.

.
.

Thursday, July 16, 2009

குடி கெடுக்கும் குடிக்கும் பழக்கம்

(தலைப்பைப் பார்த்து அடடா! இது ஏதோ மதுபானப்பிரச்சாரம் என இங்கிருந்து ஓடிபோக நினைக்கும் வாசகப் பெருமக்களுக்கு, பொறுமை, பொறுமை ஏனிந்த அவசரம்?)

நீங்கள் நினைப்பது தவறு! ஏனென்று கேட்கிறீர்களா, பதிலை இந்த பதிவில் ஒளித்து வைத்திருக்கிறேன் நீங்களே கண்டுபிடியுங்கள்,

சுத்தம் சுகம் தரும், சோம்பலால் நம் நலம் கெடும்!

இதென்ன, ஒன்றாம் வகுப்பு பாடமெல்லாம் இங்கே நடத்திக்கிட்டு?, இது கூடவா எங்களுக்குத் தெரியாது என நீங்கள் பொங்கி எழுவது புரிகிறது, இருந்தாலும் நாம் இன்று பேசப்போகும் விக்ஷயத்திற்கு இதை சொல்லியே ஆகவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறேன் என்பதை அடக்கத்தோடு கூறி ஆரம்பிக்கிறேன்.

குளிர்பானங்கள்! ஆம் டின்களில் அடைக்கப்பட்டு அழகழகாய் லேபில்கள் ஒட்டி பல ஆயிரக்கணக்கான பணத்தை விளம்பரங்களில் விழுங்கி சந்தைப்படுத்தப்படுகிறதே அதே குளிர்பானங்கள்தான் இன்று நமது பதிவின் நாயகமாவது!

இந்த குளிர்பானங்கள் இளையோர் முதல் மூத்தோர் வரை பல்லோராலும் விரும்பி சுவைக்கப்படுவது யாவரும் அறிந்ததே, அதன் விளம்பரங்களும் அத்தனை அருமையாய் அமைந்திருக்கும் பாருங்கள், எப்படி விளக்கிச் சொல்வதென்றே தெரியவில்லை! சில சமயங்களில் திரையிடப்படும் படம் அல்லது நிகழ்வை விட இந்த குளிர்பான விளம்பரங்களே சூப்பர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

உதாரணத்திற்கு சில காலங்களுக்கு முன் திரையிடப்பட்ட‌ ஒரு விளம்பரம்,
அதில், வெயில் மண்டையைப் பிளக்கும், ஒரு வாலிபன் காய்ந்து கருவாடாகி, நொந்து நூலாகி, நாவெல்லாம் வரண்டு பாலைவன அகதி போல பரிதாபாகக் காட்சியளிக்க, அவன் கண்ணில் படும் அந்த குளிர்பான‌ம், அப்படியே அதை லாவகமாகக் கவ்வி வாயில் வைத்து அருந்துவார் பாருங்கள், அந்தக் காட்சியில் ஒட்டுமொத்த சீதோக்ஷ்ணமும் மாறி அங்கே மும்மாரி பொழிந்து, அந்த ஹீரோ அதில் சிலிர்த்து நனைய, அவ்வளவு அழகு போங்கள்! பார்த்தவுடன் நமக்கும் உள்ளமெல்லாம் மழை பொழிய அதை அப்பொழுதே வாங்கி அதேபோல சுவைத்து மகிழும் அடக்கமுடியாத ஆசை எழும், அருந்தும்போது அளவிலா ஆனந்தம் சொல்லி மாளாத சுகம் (சில காலங்களுக்குப்பிற‌கு அது தரப்போகும் உபாதைகளையும்‍, அது ஒரு விளம்பர யுக்தி என்பதையும் மறந்து, இதற்கும் விரைவில் ஒரு பதிவு போடுவோம்ல!)

