.

.
.

Wednesday, July 22, 2009

மகாலெட்சுமியும் பாக்தாத் திருடனும்


வணக்கம் அன்பர்களே, நண்பர்களே மீண்டும் ஒரு அதி பயங்கரமான பதிவில் நாம் இணைந்திருக்கிறோம் என்பதை முன்கூட்டியே அறிவித்துக்கொள்கிறோம்! இன்றைய நமது பதிவு, பல ஆக்க்ஷன் காட்சிகள் நிறைந்த, மயிர் கூச்செரியும் பல திகிலூட்டும் டுவிஸ்டுகளோடு (அதாங்க எதிர்பாரா திருப்பங்கள்!) நிறைந்த மர்மக் கதை என்பதால் வாசகப் பெருமக்கள் மிகவும் கவனத்தோடு இந்தப் பதிவைக் கையாளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

மிக‌வும் க‌வ‌ன‌மும், எச்சரிக்கையும் தேவை‌ப்ப‌டும் ப‌திவு என்ப‌தால், வானொலியில் "குச்சி குச்சி ராக்கம்மா' பாட்டு கேட்ட‌ வ‌ண்ண‌மோ, தொலை‌க்காட்சியில் "டோரா கார்ட்டூனை இடையிடையே திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணமோ, சூடான தேநீரை உரிஞ்சிய‌ வண்ணமோ, ஏன் ஆபத்து அவசரத்துக்கு எழுந்து ஓடாமலும் இந்தப் பதிவை படித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எச்சரிக்கையை மீறி கவனமாகப் படிக்கவில்லை என்பது தெரிய வந்தால் , மீண்டும் இதே மாதிரி ஒரு பதிவு இடப்படும் அபாயம் உள்ளதால், நண்பர்கள் அந்தக் கொடுமைக்கு மீண்டும் ஆளாகாமல் கவனமாகத் தப்பித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!!! ச‌ரிங்க‌ நாம‌ ப‌திவுக்குள் செல்வோமா?

அதற்கும் முன்பதாக இதுவரை தமது பரபரப்பான பின்னூட்டங்களால் தமிழ்ப்பூங்காவை அதிரவைத்த நம்ம தல( கொஞ்சம் பழைய பதிவர்களை இப்படித்தான் சார், போஸ், தல என நல்ல வார்த்தைகளால் ஐஸ் வைக்க வேண்டும், இல்லாட்டி அவங்க பின்னூட்டங்களாலே நம்மை தாளித்து விடுவார்கள், யப்பா!!!) , நல்லவர்! வல்லவர்! சிந்தனைச் சிற்பி! சயனைடு குப்பி! தலைவர் தமிழ்வாணன்! அவர்கள் கோட்டும் சூட்டுமாக இங்கே வந்து அமர்ந்த்திருக்கிறார்,
இவரின் அருமை பெருமைகளை எவ்வளவு வேணுமானாலும் சொல்லலாம், பிரபல பதிவர்களெல்லாம் தமிழ்ப்பூங்காவை எட்டிப் பார்த்துவிட்டு, "தமிழ்ப் பணி" என்ற பெயரில் "தமிழ்க் கொலை" நடக்கிறதே என‌ நொந்தபடியே புறப்பட்டு விடும் வேளையில் இவர் மட்டும், பின்னூட்டம் இட்டு இந்த மொக்கைப் பதிவருக்கெல்லாம் இவ்வளவு மதிப்புத் தராங்களேன்னு ஆனந்தக் கண்ணீர் விட வைத்தவர்! அவருக்கு ஒரு ச‌லாம் வரிசை வைத்துவிட்டு பதிவுக்குள் நுழையலாம் வாருங்கள்(எப்படி தல, நீங்க காசு குடுத்து எழுதிக் கொடுத்த மாதிரியே ஆஹா ஓஹோ என உங்கள் புகழப் பரப்பியாச்சு! மகிழ்ச்சிதானே?)

மகாலெட்சுமி, ஆம் அவரேதான், அவருடைய படம் இங்கே இடப்பட்டிருப்பதால் இது ஏதோ பக்திப் பரவசமூட்டும் தெய்வப்பதிவு என்றெல்லாம் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்! நமது கதையில் தேவி மகாலெட்சுமியும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவதாலேயே மரியாதை நிமித்தம் அவர் உருவம் இங்கே பதிவிடப்படுகிறது!

