத்தில் வறுமை, பாட்டி இரவும் பகலும் யோசித்து ஒரு நல்ல தீர்வை கண்டுபிடித்தார். தன் தாய் வீட்டிலிருந்து சீதனமாய் கொண்டுவந்த நகைகளை அடகு வைத்து தனது நடமாடும் துணிக்கடையைத் துவங்கினார். அறிமுகமான துணிக்கடைகளில் அழகழகாய் பெண்களுக்கான புடைவைகளும், பாவாடை தாவணிகள் மற்றும், வளையல்கள், அலங்காரப்பொருட்கள் என நெகிழிப்பைகளில் சுமந்துகொண்டு பஸ்ஸில் பிரயாணித்து தோட்டப்புரங்களுக்கு செல்லும் பாட்டி அங்கே வாழும் தனக்கு அறிமுகமானவர்களிடம் தனது துணி வியாபாரத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தார்.
பாட்டி மிகவும் நேர்மையானவர், கறாறானவரும் கூட. யாரையும் ஏமாற்றமாட்டார், யாரிடமும் ஏமாறவும் மாட்டார். அவரிடம் பழகிய அனைவருக்கும் அவரின் இந்த குணாதிசயம் தெளிவாய் புரிந்திருந்தது. நல்ல அழகிய துணிமணிகளை வீட்டிலேயே கொன்டு போய் வியாபாரம் செய்தார். முதலில் கடனுக்கு துணிகளை தந்துவிட்டு, சம்பளகாலங்களில் சென்று துணிக்கடனை வசூல் செய்துவிடுவார். அவரிடம் தொடர்ந்து வியாபாரம் வைத்துக்கொன்டவர்களுக்கு மேலும் சலுகையாய் அலங்காரப்பொருட்களும் , குழந்தைகளுக்கு வண்ண வண்ண ரிப்பன்களும் பரிசளித்து அவர்களை தனது நிரந்தர வாடிக்கையாளர்களாய் மாற்றிவைத்திருந்தார்.
அந்தக்காலத்தில், சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு, கார் வசதி குறைவான காலம் அல்லவா ? இப்பொழுது போல் அப்பொழுது வீட்டிற்கு மூன்று கார் நிற்பது குறைவாயிற்றே! எனவே பட்டணங்களில் அமைந்திருக்கும் துணிக்கடைகளுக்குச் சென்று துணிமணிகள் வாங்கும் வசதியற்றவர்கள் பலரும் பாட்டியின் நடமாடும் துணிக்கடையையே பெரிதும் எதிர்பார்த்து அவரிடம் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொன்டனர். பாட்டி இந்த வியாபாரத்தின்வழி வந்த பணத்தை மிகவும் சிக்கனமாய் செலவுசெய்து பெருமளவு பணத்தை முறையாய் சேமிப்பில் வைத்தார். துளித்துளியாய் பாட்டி சேமித்த பணம் பெருவெள்ளமாய் வளர்ந்திருந்தது. பாட்டி தன் கையிருப்பைக்கொன்டு தனது பலகை வீட்டை மிகவும் அழகான இரண்டடுக்கு மச்சு வீடாய் மாற்றிக்கட்டினார், தன் பெண்களுக்கு சீரும் சிறப்புமாய் மணமுடித்து வைத்தார். வண்டி நிறைய சீதனங்களும் மனம் நிறைய மகிழ்ச்சியுமாய் தன் பெண்களை புகுந்த வீட்டிற்கு அனுப்பினார். தன் மகன் ஒருவனுக்கு லாரி வாங்கித்தந்து தொழில் துவங்க உதவினார்.