அதுசரி, அதெப்படி இவ்வளவு விலாவாரியான அனுபவ விஸ்தரிப்புக்கள் எனக் கேட்பவர்களுக்கு, படிக்கும் காலங்களில் கோக்கும் கையுமாக திரிந்த காலம் ஒன்று இருந்தது, முன்னேற்பாடாக புத்தகப்பையிலும் ஒன்று, ஆப‌த்து, அவசரத்திற்கு கைவசம் எப்போதும் இருக்கும், என்பதையெல்லாம் நான் சொல்லவே மாட்டேன்(மீறிக் கேட்டால், அதைப்பற்றியும் ஒரு பதிவு எழுதுவேன் என பயமுறுத்துவேன்!)

இதுபோன்ற காட்சிகளுக்கு மயங்கும் மனிதர்கள் செய்வது என்ன? காசைக் கரியாக்கி, லாவகமாக வாங்கிக் குடித்து அதே லாவகத்தோடு பல பின்விளைவுகளையும் வாங்கி..என்னத்தே சொல்லி.. ஒரே சோகம் போங்க!

சரி உடல் நலத்துக்கு ஊறு விளைவித்து, பலவித நோய்களுக்கு அஸ்த்திவாரமாக விளங்கும் இந்த இந்த சுவைபான‌ங்களை அருந்துவதற்கு முன்பாக ஒருமுறை கழுவுவது உயிர்காக்கும் விடயமாகப் பேசப்படுகிற‌து இப்போழுது, காரணம்....

மேற்கத்திய நாடு ஒன்றில் ஒரு பெண்மணி, நல்ல வசதி விசைப்படகு ஒன்றில் உல்லாசப்பயணம் மேற்கொள்ள விரும்பினார் தனது பிரயாணத்திற்கு தேவையான சகல வித முன்னேற்பாடுகளோடு ஒரு பெட்டி டின் சுவை பானங்களையும் வாங்கி வைத்துக் கொன்டார், மறுநாள் கொன்டாடப்போகும் உல்லாச பயணத்தை மனதில் அசை போட்டவாறே அன்றைய அவரது இரவு கனவுகளோடு கழிந்தது. ஆனால் மறுநாள் பொழுது ஒரு பயங்கரத்தைச்சுமந்து மலர்ந்திருப்பது யாருக்குமே புலப்படவில்லை.

ப‌ய‌ண‌ம் தொட‌ர்ந்த‌து, விசைப்ப‌ட‌கு காற்றைக்கிழித்து, கடலலைகளைக் பிளந்தவாரே ப‌ய‌ண‌த்தைத் துவ‌ங்கிய‌து. ந‌ண்ப‌ர்க‌ள் கூத்து கும்மாள‌முமாக‌ உல்லாச‌ப்ப‌ய‌ண‌த்தின் உச்ச‌த்தில், உணவுகளும் பானங்களும் உற்சாகத்திற்கு கைகொடுக்க நம்ம கதாநாயகியும் ஒரு டின் சுவை நீரை அருந்தியவாரே அந்த உல்லாச உற்சாகத்தில் மிதந்திருந்தாள், அப்போது யாருமே எதிர்பார வண்ணம்....

அவள் மென்மஞ்சள் மேனி தீயினால் சுட்டதைப்போல் சிவப்பாக நிறம் மாற, முகம் அளவிளாத வேதனையை வெளிக்காட்ட, இரு கைகளாலும் தன் தலையைப் பற்றிய வண்ணம் கீழே சாய, அவள் வாயிலிருந்து மிச்ச பானம் உதிர்ந்து வழிந்தது!, சரிந்து விழுந்த கையிலிருந்து, விடுபட்டுப் புரண்டது அந்த டின் சுவைபானம்!

உற்சாக‌ம் வ‌டிந்து, உல்லாச‌ம் க‌ளைய‌, கூட்ட‌ம் அதிர்ந்து அவ‌ளை அள்ளிக்கொன்டு விரை‌‌ந்தது அருகாமையிலிருந்த மருத்துவமனைக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி காரணம் அறியுமுன்னே அந்தப் பெண் மரணத்தின் மடியில் விழுந்தாள்!

