.

.
.

Tuesday, July 7, 2009

அஞ்சலி

அதி நவீன இசைக்கருவிகள் முழக்கமிட‌ , ரசிகர்கள் பெருவெள்ளமெனக்கூடி ஆர்ப்பாட்டங்களோடு ஆர்ப்பரிக்கும் சத்தம் விண்ணதிர‌, பிரமாண்ட மேடையிலே பளபளப்பான‌‌‌ ஆடை அலங்காரங்களோடு மின்னலெனத் தோன்றி தன் இனிமையான குரல் வளத்தாலும், நளினமான நடன அசைவுகளாலும் உல‌கையே தன் இசையால் மயக்கியவர் மைக்கேல் ஜாக்சன் என்றால் அது மிகையாகாது.உலகமே அவர் இசைக்கு வசப்பட்டிருந்தது, அவரது இசை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இவர் வாழ்க்கை வரலாற்றை காண்கையில் இவர் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்த பிறந்தவர். உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் .

1972ல் 'காட் டு தி தேர்', 1979ல் 'ஆப் தி வால்', 1982ல் 'திரில்லர்', 1987ல் 'பேட்', 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' போன்ற இவரது ஆல்பங்கள் உலகளவில் பேசப்பட்டன‌.

தன் அறிவுக்கூர்மையால் இசைத்துறையில் பல்வேறு பரிணாமங்கள் சுமந்து புகழ்பெற்ற இசை ஆல்பங்களை பல வெளியிட்டு பல விருதுகளையும் வென்றவர் இவர்.

இவரது 75 கோடி ஆல்பங்கள் விற்பனை சாதனை படைக்க ,13 கிராமி விருதுகளோடு , ஈடு இணையற்ற பாப் பாடகரென‌ கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் மைக்கேல் ஜாக்சன்.

எரியும் மெழுகுவர்த்தி தன்னையே அழித்துக்கொன்டு பிறருக்கு வெளிச்சம் தருவதைப்போலவே, இந்த மாபெரும் கலைஞன், தனது படைப்பின் செழுமைக்காக, தனது தோற்றங்களில் மாற்றங்கள் வேண்டி செய்த அறுவைச்சிகிச்சைகள் பின்னாளில் அவரது வாழ்வுக்கே பெருந்தீங்காக முடிந்தது.

இவர் ஒரு விளம்பரப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட தீவிபத்து பல அறுவைச்சிகிச்சைகளாக தொடர்ந்து இறுதியில் இவர் தன் முழு உடலையும் அறுவைச்சிகிச்சையின் மூலம் வெள்ளைத்தோலுக்கு மாற்றிக்கொன்டார் எனும் சர்ச்சைக்கு இட்டுச்சென்றது, இதை ஒப்புக்கொள்ளாத மைக்கேல் ஜாக்சன், ஒருமுறை ஓப்ரா வின்பரி நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே அது தோல்வியாதி என்று கூறினார்.

இல்லற வாழ்வும் மைக்கேல் ஜாக்சனுக்கு இனிமை சேர்க்கவில்லை. இவர் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரசஸ்லியின் மகள் லீசா மேரி பிரெஸ்லியை 1996ல் மணமுடித்தார். அந்தத்திருமணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது, அதன் பின்னர் 1999ல் டெபி ரோவ் என்ற பெண்ணை கரம்பிடித்தார். இந்தத் திருமணமும் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

எனினும் மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இக்குழந்தைகளில் முதல் இருவர் இரண்டாவது மனைவி டெபி ரோவ் மூலமாகவும் மூன்றாவது குழந்தை வேறொரு வாடகைத்தாய் மூலமாகவும் பிறந்தனர் (குழந்தைகளின் பிறப்பிலும் மேலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.) திரண்ட மைக்கலின் சொத்துக்களனைத்துக்கும் இவர்களே வாரிசாகின்றனர், தற்சமயம் இவர்களை மைக்கேலின் தாயாரின் ஆதவில் இக்குழந்தைகள் உள்ளனர்.

இவர் தான் ஈட்டிய வருமானத்தில் கனிசமான தொகையை மனித நேயத்தோடு பல அறக்காரியங்களுக்கு செலவிட்டவராவார்.

இவர் வாழ்வில் பேரிடியாக இவருடைய பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்ற படியேற்றப்பட்டு, வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005ம் ஆண்டு அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அன்று மைக்கேல் ஜாக்சனை குற்றவாளியாக்கிய அந்த சிறுவனே (ஈவான் சான்ட்லர்) தற்பொழுது மன‌முவந்து பணத்திற்காக தனது தந்தை ஆடிய நாடகம் அது என உலகிற்கு உண்மையை உண‌ர்த்தியுள்ளான். "கண்கெட்டபின் சூரிய நமஸ்க்காரம்"

பெரும் புகழ், பணம் இவற்றோடு பெரும் சர்ச்சைகளும் பிண்ணிப்பிணைத்துக் கொன்ட இவர் வாழ்வு 2009, ஜூன் 25 அன்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக முடிவுக்கு வந்தது. இவர் வாழ்வை இதற்கும் மேலே ஏற்கனவே ஏகத்துக்கும் பலர் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதால் இதுவே போதும்.

அரை நூற்றாண்டோடு தன் வாழ்வை முடித்துக்கொன்ட இந்த தன்னிகரற்ற கலைஞனைப்பற்றி ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும், உலக ஊடகங்கள் மககளை ஒருமித்து இசையால் மகிழச்செய்த அந்த இசை சாகரத்தை கீறிக்கிளரி பல விமர்சனங்களை படைத்தாலும், உலக இசைத்துறை வரலாற்றில்.........

"மைக்கேல் என்றுமே ஒரு மைல்கல்தான்"

" இன்று அடக்கம் காணும் அந்த ஈடினையற்ற மகா கலைஞனுக்கு நாமும் நமது அஞ்சலியை செலுத்துவோம்"
1 comment:

RANJITHA said...

Migavum arumayana oru vilakkam ,mj ulagattai viddu maraintalum nam manatai viddu maraiyapovatillai.