தன் இறுதிக்காலம் வரை தான் கட்டிய அந்தப் பெரிய இரண்டடுக்கு வீட்டில் சிறப்பாய் வாழ்ந்தார் பாட்டி.துணைக்கு அவர் மகள்களில் ஒருவர் அவரோடு தங்கியிருந்தார். இறுதிநாட்கள் வரை யாரிடமும் அவர் கையேந்தியதில்லை, அனைவருக்கும் நிழல் தரும் ஆலவிருட்க்ஷமாய் தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னாலானதை ஈந்து தன் சேமிப்பைக்கொன்டே தனது தேவைகளை நிறைவேற்றிக்கொன்டு இறுதிக்காலம் வரை மகாராணி மாதிரி வாழ்ந்தார்.
தனது உடை விடயத்திலும் பாட்டி வித்தியாசமானவரே, ஆண்கள் அணியும் கட்டம் போட்ட கைலியும் மேல்சட்டையும் அணிவார். ஆண்கள் வேஸ்டிக்கு அணியும் வெள்ளை நிற துண்டைத்தான் தோளில் அணிந்திருப்பார். எண்ணெய் வைத்து படிய வாரி கொண்டையிட்டிருப்பார். நெற்றியில் கீற்றாய் திருநீறு துலங்கும். பார்ப்பதற்கு சுத்தமாகவும் மரியாதைக்குரியவராகவும் காட்சியளிப்பார்.
பாட்டி தனது தேவைகளை முடிந்தவரை தானே நிறைவேற்றிக்கொன்டார், முடியாதவற்றை தன் பணத்தின் மூலம் பிறர்வழி சாதித்துக்கொன்டார். திடீரென பக்கத்து வீட்டிற்கு செல்வார், அந்த வீட்டுப் பெண்மணியிடம் "அம்மா கேள்வரகு புட்டு வேணும் செஞ்சு கொடு” என உரிமையுடன் கேட்டுவிட்டு கொஞ்சம் பணத்தை அவர் வேண்டாமென்று மறுத்தாலும் கையில் திணித்துவிட்டு வருவார். மறு நாள் காலை கேள்வரகு புட்டு காலைப்பசியாரலுக்கு டானென்று அவர் வீட்டுக் கதவைத் தட்டும்.
பட்சணங்களும், சமையல் வகைகளும் என பாட்டி தான் விரும்பியதைச் சாப்பிட்டு மகிழ்வாய் காலம் கடத்தினார்.
பாட்டி பொது நோக்கு சிந்தனைகள் நிறையப் பெற்றவர் 80 வயதிற்கு மேலும் கண்களைச் சுருக்காமல் அனுதினமும் தமிழ் நாளிதழ் படிக்க அவரால் முடிந்தது. அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என எந்த விடயத்தையும் அறிவுப்பூர்வமாய் அணுகி ஆதாரத்துடன் பேசுவதில் வல்லவர். தன் வாழிடத்தில் எல்லார் வீட்டுத் தேவையிலும் முன்னின்று நடத்திக்கொடுப்பார். தேவையானவர்களுக்கு சிறு தொகைகளை அன்பளிப்பாகவும், பெரும் தொகைகளை கடனாகவும் தந்து உதவுவார்.
அக்கம் பக்கத்திலுள்ள சின்னஞ் சிறுசுகளைக் கூப்பிட்டு உணவு, தின்பன்டங்கள் போன்றவறை தந்து மகிழ்வார். தமக்குப் பழக்கமான வாலிபப் பையன்கள் புதராய் மண்டிய தாடி மீசையுடன் கண்ணில் பட்டால் உரிமையுடன் அழைத்து கையில் 10 வெள்ளியைக் கொடுத்து தாடி மீசையை மழித்து சுத்தமாய் இருக்கவேணும் என சொந்தப் பாட்டியைப்போல் உரிமையுடன் கூறி அனுப்பி வைப்பார்.
எனக்கும் அவர் சிறந்த தோழி, இளமையும் முதுமையும் எப்படி ஒத்துப்போகும் என்று கேட்காதீர்கள், அது ஒரு சிறந்த நட்பாய் அமைந்தது. பாட்டி நல்ல மூடில் இருந்தால் தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவார். வா சந்தைக்குப் போகலாம் என அழைத்துப்போவார். வேண்டாம் என்றாலும் ஏதாவது வாங்கிக்கோ என வற்புறுத்துவார்.