உயிரே போச்சு, பிற‌கென்ன‌ பேச்சு, என்கிற‌ வேதா‌ந்தம் எல்லாம் அங்கே செல்லாதல்லவா? எற்கனவே தொடர்ந்திருந்த பரிசோதனைகள் வழி உண்மை கண்டறியப்பட்டது, என்ன காரணம் தெரியுமா?

அந்தப் பெண்மணி அருந்திய அந்த டின் சுவைபானம், எலியின் சிறுநீரால் மாசு பட்டிருக்கிறது, அதை கடைகளில் இருந்து, வாங்கி வந்து, கழுவாமல் வாயில் வைத்துக்குடித்து, மரணமடந்திருக்கிறார் அந்தப் பெண்மணி!, எலியின் எச்சம் மிகவும் ந‌ச்சுத்தன்மை வாய்ந்தது, எலியால் "பிளேக்" எனும் கொடிய நோய் பரவுவதும் அனைவரும் அறிந்த விடயமே.

எப்பொழுதும் "பேக்ஷன்" ஸ்டைலு" என்ற பெயரில் டின் சுவை பானங்களை தண்ணீரில் கழுவாமல் அப்படியே அருந்துவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும், உயிர் எவ்வளவு விலைமதிப்பானது, அதை கேவலம் இதுபோன்ற அல்ப விடயங்களில் பலியிட்டு விடக்கூடாது.

இது போன்ற சோம்பல் குணங்களை முற்றாக ஒழித்து எந்த வித உணவுப்பொருளாயினும் அதை சுத்தப்படுத்தி உட்கொள்ளும் நல்ல பழக்கத்தையே கைக்கொள்தல் சிறப்பு! சிறு குழந்தைகளுக்கும் இது பொன்ற விட‌யங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் அவசியம்.இதையெல்லாம் நோக்குங்கால் "உணவே மருந்து என்ற நிலைமாறி இன்று உண‌வே விக்ஷமாகிவிட்டதே எனும் வேதனையே நமக்கு மிஞ்சுகிறது

சரி வரட்டுங்களா(இந்த பதிவை வெளியிட்டு குளிர்பானக் கம்பெனிகளின் ஒட்டு மொத்த வயிற்றெரிச்சலையும் வாங்கியாச்சு), கூடிய விரைவில் இதேபோன்று உங்களுக்கு தெரியவே தெரியாத புது புது தகவல்களோடு வருவேன் எனக்கூறி, விடைபெறுகிறேன். நன்றி, நன்றி, நன்றி(இங்கென்ன கட்சிக்கூட்டமா நடக்குது?)

4 comments:

சுபா said...

Arumayaana vishayam Sivanesh. Naan kooda ithunaal narai ithaipatri yosithathillai. Nalla thagaval.

tamilvanan said...

நல்ல பதிவுதான் ... டின்னை கழுவுனும் சரி .... குடிப்பதற்கு முன் வாயைக் கழுவுனும் .... வாயைக் கழுவதற்கு முன் கைய கழுவனும்.... கைய சோப்பு போட்டு கழுவனும்... சோப்பு கெமி்க்கல் இல்லாம இருக்கனும்னு.....தெளிவா சொல்ல மாட்டிங்களா ... அடுத்த பதிவுல இதை எல்லாம் கவனிச்சு போடுங்க...

சிவனேசு said...

மன்னிச்சிடுங்க தல! விடுபட்டுப் போச்சு!

ம‌கா சனங்களே, இனிமே குடிப்பதற்கு முன் வாயைக்கழுவி, கையைக்கழுவி, சோப்பை ஆராய்ந்து‌ (வேண்டாம் விட்டுடுங்க! இனிமே எனக்கு டின் சுவை பானமே வேண்டாம் என நீங்க தலைதெரிக்க ஓடுவது தெரிகிறது!)

சிவனேசு said...

இங்கேயும் அதே கதைதான் சுபா! ஆனால் இந்த தகவல் அறிந்த பின் நிலைமையே மாறி! ரொம்ப நல்ல பிள்ளையாக மாறியாச்சு, டின் சுவைபானம் பக்கம் போறதே மறந்தாச்சு!