இன்றைய இந்தக் கதை ஒரு சில வருடங்களுக்கு முன்பதாக நடந்த கதை என்பதால் கொசுவத்திச் சுருள் உத்தியை(என்னது தெரியாதா? அதாங்க சினிமாவில கடந்த காலத்தைக் காட்ட கருப்பு வெள்ளை அல்லது சிவப்பு பச்சை என பளீச் வர்ணங்கள் இரண்டு கொசுவத்திச் சுருள் போல சுழல் வதைக் காட்டுவார்களே, அதேதான்!)

புதிய கம்பம் எனும் பெயரில் ஒரு பழைய கம்பம், துருப்பிடித்த தகர வீடுகள், பொதுவாகவே அக்கா, அண்ணன், மாமா, அத்தை என அனைவரையும் உறவுகளாய் மதித்து வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்விடங்கள். அதிலே ஒரு சிலர் கொஞ்சம் பசையுள்ளவர்கள், அழகழ‌காய் சில வீடுகளைக் கட்டிக் கொண்டு வெளியே வீட்டுக்கு ஒரு கோயில் எனக்கட்டிக்கொன்டு வாழ்பவர்கள்.

இன்றைய நமது கதாநாயகியும் அந்த வகையைச் சேர்ந்தவரே!
அவருக்கு சுமார் 60 வயதிருக்கும், ஆனால் பார்வைக்கு 40 வயது போலவே தம்மைக் காட்டிக் கொள்வார், மாநிறம், களையான தோற்றம், அவரது அலங்காரம் எல்லாம் "வியட்நாம் வீடு" படத்தில் வரும் பத்மினியம்மா போலிருக்கும், வகிடு, முன்நரை எல்லாம்!. ஆனால் அவரோ பார்ப்பதற்கு வடிவுக்கரசி அம்மையும் ( ந‌ல்லவராக கற்பனை செய்து கொள்ளவும் ) காந்திமதி அம்மையும் சேர்ந்து செய்த கலவை போலவேயிருப்பார்! முகத்தில் இரு முன்பற்கள் வேறு சிறிது நீண்டிருக்கும், ஆனால் அவ்வளவாகத் தெரியாது!

இவர் அலங்காரங்கள் என்று வரும்பொழுது 20 சென் சைசில் தங்கத்தோடுகள் அணிந்து கனம் தாங்காமல் சரியும் அவற்றை இழுத்து நிறுத்தும் இரு தங்க மாட்டல்களும் அணிந்திருப்பார், மூக்கு மடலை விட பெரியதாக சிவப்பு வெள்ளை மூக்குத்தி, கழுத்தில் தாலிச் சரடு, பருப்புச்சங்கிலி, வெந்தயச்சங்கிலி , மோப்பு வைத்தச் சங்கிலி, வைக்காதச் சங்கிலி என பிரியத்துக்கு வாரிக்கொட்டியிருப்பார்! கைவளைகள் கண்ணாடியில் பளபளக்கும் கூடவே, அதில் தங்க வளைகளும் கண்சிமிட்டும்! இது போதாது என்று காலில் சரக்கொலுசு (நடக்கும் போது கலீர் கலீரென சிலிர்ப்பூட்டுமே அதேதான்!), வெள்ளி மெட்டிகள் என அவர் நடமாடும் நகைக்கடையாக உலாவருவார் பாருங்கள்! அம்மன் வீதி வலம் வருவது போலிருக்கும்!
ஆனாலும் அவர் ரொம்ப நல்ல மனுக்ஷி, பந்தா துளியும் அற்றவர், ஏ புள்ளே! என எல்லோரையும் வாஞ்சையோடு அழைத்துப் பிரியமாகப் பேசும் நல்லவர்!

அவர் கணவர் அந்த காலத்தில் எஸ்.வி.ரங்காராவ் என ஒரு பெரிய நடிகர் இருந்தாரே அச்சு அசல் அவரேதான்!, இவர்கள் குடும்பம் அந்த இடத்தில் ஒரு தலைக்கட்டு குடும்பம், தெய்வம், பூஜை புனஸ்காரங்கள் என்றால் முதல் வரிசை இவர்களுக்குத்தான்!