பாட்டியிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவர் வீட்டு மாங்காய்கள். இனிப்பும் புளிப்புமாய் நார் நாறாய் சாறு நிறைந்து அத்தனை அருமையா0ய் இருக்கும். எனக்கு அவை மிகவும் பிரியம் என்பதை தெரிந்துகொன்ட பாட்டி அம்மரம் காய்க்கும் சமயங்களில் அனுதினமும் அப்பழங்களைப் பறித்து வீட்டிற்கு எடுத்துவந்து தருவார். அத்தனை அன்பு நிறைந்த மனம் !! பாட்டியின் அன்பில் கனிந்த அந்த மாம்பழங்கள் இன்றும் நினைவில் நின்று நாவில் நீறூர வைக்கின்றன.
இப்படியாக மகாராணிபோல் வாழ்ந்த பாட்டி வாழ்விலும் இறுதிக்கட்டம் வந்தது. தனது 80களின் இறுதிக் காலக்கட்டத்தில் ஒரு நாள் சாதாரணமாய் படுக்கைக்குச் சென்ற பாட்டி, மறு நாள் அசாதாராணமாய் எழுந்தார், எழும்போதே தனது இரு கைகளாலும் தலையைப் பற்றிக்கொன்டு தட்டுத்தடுமாறி தளர்ந்து படியிறங்கியவர் கடைசிப்படியில் அப்படியே அமர்ந்துகொன்டார். என்னம்மாவென்று ஓடிவந்து அவரைத்தாங்கிய மகளிடம், விளங்கிக்கொள்ள முடியா வண்ணம் ஏதேதோ முனுமுனுத்தவாரே வாந்தியெடுக்க ஆரம்பித்துவிட்டார், இரத்த வாந்தி !! மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிய ஆரம்பித்தது. அவர் மகள் ஓவென பெருங்குரலெடுத்து அலரத் துவங்க பாட்டி தன்னிலை மறந்து மயங்கிச் சரிய ஆரம்பித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை அயலார் பாட்டியை உடனே மருத்துவமனைக்கு கொன்டுசென்றனர், இருப்பினும் சிகிச்சை ஏதும் பலனளிக்காமல் அன்று மாலை பாட்டி மீளா உலகிற்கு சென்றுவிட்டார்.
அப்போது நான் பாட்டியின் வீட்டிற்கு அருகில் இருக்கவில்லை, விக்ஷயம் என்னை வந்தடையும்போது இரவு மணி பத்தைத்தாண்டியிருந்தது , இருந்தாலும் இரவே சென்று பாட்டிக்கு இறுதி மரியாதை செலுத்தவேண்டுமென்று புறப்பட்டாகிவிட்டது. வழி நெடுகிலும் பாட்டியின் நினைவுகள், அவரோடு கழிந்த பொழுதுகள், அவர் உதிர்த்த வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாய் மனதில் நிழலாடின.எப்பொழுதும் மகிழ்ச்சியாய் தொடரும் பயணங்களில் விதிவிலக்காய் அதுவொரு வேதனை தோய்ந்த பயணமாய் அமைந்தது.
மீளா நித்திரையில் பாட்டி படுத்திருந்தார். அன்று அவர் பக்கத்தில் அமர்ந்து திருவாசகம் படிக்கையில் பலமுறை கண்கள் கசிந்தன. பாட்டியின் இறுதிப்பயணம் மறுநாள் சுற்றமும் அண்டை அயலாரும் புடை சூழ நிகழ்ந்து முடிந்தது. ஆளுமை நிறைந்த கண்ணம்மா என்ற ஹரி ஓம் பாட்டி எல்லோர் காட்சிகளிலிருந்தும் மறைந்து நினைவாகிப்போனார்.
No comments:
Post a Comment