.

.
.

Friday, July 10, 2009

மீ(மா)ண்ட சொர்க்கம்















அன்றைய பொழுது, எல்லா நாளையும் போல எழிலாக‌ விடியவில்லை, முதல் நாள் பெய்த மழையில் பூமி நனைந்து, காலைத்தென்றல் ஏகத்துக்கும் குளிரை வாரியிரைத்த வண்ணம் அலைமோதிக் கொன்டிருக்க, கண்காணும் தூரம் வரை கதிரவனைக் காணவில்லை, எங்கே, எந்த மூலையில், எந்த மேகத்தை இழுத்துப்போர்த்திக்கொன்டு தூங்குகிறானோ, என்னவோ! சோப்புப்போட்டு அலம்பியதைப்போல் வானம் சுத்தமாக! ஆங்காங்கே பஞ்சுக்குவியலாய் சிறுமேகங்கள் ...


நம் நாதன் சார், சோம்பல் முறித்து விரைந்தெழுந்தார், தன் காலைக் கடன்கள் முடித்து, பள்ளிக்கூடம் செல்ல தயாரானார், பசியாரையாக சுடச்சுட தோசையும், முதல் நா‌ள் குழம்பும், மனைவி அமிர்தத்தின் கைப்பக்குவத்தை வியந்தவாரே உணவுண்டார், அந்த மகிழ்ச்சியோடு, கூடிய விரைவில் வேலையைத் துறந்து விடவேண்டும், அதன் பின்னர், வாழ்க்கையே சொர்க்கம்தான்..., மனது ஆரவாரமிட்டது.


இருக்காதா பின்னே, நம்ம நாதன் சார் அவரோட இளமைக்காலத்திலேயே ஆசிரியர் பணியைத் துவங்கியவர், பள்ளியும், பள்ளிப்பிள்ளைகளும் அவர் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டிருந்தன, போதாக்குறைக்கு பணி ஓய்வு பெற்ற பின்பும், இன்று வரை தனியார் பள்ளியொன்றின் ஆசிரியர்தான்..., எனவேதான் அவர் மனது ஒரு மாற்றத்தை நாடி ஓய்வு தேடியது...


மழைவிட்டும் தூவானம் விடவில்லை போல, முற்றத்தில் மலர்ந்த ஊசிமல்லிகைகள் பனித்துளியோடு மழைத்துளிகளையும் வடித்துக்கொன்டிருக்க, தனது மோட்டார், யமாஹாவில் கிளம்பினார் நாதன் சார்... அவர் கண்பார்வையிலிருந்து மறையும் வரை காத்திருந்து வழியனுப்பினார் அவர் துணையவியார்.


நாதன் சார் நிதானமாகவே சாலையில் தமது பயணத்தை தொடர்ந்து வர..., அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கார்கள், மோட்டார்கள் என அவரை கடந்து சென்று கொன்டிருந்தன‌, தமது பணியிடத்தை அடைய இன்னும் சிறிது தூரமே, அந்த மேட்டுச்சாலயைத் தாண்டி சிறிது தூர வளைவில் தொடர்ந்தால் அவர் பள்ளியை அடைந்து விடலாம். மேட்டுச்சாலையில் அவர் யமாஹா வழுக்கிக்கொன்டு ஓட, அந்த சாலை வளைவில் லாவகமாய் திருப்பி சாலையைக்கடக்க, பாதி கூட கடக்கவில்லை, பாதையை... டமார்... தனக்குக்கீழே பூமி விலகி, அந்தரத்தில் தூக்கியெறியப்பட்டு மீண்டும் ஒரு ட்மார்...,





கண்கள் இருட்டிக்கொன்டு வர.., மூடிய கண்களில் மின்மினிகள் பறந்தன, லேசாக உணர்வு திரும்பி விழிக்க, தன் உடல் ஒரு காரின் முன்பகுதியை உடைத்துக்கொன்டு உள்ளே இடுப்புவரை, பகீரதப்பிரயத்தனமாய் மேலேழும்பி சுதாரிக்க, உடலெல்லாம் ஒரே இரத்தம், இரத்தம் தந்த பீதியில் கண்கள் மேலும் இருண்டு வர, மெல்ல மெல்ல தன் சுயமிழந்து மயக்கத்தின் மடியில் தலை சாய்கிறார் நாதன் சார்.