அந்த அம்மணியை என் அம்மா பெரியம்மா என அழைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார், பெரியம்மா வீடு நாங்கள் வாழ்ந்த வீட்டுக்கு வளைவுச் சந்திலே அமைந்திருந்தது! எங்கள் வீட்டை அடுத்து சீனரின் கடை வரிசைகள், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர் எனது வீட்டைத்தாண்டி கடைக்கோ அல்லது வேறு எங்காவதோ செல்வார் என்பதால், தூரத்தில் அவர் கொலுசுச் சத்தம் கேட்டவுடன் ஓடி வந்து வாசிலில் நின்று அவரைப் பார்த்துக்கொன்டிருப்பேன், அவர்மீதும் அவர் அலங்காரங்கள் மீதும் அத்தனை ஈர்ப்பு, அவர் மங்களகரமாக குங்குமத் திலகமிட்டு முகத்தில் அழகாய் மஞ்சள் தீட்டியிருப்பார் பாருங்கள்! இப்போதுள்ள பெண் பிள்ளைங்களும் இருக்காங்களே, நதாக்ஷா('nathasha), பெர் & லவ்லி('fair & 'lovely) என வகை வகையான களிம்புகளை வாரிப் பூசிக்கொன்டு! அப்புறம் முகம் கருத்து விட்டதே, பணத்தையும் தொலைத்துவிட்டு அழகு போய்விட்டதே என்று புலம்புவது! மஞ்சளை உபயோகியுங்கள் பிள்ளைகளே, முகம் முழுமதியென தகதகக்கும் என்று சொன்னால் கேட்டால் தானே!

அந்த வாழ்விடம் மிகவும் நெருக்கமானதாகவும் அன்டை அயலார் அருகாமையோடும் மிகவும் பாதுகாப்பானதாகவே அமைந்திருந்தது, அந்த குறிப்பிட்ட நாள்வரை....

அன்று, ஒரு வார நாள், எல்லோரும் வேலைக்கு புறப்பட்டுவிட, கம்பம் காலியாகக் காட்சியளிக்கிறது, காலை சுமார் 10 மணியளவில் பெரியம்மாவின் கணவர் வெளி வராந்தாவில் உலாத்திக்கொன்டிருந்தவர் மெதுவாக தமது வீட்டின் முன் வந்து நின்ற அந்த மோட்டார் வண்டியை கவனிக்கிறார், அதிலிருந்த நபர், ஒரு 24, 25 வயது மதிக்கத்தக்க ஆடவர், சிரித்தபடியே இறங்குகிறார், அம்மா இல்லையா எனக் கேட்கிறார், அந்த ஆளை அவர் அதற்குமுன் கண்டதேயில்லை, உடனே அந்த ஆளே முந்திக்கொன்டு "என்னப்பா என்னைத் தெரியலையா, சிங்கப்பூரில் வேலை செய்கிறாரே, உங்கள் மகன் மூர்த்தி, அவர் கூட்டாளி, போன வருடம் திருவிழாவுக்கெல்லாம் வந்தேனே என்று கூற, சிங்கையில் பணிபுரியும் தனது மகன் உண்மையிலேயே சென்ற திருவிழாவுக்கு நண்பர்களை அழைத்து வந்தது ஞாபகம் வந்தது, ஓ அப்படியா என்றார், அதற்குள் பெரியம்மாவும் வெளியே வர, அம்மா என ஓடிசென்று அவர் காலில் விழுந்து வணங்கினான் அந்த ஆசாமி! அப்படியே "மகாலெட்சுமி மாதிரியே இருக்கிங்கம்மா என்று கலங்கிய கண்ணை துடைத்த வண்ணம் புகழ்ந்தான் அந்த ஆசாமி, யாரோ ஒருவன் என்றாலும் தன்னை "மகாலெட்சுமி மாதிரி என்று கூறிவிட்டானெ என பொங்கிப் பூரித்துப் போய்விட்டார் நம்ம பெரியம்மா!( மீனு தூண்டில்ல மாட்டிக்கிச்சு டோய்!)

அம்மா எனக்கு யாருமே இல்லை, ஜோகூரிலிருந்து இஸ்டப்பட்டு ஒரு பெண்ண கூட்டி வந்துட்டேன், இதோ பக்கத்து தாமனில தான் வீடு, இப்போ அவளுக்கும் எனக்கும் (சிறிது அருகாமையிலிருந்த ஒரு இடத்தின் கோயிலைக் குறிப்பிட்டு அர்ச்சனைக்கல்யானம் நடக்குது, தாலியை ஆசிர்வதிக்க கட்டாயம் மூன்று சும‌ங்களிகள் வேண்டுமாம், ஒருவர் கூட கிடைக்கவில்லை, ஒருவராவது வேண்டும் என்கிறார்கள், நீங்கள் தான் தெய்வம் போல் காட்சியளிக்கிறீர்கள், வந்து உதவி செய்யுங்கள் எனக் கல்லும் கரையும்படி கண்ணீரோடு கெஞ்ச, பெரியம்மாவின் கண்வரும், பக்கத்தில் தானே போய்ட்டு வா ,என பாய் பாய் எல்லாம் காட்டி அவனோடு மோட்டாரில் ஏற்றி அனுப்பினார்!(புகழ்ச்சி செய்யும் சூழ்ச்சியைப் பார்த்தீர்களா?). மோட்டார் நம்ம "மகாலெட்சுமி" பெரியம்மாவைச் சுமந்து கொன்டு விரைந்தது.

