.

.
.

Friday, July 3, 2009

சில நேரங்களில் சில மனிதர்கள்...


ஆதரவற்ற குழந்தைகள், இவ்வுலகில் ஆணும் பெண்ணும் மனமொத்த இல்வாழ்க்கையில் இணைந்து மகிழ்ந்து, மழலைகளை ஈன்றெடுத்து, அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி எனும் தேவைகளை நிறைவேற்றி, கண்ணை இமை காப்பதைப்போல , கண்ணும் கருத்துமாய் தங்களது வாரிசுகளை வளர்த்தெடுக்க வேண்டியது கட்டாயம். அத்தகைய மானிடர் இயற்கைக்கும் தான் கொன்ட மனிதப் பிறவிக்கும் பயன் விளைவித்தவர் ஆகிறார். ஆனால் இயற்கைக்கு மாறாய் எத்தனையோ விடயங்கள் இம்மண்ணில் இடம்பெறுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த நவநாகரீக உலகில் அதரவற்ற குழந்தைகளின் அதிகரிப்பு.

நாகரீகம் எனும் போர்வையில் எல்லை மீறும் சில பெண்கள் திருமணத்திற்கு முன்பே தவறு செய்துவிடுகின்றனர்.ஆணின் தவறு சட்டையில் ஒட்டிய தூசைப்போல், தட்டிவிட்டு நடந்துவிட முடியும், ஆனால், ஒரு பெண் தவறு செய்வதை, இயற்கையும் மன்னிப்பதில்லை! பத்து மாதம் கழித்து குழந்தை என அவள் கைகளில் தந்துவிடுகிறது,(அழிக்கப்படும் குழந்தைகளும் இதில் அடக்கம்) அந்தப் பெண் பொருப்பேற்று வளர்த்தால் அது அவள் குழந்தை, அதையே அவள் வேண்டாம் என்று விலக்கி விட்டால் அது ஆதரவற்ற குழந்தை! இது மட்டுமன்றி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தந்தை அல்லது தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் நிர்க்கதியாக்கப்பட்ட குழந்தைகள்!மற்றும் தாய் தந்தையரை காலனிடம் இழந்து உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள், இது போன்ற பல சூழ்நிலைகள் ஆதரவற்ற குழந்தைகளை உருவாக்குகிறது!

இக்குழந்தைகள் பல சமயங்களில் அரசு காப்பகங்கலில் வளர்க்கப்படுகின்றனர், ஆனால் வேளைகளில் இக்குழந்தைகள் தனியார் காப்பகங்களிலும் வளர்க்கப்படுகின்றனர், நான் இங்கே பகிர்ந்து கொள்ளப்போவது ஒரு தனியார் காப்பகத்தைப்பற்றி,
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் என் உறவினர் குடும்பம் அந்தக்காப்பகத்திற்கு என்னை அழைத்துச்சென்றனர்.அன்று அவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு இரவு உணவளிக்க ஏற்பாடாகி இருந்தது. அழகான ஒரு பெரிய கட்டிடம், நடுத்தர வயது படித்த காப்பகத்தலைவர், வெள்ளை புடைவை தேவதைகளாய் செவிலியர்கள், நிறைய குழந்தைகள் என எதிர்பார்த்துச் சென்ற எனக்கு பெருத்த ஏமாற்றம் + ஆச்சர்யம்.

அது ஒரு பழமையான மலிவு வீடு, துருப்பிடித்த வெளிவாசல் கதவு, பழைய வீட்டுத்தளவாடங்கள், என மிக மிக எளிமையாக அந்த வீடு அமைந்திருந்தது, ஒரு வயதான பெண்மணி அங்கே இல்லத்தலைவியாக!, ஒரு நடுத்தர வயது செவிலித்தாய், அழகழகாய் 3வயதிலிரும்து 17 வயது வரை நம் இனக் குழந்தைகள் சுமார் '20 பேர்.

உறவினர்கள் தங்கள் சமைத்து எடுத்து வந்த சைவ அயிட்டங்களை குழந்தைகளை வரிசையிலமர்த்தி பறிமாறினர். வளரும் பிள்ளைகள் அல்லவா! சைவ உணவு செல்லுபடியாகவில்லை, ஒரு சில குழந்தைகளே மறுபடி கேட்டு உண்டனர், ஏனைய பிற குழந்தைகள் விட்டதே போதும் என ஒரு முறை சாப்பாடோடு எழுந்து விட்டனர்.

குழந்தைகளையும். பெரியவர்களையும் காணச்செல்கையில் வெறுங்கையோடு போகக்கூடாது என்பர்! எனவே என்னால் இயன்றவரை சில சிற்றுண்டிகளை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாய் தயாரித்து அவர்களுக்கு
அன்பளிப்பாய் எடுத்துச்சென்றிருந்தேன், அதை உணவு உண்டுமுடித்த பின்னர் அவர்களுக்கு ஒவ்வொன்றாய் வழங்கி அவர்கள் முகங்கள் மலர்வதைக்கண்டு நானும் சந்தோசப்பட்டுக்கொன்டேன்.
விருந்து முடிந்து புறப்படுவதற்கு முன்னால், அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணியை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொன்டிருந்தேன். அவர் தான் சொந்தமாக அந்த இல்லத்தை நடத்துவதாக குறிப்பிட்டார், மேலும் பல அண்டை அயாலார்கள் தமக்கு சிறந்த ஒத்துழைப்பு நல்குவதாகவும், அதிலும் பல சீன அங்காடி விற்பனையாளர்கள், வியாபாரத்தில் மீந்துவிடும் உணவுகளை குழந்தைகளுக்கு எடுத்து வந்து தருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு எனக்கு மிகவும் மனச்சங்கடம் உண்டானது, என்ன செய்வது, பாவம் குழந்தைகள்! என்ன செய்யலாம்? மனம் ஆழ்ந்து யோசிக்கையில்