அப்புறமென்ன, கூட்டம் கூடி சில நல்ல உல்ளங்கள் அவரை அள்ளிக்கொன்டு அருகாமையிலிருந்த உள்ளூர் மருத்துவமனை சேர்க்க, முதலுதவி சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் ஏற்றி பெரிய மருத்துவமனைக்கு விரைய, கண்கள் சொருகிய‌ மயக்க விளிம்பில், தன்னைச்சுற்றி ஏதேதோ நடக்க, உண‌ர்ந்தும் உண‌ரமுடியாத, செவிப்புலனும், தொடு புலனும் மற்றுமே சுற்றி ந‌டப்பதை சற்றே உணர்த்த, ஏனைய புலன்கள் தங்கள் இயக்கத்தை விபத்தில் தொலத்திருக்க, இருண்ட சூன்யம் பார்வைக்குள் படர்கிறது, யார்..யாரோ, ஏதேதோ, உயரத்தில் இருண்ட உருவங்கள் சுற்றி நிற்பதாகவும்..மெளனத்தை உடைக்கும் பரிச்சயமான சில குரல்களின் சன்னமான ஓசைகள்.. வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே ஒரு மரண யுத்தம்... தொடர்கிறது அவரது பயணம்.....


விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனை வாசலில் கக்கிவிட்டு ஓரத்தில் முடங்கிக்கொன்டது, தற்காலிகமாக, ஏற்கனவே முதலுதவி அளிக்கப்பட்டு விட்டது, அதனால் மருத்துவமனையின் விபத்துகளுக்கான பிரிவின் உள்ளில் ஒரு ஓரமாக தள்ளுவண்டியில் வைக்கப்பட்டு ஒரு ஓரத்தில் விடப்படுகிறார் நாதன் சார், மருத்துவமனை மருந்து வாசனை நாசியைத்துளைத்து வயிற்றை என்னவோ செய்தது, ஆனால் நம் நாதன் சார் அதை உணரும் நிலையில் அப்போது இல்லை, காலம் கடந்து கொன்டிருந்தது, தகவல் கிடைத்து, அமிர்தம் அம்மாளும் கண்ணீரும் கம்பலையுமாக ஓடோடி வந்து தன் கணவரைக்கண்டு கண்ணீர் வடித்துக்கொன்டிருந்தார். மகனுக்கும் மகளுக்கும் தகவல் பறந்ததில் அவர்களும் கலங்கிப்போய் விரைந்திருந்தனர் மருத்துவமனைக்கு....


சில மணித்துளிகள் யுகங்களாய் கழிந்த பின்பு அவரை சுமந்த தள்ளுவண்டி ஆபரேசன் தியேட்டரை நோக்கி செலுத்தப்பட்டது, உள்ளே..
குளிர்ப‌த‌ன‌ அறை போன்று சில்லிட்ட அந்த அறையில் ஒரு சில தாதிகள், இரு வேற்றின மருத்துவர்கள், அதில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த(தமிழரல்ல)மருத்துவர். இவரை பரிசோதித்து ச‌ன்ன‌மாய் த‌ங்க‌ளூக்குள் அவ‌ர்க‌ள் பேசிக்கொள்வ‌து, இன்னும் அனாஸ்தீசியா மருந்து செலுத்தி முழு ம‌ய‌க்க‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டாத‌ ந‌ம் நாத‌ன் சார் காதிலும் விழுகிற‌து லேசாக‌..