அடுத்து என்ன நடந்திருக்கும்? உங்களுக்குத் தெரியாது, நானே சொல்லி விடுகிறேன், குறுக்குப்பாதை என ஒரு ஆள் நடமாட்டம் குறைவான ஒரு செம்பனைக் காட்டுப் பகுதிக்கு அவரை கடத்திச் சென்று, கத்திமுனையில் அவர் நகைகள் அத்தனையும் உருவிக்கொன்டு அவரை திரு திருவென முழிக்கவிட்டு மோட்டாரில் தப்பிப் பறந்தான் அந்தத் "பக்காத்திருடன்". பிரமை பிடித்து பேசவும் வழுவிழந்து தலையில் கை வைத்தபடி ஒரு சாலை ஓரத்தில் சரிந்து அமர்ந்தார் நம்ம பெரியம்மா!, அவ்வப்போது க‌டந்து செல்லும் ஓரிரு வாகனங்களையும் நிறுத்தும் தைரியம் அவருக்கு வரவில்லை, அழுதவாரே அமர்ந்திருந்த அவரை அவ்வழியே கடந்த மோட்டாரோட்டி ஒருவர் கவனித்து, எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறாரே என நெருங்கிப் பார்க்க அது அவரது "தாய்" !

அதன் பின்னர் அவரை அழைத்து வந்தனர். இவ்வளவும் நடந்த பின்னர், அந்தத் திருடன் மிரட்டும்போது ஏன் உதவி கோரி சத்தமிடவில்லை என எல்லோரும் கேட்க அவர் சொன்னார் "கத்தலாம்னுதான் நினைச்சேன், ஆனா அவன் என்னைய பார்த்து மகாலெட்சுமி மாதிரியே இருக்கேன்னு சொல்லிட்டான் அதான்" என்றாரே பார்க்கலாம்!

2 comments:

tamilvanan said...

ice வைச்சாலும் ஆப்பு வைச்சாலும் என் வேலைய நான் செஞ்சிகிட்டே போவேன்.

என் பணி கடன் செய்வதே. (அதான் என்ன பார்த்ததும் எல்லாரும் ஓடுரானுங்களா) ஸாரி. என் கடன் (தமி்ழ்) பணி செய்வதே.

அடுத்தது வழக்கம் போல அட்வைஸ் தான்

பார்த்து ராசா, நதாக்ஷாவும் பெர் & லவ்லியும் சூ பண்ணிர போறானுங்க ( sue இல்ல shoe). தோல உரிச்சி.

கதையை ரொம்ப கவனமா படிச்சேன் . விடிய விடிய 30 இல்ல 40 தடவ. ரொம்ப நல்ல கதை. இனிமே எங்கயாச்சும் மகாலெட்சுமி் மாதிரி பொன்னுங்கள ( ok ok பாட்டிங்கள) தக தக தங்கத்தோடு பார்த்தா உடனே நமக்கு இன்பொர்ம் பண்ணிரு. நம்ம கிட்டயும் மோட்டார் இருக்குதல. வாழ வழி சொன்ன சாமி் உனக்கு கோடி புண்ணியம்.

சிவனேசு said...

சிவனேசு :வணக்கம், வாணன் உங்களுக்கு செய்தியே தெரியாதா, மஞ்சள் பூசி மங்களகரமாக விளங்கியதால்தான் திருடன் அந்தப் பெரியம்மாவை மகாலட்சுமின்னு ஏமாத்திட்டான், அப்படின்னு எழுதச்சொன்னதே இந்த நதாக்ஷாவும், பேர் & லவ்லியும்தான்!

மனசாட்சி : ஆஹா இவர்கிட்டே நாதாக்ஷாகிட்டேயும், பேர் & லவ்லிகிட்டேயும் நடந்த பேரத்தை பற்றி உளறிட்டோமே! இதிலும் பங்கு கேட்பாரோ! கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிச்சிர வேண்டியதுதான்