அந்த‌ப் பெண்மணி, வெளியிலிருந்து வ‌ரும் நன்கொடைக‌ளை எதிர்பார்ப்ப‌தாக‌வும், ந‌ல்ல‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் வீட்டு விசேச‌ங்க‌ளுக்கு இந்த‌க்குழந்தைக‌ளுக்கு உணவளிப்பதோடு, நல்ல உடை, அவர்கள் பள்ளிச்செலவுக்கான தொகை போன்றவற்றை மனமுவந்து அளித்தல் நலம் எனவும் குறிப்பிட்டார். அவர் தெரிவித்த விடயங்களை உள்வாங்கிக்கொன்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் அக்குழந்தைகளுக்காக மனம் வருந்தியது, ஒரு யோசனை தோன்றவே, என் உற‌வினர் ஒருவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் உத்தியோகம் பார்ப்பது நினைவுக்கு வந்தது!, அவரை தொலைபேசியில் அழைத்து விவரங்களை கூறியவுடன் உதவி புரிய ஒப்புக்கொன்டார்.
அதன் பின்னர், அவர் தலைமையில், அங்கு பணிபுரியும் பல நல் உள்ளங்கள் ஒருங்கினைந்து ஏறக்குறைய 1000 ரிங்கிட் வரை நிதி திரட்டி, அக்குழந்தைகளுக்கு ஒரு பெரிய அசைவ விருந்து அளித்து,அந்த இல்லத்தலைவியிடம் நன்கொடையை ஒப்படைத்தனர். அதன் பின்னர் மாதம் மாதம் ஒரு சிறு தொகையை நன்கொடையாக வசூலித்து அக்குழந்தைகளுக்கு அளிப்பதாய் அனைவரும் ஏகமனதாய் தீர்மானித்துக்கொன்டனர்.
இந்த நல்ல முயற்சி சில காலங்களுக்கு தொடர்ந்தது.

நல்ல காரியங்களுக்கு இடையூறுகள் ஏற்படுவது சகஜமே, ஆனால் இந்த விடயத்தில் இடையூறு அவர்களுக்கு உதவ வேண்டிய நம்மவர்களாலேயே வந்ததுதான் பெரிய வருத்தம்! எல்லாம் நல்ல படியாக நடந்து கொன்டிருக்க, அது பொறுக்காத ஒரு புல்லுருவி, தன் சக பணியாளர்களிடையே ஒரு புரளியைக் கிளப்பி விட அது காட்டுத்தீயாய் பரவத்துவங்கியது!.

விடயம் என்னவென்றால், அதை நடத்தும் பெண்மணி வேற்று மதத்தைச் சார்ந்தவராம், அவர் குழந்தைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இன்னும் இதுபோன்ற ஏனைய பிர வதந்திகளும் ஒன்று கூடி அந்த நல்ல முயற்சியை தரைமட்டமாக்கியது.

பார்த்தீர்களா, மனிதர்களின் குணத்தை, பாவ‌ப்பட்ட குழந்தைகளுக்கு உதவவேண்டிய கடப்பாடுடைய நாமே இவ்வாறு செய்யலாமா? வீதியீல் திரியாமல் நம் இனக்குழந்தைகளை தன் சொந்த வீட்டில் வைத்து, உணவு, உடை, உறைவிடம், கல்வி இவற்றை அளித்து பராமரிக்கும் அந்தப் பெண்மணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, இப்படித் தூற்றித் தெருவில் வைக்கலாமா?

சனாதன தர்மம் நமது சமய தர்மம் அல்லவா? எம்மதமும் சம்மதம்! என்பதெல்லாம் வெறும் வார்த்தையளவில்தானோ?என் சிற்றறிவுக்கு எட்டிய வரை வேளாங்கண்ணி மாதவுக்கு கோயில், நாகூர் ஆண்டவருக்கு கோயில் என எல்லா மதத்தையும் அனுசரித்து அரவனைக்கும் அன்பு மதம் அல்லவா நம் மதம்! அந்த மதத்தில் வந்த நாம், மதத்தின் பெயரைச்சொல்லி, உதவ வேண்டிய பிஞ்சுகளுக்கு கிடைக்கவிருந்த உதவியை இப்படித்தடுத்து நிறுத்தலாமா?

அதோ, அந்தக் குழந்தைகள் மீண்டும் மீந்துபோன உணவுகளுக்காக காத்திருக்கின்றார்கள்.......

1 comment:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

மிக அருமையான கட்டுரை. அற்புதமான நடை. இப்படி ஒரு தமிழ் மனம் கொண்டு, தமிழ் மணத்தைப் பரப்பி வருகிறீர்கள். பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் முயற்சி. வாழ்த்துகள்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.