இந்திய வம்சாவளி ம‌ருத்துவ‌ர் : ஐயோ இவ‌ர‌து வ‌ல‌து கை ம‌னிக்க‌ட்டுக்கு மேலே மிக‌வும் ப‌ல‌மாக‌ சிதை‌ந்துள்ள‌தே!


மற்றோர் மருத்துவன் : இந்த ________களுக்கு வேற வேலையே இல்லை, எப்பப் பார்த்தாலும் மூக்கு முட்ட குடிப்பது, சாலையில் கண்ணை மூடிக்கொன்டு ஓடுவது, எதிரே வரும் வாகனத்தில் மோதி மத்தவனையும் சாகடிப்பது, பேசாம, இந்த ஆளின் கையை துண்டித்து விடலாம், அப்புறம் எப்படி மோட்டார் விட முடியும் என்றான் அந்தப்பாவி மருத்துவன்!


கடவுளே, நாதன் சாருக்கு உடலோடு உயிரும் சோர்ந்து வழிகிறது ஊமையாக...


அந்த மருத்துவன் பேசியதோடு அதற்கான‌‌ ஏற்பாடுகளுக்கு விரைய


அந்த புனண்ணியவான் இன்னொரு மருத்துவர் : பொறு, பொறு இங்கே பார், நாதன் சாருடைய விவரங்கள் கொன்ட மருத்துவ அட்டையை நோட்டமிட்டவாறே இவர் ஒரு ஆசிரியர்! வலது கை எழுதும் கை அல்லவா!, துண்டிக்க வேண்டாம், எவ்வளவு சிரம‌மானாலும் பரவாயில்லை, இணைக்க முயற்சிப்...
அதன் பிறகு மொத்த‌மாய் மயக்கத்தில் விழுந்த நாதன் சார் காதில் வேறெதுவும் விழவில்லை...


உடல் சுற்றுப்புற கதகதப்பை உணர்கிறது, மெலிதாக கண் திற‌க்க, எதிரே சிரித்த முகத்தோடு வெள்ளை ஆடையில் தேவதை, அந்த தேவதை புன்சிரிப்போடு தன் வலது கையைப்பற்றி நறுக்.. ஆ..அம்மா... நொடியில் நெருப்புப் பிழம்பொன்று சர்வ நாடி நரம்புகளிலும் அனலாக தகித்துக்கொன்டு படர, உடலே வலியில் அதிர்ந்து நடுங்க... அந்த மருந்தின் வீரியம் கண்களுக்குள்ளும் படர்ந்து நெருப்பாய் எரிந்தது, அது உடலில் முறிந்த எழும்புகளும், புண்ணாகிச் சிதைந்த சதைக்கோளங்களையும் அழுகிவிடாது காக்கும் வீறீய மருந்தாம்! அந்த ஊசி போடும் தேவதை அதன் பின்னர் ராட்சசியாக மாறிவிட்டாள் நம் நாதன் சார் கண்ணுக்கு! அடகடவுளே,


மீண்டும் சில நொடி கழிந்து கண் திறந்தார் நாதன் சார். சுற்றிலும் மகிழ்ச்சியில் துளிர்த்த முகங்களோடு உறவுகள், மெல்ல தன் மனைவியை கண்களால் அழைக்க அருகே நெருங்கிய மனைவியின் காதில் சன்னமாய் சொல்கிறார், மனைவிக்கு விள‌ங்கவில்லை.... உங்களுக்கு ஏதாவது விளங்கியதா?


2 மாதம் 3 நாள் 10 மணி 30 நிமிடம் 1 1/2 வினாடிகள் கடந்து.....


அங்கே...


அதோ அந்த மேகவர்ண கஞ்சிலில் கம்பீரமாக அமர்ந்து பள்ளிக்கு சென்று கொன்டிருப்பது யார் என்பது தெரிகின்றதா உங்களுக்கு, அட நம்ம நாதன் சார் தாங்க அது, தனது சொர்க்கம் எது என்பதை தெரிந்து கொன்டு அதை நோக்கி போய்க்கொன்டிருக்கிறார் பாருங்க....

No comments: